Pages

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

போக்குவரத்து சிக்கல்: பொருத்தமில்லாத இடங்களில் "சுற்றுச்சூழல்" கருத்துகளைப் பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் போக்குவரத்து சிக்கல் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் பதிவு:


மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் டோண்டு ராகவன் குற்றவாளியாக நின்றபோது



 ""1962 செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சென்னை டி-1 போலீஸ் ஸ்டேஷன் போலீசாரால் அப்பக்கம் சைக்கிளில் வந்த நான் வாலாஜா ரோடில் நிறுத்தப்பட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை, சைக்கிள் லைட் எரிந்து கொண்டுதான் இருந்தது. அப்புறம் பார்த்தால் தெருநடுவில் ரேஷ் ட்ரைவிங் என பிடித்திருக்கிறார்கள். பெயரை கேட்டு வயதையும் கேட்டார்கள், எங்கே வேலை செய்கிறேன் என்றும் கேட்டார்கள்.""

என்று ஆரம்பித்து அதற்காக நீதிமன்றத்திற்கு சென்ற கதையெல்லாம் கூறியிருந்தார் டோண்டு ராகவன்.

எனது கருத்து (அருள்):

"மிதிவண்டியில் சென்னையின் வீதிகளில் 'ஹாயாக' போய் வந்திருக்கிறீர்கள். கொடுத்துவைத்தவர் நீங்கள்.
இந்த காலத்தில் சென்னையின் சாலைகளில் மிதிவண்டியில் பாதுகாப்பாக செல்ல வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சி, மாசுபாடு குறைதல், விபத்து தடுப்பு, வீண் செலவு இல்லாமை - என மிதிவண்டியால் எத்தனையோ நன்மைகள் உண்டு.

அரசங்கம் மேம்பாலங்கள் கட்டுவதைக் கைவிட்டு மிதிவண்டிக்கும், நடப்பதற்கும் வழிவிடவேண்டும். மகிழுந்துகளும் தனியார் வண்டிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.- இப்படி 'போக்குவரத்தில் ஒரு பொற்காலம்' வரவேண்டும்.

இதற்கெல்லாம் பன்னாட்டு மகிழுந்து நிறுவனத்தினர் விட்டுவிடுவார்களா என்ன?

ஏதோ போங்கள் - டோண்டுசார், மிதிவண்டியில் போனீங்க, அதுஒரு பொற்காலம்தான். பொறாமையா இருக்கு."

டோண்டு ராகவன் பதில்:

 "சைக்கிளை இப்போதும் சென்னை வீதிகளில் ஓட்டலாம். அது அவ்வளவாக பரவலாக தென்படாததற்கு முக்கியக் காரணம் மக்களின் பொருளாதார வசதிகள் பெருகியதால்தான். சைக்கிளில் செல்வது அவமானமாகக் கருதப்படுகிறது என்பது விசனத்துக்குரியது."

எனது கருத்து (அருள்):

 "நம்மைவிட பலமடங்கு அதிக பொருளாதார வசதிகொண்ட ஐரோப்பிய நாடுகளில் மிதிவண்டிகள் கணிசமாக பயன்படுத்தப்படுகின்றன. மிதிவண்டியை ஊக்கப்படுத்த அங்கு ஏராளமான வசதிகள் செய்துதரப்படுகின்றன. குறிப்பாக பாரிஸ் நகரின் வாடகை மிதிவண்டித்திட்டம் இப்போது உலகப்புகழ் பெற்றுவிட்டது.

பாரிஸ் மிதிவண்டித்திட்டம்: http://en.wikipedia.org/wiki/Vélib'

பாரிஸ் நகரைப் பின்பற்றி இப்போது உலகின் சுமார் 125 நகரங்கள் வாடகை மிதிவண்டியைப் பயன்படுத்துகின்றன.

