Pages

வெள்ளி, டிசம்பர் 10, 2010

'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?

"பணம் கொடுத்து திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினாரா?" என்று சந்தேகிக்க இடமான தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன.

இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித் தேவாலய மேலாண்மை நிறுவனம் - ..சி.எம்" (International Institute of Church Management Inc.) திரு. விஜயகாந்த் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் ..சி.எம். அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல. அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் - என்று நான் எனது  "விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!"  எனும் பதிவில் எழுதியிருந்தேன்.

தற்போது இதுகுறித்து மேலும் கிடைக்கும் விவரங்கள் வியப்பளிக்கின்றன.

பணத்திற்கு 'டாக்டர்' பட்டம்.

..சி.எம் இணயதளத்தில், இந்த மதப்பிரச்சார அமைப்பிடம் 'டாக்டர்' பட்டம் பெற விரும்புவோர் "ஒரு குறிப்பிட்ட அளவு நன்கொடை அளிக்க வேண்டும்" என்றும், இதனுடன் கூடுதலாக "வாழ்நாள் உறுப்பினராக ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும்" வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளனர். (the Honorary Doctoral Degrees...will be conferred upon the candidate,...after the candidates give a certain minimum contribution, towards the Honorary Doctoral Degree and a one-time contribution of the Life-Time Membership )
இங்கே காண்க: http://www.iicmweb.org/hon.htm

ஆக, பணத்திற்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்படலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழக பட்டம் அல்ல.

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ..சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இதுவும் கூட உண்மை அல்ல.

அமெரிக்காவில்  ..சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லைசென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது

கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு  செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தையே - ..சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்குதான் அனுப்பக் கூறியுள்ளனர்.

ஆக, இந்திய கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசுவது வியப்பாக இருக்கிறது!

திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் புகழாரம்:

தமிழ்நாட்டின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்த பண்ருட்டி திரு. ராமச்சந்திரன் அவர்களின் கருத்து இதோ

"அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்து அதற்குப் பிறகு டாக்டர் பட்டம் பெற்றவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால், எதிர்க்கட்சியாக இயங்குகிற பொழுதே, மனிதநேயப் பணிக்காக டாக்டர் பட்டம் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். அதுவும் கடல் கடந்த நாடான அமெரிக்காவில் இருந்து புளோரிடா மாகாணத்தைச் சேர்ந் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் என்ற அமைப்பினர் நமது இதய தெய்வம் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் மனிதநேய தொண்டினை உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது அவருக்கு மட்டுமல்ல நமது இயக்கத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமை"

தமிழ்நாட்டிற்கே பெருமையாம் - இது எப்படி இருக்கு!!!

செவ்வாய், டிசம்பர் 07, 2010

விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

"விஜயகாந்த் இனி 'புரட்சிக்கலைஞர் டாக்டர் விஜயகாந்த்'.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிள்ளது." - இது பத்திரிகை செய்தி.

நடிகர் - அரசியல்வாதியான திரு. விஜயகாந்த் அவர்கள் டாக்டர் பட்டம் வாங்குவதில் குறைசொல்ல எதுவும் இல்லை. அது வரவேற்க வேண்டியதுதான்.

அதேசமயம், நாட்டின் புகழ்பெற்ற முன்னணி பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது நாம் அறிந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பலரும் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூட டாக்டர் பட்டம் தருகின்றன. கமலஹாசன், நடிகர் விஜய் போன்றோர் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவ்வாறெல்லாம் இல்லாமல் - அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகத்தில் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அது என்ன - ஐ.ஐ.சி.எம்?

பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனம் (International Institute of Church Management Inc.) என்பதுதான்"ஐ.ஐ.சி.எம்" ஆகும். இது இணையத்தின் மூலம் கிறித்துவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பு. நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் அது. அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல.

அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அதிலும் அந்த அமைப்பு "டாக்டர் பட்டம்" அளிக்க வைத்திருக்கும் நிபந்தனைகளை பார்த்தால் - திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றது விந்தையாக இருக்கிறது.

கிறித்தவ மதம் தொடர்பான "Biblical Studies, Church Management, Christian Leadership, Ministry" ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது "பயோ - டேட்டாவை" அனுப்பினால் "டாக்டர் பட்டம்" கிடைக்குமாம். ஆக, பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் திரு. விஜயகாந்த் எப்போது நிபுணத்துவம் பெற்றார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படிதான் முன்பு ஐ.நா. அவையின் பேரைச்சொல்லி - இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு "தங்கத்தாரகை விருது" கொடுத்தது. இப்போது - ஒரு மதப் பிரச்சார அமைப்பு பல்கலைக்கழகத்தின் பெயரால் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" அளிக்கிறது.

இப்படி செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை காண்க.

http://www.iicmweb.org/

ஐ.ஐ.சி.எம் நிறுவனத்தின் நோக்கங்கள் இதோ:

OBJECTIVES OF IICM

To provide Continuing Education for Pastors, Evangelists, Bible Teachers and Christian Leaders;

To Equip Professionals, Businessmen/Women & Lay Leaders for Ministry.

To Teach the Word of God, topically in a Simple and Practical Way to make it Easy to Understand and Apply it, both in their Lives and Ministries

To help understand the importance of using Management Skills and Modern Technologies of Communication to Maximize Results in the Ministry

To impart Revelation Knowledge of the Word of God and the Anointing of the Holy Spirit

To facilitate Spiritual, Leadership and Church Growth and Development

To help being Effective and Successful in Life and Ministry in terms of achieving Goals and realizing Full Potential

To help Discover and Fulfill God's Will & Purpose!

சனி, டிசம்பர் 04, 2010

"மகிழ்ச்சி" திரைப்பட விமர்சனங்கள்


"திரைப்படம் வெளியான அன்றே வந்து குவியும் வலையுலகப் பதிவுகள் கூட மகிழ்ச்சி திரைப்படத்தைக் கண்டுகொள்ளாதது மகிழ்ச்சியான ஒன்றாக இல்லை" என்று தலைமுறைகள் - நீல.பத்மநாபன் எனும் பதிவில் செ. சரவணக்குமார் பக்கங்களில் கூறப்பட்டிருந்தது. அது உண்மைதான்.

அந்தக் குறையை போக்க, மகிழ்ச்சி திரைப்பட விமர்சனங்கள் இதோ: 


மகிழ்ச்சி-விமர்சனம் “மகிழ்ச்சியே”


http://narumugai.com/?p=18540

"நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, “போய் மொதல்ல படத்தை பாரு” என்று சொல்லலாம்! ஏனென்றால் ‘மகிழ்ச்சி’யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!" - நறுமுகை விமர்சனம். 


http://www.manisenthil.com/2010/11/blog-post_19.html

"மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் ."   - மணி செந்தில் விமர்சனம்.

