Pages

வெள்ளி, மே 24, 2013

வேண்டாம் இந்த விபரீதம்: புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு நேர்ந்த கதி மோனோ ரயிலுக்கும் நேருமா? 

'மோனோ ரயில் திட்டம் முதல்வர் தலைமையில் ஆய்வு' என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. "'சென்னையில், மோனோ ரயில் சேவை துவக்கப்படும்' என, 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், சென்னையில், மோனோ ரயில் சேவை, இரண்டு கட்டங்களாக, 111 கி.மீ., தூர அளவில், அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூர் -வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி இடையே, மூன்று வழித்தடங்களில், 8,500 கோடி ரூபாய் செலவில், 57 கி.மீ., தூரம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பணி எதுவும் துவக்கப்படவில்லை. இது தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.' என்கிறது அந்த செய்தி.

மோனோ ரயில்: வேண்டாம் இந்த விபரீதம்

தமிழ்நாடு அரசு எதற்காக இந்த மோனோ ரயில் திட்டத்தை பிடித்துக்கொண்டு தொங்குகிறது என்று தெரியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்லலாம். இந்த திட்டம் ஒருபோதும் சாத்தியமாகாது. ஒரு வீம்புக்கு நிறைவேற்றினாலும் புதிய சட்டமன்றக் கட்டடம் பயன்படாமல் போன நிலைதான் இதற்கும் ஏற்படும். 

இன்னும் சொல்லப்போனால, அந்தக் கட்டடத்தையாவது மாற்றுத் தேவைகளுக்கு பயன்படுத்திடும் வாய்ப்பு உண்டு. ஆனால், மோனோ ரயிலை எதற்குமே பயன்படுத்த முடியாது. இப்போது மதுரவாயிலில் நிற்கும் துறைமுகச்சாலைத் தூண்களைப் போல, இதற்கு முன்பு பல ஆண்டுகளாகக் கிடந்த வீராணம் குழாய்களைப் போன்று - எதிர்கால சென்னையில் 'நடுத்தெருவை அடைத்துக்கொண்டு நிற்கும் மோனோ ரயில் தூண்களை மட்டும்தான்' காணக்கூடியதாக இருக்கும். மோனோ ரயில் அபத்தம் குறித்து நான் முன்பு  (ஜூன் 03, 2011) எழுதிய பதிவு கீழே:

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை. 

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.


மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்!

(ஜூன் 03, 2011)


தொடர்புடைய சுட்டி:

குழப்பும் வினவு: கார்களைக் கட்டுப்படுத்தினால் ஏழைகளுக்கு ஆபத்தாம்!  

வியாழன், மே 16, 2013

பேஸ்புக்கும் கலப்புத் திருமணமும்: மானங்கெட்ட சாதிவெறியர்களுக்கு ஒரு பதில்!


"பாட்டு ரசிகன்" எனும் வலைப்பூவில் "மானங்கெட்ட ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கில் நடந்த உண்மை சம்பவம்..!" என்று ஒரு பதிவு பின்வருமாறு கூறுகிறது:

"ஜாதி மறுப்புத் திருமணம் வேண்டாம்; காதல் திருமணம் கூடாது என்று முகநூலில் கருத்துக்களை வெளியிடும் அன்பர்களுக்கு சில செய்திகள் பகிர விரும்புகிறோம். பேஸ்புக் உரிமையாளரும் அதை உருவாக்கியவருமான மார்க் எல்லேய்ட் ஜுக்கர்பெர்க், வியட்னாம் நாட்டிலிருந்து...அகதியாக அமெரிக்கா வந்து குடியேறிய பிரிஸ்கில்லா சான் என்ற 18 வயது பெண்ணை காதலித்து மணந்தவர்" - என்று கூறுகிறது.

பின்னர் "அவர் உருவாக்கிய முகநூலில் ஜாதிவெறி, மதவெறியைப் பரப்பி இத்தம்பதிகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த வேற்று நாடு, இனம், மதம், மொழியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்யும் 29 வயதே ஆன மார்க் எங்கே? நாங்கள் ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, ஆதிக்க ஜாதி, மேல் ஜாதி என்று கொலைவெறியில் திரியும் இவர்கள் எங்கே?" என்று பேசுகிறது.

