Pages

வெள்ளி, மார்ச் 23, 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: தொடரும் இந்திய சதி!-இதோ ஆதாரம்!!

இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த வெற்றியில் ஒரு கரும்புள்ளியாக பங்கெடுத்துள்ளது இந்தியா!

இந்த தீர்மானத்தினை நீர்த்துப்போக இந்தியா முயன்றதாகவும், அதில் ஓரளவு வெற்றிபெற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா முதலில் முன்மொழிந்த தீர்மானத்தில் (அதனை இங்கே காண்க)  "ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும்" (the Government of Sri Lanka to accept) என்கிற (ஒப்பீட்டளவில் உறுதியான) வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 

ஆனால், இதனை இந்தியா தலையிட்டு: "ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்" (in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka ) என்று மாற்றியுள்ளது.

அந்த மாற்றத்தை இங்கே காணலாம்.
Oral Revision-Promoting Reconciliation and Accountability in Sri Lanka
இந்தியா இத்தகைய சதியில் ஈடுபட்டதை பத்திரிகை செய்திகள் உறுதிசெய்கின்றன. கூடவே, இந்தியாவின் இந்த உதவிக்கு இலங்கை பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது (UNHRC: India dilutes censure motion before voting with West against Sri Lanka)

அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியது ஆறுதல் அளித்தாலும் இந்தியா கொண்டுவந்த திருத்தம் வேதனை அளிக்கிறது. இது தீர்மானத்தின் நோக்கத்தைச் சிதைத்துள்ளதன்மூலம், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா வெளியேறியிருந்தால் கூட பாராட்டலாம். ஆனால் தீர்மானத்தின் நோக்கத்தை இந்தியா சீர்குலைத்துள்ளது.

இத்தகைய குறிப்பிடத்தக்க பின்னடைவு இருந்தாலும், ஒப்பீட்டளவில் இந்த தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றிதான்.

நீதியை நோக்கிய நமது பயணம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் மாபெரும் வெற்றி-அதிகாரப்பூர்வ வாக்களிப்பு முடிவுகள் இதோ!
ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

வியாழன், மார்ச் 22, 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் மாபெரும் வெற்றி-அதிகாரப்பூர்வ வாக்களிப்பு முடிவுகள் இதோ!


இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. Promoting Reconciliation and Accountability in Sri Lanka எனும் இத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பு முடிவுகள் இதோ:
Voting Result UNHRC– US Resolution - Promoting Reconciliation and Accountability in Sri Lanka
ஆதரித்த நாடுகள்: ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமாலா, அங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரீசியஸ், மெக்சிகோ, நைஜீரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவா, ரொமேனியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, உருகுவே

எதிர்த்த நாடுகள்: வங்கதேசம், சீனா, காங்கோ, கியூபா, ஈகுவடார், இந்தோனேசியா, குவைத், மாலத்தீவுகள், மாவுரிதானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ரசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா

வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள்: அங்கோலா, போட்சுவானா, புர்க்கினோ பாசோ, திஜுபூட்டி, ஜோர்டன், கிரகிஸ்தான், மலேசியா, செனகல்

-- இனி இலங்கை பயங்கரவாத அரசு இந்த தீர்மானத்தை ஏற்க மறுக்கும். இந்த தொடக்கம் என்றாவது ஒருநாள், இனப்படுகொலைக் குற்றத்திற்காக ராசபட்சே கூட்டத்தினர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நிலைக்கு இட்டுச்செல்லும் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

புதன், மார்ச் 14, 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! 

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன்.
UNHRC - Geneva 
ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உலகத் தமிழர்கள் ஐ.நா. மனித உரிமை அவைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய ஆதரவு குரல் எழுப்புவோரில் பெரும்பாலானோர் நேரடியாக ஐ.நா. மனித உரிமை குழுவில் வலியுறுத்தும் வாய்ப்பு இல்லை. ஆனால், மறுபுறம் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடு என்கிற அடிப்படையில் தனது தூதுக்குழுவினரை நேரடியாக அனுப்பி ஐ.நா.அவையில் தீவிரப் பிரச்சாரத்தை செய்துவருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக செயல்பட்டு வருகிறது மருத்துவர் இராமதாசு அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கையை இங்கே காணலாம்). பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் என்கிற முறையில் அந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். 

ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்பதும், ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அவைக்கு உள்ளே சென்று ஐ.நா. மனித உரிமைக் குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்துவதும் எல்லோராலும் சாத்தியமாகக் கூடியது அல்ல. ஐ.நா. உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்புகளாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் மட்டுமே ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்குள் நுழைய முடியும் என்கிற நிலை உள்ளது. அத்தகைய பிரதிநிதிகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்பினை ஐக்கிய நாடுகள் அவை அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரித்துள்ளது. எனவே, ஐ.நா'வின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பு உரிமைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் 2012 பிப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
ஐ.நா. மனித உரிமைக் குழுவில இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அமைப்பினர் பங்கேற்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று பசுமைத் தாயகம் கருதியது. இலங்கை அரசின் சார்பான பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலையில் அதற்கு எதிராக உலகத் தமிழ் அமைப்புகள் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று தமிழர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என முன்பே முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் உலகளவில் இலங்கைப் போர்க்குற்ற சிக்கலை முன்னெடுத்துச் செல்லும், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum - GTF), அமெரிக்கா இலங்கை மீது தீர்மானம் கொண்டுவர தூண்டுகோலாக இருந்த வாஷிங்டனிலிருந்து செயல்படும் அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை (The United States Tamil Political Action Council - USTPAC), ஆகிய அமைப்பினர் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் 
மருத்துவர் யெசோதா நற்குணம், 
அட்டர்னி அலி பைதூன் 
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை அமைப்பின் சார்பில் ஸ்டாண் ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் யெசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் (PEARL), தமயந்தி ராஜேந்திரன், இலங்கை அரசு மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ள அட்டர்னி அலி பைதூன் (SPEAK) - ஆகிய ஐந்து பிரதிநிதிகள் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கலந்து கோண்டுள்ளனர். 

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் பசுமைத் தாயகம் சார்பான பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய துணைக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான வாதங்களை பதிவு செய்தனர். 

அந்த வகையில் ஐ.நா. அவையில் இலங்கை அரசுக்கு எதிரான நேரடிப் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது பசுமைத் தாயகம் எனக்களித்த நல்வாய்ப்பை பயன்படுத்தி செய்யப்பட்ட என்னாலானக் கடமை.

செவ்வாய், மார்ச் 13, 2012

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்: காமெடியா? லூசுத்தனமா? (பகுதி 2) சாதிக்கட்சி ஆபத்தானதா? 


"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் எனும் 'பிரபல' பதிவர் "அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி" எனும் ஒரு பதிவினை எழுதியுள்ளார். 
பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள "புதிய அரசியல் புதிய நம்பிக்கை" எனும் ஆவணத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களையொட்டி இப்பதிவினை அவர் வெளியிட்டுள்ளார். (புதிய அரசியல் புதிய நம்பிக்கை - இங்கே காண்க)

கேலி பேசுதல், லூசுத்தனமாக பேசுதல், விஷமப் பிரச்சாரம் செய்தல், அவதூறு என பலவற்றையும் அது உள்ளடக்கியிருக்கும் அவரது பதிவில் - மருத்துவர் இராமதாசு அவர்களை குற்றம்சாட்டும் விதமாக:
1. சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்.
2. சாதிக்கட்சி வைப்பது ஆபத்தானது.
3. சாலைமறியல் போராட்டத்தில் மரம் வெட்டப்பட்டது ஒரு பெரும் குற்றம்
-- என்பன "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமாரின் கருத்துகளாகக் கூறப்பட்டிருந்தன. 

இதில் "சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்"தானா? என்பது குறித்து எனது முந்தைய பதிவில் விளக்கியிருந்தேன். இந்த பதிவில் "சாதிக்கட்சி வைப்பது ஆபத்தானது" தானா? என்பது குறித்து விளக்க விரும்புகிறேன்.


சாதிக்கட்சி ஆபத்தானது என்பது ''அயோக்கியத்தனமான' வாதம்'!

சாதிச் சண்டை, தீண்டாமை, சாதி அரசியல் - இவை மூன்றையும் ஒன்றாகக் குழப்பி, கடைசியில் சாதி அரசியலும் சாதிவெறியும் ஒன்றுதான் என்ற முடிவினை திராவிட ஆதிக்க சாதிவெறியர்கள் காலம்தோரும் கட்டமைத்து வருகின்றனர்.