மகிழ்ச்சி விமர்சனம்

http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2010/magizhchi.asp

"நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, "போய் மொதல்ல படத்தை பாரு" என்று சொல்லலாம்! ஏனென்றால் 'மகிழ்ச்சி'யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!" -ஆர்.எஸ்.அந்தணன் விமர்சனம்.

மகிழ்ச்சிக்காக மகிழ்ச்சியாக விமர்சனம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

அரசாங்கமே சட்டத்தை மதிக்காத அவலம்: சட்டம் உண்டு - புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் இல்லை

2010 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை படத்தை வெளியிட வேண்டும் என்கிற விதியை நாட்டின் ஒரு இடத்திலும் அரசு செயல்படுத்தவில்லை. அதாவது, சட்டப்படி அரசு உத்தரவு செல்லும். ஆனால், ஒரு இடத்திலும் அது செயல்பாட்டில் இல்லை.

சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்துபோகின்றனர். புகையிலை தீமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நடுவண் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்கிற விதிமுறை முக்கியமானதாகும். கூடவே, ஒவ்வொரு ஆண்டும் எச்சரிக்கைப் படங்களை கட்டாயமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இது இந்திய அரசு கையொப்பமிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் படியும் (WHO - FCTC), இந்திய புகையிலை கட்டுப்பாடு சட்டப்படியும் (COTPA 2003) கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

இதன்படி புகையிலைப் பொருட்களின் மீது எச்சரிக்கை படங்களை வெளியிடும் முறை 31.5.2009 முதல் நாடெங்கும் செயல்பாட்டுக்கு வந்தது. நுரையீரல் பகுதியின் எக்ஸ்ரே மற்றும் தேள் ஆகியன எச்சரிக்கைப் படங்களாக வெளியிடப்பட்டன.

31.5.2009 முதல் இடம்பெற்ற படங்கள்
இந்தப் படங்களுக்கு மாற்றாக புதிய படங்கள் 1.6.2010 முதல் இடம்பெற வேண்டும் என்பது விதியாகும். எனவே, புதிதாக 'வாய்ப்புற்றுநோய்' படத்தை அச்சிட வேண்டும் என 5.3.2010 இல் நடுவண் நலவாழ்வுத்துறை உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 176).

ஆனால், கால அவகாசம் போதாது என்று புகையிலை நிறுவனங்கள் கோரியதால் 1.6.2010 ஆம் நாளுக்குப் பதிலாக 1.12.2010 முதல் புதிய படத்தை புகையிலை வெளியிட வேண்டும் என அரசு உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 411, நாள் 17.5.2010)

1.12.2010 முதல் இடம்பெறவேண்டிய படம்


இந்த உத்தரவை மீறி, புதிய எச்சரிக்கைப் படம் இல்லாது 1.12.2010 முதல் புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டால் - ரூ. 5000 தண்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்கிறது இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாடு சட்டம்.

ஆனால், இந்தியாவின் ஒரே ஒரு இடத்தில் கூட இந்த சட்டம் பின்பற்றப் படவில்லை.

2.12.2010 அன்று சென்னையில் வாங்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் (ஒன்றில் கூட புதிய படம் இல்லை)

சட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, அரசின் உத்தரவு தெளிவாக இல்லை என்று கூறி, ITC , GPI ஆகிய இந்திய சிகரெட் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு 5.3.2010 அன்றே புதிய படத்தின் CDயை  இந்திய அரசு வெளியிட்டது. இதனை 1.12.2010 முதல் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பு 17.5.2010லேயே அரசு தெளிவாக உத்தரவிட்டது. ஆனாலும், இதுகுறித்து குழப்பம் நிலவுவதாக சிகரெட் நிறுவனங்கள் பசப்புகின்றன.

சிகரெட் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து - அரசு இந்த உத்தரவை பின்வாங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள்தோரும் 2500 பேர் புகையிலைப் பொருட்களால் முன்கூட்டியே செத்துப்போகும் கொடுமையை விட, ஒரு சில சிகரெட் - குட்கா நிறுவனங்களின் இலாப வெறி அரசுக்கு முக்கியமாகப் போய்விட்டது.

வாழ்க சனநாயகம்!

புதன், டிசம்பர் 01, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 2

இந்திய அரசியல் வளர்ச்சியில் சாதியின் பங்கு

சமூகம் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம். ஆனால், இந்திய சமூகத்தில் 'ஒன்றை அழித்து மற்றொன்று தோன்றுவதற்கு' பதிலாக - இருக்கும் ஒன்றே வேறொரு வடிவம் எடுக்கிறது. இதற்கு சான்றாக இருப்பது சாதி.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்த தலைவர்கள் பலருக்கு சுதந்திர இந்திய நாட்டில் சாதி இருக்காது என்கிற நம்பிக்கை இருந்தது - அல்லது அவ்வாறு நம்பவைக்க முயற்சி நடந்தது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரை தவிர வேறு எவரும் இதனை கேள்விக்குள்ளாக்கவில்லை.

இந்திய நாடு அரசியல் விடுதலை அடைந்த போது நாடு சிதறுண்டு போகும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்தியா ஒரு ஒற்றை நாடாக, சனநாயக நாடாக நீடித்திருக்கும் என்று நம்பப்படவில்லை. "இந்திய நாடு மிகக்கேடடைந்து பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போய்விடும். கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனம்தான் எஞ்சி நிற்கும்" என்று எச்சரித்தார் வின்சென்ட் சர்ச்சில். அதாவது, கல்வி அறிவற்ற இந்திய மக்கள் சனநாயக அரசியலை புரிந்து, ஏற்று நடக்க மாட்டார்கள் எனக்கருதப்பட்டது.

ஆனால், இதனை மாற்றி சனநாயக அரசியலை வளர்த்தெடுப்பதில் சாதி அமைப்புகள் முக்கிய பங்காற்றின.

மேலை நாடுகள் சனநாயக அரசியல் முறையை ஏற்றபோது, அங்கெல்லாம் மக்கள் அமைப்புகள், தன்னார்வ குழுக்கள் உருவாகி - மக்களை சனநாயக அரசியல் அமைப்பில் பங்கெடுக்கச்செய்தன. ஆனால், இந்தியாவில் அப்படியெல்லாம் பொதுவான அமைப்புகள் எதுவும் பெரிதளவில் காணப்படவில்லை. இந்தநிலையில், படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் கூட புதிய அரசியல் சூழலை புரிந்துகொள்ள வழிவகுத்தவை சாதி சங்கங்கள்தான்.