இந்தப் பதிவு யாரைக் குற்றம் சாட்டுகிறது என்பது எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். எனவே, இந்த கோயபல்ஸ் பிரச்சாரகருக்கு எனது பதில்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் திருமணம் காதல் நாடகம் அல்ல - அது பதின்வயது திருமணமும் அல்ல.

மேலே, "நான் உங்க வீட்டு பிள்ளை" எனும் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது போன்று மணமகளின் வயது 18 அல்ல. மார்க் ஜுக்கர்பெர்க் திருமணம் செய்யும் போது அவரது வயது 28, அவரது காதலி பிரிஸ்கில்லா சானின் வயது 27.  (இருபத்தேழு வயது மணப்பெண்ணை, 18 வயது என்று குறிப்பிடும் கேடுகெட்ட நிலை இந்தப் பதிவருக்கு ஏன் வந்தது?)


இதுபோன்ற - 21 வயதுக்கு மேற்பட்ட காதல் திருமணங்களை இவர்கள் குறிப்பிடும் அமைப்புகள் எதிர்க்கவில்லை. மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையிலான அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் தீர்மானத்திலேயே இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை இவ்வாறிருக்கும் போது - ஏதோ சாதிவெறியில் கலப்புத்திருமணங்களை எதிர்க்கிறார்கள் என்று மற்றவர்களை இட்டுக்கட்டிப்பேசும் இந்த உண்மையான சாதி வெறியர்களை என்ன சொல்வது? 

இந்தக் கூட்டத்திற்கு துணிச்சல் இருந்தால் - கலப்புத்திருமணங்களை உண்மையாகவே எதிர்க்கும் மதவாதிகளைக் கேள்வி கேட்டுப்பார்க்கட்டும்.

செவ்வாய், மே 14, 2013

வட மாவட்ட வன்முறைகள்: தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு அபத்தமானது!


இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வன்முறைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என்றும், இதற்கான சேதம் மதிப்பிடப்பட்டு, பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் அள்ளி வீசியிருக்கிறார். தமது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில், தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி, பா.ம.க.வை தடை செய்வோம் என்ற அளவுக்கு ஆத்திரத்தை உமிழ்ந்திருக்கிறார். பா.ம.க. மீது முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அளவுக்கு வஞ்சத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம்.

மரக்காணம் கலவரத்திற்கும், அதன் பின் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கும் பா.ம.க. எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறேன். பா.ம.க. ஒருபோதும் வன்முறைப் பாதையை கையில் எடுத்தது கிடையாது; அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்கள் மீது, மரக்காணத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான். இந்தத் தாக்குதலில் கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் என்ற 2 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்திலும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டிலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், வடமாவட்டங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட விடுதலை சிறுத்தைகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது. ஆனால், அதை செய்ய மறுத்துவிட்ட தமிழக அரசு, நீதிகேட்டு போராடச் சென்ற என்னை, விழுப்புரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனால் ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, வடமாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், சமூக விரோதிகளும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். பேருந்துகள் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துதல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை விடுதலை சிறுத்தைகள்தான் அரங்கேற்றினர். பல இடங்களில் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பா.ம.க.வினரும், பொதுமக்களும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் அருகே தனியார் பேருந்து ஒன்றை கல்வீசித் தாக்கிய தேசிங்கு என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் அ.தி.மு.க.வின் துணை அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்தின் போக்குவரத்துப் பிரிவு நிர்வாகி என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உத்தரவுப்படி, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக பா.ம.க.வினர் வழக்கில் சேர்க்கப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குறிஞ்சிப்பாடியில் பேருந்தை சேதப்படுத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறையில் இருந்து நானும் மற்ற பா.ம.க. தலைவர்களும் விடுதலையான பிறகும் வன்முறைகள் தொடர்வதிலிருந்தே இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த உண்மைகளையெல்லாம் தெரிந்துகொண்டு, உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், பா.ம.க. மீது பழிபோடும் முயற்சியில் காவல்துறையுடன் இணைந்து, தமிழக அரசும் ஈடுபட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

விழுப்புரத்தில் நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 1ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, அறவழியில் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்றுதான் கூறினாரே தவிர, வன்முறையைத் தூண்டும் வகையில் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு அளித்த நேர்காணலிலும், பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் அறவழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும்படிதான் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படியே, பா.ம.க.வினரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களின் வீடுகளில் கறுப்பு-க்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக, ஏராளமான வன்னியர்களும், பா.ம.க.வினரும் தங்களது வீடுகளை விட்டே வெளியேற நேர்ந்தது. இதனால், பா.ம.க.வினர் எவரும் ஊரில் இருக்க முடியாத நிலையில் அவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்று முதலமைச்சர் கூறியிருப்பது அபத்தத்திலும் அபத்தமானதாகும்.