உலகெங்கும் வாடகை மிதிவண்டித்திட்டங்கள்: http://en.wikipedia.org/wiki/Community_bicycle_program

கடந்த ஆண்டு புவி வெப்பமடைதல் குறித்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்ற போது - அங்கு மிதிவண்டிக்காக செய்யப்பட்டிருந்த வசதிகளையும், ஏராளமானோர் கொட்டும்பனியிலும் மிதிவண்டிகளில் சென்றதையும் கண்டு அசந்துவிட்டேன். அங்கு எல்லோரிடமும் பணம் இருக்கிறது (பணம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே இலவச சம்பளம் கொடுப்பது வேறு கதை). எல்லோரிடமும் மகிழுந்து இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் மிதிவண்டியில் போகிறார்கள்.

மிதிவண்டிப்பயணத்தைக் கொண்டாட அங்கு ஒரு உலக விழாவே அண்மையில் நடத்தப்பட்டது. காண்க: http://velo-city2010.com

மனதுதான் வேண்டும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால், அரசாங்கம் உரிய வசதிகளை செய்து தராததும், தனியார் வாகன எண்ணிக்கை பலமடங்கு அதிகமானதும், மிதிவண்டிகளை ஏழைகள்தான் ஓட்டுவார்கள் என்பதுபோன்ற மூடநம்பிக்கையும் நமது போக்குவரத்து முறையை சீரழித்துவிட்டன.

மிதிவண்டிகளுக்கு பாதுகாப்பான வழி,மிதிவண்டி நிறுத்திவைக்க தனி இடம், வசதியான நடைபாதைகள், அதிகமான பொதுபோக்குவரத்து வசதிகள் போன்றவையும் மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவிக்க தேவை"

கோபி கருத்து:

"நானும் சமீபத்தில் (1992 ஆம் ஆண்டு), அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் விட்டு பார்த்தது தான்... அதற்கு பிறகு நீங்களோ, ரஜினியோ அல்லது வேறு பிரபலங்களோ சைக்கிளை ஓட்டி பார்த்தத்தில்லை...."


எனது கருத்து (அருள்):


பிரபலங்கள் மிதிவண்டி ஓட்டி பார்க்கவேண்டும் என்கிற உங்கள் ஆசைக்காக:


http://www.gazettenet.com/2009/12/16/carbon-generation-gap


http://www.gazettenet.com/files/images/20091215-202133-pic-683626334.display.jpg


இந்த படத்தில் மிதிவண்டி ஓட்டுபவர் நமது சென்னை நகர மேயர் மா.சுப்பிரமணியன். ஆனால், மிதிவண்டி ஓட்டும் இடம்தான் சென்னை இல்லை. இது கோபன்ஹெகன் நகரம், டென்மார்க் (2009 டிசம்பர்). அவருக்கு அருகில் மிதிவண்டி ஓட்டுபவர் மெக்சிகோ நகர மேயர்.

மறுபடியும் டோண்டு  ராகவன்: 

நவீன கருவிகள் குறித்தும், அது முதலில் அரிதாக இருந்து, பின்னர் எல்லோருக்குமானதாக மாறுவது குறித்தும் ஒரு பதிவை எழுதினார்.


கலர் டிவி, செல்பேசி மற்றும் பல உபகரணங்கள்


http://dondu.blogspot.com/2010/08/blog-post_12.html

அதில் "என்னைப் பொருத்தவரைக்கும் ஏனோ பல உபகரணங்கள் மிக அத்திவாசியத் தேவை என பலமுறை உணர்ந்த பிறக்கே வாங்குவது வழக்கமாகி விட்டது. இந்தப் பழக்கம் டிவி செட் வைத்துக் கொள்வதில் இருந்தே ஆரம்பித்து விட்டது. ஸ்கூட்டர்/பைக்? நோ சான்ஸ், அவற்றை இயக்கவே இன்னும் தெரியாது. காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!"

என்று குறிப்பிடிருந்தார்.