இதுகுறித்து விரிவாக ஆராய்ந்துள்ள Lloyd L Rudolph மற்றும் Susanne Hoeber Rudolph எனும் அறிஞர்கள், இவர்களது 1960 ஆம் ஆண்டின் "The Political Role of India's Caste Associations" எனும் ஆய்வுக்கட்டுரையில் "இந்திய கிராமங்களுக்கு சனநாயக அரசியலை எடுத்துச் சென்றவை சாதி சங்கங்கள்தான். இதன் மூலம் சாதியின் அடையாளத்தையும் சாதி சங்கங்கள் மாற்றியமைக்க தொடங்கின. சமூக அந்தஸ்து, சாதி பழக்க வழக்கங்களில் சாதியின் பலம் இருந்த நிலையை மாற்றி - சாதியின் பலம் வாக்கு எண்ணிக்கையில் உள்ளது என்கிற உண்மையை சாதி சங்கங்கள்தான் உணரவைத்தன" என்கின்றனர்.

இக்கட்டுரையில் தமிழ் நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு வன்னியர் சங்கம் எவ்வாறு பங்களித்தது என்பதை விவரித்துள்ளனர்.

காண்க: Explaining Indian Democracy - A Fifty Years Perspective 1956 - 2006, by Lloyd L Rudolph & Susanne Hoeber Rudolph, Published by Oxford University Press 2008.

எனவே, சாதி என்பது கட்டாயம் தீமையை தான் செய்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சாதி கேடானதாகவே இருந்து வந்தது. ஆனால், சாதி அமைப்புகள் தீங்கானவை அல்ல. அவை ஒடுக்கப்பட்ட பிரிவினரின் விடுதலைக்குதான் பாடுபட்டன. கூடவே, இந்திய சனநாயக அமைப்புக்கும் சாதி சங்கங்கள் நன்மையையே செய்துள்ளன.        


சாதி சங்கங்களின் அடுத்தக்கட்டமாக பார்க்கப்படும் சாதி அரசியல் என்பதும் கூட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைக்கான அரசியல்தான்.

இதனை பிற்போக்காக பார்ப்பதுதான் உண்மையான பிற்போக்கு.

செவ்வாய், நவம்பர் 30, 2010

கான்குன்: ஐ.நா.மாநாட்டால் உலகம்  அழியாமல் காப்பாற்றப்படுமா?

புவி வெப்பமடைதல் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது. வரலாற்றில் இதுவரை இருந்திராத வகையில் மிக அதிக வெப்பம் நிலவும் ஆண்டாக 2010 ஆம் ஆண்டு மாறும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன.

'வரலாறு காணாத' புயல், 'வரலாறு காணாத' மழை, 'வரலாறு காணாத' வெள்ளம், 'வரலாறு காணாத' வறட்சி, 'வரலாறு காணாத' காட்டுத்தீ, 'வரலாறு காணாத' நில நடுக்கம், 'வரலாறு காணாத' பனிப்பொழிவு,  'வரலாறு காணாத' குளிர் என்பனவெல்லாம் இப்போது வழக்கமாகிவிட்டன - காரணம் காலநிலை மாற்றம்தான்.

இயற்கை சீற்றங்கள் வரலாற்றில் இல்லாத அளவாக மாறியுள்ளன. இப்படி நடக்கும் என்பதை 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. பன்னாட்டு அறிவியலாளர் குழுவின் (IPCC - Intergovernmental Panel on Climate Change) அறிக்கை தெளிவாக எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் கட்டுப்படுத்தவே முடியாதவையாக மாறும் நிலை தற்போது தோன்றியுள்ளது. உலகெங்கும் பல்வேறு மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. இவை ஒரு மிகப்பெரிய பேரழிவின் தொடக்கமாக இருக்கக் கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

'உலகம் அழிவதை மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியும்' என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வருகிறது. உலக அழிவை மனித சக்தியால் தடுத்து நிறுத்தவே முடியாத கட்டத்தை எட்டும் நிலை வந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், 'அறிவியல்' சுட்டிக்காட்டும் அவசர நிலையை 'அரசியல்' தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அறிவியல் சொல்வது என்ன?

புதை படிவ எரிபொருட்கள் எனப்படும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாய உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும் - காடுகளை அழிப்பதாலும், அதிக அளவு கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் கலக்கிறது.

வளிமண்டல கரியமில வாயு அடர்த்தி 200 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 275 ppm அளவாக இருந்தது. இப்போது 392 ppm ஆக அதிகரித்துள்ளது. (ஒரு ppm என்பது பத்துலட்சத்தில் ஒரு பகுதி ஆகும்.)

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு, சூரியனிடமிருந்து வரும் வெப்ப சக்தியை பிடித்து வைக்கும் திறனுடையது. இதன் அடர்த்தி அதிகமாவதற்கு ஏற்ப, அது பிடித்துவைக்கும் வெப்பமும் அதிகமாகிறது. இதனால், பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாகி வருகிறது. உலகெங்கும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இயற்கை சீற்றங்கள் கட்டுக்கடங்காத அளவு அதிகமாவதற்கு இதுவே காரணம்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை உடனடியாக குறைக்க வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இப்போதைய 392 ppm கரியமில வாயு அடர்த்தி மென்மேலும் அதிகரிக்காதவாறு வேகமாக செயல்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும். கூடவே, இதனை 350 ppm அளவுக்கு படிப்படியாக குறைத்தாக வேண்டும்.

இதுவே, பூமியில் மனித இனமும், உயிரினங்களும் தொடர்ந்து உயிர் பிழைத்திருக்க ஒரே வழி என்கின்றனர் அறிவியலாளர்கள்.

அரசியல் தலைவர்கள் செய்வது என்ன?

உலகநாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கடந்த 20 ஆண்டுகளாக ' புவி வெப்பமடைவது' குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் - ஐ.நா. அவையை மையமாக வைத்து நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உருப்படியான முடிவு எதுவுமே எட்டப்படவில்லை.

ஐ.நா. புவி உச்சிமாநாடு 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் கூடியபோது, அதன் ஒரு அங்கமாக "காலநிலைமாற்ற பணித்திட்ட பேரவை" (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) ஏற்படுத்தப்பட்டது. உலகின் பெரும்பாலான நாடுகள் பங்கேற்கும் இந்த அமைப்பின் 'அமைச்சர்கள் அளவிலான ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு' (Conference of the Parties -COP) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் கூடிய  மாநாட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 'கியோட்டோ உடன்படிக்கை' (Kyoto Protocol ) எட்டப்பட்டது.