இந்தியாவில் பொதுவாக நான்கு விதமான அடையாளங்கள் அரசியலில் எதிரொலிக்கின்றன. அவை:

1. தலித் அரசியல், 
2. சிறுபான்மை அரசியல், 
3. மொழிவாரி தேசிய இன அரசியல், 
4. சாதி சார்ந்த அரசியல்.

இவற்றில் தலித் அரசியல், சிறுபான்மை அரசியல், மொழிவாரி தேசிய இன அரசியல் - இவை மூன்றையும் பெரும்பாலும் யாரும் குற்றம் சொல்வது இல்லை. ஆனால், சாதி சார்ந்த அரசியல் என்று வரும்போது வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கின்றனர். அதற்கு 'சாதிவெறி' என்கிற முத்திரையைக் குத்துகின்றனர். 
சாதி அரசியல் என்பது 'சாதிவெறியோ, தீண்டாமையோ, பிற்போக்கோ' அல்ல. மாறாக, அது முற்போக்கான அரசியலே ஆகும். ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எந்த அடையாளம் ஆதிக்கக் கூட்டத்தால் பயன்படுத்தப் படுகிறதோ, அதே அடையாளத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்படுவோரும், சுரண்டப்படுவோரும் ஒன்றிணைவதும் உரிமைக் கேட்பதும் மிகமிக இயல்பானதும் நியாயமானதும் ஆகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை நடுத்தெருவில் விட்டுவிடவில்லை. அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பது மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. அட்டவணை சாதியினர் (SC), 2. அட்டவணைப் பழங்குடியினர் (ST), 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமைகள் இறுதி செய்யப்படாமல், பிரிவு 340- இன் கீழ் ஆணையம் அமைத்து உரிமைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்றே கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ்தான் மண்டல் குழு அமைக்கப்பட்டது.

அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1. அட்டவணை சாதியினர் (இப்போது தலித்), 2. அட்டவணைப் பழங்குடியினர் ஆகியோரின் அரசியல் சரி என்றால், இதர பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் மட்டும் எப்படி தவறானதாகும்? எப்படி சாதிவெறி ஆகும்? 
மதச் சிறுபான்மையினரின் அரசியல் சரி என்றால், சாதி அரசியல் எப்படிக் குற்றமானதாகும்?
"சாதி அரசியல் தவறு" என்கிற கட்டுக்கதையை திராவிட ஆதிக்க சாதியினர்தான் தங்களது ஊடக பலத்தால் போலியாகக் கட்டமைத்துள்ளனர். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை நசுக்கி தங்களது திராவிட மேலாதிக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.


சாதி அரசியல் - தந்தை பெரியாரின் கருத்து

திராவிட சித்தாந்தத்தின் முகாமையான கர்த்தாவாகக் கருதப்படுபவர் தந்தை பெரியார். சாதி அரசியல் குறித்த அவரது நேர்மையானக் கருத்துகள்:

"எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச் சாதி மாநாடு கூடவேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது.  ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை 'வகுப்பு மாநாடுகள்' என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதுதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூறமுடியாது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வரையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல்தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்கு சமமானவர்களே என்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை அடைவதற்கே முயற்சி செய்வார்கள்" 

-- என்று தந்தை பெரியார் 29.09.1929 அன்று திருச்சியில் பேசிய பேச்சு 5.10.1929 அன்று திராவிடன் ஏட்டில் வெளியானது.

அன்று தந்தை பெரியாருக்கு இருந்த நேர்மை உணர்வு இன்றைய திராவிடக்கூட்டத்திற்கு இல்லை., இன்று திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் சாதி மாநாட்டையும் சாதி அரசியலையும் 'பிற்போக்கு' என்று தூற்றுகிறது.
"நமது நாட்டில் பல வகுப்புகளிலிருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்தில் வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்கமிருக்கிறதா என்பதைக் கவனித்து, வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்கு கொண்டுவந்ததாகும்...

ஒரு நாடு என்பது ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் நலத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் நலத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மையான நாட்டு நலத்தைத் தேடுவோர், தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும் பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள்" 

- என்று 14.2.1926 அன்று குடிஅரசில் தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார்.

"இந்த இந்திய உப கண்டமானது பல சாதி, பல மதம், பல வகுப்புகள் கொண்ட பிரதேசமாக இருந்துவருவதால் இந்திய அரசியல் தத்துவம் என்பது சாதியை, மதத்தை, வகுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்து வருகிறது." 

-  என்று 30.11.1946 இல் குடிஅரசில் தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார்

"எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?

வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?
ஏதாவது ஒரு மனிதன், தன்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், தன்னுடைய சாதி வலுவிழந்த சாதி என்றும், தன்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் தனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, 'என்னை நீ அடக்கியாள முடியாதபடி செய்துவிடு' என்று சொல்வதில் என்ன தப்பு? இதற்கு பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது தேசத்துரோகத்தனம் என்று சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை எப்படிச் சொல்லுவது? 

'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்" 

- என்று 8.11.1931 குடிஅரசு தலையங்கத்தில் எழுதினார் தந்தை பெரியார்.

ஆனால், இப்போது 'திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் 'சாதி அடிப்படையில் உரிமைக் கேட்பதை' தூற்றுகிறது. சாதிவெறி என்று அவதூற்றை அள்ளி வீசுகிறது. இதனை பெரியாரின் வார்த்தைகளில் சொன்னால் "'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது?"


சாதி அரசியல் எனும் முற்போக்கு அரசியல்

ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை. வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.
1. இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை ஆங்கிலேயர்கள் 1860களுக்கு பின்பு அறிமுகப்படுத்தியபோது, ஒருசில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்படுவதை எதிர்க்க சாதி ரீதியிலான அணிதிரட்டல் நடந்தது.

2. ஒருசில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டபோது சாதி ரீதியிலான அணிதிரட்டல் தேவைப்பட்டது.

3. தமிழ்நாடு திராவிட ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஒரு மாநிலமாக இருப்பதும், திராவிட கட்சிகள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கும் பின்னணி சாதி அரசியல்தான். “பார்ப்பனர்கள் ஒரு சாதி – பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லோரும் மற்றொரு சாதி” என்கிற தந்தை பெரியாரின் வகைப்படுத்தல்தான் திராவிட அரசியல் எழுச்சியின் அடிப்படை.
4. அண்ணல் அம்பேதகர் அவர்களால் முன்வைக்கப்பட்டு, இன்று தலித் அரசியலாக வளர்ந்து நிற்கும் அரசியல் எழுச்சியின் அடிப்படையும் சாதிதான்.

5. விடுதலையான காலகட்டத்தில் இந்தியாவின் சனநாயகத்தை வளர்க்க சாதியே வழிவகுத்தது. தேர்தல் முறையை ஊக்குவிக்கும்விதமாக பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கேற்க செய்தவை சாதி அமைப்புகள்தான்.

6. காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது. இன்று பெரும் அரசியல் சக்தியாக எழுந்து நிற்கும் முலாயம் சிங் யாதவின் எழுச்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பு அரசியல் எழுச்சியே ஆகும்.

இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது – சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.
ஆக, மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக – சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.

ஓரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வழிவகுத்ததும் சாதி அரசியல்தான். ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்.

இது எப்படி பிற்போக்கு ஆகும்? முற்போக்கை பிற்போக்கு என பிரச்சாரம் செய்யும் திராவிட ஆதிக்க சாதிவெறியர்களின் கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட வேண்டும்.

திருவாளர் "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் அவர்களே! 

நீங்களே சொல்லுங்கள்: 'சாதிக்கட்சி ஆபத்தானது' என்று எதற்காக சொல்கிறீர்கள்?

திங்கள், மார்ச் 12, 2012

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்: காமெடியா? லூசுத்தனமா? 

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் எனும் 'பிரபல' பதிவர் "அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி" எனும் ஒரு பதிவினை எழுதியுள்ளார். அரசியல் தலைவர்கள் நகைச்சுவைக்கு ஆளாவது இயல்பானது. அதை நகைச்சுவையாக பார்ப்பதே நல்லது. நியாயமும் கூட.

ஆனால், "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமாரின் மேற்கண்ட பதிவு நகைச்சுவையாக இல்லை. மாறாக, கேலி பேசுதல், லூசுத்தனமாக பேசுதல், விஷமப் பிரச்சாரம் செய்தல், அவதூறு என பலவற்றையும் அது உள்ளடக்கியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள "புதிய அரசியல் புதிய நம்பிக்கை" எனும் ஆவணத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களையொட்டி இப்பதிவினை அவர் வெளியிட்டுள்ளார். (புதிய அரசியல் புதிய நம்பிக்கை - இங்கே காண்க)
"(மருத்துவர் அன்புமணி) அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்... ஆனா, ஜாதிக்கட்சி இன்னும் ஆபத்தாச்சே... அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடரது, மரத்தை வெட்டி போடறதுன்னு வன்முறைல இறங்கறாரு... சி.எம் ஆகிட்டா அவ்வளவ் தான் தமிழகம் 2 ஆகிடும்" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் இந்த "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்.