எனது கருத்து (அருள்):

"// //காரா? அதுவும்தான் தேவையேயில்லையே!// //

நீங்கள் சொன்னதிலேயே இதுதான் மிகச்சிறந்த கருத்து.

நகர்ப்புற போக்குவரத்திற்கு கார் எனப்படும் மகிழுந்துகள் தேவையில்லாதவை மட்டுமல்ல, அவை தொந்தரவானவை, போக்குவரத்தை சிதைப்பவை. பொது மக்கள் போக்குவரத்து முறைகளான பேருந்து, மிதிவண்டி, நடை பயணம் - இவற்றுக்கெல்லாம் இடைஞ்சலாக இருப்பவை.

சென்னையின் முக்கியமான சந்தைப் பகுதிகளில் கார்கள் தடை செய்யப்பட்டு, மற்ற இடங்களில் கார்களைக் கட்டுப்படுத்தும் காலம் வந்தால் தான் போக்குவரத்து நெரிசல் குறையும்."

ராம்ஜி_யாஹூ' வின் கருத்து:

"அருள்-
கள்ளு கடை (Midas, Mallaya group) காசிலே தானே கட்சி கொடி ஏறுது இங்கே
கார் கம்பனி (Hyundai, Ford) காசிலே தானே கட்சி செயல் வீர்கள் கூட்டம் கூடுது இங்கே"

Praveen கருத்து:


"Agrees with Arul on this.

These scientific inventions also constitute greater amount of pollution."


எனது கருத்து (அருள்)


"சில நேரங்களில் அறிவியல் முன்னேற்றம், நவீனம் என்பது "பின்னோக்கி" போவதுபோலவும் தோன்றக்கூடும்.

எடுத்துக்காட்டாக, இப்போது சென்னை போக்குவரத்தில் எது நவீனம் என்று கேட்டால் - மேம்பாலங்கள் கட்டுவதும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டுவதும்தான் "முற்போக்கு" என்கிற சிந்தனை நமது ஆட்சியாளர்களிடம் உள்ளது.

ஆனால், எண்ணற்ற மேம்பாலங்களையும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களைக் கட்டி முடித்த வளர்ந்த நாடுகளில் இவையெல்லாம் "பிற்போக்காக" ஆகிவிட்டன.

தென்கொரியாவின் சியோல் நகரின் மையமாக இருந்த பிரதான மேம்பாலத்தியே இடித்து ஆற்றுடன் கூடிய பூங்காவாக ஆக்கிவிட்டனர்.

எப்படியிருந்த மேம்பாலம் எப்படி ஆனது என்பதை இங்கே காணவும்:

http://www.streetsblog.org/2006/12/08/seouls-new-heart/


http://www.inhabitat.com/2010/02/22/seoul-recovers-a-lost-stream-transforms-it-into-an-urban-park/

நமது ஊரில் கார் தான் நவீனம், ஆனால் பாரிஸ் நகரில் மிதிவண்டி நவீனமாகிவிட்டது: http://en.wikipedia.org/wiki/Vélib'

Praveen கருத்து


"Arul,

The seoul project link is really good.

More about it here with some more good pics.
http://en.wikipedia.org/wiki/Cheonggyecheon"


வஜ்ரா வின் கருத்து:

"அன்பர் அருள் உங்களை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.

கால் டாக்ஸி இல்லாமல் நீங்கள் வெளியில் செல்வதில்லை என்பது அவருக்குத் தெரியாது போலும்."

"பிரான்ஸ் நாட்டில் வருடத்தில் 4-5 மாதங்கள் மட்டுமே மக்கள் ரோட்டில் வெகுதூரம் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது சாத்தியம். குளிர் காலத்தில் -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல. மேலும் 10 செ.மீ பனியில் சைக்கிள் மிதிப்பது மெரீனா பீச் மணலில் சைக்கிள் மிதிப்பதற்கு சமம்.

அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள். நம்மூரில் பலர் சைக்கிள் ஓட்டுவது வாழ்வாதாரத்துக்காக. அந்த கேவல நிலையில் நாம் இருப்பதற்கு என்ன காரணம் என்று அருள் யோசித்தால் நலம் உண்டாகும்."

எனது கருத்து (அருள்):

"// //குளிர் காலத்தில் -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல....அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்.// //

வஜ்ரா தவறான தகவலைத் தருகிறார். -10 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மிதிவண்டி ஓட்டுவது தினசரி இயல்பான பயணத்திற்காகத்தான். பொழுதுபோக்கிற்காக அல்ல.

குளிரில் மிதிவண்டி ஓட்டுவது சற்று கடினம் என்றாலும், அதற்கேற்ப முன்னேற்பாடுகளை அவர்கள் செய்து கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஐ.நா.காலநிலை மாநாட்டிற்காக டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகருக்கு சென்றிருந்தபோது இதனை நான் நேரில் கண்டிருக்கிறேன். அப்போது, - 15 டிகிரி கடும் குளிர் காலமாக இருந்தது.

பனிகொட்டும் குளிரில் அதற்கேற்ப அரசாங்கம் அதிகாலையிலேயே - மிதிவண்டி பாதையின் பனிக்கட்டிகளை அகற்றி, மேலும் பனி படியாமலிருக்க உப்பை தூவி வைக்கிறது. மக்கள் குளிருக்கேற்ப பிரத்தியோக உடை அணிகின்றனர். பெரும் மழை போன்று பனி கொட்டும் போது மட்டும் ஒரமாக ஒதுங்கி நிற்கின்றனர்.

கடுங்குளிரில் மக்கள் மிதிவண்டி ஓட்டுவதை இங்கே காண்க: http://www.copenhagencyclechic.com/2009/01/cycling-chic-in-winter.html

நம்முடைய ஊரில் மழைக்காலத்தில் மிதிவண்டியில் செல்வது சற்று குறைவது போன்று ஐரோப்பிய நாடுகளிலும் சற்று குறையக்கூடும். மற்றபடி - "குளிரில் சைக்கிள் ஓட்டுவது நல்லதல்ல." "அங்கெல்லாம் அவர்கள் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஓட்டுகிறார்கள்." - என்றெல்லாம் அள்ளிவிடுவது ரொம்ப அதிகம்.

ஐரோப்பிய நாடுகளின் மிதிவண்டி கலாச்சாரம் குறித்து மேலும் அறிய:  http://www.copenhagenize.com/

உலகெல்லாம் மிதிவண்டிகள் எப்படி பிரபலமாகி வருகின்றன என்று அறிய, இந்த நூலின் - பக்கம் 24 இல் Bike-Sharing Goes Viral கட்டுரை காண்க: http://www.itdp.org/documents/st_magazine/ST21_Winter09.pdf

வஜ்ரா வின் கருத்து:

"அருள்,

நான் சொல்லவரும் விசயம் இது தான்.

வறுமையின் காரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் நாட்டில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று பிரச்சாரம் செய்வது ஒருவித cruel joke.

நீங்கள் 10 நாள் மாநாட்டைப் பார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள்.

நான் கடந்த சில ஆண்டுகளாகவே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இங்கே சைக்கிளை ரயில் வண்டியில் ஏற்றிக்கொண்டு எந்த ஐரோப்பிய ஊருக்கும் சென்று நீங்கள் ஓட்டலாம். ஆனால், -10 டிகிரி குளிரில் மிக மிக சிலரே ஓட்டுவர். பேருந்து, டிராம், மெட்ரோ வசதியாக இருப்பதால் அதிலேயே பயணிப்பார்கள். சொந்த கார் உள்ளவர்கள் காரில் வருவார்கள்.

இத்தகய choice நமக்கு நம் நாட்டில் இல்லை. அதெல்லாம் நமக்கு கிடைக்கும் போது மிதிவண்டி உடல் நலத்திற்கு சிறந்தது என்று பிரச்சாரம் செய்தால் அர்த்தம் இருக்கும்."