வளிமண்ட கரியமில வாயு அடர்த்திக்கு வரலாற்று ரீதியில் காரணமான நாடுகள் கியோட்டோ உடன்படிக்கையில் பட்டியலிடப்பட்டன. அந்த நாடுகள் கூட்டாக 1990 ஆம் ஆண்டில் எவ்வளவு கரியமில வாயுவை வெளியேற்றினவோ - அந்த அளவுக்கு கீழாக 5.2% அளவுவரை 2008 - 2012 ஆண்டுகளில் கரியமில வாயு வெளியாகும் அளவை குறைக்க வேண்டும் என்றது இந்த உடன்படிக்கை.

உலகின் மிக அதிகம் மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா, இந்த உடன்படிக்கையில் முதலில் இணைந்து பின்னர் வெளியேறிவிட்டது.

இதற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. அவையின் ஒரு அங்கமான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு (IPCC)அறிக்கை, கரியமில வாயு வெளியாகும் அளவை 1990 ஆம் ஆண்டின் அளவுக்கு கீழாக 5.2 % குறைத்தால் போதாது, உண்மையில் 80 % குறைக்க வேண்டும் என்றது. எனவே, புதிய புரிதலுக்கு ஏற்ப புதிய வியூகத்தை வகுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாலி வழிகாட்டி 2007 (Bali Road Map)

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 13) 2007 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித் தீவில் கூடியபோது இருவழி பேச்சுகளைத் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

1. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கியோட்டோ உடன்படிக்கையை அடுத்த காலகட்டத்திற்கு கொண்டு செல்வது. அதாவது, 5.2 % அளவு கரியமில வாயு வெளியாகும் அளவை 2012 க்குள் எட்டுவது என்பதை 2012 க்கு பின்னும் நீட்டிப்பது (80 % வரை). (Ad Hoc Working Group on Further Commitments under the Kyoto Protocol - KP)

2. கியோட்டோ உடன்படிக்கையில் அமெரிக்கா ஒரு உறுப்பு நாடு அல்ல என்பதால், அந்த நாட்டையும் இணைத்து 'நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு' குறித்து பேசுவது, என்று முடிவெடுக்கப்பட்டது. (Ad Hoc Working Group on Long-term Cooperative Action - LCA)

இரண்டுவகையாக பேசினாலும் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். ஒன்றில் அமெரிக்கா இடம்பெறாது, மற்றதில் இடம்பெறும் - இதுதான் வேறுபாடு.

'நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு' (LCA) பேச்சுகளில்:

அ. கரியமில வாயு உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வெளியாகும் அளவினைக் குறைத்தல் (Mitigation),

ஆ. மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வது (Adaptation),

இ. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் பகிர்ந்து கொள்வது (Technology),

ஈ. மேற்கண்ட மூன்று தேவைகளுக்குமான நிதிவளத்தை அளிப்பது (Finance) - ஆகியவை குறித்து பேசுவது என்பதே பாலி வழிகாட்டி ஆகும்.

அவ்வாறே, கியோட்டோ உடன்படிக்கையில் இணைந்துள்ள நாடுகள் அதனை 2012 ஆம் ஆண்டுக்கு பின்னும் தொடர்வதற்கான இலக்குகளை வகுப்பது பாலி வழிகாட்டியின் மற்றொரு வழிப் பேச்சுவார்த்தை.

இந்த இரண்டு வழிகளின் இலக்கும் 'காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வது' ஆகியனதான். எனினும், கியோட்டோ உடன்படிக்கை அதன் உறுப்பு நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியது. மற்றது வெறும் பேச்சுதான்

தோல்வியில் முடிந்த கோபன்ஹெகன் மாநாடு.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 15) ஆம் 2009 ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகரில் கூடும்போது 1. நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயல்பாடு, 2. கியோட்டோ உடன்படிக்கை இருவழி பேச்சுகளும் வெற்றி பெற்று தலைவர்கள் புதிய உடன்படிக்கையில் கையொப்பமிடும் இடமாக அது அமையவேண்டும் என்று ஏற்கனவே பாலி வழிகாட்டியில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே நடக்கும் என்று உலகெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளின் பிடிவாதத்தால் கோபன்ஹெகன் மாநாடு தோற்றுப்போனது.

தோல்வி தொடருமா?

கோபன்ஹெகன் மாநாடு தோல்வியில் முடிந்தாலும், 2010 ஆம் ஆண்டில் உடன்படிக்கை எட்டப்படும் வகையில் பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று அங்கே முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் உலக நாடுகளுக்கு இடையேயான கூட்டங்கள் முறையே 2010 ஏப்ரல், சூன், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மூன்று முறை ஜெர்மனியின் பான் நகரில் கூடியது. நான்காவது கூட்டம் அக்டோபர் மாதம் சீனாவின் தியான்ஜின் நகரில் கூடியது. இங்கெல்லாமும் பேச்சுவார்த்தைகளில் இழுபறியே நீடித்தது.

கான்குன் நகரில் என்ன நடக்கும்?

மெக்சிகோவின் கான்குன் நகரில் இப்போது நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாடு (COP 16) கூடியுள்ளது. "கோபன்ஹெகனில் தவறவிடப்பட்ட உடன்படிக்கை" உலகத் தலைவர்கள் கான்குனில் கூடும் போதாவது எட்டப்படுமா என்கிற ஆவல் இப்போது எழுந்துள்ளது.

கான்குன் மாநாடு மிகமிக முக்கியமானது - பூமியில் உயிரின வாழ்க்கை தொடருமா, அல்லது ஒரேயடியாக அழியுமா என்பதை இங்கு மேற்கொள்ளப்படும் முடிவுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன.

ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.





சுப்ரமணியன் சுவாமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் அனுஷ்கா, நாடியா ஆகியோரும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். (பக்கம் 43 - குமுதம் ரிப்போர்ட்டர் - 5.12.2010)

அதாவது, ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கும் பங்கு கிடைத்திருக்கலாமாம்!!!

(குறிப்பு: அனுஷ்கா, நாடியா ஆகியோர் திருமதி. சோனியா அம்மையாரின் தங்கைகளாம்)

(முக்கிய குறிப்பு: மேலே உள்ள படங்களுக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை)

திங்கள், நவம்பர் 29, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 1

சாதி அரசியல் ஒரு மோசமான விடயம் என்று இப்போது பலரும் பேசுகின்றனர். குறிப்பாக, உயர்சாதி பத்திரிகைகள் அப்படியொரு கருத்தை திணிக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை.

வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.

1. இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை ஆங்கிலேயர்கள் 1860களுக்கு பின்பு அறிமுகப்படுத்தியபோது, ஒருசில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்படுவதை எதிர்க்க சாதி ரீதியிலான அணிதிரட்டல் நடந்தது.