ஆக,
1. சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்.
2. சாதிக்கட்சி வைப்பதும் ஆபத்தானது.
3. சாலைமறியல் போராட்டத்தில் மரம் வெட்டப்பட்டது ஒரு பெரும் குற்றம்
-- என்பன  "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமாரின் கருத்துகளாகும். இந்த லூசுத்தனமான, அவதூறான விஷமப்பிரச்சாரத்தின் ஒவ்வொரு கருத்திற்கும் பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

திராவிட ஆதிக்க சாதிவெறியர்களின் அவதூறுப் பிரச்சாரத்தின் உண்மையை மண்ணின் மைந்தர்கள் அறிந்துகொள்ள இதுவும் ஒரு சிறிய வாய்ப்பாக அமையக்கூடும்.

அந்தவகையில், "சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்"தானா? என்பது குறித்து முதலில் விளக்கமளிக்க விரும்புகிறேன். (இதன் இரண்டாம் பகுதியை இங்கே காண்க: (பகுதி 2) சாதிக்கட்சி ஆபத்தானதா?)

மரணத்தை விற்கும் சினிமா!

 "(மருத்துவர் அன்புமணி) அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்... ஆனா, அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடரதுன்னு வன்முறைல இறங்கறாரு" என்கிறார்  "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார். இது அவர் குறிப்பிடும் மூன்று பயங்கரவாதங்களில் ஒன்று.

படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீம்புக்காக ஓடவில்லை. அது சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். பாபா திரைப்படத்தில் ரஜினி புகைபிடிக்கிறார் என்பதற்காக நடத்தப்பட்டது என்று தெரிந்துதான் இப்படி எழுதுகிறார் "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்..
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் இந்தியர்கள் இறந்து போகின்றனர். புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஆகும்.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் 52 % இளைஞர்கள் புகைபிடிக்கின்றனர் என்பது புகழ்பெற்ற லான்செட் இதழில் வெளியான கட்டுரை. அதனை இங்கே காண்க:

Effect of viewing smoking in movies on adolescent smoking initiation: a cohort study

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அதிகம் திரைப்படம் பார்க்காத சிறுவர்களை விட அதிகம் திரைப்படம் பார்க்கும் சிறுவர்கள் இருமடங்கு அதிகமாக புகைபிடிக்க கற்றுக்கொள்வது தெரியவந்தது.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இளைஞர்களையும் சிறுவர்களையும் எப்படி சீரழிக்கிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவாக விளக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தில், திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன எனவும் அதிகம் சினிமா பார்க்கும் சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அதிகமாக அடிமையாகின்றனர் என்றும் தெளிவாக சுடிக்காட்டியது WHO. அதனை இங்கே காண்க:

இந்திய சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் எவ்வாறு திணிக்கப்படுகின்றன என்பதையும் "பாலிவுட்: நண்பனா, வில்லனா?" எனும் அறிக்கையில் விரிவாக விளக்கியது உலக சுகாதார நிறுவனம். அதுமட்டுமல்லாமல், சினிமாக்காரர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர் என்பதையும் அந்த அறிக்கை தெளிவு படுத்தியது. அதனை இங்கே காண்க:

Bollywood’: Victim or Ally?

இந்தி திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுவது குறித்த காணொளியை (YOUTUBE) இங்கே காண்க:

இத்தனை ஆதாரங்கள் உள்ள, ஒரு உயிர் காக்கும் போராட்டம் உங்களுக்கு "படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார்" என்று கேலி பேசும் விஷயமாகிவிட்டதா?

சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்க்கும் போராட்டம்


மருத்துவர் இராமதாசு அவர்களின் தொடர் பிரச்சாரத்தால் தமிழ் சினிமா கதாநாயகர்கள் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளை கைவிட்டுள்ளனர். 2002 வாக்கில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களும் திரைப்படத்தில் புகைபிடித்தனர்.