எனது கருத்து (அருள்):

// //வறுமையின் காரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் நாட்டில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று பிரச்சாரம் செய்வது ஒருவித cruel joke.// //

மன்னிக்கவும்.

நீங்கள் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறீர்கள். உடல்நலத்திற்கான மிதிவண்டி குறித்து நான் பேசவில்லை, "நகர்ப்புற போக்குவரத்தில் சமூகநீதி" குறித்து பேசுகிறேன்.

எடுத்துக்காட்டாக, சென்னை மக்களில் பெரும்பான்மையானோர் குறைவான வருமானம் உடையவர்கள். இவர்களின் போக்குவரத்து நடைபயணம், மிதிவண்டி, பேருந்து மூலமாக நடக்கிறது. ஆனால், அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, மகிழுந்து வைத்திருக்கும் சிறுபான்மையோரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

சென்னை நகரின் ஒட்டுமொத்த பயணத்தில் கார் 4 %, மோட்டார் பைக் 18 % என வெறும் 22 % மட்டுமே தனியார் மோட்டார் வாகனங்கள் மூலம் நடக்கிறது (2004 ஆம் ஆண்டு கணிப்பு). ஆனால், சாலையில் 80 % இடத்தை இவை அடைத்துக்கொள்கின்றன.

அதேசமயம் பேருந்து 29 %, மிதிவண்டி 13 % நடை பயணம் 28 % என மொத்தம் 70 % பயணங்களுக்கு காரணமாக இருக்கும் போக்குவரத்து முறைக்கு சாலையில் 2 % இடம் கூட இல்லை.

(காண்க சென்னைMaster Plan 2026  http://www.cmdachennai.gov.in/Volume1_English_PDF/Vol1_Chapter04_Transport.pdf)

"சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை அளிக்காமல், மக்கள் பயணங்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும்" என்கிற இந்திய அரசின் நகர்ப்புற போக்குவரத்து கொள்கைக்கு எதிராகவே அரசாங்கம் நடக்கிறது. http://www.urbanindia.nic.in/policies/TransportPolicy.pdf

மக்களின் முக்கிய போக்குவரத்து வசதிகளான பேருந்துகள், நடைபாதை, மிதிவண்டிக்கு பாதுகாப்பான வழி என்பதை அரசாங்கம் புறக்கணித்துவிட்டு, தனியார் வாகன உரிமையாளர்களின் வசதிக்காக மேம்பாலம் கட்டுவதிலும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதிலும் கவனம் செலுத்துகிறது.

1998 ஆம் ஆண்டில் சென்னையில் ஓடிய தனியார் வாகனங்கள் சுமார் 8 லட்சம், பேருந்துகள் 2800. இன்று தனியார் வாகனங்கள் 30 லட்சம் - ஆனால் பேருந்துகள் வெறும் 3000.

இவ்வாறு பெரும்பான்மை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கு எதிரானது."

ஆப்பிஸர்  கருத்து:


எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான வஜ்ரா அய்யா!

மத்தவங்க சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பீரோ?

முக்காலமும் அறிந்த ஞானியாகிய தாங்கள் இஸ்ரேலிலேயே தங்கியிருப்பது எமக்கெல்லாம் பேரிழப்பே!



வஜ்ரா வின் கருத்து:

ஆப்பீசர்,

அருள் விளக்கம் கொடுத்துவிட்டார். உனக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒனக்குத் தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுளைக்காதே.

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

தாய்ப்பால்: பொருத்தமில்லாத இடங்களில் "பொருத்தமானதைப்" பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் தாய்ப்பால் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் -'வயது வந்தோருக்கான' பதிவு:


சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன?

http://dondu.blogspot.com/2010/08/blog-post_11.html

இந்தப் பதிவில் எனது பின்னூட்டம் (அருள்): 

"பெண்களின் மார்பகங்கள் குறித்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை: 1. தாய்ப்பால், 2. புற்றுநோய்.