2. ஒருசில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டபோது சாதி ரீதியிலான அணிதிரட்டல் தேவைப்பட்டது.

3. தமிழ்நாடு திராவிட ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஒரு மாநிலமாக இருப்பதும், திராவிட கட்சிகள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கும் பின்னணி சாதி அரசியல்தான். "பார்ப்பனர்கள் ஒரு சாதி - பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லோரும் மற்றொரு சாதி" என்கிற தந்தை பெரியாரின் வகைப்படுத்தல்தான் திராவிட அரசியல் எழுச்சியின் அடிப்படை.

4. அண்ணல் அம்பேதகர் அவர்களால் முன்வைக்கப்பட்டு, இன்று தலித் அரசியலாக வளர்ந்து நிற்கும் அரசியல் எழுச்சியின் அடிப்படையும் சாதிதான்.

5. விடுதலையான காலகட்டத்தில் இந்தியாவின் சனநாயகத்தை வளர்க்க சாதியே வழிவகுத்தது. தேர்தல் முறையை ஊக்குவிக்கும்விதமாக பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கேற்க செய்தவை சாதி அமைப்புகள்தான்.

6. காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது.

இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது - சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.

ஆக, மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக - சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.

ஓரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வழிவகுத்ததும் சாதி அரசியல்தான். ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்.

இது எப்படி பிற்போக்கு ஆகும்?

ஞாயிறு, நவம்பர் 28, 2010

இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

பீகாரில் சாதி தோற்றுவிட்டது என்றும், இது மற்ற மாநிலங்களில் சாதி அரசியல் பேசும் தலைவர்களுக்கு ஒரு பாடம் என்றும் பத்திரிகைகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. இந்த பிரச்சாரம் உண்மையா?

பீகாரில் பிற்படுத்தப்பட்டோர் + தாழ்த்தப்பட்டோர் என்கிற சாதிக் கூட்டணியை மற்றொரு சாதிக் கூட்டணியான பிற்படுத்தப்பட்டோர் + உயர்சாதிக் கூட்டணி தோற்கடித்துள்ளது. அதாவது இரண்டு சாதி அணிகளுக்கு இடையேயான போட்டியில் உயர்சாதி அணி வென்றுள்ளது. இதைத்தான் "சாதி தோற்றது" என்று பேசுகின்றன உயர்சாதி பத்திரிகைகள்.

பீகாரின் ஆதிக்கசாதியினர் மூன்று பிரிவினர் ஆகும். 1. பூமிகார்கள், இவர்கள் நிலச்சுவாந்தார்கள். 2. இராசபுத்திரர்கள், இவர்கள் பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்தவர்கள். 3. பார்ப்பனர்கள், இவர்கள் அதிகாரப் பதவிகளில் கோலோச்சுபவர்கள். இந்த மூன்று பிரிவினரின் ஆதிகாரம்தான் 1990 வரை நீடித்தது. இந்த உயர்சாதி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டியவர் லாலு பிரசாத் யாதவ். லாலுவின் வெற்றி சமூக நீதியின் வெற்றி என்று போற்றப்பட்டது.

இவ்வாறு லாலுவின் வெற்றியால் ஓரங்கட்டப்பட்ட கூட்டத்தினர் - இப்போது, நிதீஷ்குமாரை முன்னிறுத்தி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவரை - இன்னொரு பிற்படுத்தப்பட்ட தலைவருடன் சேர்ந்து ஆதிக்க வகுப்பினர் வீழ்த்தியுள்ளனர். இது எப்படி சாதியின் தோல்வி ஆகும்?

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து 'இந்தியா டுடே' இதழ் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது:

1. தொகுதி எல்லை மறுவரையறை செய்த பிறகு உயர்சாதியினர் மிகுந்திருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 52 இலிருந்து 72 ஆக அதிகரித்தது.


2. நிதீஷ்குமார் கடந்தமுறை முதல்வரான பின்பு அதிதீவிர பிற்படுத்தப்பட்டோர், மகாதலித்துகள் ஆகியோரை தனது சமூக அடித்தளமாக உருவாக்கினார். உயர்சாதியினரின் வாக்கு வங்கியை பா.ஜ.க தக்கவைத்துக்கொண்டது.


3. உயர் சாதியினரில் பெரும்பாலானோருக்கு நிதீஷ் மீது அபிமானம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் நிதீஷ் + பா.ஜ.க இரு கட்சிகளின் ஓட்டுகளும் பரஸ்பரம் கூட்டணி வேட்பாளருக்கு பரிமாரிக்கொள்ளப்பட்டது. ஆனால் லாலு + பாஸ்வான் அணியில் அவ்வாறு கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு பரிமாரிக்கொள்ளப்படவில்லை.

ஆக நடந்தது இதுதான்:

பிற்படுத்தப்பட்டோர் லாலு தலைமையில் ஒரு பிரிவினரும் நிதீஷ் தலைமையில் ஒரு பிரிவினரும் எதிர் எதிராக அணிவகுத்தனர்.

பிற்படுத்தப்பட்டோர் + தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஆகிய லாலு + பாஸ்வான் அணி தோற்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் பரஸ்பரம் இணையவில்லை. இவர்களின் சாதிப்பற்று தீவிரமானதாக இல்லை.

பிற்படுத்தப்பட்டோர் + உயர்சாதிக் கூட்டணி ஆகிய நிதீஷ் + பா.ஜ.க அணி வென்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோரும் உயர்சாதியினரும் பரஸ்பரம் வாக்களித்துள்ளார்கள். உயர்சாதியினருக்கு வேறு வழியும் இல்லை.

ஆக, இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றுள்ளது. அதுவும் உயர்சாதி!

உண்மை இவ்வாறிருக்க சாதி தோற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?

ஒடுக்கப்பட்ட சாதியினர் வென்றால் - அது சாதியின் வெற்றி என்பதும், அதுவே, உயர்சாதியினர் வென்றால் அது சாதிகடந்த வெற்றி என்றும் அடையாளப்படுத்துவது ஏன்?

"உயர் சாதியினரின் ஆதிக்கமே இயல்பு - ஒடுக்கப்பட்டோரின் வெற்றி இயல்புக்கு மாறானது" என்கிற மனுதர்ம சிந்தனையே பத்திரிகைகளின் "பீகாரில் சாதி தோற்றது" என்கிற பிரச்சாரத்தின் பின்னணி ஆகும்.

சனி, நவம்பர் 27, 2010

பீகாரில் தோற்ற சாதி = ஆதிக்க சாதி வெறியர்களின் சதி!

பீகார் தேர்தலில் நிதீஷ்குமார் வெற்றி பெற்றதை "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன. இது உண்மையை மூடிமறைக்கும் மேல்சாதி சதியே அன்றி வேறல்ல! - என்று நான் எனது பதிவில் எழுதியிருந்தேன். (பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?)