ஆனால், இப்போது ரஜினி, கமல், சூர்யா, விஜய், விகரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் திரைப்படத்தில் புகைபிடிப்பது இல்லை. ஏவிஎம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

அசல் திரைப்பட விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி
பசுமைத் தாயகத்தின் போராட்டம்
அசல் திரைப்பட விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி நீக்கம்

சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்க்கும் மருத்துவர் இராமாதாசு அவர்களின் போராட்டங்களால் தமிழ் திரை உலகில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசும் இத்தகைய காட்சிகளுக்கு எதிரான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும். இன்னமும் சிகரெட் நிறுவனங்களின் மரண விளம்பரங்கள் தொடரவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் சிகரெட் கம்பெனிகளிடம் பணம் பெற்று புகைபிடிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இதோ:
"From a textile outlet to cigarettes, Engeyum Eppothum looks replete with subliminal advertisements."

இப்படியாக, இந்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள புகையிலை விளம்பரங்கள் மறைமுகமாகவும் திருட்டுத்தனமாகவும் சினிமா மூலம் திணிக்கப்படுவதை மருத்துவர் இராமதாசு எதிர்க்கிறார்.


திருவாளர் "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் அவர்களே! எதிர்கால தலைமுறையினரின் வாழ்வைக் காக்கும் இந்த போராட்டம் உங்களுக்கு காமடியாகத் தெரிகிறதா?

வியாழன், மார்ச் 08, 2012

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதன் அன்று அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது.

ஐ.நாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒரே குரலில் வேண்டுகோள் வைத்தது. கங்கிரசு கட்சியின் அமைச்சர்கள் ஜி.கே. வாசன், நாராயணசாமி உள்ளிட்டோர் கூட இந்தியா ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்கும் என்றனர். ஒருமுறை பிரதமருக்கு கடிதம் எழுதி, பதில் கிடைக்காததால், தமிழக முதல்வர் இரண்டாவதாகவும் கடிதம் எழுதி 'என்னதான் உங்கள் பதில்' என்று கேட்டார். (இந்திய அரசுக்கு தமிழக முதல்வரைவிட இலங்கை அதிபர் முக்கியமானவர் போலும்!).

ஆனாலும் தனது கும்பகர்ண தூக்கத்தைக் கலைக்க இந்தியா முன்வரவில்லை. நேரடியாக பதில் சொல்லாமல் யாரோ ஒரு அதிகாரி தனது பெயரைக்கூட குறிப்பிடாமல் பதில் சொன்னதாக பத்திரிகைகள் கூறின. "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்." என்று தினமணி மற்றும் தி இந்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.நா. தீர்மானத்தின் பின்னணி

இலங்கை இறுதிப் போரில் பல லட்சம் தமிழர்களை இலங்கை இராணுவம் ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது.
UNHRC
இதையடுத்து உலக அளவில் இலங்கைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. ஆனால் இதனைப் பற்றி இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சர்வதேச நாடுகளின் கடுமையான நெருக்கடியினால் இலங்கை அரசாங்கமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் சில பரிந்துரைகளை அளித்தது. இதனைப் பற்றியும் ராஜபக்ச அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் சர்வதேச ரீதியாக பெரும் விவாதத்துக்குள்ளானது.

இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுமாறும் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துமாறும் அமெரிக்கா அண்மையில் வலியுறுத்தியது. இலங்கை அரசு இநத நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போனால் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் கூட அமெரிக்கா எச்சரித்தது.

இதேபோல் ஐ.நா. குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் ராஜபக்ச எதையும் கண்டுகொள்ளவில்லை.

இந்த சூழலில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதன் அன்று அதிகார பூர்வமாக முன்வைத்துள்ளது.

அமெரிக்க தீர்மானம் இதோ:
UNHRC– US Draft Resolution - Promoting Reconciliation and Accountability in Sri Lanka
இந்த தீர்மானத்தில்:

1. இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

2. அதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையை கூற வேண்டும்.

3. ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் விசாரணை முழுமையானது அல்ல என்கிற கவலையையும் இந்த தீர்மானம் உள்ளடக்கியதாக இருக்கிறது.

மிகவும் குறைந்த பட்ச அளவில் மனித உரிமை பேசும் இந்த தீர்மானத்தைக் கூட ஆதரிக்க இந்தியா தயங்குவதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும். இந்த அவலத்தைப் பார்த்த பின்னரும் தமிழர்கள் தம்மை இந்தியக் குடிமக்கள் என்று பேசுவதற்கு பதிலாக நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவதே மேல்!