தாய்ப்பால்: குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கக்கூடாது.

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பாலை ஆற்றிலோ, குளத்திலோ ஊற்றும் மூடப்பழக்கம் கைவிடப்பட வேண்டும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்பது மூடநம்பிக்கை. 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ஆண்டுதோரும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறாது. விவரம் இங்கே: http://worldbreastfeedingweek.org/pdf/wbw2010poster.pdf

தாய்ப்பால் கொடுக்கும் அதேசமயம் - கடைகளில் கிடைக்கும் புட்டிப்பால், ஊட்டச்சத்து பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. இதுகுறித்த WHO பரிந்துரைகளை இங்கே காண்க: http://whqlibdoc.who.int/publications/2008/9789241594295_eng.pdf

அடுத்ததாக - பெண்கள் தங்களது மார்பகங்களை கவனமாக கவனித்து வருவதன் மூலம் மார்பக புற்று நோயை எளிதில் சரிசெய்ய முடியும். விவரம் இங்கே: http://www.who.int/cancer/detection/breastcancer/en/

Praveen கருத்து:

I agree with Arul on the beauty of the girl and Mothers Milk

Most girls now-a-days does not gives milk to the baby because they think that it ruins their beauty.

To all Pregnant women and new moms, Kindly give Breast milk to your babies.

Powder milk might have more salt content in them which will give more problems to your baby once he grows up (High BP, Heart problems etc). Even Cow Milk have salt content in them.

Only Mothers milk is suitable for babies till 6 months or upto 1 year.

virutcham  கருத்து: 

@arul

Good. I appreciate this responsible response

ஆட்டையாம்பட்டி அம்பி கருத்து:.

///அடுத்ததாக - பெண்கள் தங்களது மார்பகங்களை கவனமாக கவனித்து வருவதன் மூலம்///

அந்த வேலையை செய்யததான் நாட்டில் ஆண்கள் உலாத்துவதாகக் கேள்வி!"

Anonymous  கருத்து;

"Bigger the breasts, bigger the chance of acquiring breast cancer.

Let doctors take care of such subjects, Arul."

எனது கருத்து (அருள்):

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மருத்துவர்களின் பொறுப்பு என்று விட்டுவிட முடியாது. இதில் மக்கள் அமைப்புகளும், நுகர்வோர் அமைப்புகளும் கவனம் செலுத்துகின்றன.

இந்திய அளவில் அரசுசாரா அமைப்புகள்தான் இந்தப்பணியை செய்து வருகின்றன. காண்க: www.bpni.org Breastfeeding Promotion Network of India (BPNI)

புவி வெப்பமடைதல்: பொருத்தமில்லாத இடங்களில் "சுற்றுச்சூழல்" கருத்துகளைப் பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் காலநிலை மாற்றம் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் பதிவு: அ. முத்துலிங்கத்தின் அமர்க்களமான வலைப்பூ
http://dondu.blogspot.com/2010/07/blog-post_26.html

சூழலியல் விஞ்ஞானி சஞ்சயன் நிகழ்த்திய உரையை அ.முத்துலிங்கம் தனது பதிவில் வெளியிட்டு, அதனை டோண்டுவும் வெளியிட்டிருந்தார். அதில்

"சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்."

எனது கருத்து (அருள்):

வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிக அளவாக, 350 ppm தான் இருக்கலாம். (ppm-பத்துலட்சத்தில் ஒரு பகுதி) ஆனால் அது 392 ppm அளவை எட்டிவிட்டது. (300 ஆண்டுகளுக்கு முன்பு இது 275 ppm தான்.)

புவி வெப்பமடைவதை தடுக்கத் தவறியதால் ஏறக்குறைய நாம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டோம். பூமி காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பும் தவறிப் போகுமா என்பது 2010 டிசம்பரில் மெக்சிகோ நாட்டில் கூடும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தெரிந்துவிடும்."