ஐக்கிய சனதாதளத்தின் வெற்றியை "சாதியின் தோல்வி" என்று பேசுவது பித்தலாட்டம் என்று நான் கூறியிருப்பதற்கு மறுப்பு ஓசை பதிவில் வந்துள்ளது: தணியுமோ சாதீய வெறி..

அதில் "சாதீயை கடந்து, மதத்தை கடந்து நேர்மையுடன் தில்லுமுல்லற்ற தேர்தல் மூலம் வென்று இருக்கிறார் (நிதீஷ்குமார்).  இது பிடிக்காத சிலர், அவரது வெற்றியையும் சாதீய கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்ன பெரிய வளர்ச்சி, என்ன பெரிய வெற்றி என்கின்றனர். அது நிச்சயம் துரதிருஷ்டவசமானது." என்று கூறப்பட்டுள்ளது.

ஓசை பதிவிற்கு எனது மறுப்பு:

1. நிதீஷ்குமாரின் வெற்றியை நான் கொச்சைப்படுத்தவில்லை. அவருக்கு எதிராகவும் பேசவில்லை. "தோற்றுப்போன லாலு சாதி வெறியர், வெற்றி பெற்ற நிதீஷ்குமார் சாதி கடந்தவர்" என்று பேசுவது என்ன நியாயம்? என்பதுதான் எனது கேள்வி. நிதீகுமாரோ அவரது கட்சியோ எந்த விதத்தில் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி? அதுவும் சாதிவாரி உரிமைக்காக போராடுகிற கட்சி என்பதுதானே உண்மை.

சாதி மறுப்பு பேசும் ஆதிக்க சக்திகள் - வெற்றி பெற்றவர்களை தங்களது ஆளாக மாற்றும் முயற்சி இது இல்லையா? ஒருவேளை நிதீஷ்குமார் தனியார்துறை இடஒதுக்கீட்டை கொண்டுவந்தால் அவர் உடனே சாதிவெறியர் ஆக்கப்பட மாட்டாரா?

நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காகவும், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டும் போராடும் கட்சி ஐக்கிய சனதாதளம். பிற்படுத்தப்பட்டோருக்காக போராடும் தலைவர்களில் முன்னிலையில் நிற்பவர் ஐக்கிய சனதாதளத்தின் தலைவர் சரத் யாதவ்.

நாடாளுமன்றத்தில் சரத்யாதவையும் அவரது கட்சியையும் சாதி வெறியர்களாக சித்தரித்த அதே பத்திரிகைகள் - இப்போது பீகாரில் மட்டும் அவரது கட்சியை சாதிக்கு எதிரான கட்சியாக சித்தரிப்பது ஏன்?

பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியும் (லாலு) தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சியும் (பாஸ்வான்) பீகாரில் தோற்றுப்போனதாக எழுதும் பத்திரிகைகள் - வெற்றிபெற்ற கட்சியும் (நிதீஷ்) ஒரு பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சிதான் என்கிற உண்மையை மறைப்பது ஏன்?

பீகாரில் சாதி தோற்றது உண்மையானால் - அங்கு காங்கிரஸ் கட்சிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். சாதிக்கு அப்பாற்பட்ட தலைவர் ராகுல் காந்தியின் கட்சி வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது ஏன்?

2. வளர்ச்சிக்குதான் மக்கள் வாக்களித்தார்கள் என்பது உண்மையானால் - நிதீஷ்குமாரைப் போலவே, மத்திய பிரதேசத்தின் திக் விசய சிங்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் கூடத்தான் வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள். அவர்கள் தோற்றது ஏன்? உத்திரபிரதேசத்தில் மாயாவதி மாபெரும் வெற்றி பெற்றாரே - அதற்கு பின்னால் இருந்தது சாதியா? வளர்ச்சியா?

3. மதவாதத்தையும் மதசார்பின்மையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக ஒப்பிடலாம். தீவிர முதலாளித்துவத்தையும் தீவிர பொதுவுடமையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கூறலாம். அது போல சாதி பேசுவதையும் வளர்ச்சியையும் எதிரானதாக எதன் அடிப்படையில் ஒப்பிடுகிறார்கள்?

நீடித்த வளர்ச்சி என்பது ஒரு கொள்கை. வளர்ச்சிக்கு ஆதாரமான சுற்றுச்சூழல் காக்கப்பட்டால்தான் வளர்ச்சி நீடிக்கும் என்பது இதன் அடைப்படை.  எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பேசினால் அது வளர்ச்சியை எதிர்ப்பது ஆகாது. அதாவது, ஒருகட்சி ஒரே நேரத்தில் வளர்ச்சிக்காகவும் - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் பேச முடியும்.

அதுபோலத்தான் வகுப்புவாரி உரிமைக் கொள்கையும். வளர்ச்சியின் பலன் ஒருசிலரிடம் சேராமல் அது எல்லோருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை. வளர்ச்சிக்காகப் பேசும் ஒரு கட்சி சமூக நீதிக்காகவும் பேச முடியும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

ஆனால், ஆதிக்க சாதிவெறி பத்திரிகைகள் சமூகநீதிக் கோள்கைக்கு சாதிச்சாயம் பூசி அதனை வளர்ச்சிக்கு எதிராக நிறுத்துகின்றன. இதுஒரு பித்தலாட்டம் அல்லாமல் வேறு என்ன?

உண்மையில் ஒருதேர்தலில் வெற்றி தோல்விக்கு பல காரணங்கள் இருக்கும். அதில் வளர்ச்சிக்கும் ஒரு பங்கு இருக்கும், அவ்வளவுதான். சாதியின் தாக்கம் மாநிலத்துக்கு ஏற்ப மாறுபடும். மேற்கு வங்கத்திலோ, குஜராத்திலோ சாதிக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருக்காது. ஆனால், உத்திரபிரதேசம், பீகாரில் அதற்கு முக்கிய பங்கு உண்டு.

சாதி தோற்றது என்று பத்திரிகைகள் எழுதுவது ஒரு போலிவேடம், சதிச்செயல். இதன் மூலம் சமூகநீதிக் கொள்கைக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என்கிற மாயத்தோற்றத்தை அவை விதைக்கின்றன.

அதாவது - நிதீஷ் வென்றார், லாலு தோற்றார். வளர்ச்சி வென்றது, சாதி தோற்றது - எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, தனியார் துறை இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் இனி எடுபடாது - என்கிற மாயத்தோற்றத்தை பத்திரிகைகள் எற்படுத்த முயல்கின்றன.