பா.ம.க.வைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை, தேசிய பாதுகாப்பு-ச் சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவ்வளவு பேர் மீது தடுப்பு-க் காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. வன்னியர்களை தமிழக அரசு எந்த அளவுக்கு எதிரியாக கருதுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசின் இந்த அடக்கு முறைகளை எதிர்த்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடர உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசும் காவல்துறையும் செய்த தவறுகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், பா.ம.க.வினர்தான் வன்முறைகளை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை சட்டப்பேரவையில் பதிவு செய்து, அதன் மூலம் நீதித்துறையை மறைமுகமாக அச்சுறுத்த தமிழக முதலமைச்சர் முயன்றிருக்கிறார்.

அரசியல் கட்சி மற்றும் அதன் தலைமைக்கான இலக்கணம் பற்றி முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். 2000&வது ஆண்டில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரியில் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பேருந்துக்கு தீவைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்றனர். தமிழகம் முழுவதும் பேருந்துகளை தீயிட்டு எரித்தல், கல்வீசி சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். இவ்வாறு கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்துக்கொலை செய்ய தூண்டுவதுதான் கட்சித் தலைமைக்கான இலக்கணமா? என்பதை முதலமைச்சர் விளக்கவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பா.ம.க.வை ஒடுக்க நினைக்கிறார். இதற்காகவே, வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. மீது பழிபோட்டு, அது ஒரு வன்முறைக்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். இந்த முயற்சி வெற்றி பெறாது. இன்று பா.ம.க.விற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை, நாளை மற்ற கட்சிகளுக்கு எதிராகவும் ஏவப்படும் வாய்ப்பு இருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா, தமது அதிகார எல்லையை மறந்து பா.ம.க. தடை செய்யப்போவதாக கூறியிருக்கிறார். எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. தமிழக அரசின் அனைத்து அடக்கு முறைகளையும், அச்சுறுத்தல்களையும் பா.ம.க. சட்டப்படி எதிர்கொள்ளும். அதே நேரத்தில் அதிகாரம் தம்மிடம் உள்ளது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், மே 09, 2013

அ.மார்க்ஸ் கும்பலின் பித்தலாட்டம்: கட்டுக்கதையை உண்மையாக அறிவிக்கும் சதி!

"மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை" என்ற பெயரில் ஒரு அறிக்கையை அ.மார்க்ஸ் கும்பல் வெளியிட்டுள்ளது. (அ.மார்க்ஸ் என்பவர் கார்ல் மார்க்ஸ் அல்ல. அ.மார்கஸ் எ புனைப்பெயர் வைத்துள்ளார்.) நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவருக்கும் இருக்க வேண்டிய ஒரு குறைந்தபட்ச நேர்மைக் கூட இல்லாத அப்பட்டமான அயோக்கியத்தனத்துடன் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சேவ் தமிள்சு எனும் வெறிப்பிடித்தக் கூட்டம்.

அ.மார்கஸ் தலைமையிலான 13 பேர் கொண்ட 'உண்மையாக அறிவிக்கும்' கும்பல் மரக்காணத்திற்கு சுற்றுலா கிளம்பியபோது, "சேவ் தமிழ்ள்சு" என்கிற கூட்டத்தின் ப.பரிமளா, சி,செந்தளிர்,  ப.பூவிளங்கோதை மூன்று பேரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