ராம்ஜி_யாஹூ வின் கருத்து:

"நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவில் மதம், சாதி சம்பந்தம் இல்லாதா செய்திகள் பார்க்க முடிகிறது., மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
அருளின் பின்னூட்டமும் அருமை. மாற்றத்தை உங்கள் வலைப்பதிவில் இருந்து தொடங்குவோம்."

எனது கருத்து (அருள்):

"புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:

1. தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணையுங்கள்.

2. எந்த ஒரு மின்கருவியையும் தொலையுணர்வு கருவி மூலம் "standby" இல் வைக்காமல் முற்றிலுமாக அணையுங்கள்.

3. குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்துங்கள்.

4. மின்கருவிகள் வாங்கும் போது BEE முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்குங்கள்.

5. குப்பையைக் குறையுங்கள். முடிந்தவரை அதிக "Package" உள்ள பொருட்களை தவிருங்கள். கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று நெகிழிப் பைகளை தவிருங்கள்.

6. தண்ணீரை வீணாக்காதீர். முடிந்தவரை பாட்டில் தண்ணீரைப் புறக்கணியுங்கள்.

7. வீட்டில் மழைநீர் சேகரிப்பு முறையை சரியாக அமையுங்கள்.

8. புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள். பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி உணவுகள் போன்றவற்றைத் தவிருங்கள். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உள்ளூர் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணுங்கள்.

9. போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள்."

NO என்பவரின் கருத்து:

"நண்பர் அருள் ஒன்றை விட்டு விட்டார், அது - மரங்களை வெட்டாதிருத்தல்!!

அவன்: அட, பிளாட்பாரம் கேசு அந்த ஆளு ஆனா பெயர கேட்டா கோடீஸ்வரன் எண்டு சொல்லுதான்!
இவன்: அடஅதுலே என்னங்க ஆச்சரியம், அவிங்க கூடதான் பசுமை தாயகம் அப்படின்னு ஒண்ணு நடத்துறாங்க, ஆனால் ............"

எனது கருத்து (அருள்):

அடடா...உங்கள் அறியாமையைக் காட்டிவிட்டீரே!

தனிமனிதர்கள் யாரும் வேறு வேலையில்லாமல் மரம் வெட்டிக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சொல்லவருவது "காடுகள்" அழிப்பைதான் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

காடுகள் அழிக்கப்படுவதால் மட்டும் புவிவெப்பமடைவதற்கு காரணமான வாயுக்களில் 20% வெளியாகிறது. காடுகள் அழிக்கப்படுவதைதடுக்க REDD (Reducing Emissions from Deforestation and Forest Degradation) எனும் சிறப்புத் திட்டத்தை ஐ.நா.அவை செயல்படுத்தி வருகிறது. காண்க: http://www.un-redd.org/AboutREDD/tabid/582/language/en-US/Default.aspx

இந்த சிக்கலில் தனிமனிதர்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை. அதிபட்சமாக தாள்கள், காடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்கும் போது அதில் FSC எனும் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கலாம். காண்க: http://www.fsc.org/about-fsc.html

மற்றபடி தனிமனிதர்கள் மரங்களை நட்டு வளர்க்கலாம். ஆனால், "புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய "சில எளிய செயல்கள்" என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

மரம் நட்டு வளர்ப்பது ஒரு "எளிதான செயல் அல்ல" என்பது நீங்கள் முன்பின் மரம் நட்டு வளர்த்திருந்தால் தெரியும். இன்றைய நிலையில் சென்னை போன்ற ஒரு நகரத்தில் ஒரு மரம் நட்டுவளர்க்க குறைந்தது ரூ. 500 தேவைப்படும். கூடவே சிலமாதங்கள் கண்ணும் கருத்துமாக அதனைக் கவனித்து வரவேண்டும்.

அது ஒரு எளிய செயல் அல்ல."