இந்த பிரச்சாரத்தை "ஆதிக்க சாதி வெறியர்களின் தொடர்சதியின் ஒரு அங்கம்" என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளி, நவம்பர் 26, 2010

பீகார் தேர்தல்: கேலிக்கூத்தாகும் சனநாயகம்!

மக்களாட்சி என்பது என்னதங்களை தாங்களே ஆளும் உரிமையை தமது சார்பாக வேறொருவருக்கு விட்டுக்கொடுப்பதுதான் மக்களாட்சி. மக்களின் பிரதிநிதிகள் மூலமாக ஆளப்படும் நாடுதான் சனநாயக நாடு. ஆனால், இந்தியாவின் தேர்தல் முறை சனநாயகத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது பீகார் தேர்தல்.

மக்களாட்சி முறை என்றால், அது மக்கள் அனைவரது விருப்பங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அல்லது, பெரும்பான்மை மக்களது விருப்பத்தையாவது எதிரொலிக்க வேண்டும். இவை இரண்டுமே நமது தேர்தல் முறையில் இல்லை.

பீகார் தேர்தலில் 23 % வாக்குகளை வாங்கிய ஐக்கிய சனத தளம் 115 இடங்களை பிடித்துள்ளது. அதாவது 47 % இடங்கள்.  16 % வாக்குகளைப் பெற்ற பாரதீய சனதா கட்சி 91 இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது 37 % இடங்கள்.

ஆக மொத்தம் 39 % வாக்குகளைப் பெற்ற ஆளும் கூட்டணி 85 % இடங்களை பிடித்துள்ளது.

அதேசமயம் 26 % வாக்குகளைப் பெற்ற ராஷ்ட்ரீய சனதா தளம் + லோக் சன சக்தி கூட்டணி 25 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதாவது வெறும் 10 % இடங்கள்.

39 % வாக்குகளுக்கு 85 % இடங்கள், ஆனால், 26 % வாக்குகளுக்கு 10 % இடங்கள் என்பது என்ன விதமான சனநாயகம்? இதில் ஏதாவது நீதி இருக்கிறதா?

"ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு" என்பது வேட்டிப்பேச்சுதானா?

பீகாரில் மொத்தம் பதிவான வாக்குகள் 53 % மட்டுமே. இதையும் கணக்கில் கொண்டால், ஆளும் கூட்டணி உண்மையில் பெற்றுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே. (வாக்களிக்காதவர்கள் வாக்களித்தால் அது இரு அணிக்கும் போகலாம்).

ஆக, மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே தமது அதிகாரத்தை ஐக்கிய சனதா தளம் + பாரதீய சனதா கட்சி கூட்டணிக்கு அளித்துள்ள நிலையில், இதனை மக்களாட்சி அரசாக எப்படி ஏற்க முடியும்? (மொத்த மக்கள் தொகையில் அல்ல - அதில் வாக்காளர் பட்டியலில் இல்லாதோரும், 18 வயதுக்கு கீழானோரும் உள்ளனர்)

சனநாயகத்திற்கு எதிரான தேர்தல் முறை

"முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு காரணமாகும். இது ஒரு பழமையான முறை. காலமாற்றத்திற்கு ஏற்ப பல புதிய தேர்தல் முறைகள் இப்போது வந்துவிட்டன.

நமது தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன.

சிறுபான்மையினரும் மாற்று கருத்துள்ளோரும் ஒருநாளும் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது.

இந்த தேர்தல் முறை சாதி முறையை வளர்க்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதியினர் அதிகமோ, அந்த சாதியினர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட இது வழி செய்கிறது.

இந்த முறையில் பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது. இதனால், தீவிரவாதம் வளரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.

வியாழன், நவம்பர் 25, 2010

சாதியும் முதல்வர் பதவியும்: காப்பாற்றப்பட்ட முதல்வர், பதவியிழந்த முதல்வர், பதவிபெற்ற முதல்வர்.

1. காப்பாற்றப்பட்ட முதல்வர் - எட்டியூரப்பா

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எட்டியூரப்பாவின் பதவியை பறிக்க அவரது கட்சித்தலைமை (BJP) வெளிப்படையாக முயற்சி செய்தது. அவர் பதவி விலகுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். பத்திரிகைகளும் அவ்வாறே சத்தியம் செய்தன. ஒரு கட்டத்தில் பதவி விலகல் கடிதத்தை அவர் கொடுத்துவிட்டதாகவும் கூறினர்.

இந்த நேரத்தில் அவரைக்காப்பாற்ற முன்வந்தது அவரின் லிங்காயத் சாதி. லிங்காயத் சமூகத்தினரின் ஆன்மீகத் தலைவரான பேஜாவர் மடத்தின் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி எட்டியூரப்பாவை பதவி நீக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கினார். அவருடன் இன்னும் இரண்டு லிங்காயத் மடாதிபதிகளும் எட்டியூரப்பாவை ஆதரித்தனர். எந்த கட்சியையும் சாராத இவர்களது கோரிக்கையைப் போலவே, பாரதீய சனதா கட்சியின் லிங்காயத் சாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எட்டியூரப்பாவை ஆதரித்தனர்.

இன்னுமொரு வேடிக்கையாக - எட்டியூரப்பாவை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு தலைமையேற்றவர் ரேணுகாச்சார்யா. அவரும் ஒரு லிங்காயத் என்பதால் - சாதிப்பாசத்தால் அல்லது தனது சாதிக்கு பயந்து - கடைசி நேரத்தில் எட்டியூரப்பாவுக்கு ஆதரவாளராக மாறினார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதால், லிங்காயத்துகளை பகைக்க மனமின்றி பி.ஜே.பி'யும் சாதிக்கு அடிபணிந்தது.

எட்டியூரப்பா முதல்வராகத் தொடர காரணம் - சாதி

2. பதவியிழந்த முதல்வர் - ரோசையா

ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஆனால், ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதனை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததால், ஜகன் மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆறுதல் யாத்திரை என்கிற பெயரில் அவர் மக்களைத் திரட்டுகிறார். எனவே, மீண்டும் ஒரு ரெட்டி சமூகத்தவரை அட்சியில் அமர்த்த, ரோசையா காங்கிரஸ் கட்சியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ரோசையா முதல்வர் பதவி இழக்க காரணம் - சாதி

3. பதவிபெற்ற முதல்வர் - கிரண் குமார் ரெட்டி

ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்த மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருக்கிறது.

கிரண் குமார் ரெட்டி முதல்வர் பதவி பெற காரணம் - சாதி

பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய சனதாதளத்தின் நிதீஷ் குமாரின் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. உடனே, "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யத்தொடங்கியுள்ளன.


இது உண்மையை மூடிமறைக்கும் மேல்சாதி சதியே அன்றி வேறல்ல!


1. நிதீஷ் குமாரின் ஐக்கிய சனதாதளம் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. மாறாக, குர்மி, கோரி போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரை முன்னிலைப்படுத்தும் கட்சி அது.


தேசிய அளவில் -ஐக்கிய சனதாதளம் கட்சியின் தேசியத்தலைவர் சரத் யாதவ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடும் தலைவராக அடையாளம் காணப்படுள்ளார் . சாதிவாரிக்கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காக முன்னின்று போராடும் போராளி சரத் யாதவ்.


எனவே, ஐக்கிய சனதாதளத்தின் வெற்றியை "சாதியின் தோல்வி" என்று பேசுவது பித்தலாட்டம்.


2. "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பேசுவதன் மூலம் - சாதியை முன்னிறுத்துவது வளர்ச்சிக்கு எதிரானது என்று கட்டுக்கதைகளை அள்ளிவிடுவது ஆதிக்க சாதியினரின் ஒருவகையான தந்திரமே ஆகும்.


உண்மையில் வளர்ச்சி என்பது ஒருசிலருக்காக, அல்லது, ஒருசில சாதிகளுக்காக - என்று இருப்பதை மாற்றி வளர்ச்சியை பரவலாக்கவேண்டும். வளர்ச்சியின் பயன் எல்லோருக்கும் செல்ல வேண்டும். மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்பதுதான் சாதி அரசியலின் அடிப்படை.


எனவே, சாதி பேசுவது வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. அதுவே, நீதியான வளர்ச்சிக்கு ஆதாரம்.

வெள்ளி, நவம்பர் 05, 2010

தீபாவளிப் பண்டிகையின் பலன்கள் - தந்தை பெரியார்

""தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது.  அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.  தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.  அதாவது, விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றாராம்.  இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள்! விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்!  இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பதை நம் மக்கள் நினைப்பதே இல்லை.  அப் பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான்.  தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன்வாங்கியாவது - கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது. 

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போதலும், பட்டாசு சுடும்போது திடீரென வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம்வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவோ பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம்கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனைப் பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள்!

இவைகளை எந்த இந்திய பொருளாதார - தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்""

தந்தை பெரியார், "குடிஅரசு' 20.10.1929

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா'  - தீபாவளியின் உண்மை பின்னணியைக் கூறுகிறார் தொ. பரமசிவன்.

""இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கோண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசியத் திருவிழா' போலக் காட்டப்படுகிறது.

ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப்பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும்.

இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா.  பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.  தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீ + ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை.  தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப் பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று.  இந்த நாளே பிராமணிய சார்பாக எழுந்த கதையாகும். 

இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும்.  தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக்கொண்டார்.  ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.  எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்.

விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிறத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். 

வட நாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர்.  எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும்.  தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திரு விழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.  ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.""

நன்றி: "பண்பாட்டு அசைவுகள்" நூல்.

திங்கள், அக்டோபர் 25, 2010

எது ஆதிக்க சாதி? ஒரு எளிய விளக்கம்!

தமிழ்நாட்டளவில் "பார்ப்பனர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி, அருந்ததிய இனத்தவர் மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" -  இப்படி விளக்கம் கொடுப்பது எளிது. ஏனெனில் பார்ப்பனர்களை விட உயர்ந்தவர் என்று கூறிக்கொள்கிற சாதியோ, அருந்ததியினரைவிட தாழ்ந்தவர் என்று சுட்டப்படுகிற சாதியோ இருப்பதாகத் தெரியவில்லை.


நல்லவேளையாக மலைவாழ் பழங்குடிமக்கள் சாதியில் சிக்கவில்லை. (ஒரு சாதி உயர்ந்தது மற்றொரு சாதி தாழ்ந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல - மனிதர் அனைவரும் சரிசமமே.)


இந்த இரு பிரிவினர் தவிர வேறு எந்த ஒரு சாதியைப் பற்றி பேசினாலும் - அந்த சாதியை ஒருசிலர் "மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி" எனவும், வேறு சிலர் "மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" எனவும் ஏட்டிக்குப் போட்டியான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 


எனவே, ஆதிக்க சாதி என்பது எது? என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது.


ஆதிக்கம் என்பது 'நீ தாழ்ந்தவன் - நான் உயர்ந்தவன்' என்பது மட்டுமல்ல. கூடவே கல்வி, வேலை, பொருளாதாரம், அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வளம், வாய்ப்பு, அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே உண்மையான ஆதிக்கம்.


இன்றைய நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி - தமிழ்நாட்டின் "வளம், வாய்ப்பு, அதிகாரம்" அனைத்தும் அவரவர் சாதி மக்கள் தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.


இந்த நிலைபாட்டை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் வரவேற்கும் சாதிகள் ஆதிக்கத்திற்கு எதிரான சாதிகள்.


சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் எதிற்கும் சாதிகள் ஆதிக்க சாதிகள், என்று அடையாளம் காண்பதே சரியாக இருக்கும்.

திங்கள், அக்டோபர் 04, 2010

ராமர் பிறந்த இடம்: அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்?

ராமர் பிறந்த இடம் - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் கருத்து:

""நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை ஆன்மீகப் புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்காக நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்ததானே வேண்டியுள்ளது.""

அய்யோ பாவம் முதல்வர். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?


ஏதாவது ஒரு பிடிக்காதவரின் இடத்தக்காட்டி அங்குதான் ராஜராஜன் இறந்தான் என்று கட்டுக்கதையை கட்டிவிட்டால் போதாதா?


அப்புறம் இருக்கவே இருக்கு நீதிமன்றம் - மக்கள் நம்புகிறார்கள் என்று தீர்ப்பளித்துவிடாதா?


ஆனால் அவர் ஆதாரங்கள் குறித்து பேசுகிறார்:


""ஆராய்ச்சிகள் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.""

என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழனின் நிலை பரிதாபகரமானது. வரலாற்று ஆதாரங்களின்படி தமிழனுக்கு 3 ஆயிரம் ஆண்டு நாகரீகம் உண்டு. ஆனால், மூடநம்பிக்கை, கட்டுக்கதைகளின் படி ஆரியர்கள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள்.

3 ஆயிரம் பெரிதா? 17 லட்சம் பெரிதா?

அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!

சனி, அக்டோபர் 02, 2010

அயோத்தி: நடந்தது இதுதான்!

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குரியதா அல்லது போற்றுதலுக்குரியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:
GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:
“The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”
GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:
“5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.
6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் “இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது” என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன.
ஏன் இந்த பித்தலாட்டம்?
இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?