(வேலூர் சிறையில் உள்ள தூக்குதண்டனைக் கைதிகளிடம் செல்பேசியைக் கொடுக்க முயன்று மாட்டிக்கொண்ட கூட்டம்தான் சேவ் தமிள்சு இயக்கம் ஆகும். செய்தி: வேலூர் சிறையில் முருகனிடம் மொபைல் கொடுக்க முயன்றவர் கைது).
சேவ் தமிள்சு கூட்டத்தினர் ஏற்கனவே வெளிப்படையாக வன்னியர்களுக்கு எதிராகவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் அப்பட்டமான அவதூறுகளை அள்ளி வீசிவரும் கூட்டத்தினர் ஆகும். 'ராஜபட்சேவிடம் தமிழர்கள் தவறு செய்தார்களா என்று கேட்பதும் - சேவ் தமிள்சு இயக்கத்தினரிடம் வன்னியர்கள் குற்றவாளிகளா என்று கேட்பதும் ஒன்றுதான்'. அப்படிப்பட்ட ஒரு வெறிபிடித்த கூட்டத்தினரைக் கொண்ட உண்மை அறியும் அறிக்கை எப்படி இருக்கும்?

'நாங்கள் ஒருதலைப்பட்சமாகத்தான் எழுதுவோம் - நீங்கள்தான் அதை நடுநிலையாகக் கருத வேண்டும்' - அ.மார்க்ஸ் கும்பலின் அடாவடி?

நடுநிலை, நியாயம் என்றால் பதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரையும் சந்திக்க வேண்டும். யாரை எல்லாம் சந்தித்தோம் என்பது குறித்து அ.மார்க்ஸ் கூட்டம் வேடிக்கையான விளக்கத்தைக் கூறியுள்ளது:

"பாதிக்கப்பட்ட (ஒருதரப்பு) மக்கள் தவிர (அதே தரப்பைச் சேர்ந்த) விடுதலைச் சிறுத்தைகளின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் வெற்றிச் செல்வன், மரக்காணம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தயாளன், செல்வம் ஆகியோருடனும்பேசினோம். பா.ம.க தரப்பில் எவ்வளவு முயன்றும் யாரையும் சந்திக்க இயலவில்லை."
பா.ம.க தரப்பில் அப்படி இவர்கள் யாரை சந்திக்க முயன்றார்கள்? என்று தெரியவில்லை. வன்னியர்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுவை மருத்துவமனையிலும் கடலூர், அரியலூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இந்தக் கும்பல் சென்றதா? யாரையாவது பார்த்ததா?

இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நான்கு பேர் மீது துப்பாக்கிச் சூடு. நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம். 500 வன்னியர் வாகனங்கள் உடைப்பு. நீதி கேட்டு போராடிய மருத்துவர் அய்யா அவர்கள் மீது பொய்வழக்கு. இப்படி அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள்தான்.

ஏழு குடிசைகள் எரிந்தன என ஒப்பாரி வைக்கும் இந்தக் கூட்டத்தினருக்கு, வன்னியர் தரப்பு பாதிப்புகள் கண்ணில் படவில்லையா? ஒரு வன்னியரைக் கூட சந்தித்து அவரது நியாயத்தைக் கேட்க மனம் இல்லையா?

அடையாள அரசியலும் அ.மார்க்சின் பித்தலாட்டமும்.

இந்த உண்மையாக அறிவிக்கும் அறிக்கையில் - கட்டுக்கதைகளைத் தாண்டி தத்துவங்களும் இசங்களும் உள்ளன.

"அடையாள அரசியல் என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்றது என்பார் அமார்த்ய சென். ஒரு பக்கம் அது இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்டவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அதனூடான ஒரு தன்னம்பிக்கையையும் வழங்கியபோதும் இன்னொரு பக்கம் அது பிற அடையாளங்களின் மீதான வன்முறையாகவும் மாறிவிடுகிறது, ஆதிக்கநிலையினர் இந்நிலை எடுக்கும்போது அது மிகவும் ஆபத்தாகிவிடுகிறது." என்கிறது அறிக்கை.
"ப.பரிமளா, தமிழர் காப்பு இயக்கம், சி,செந்தளிர், தமிழர் காப்பு இயக்கம், ப.பூவிளங்கோதை,தமிழர் காப்பு இயக்கம" என மூன்றுபேர் தமிழ் தேசியத்தைப் பேசுபவர்கள் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். அப்புறம் "அ.சாதிக்பாட்சா, இந்தியன் தவ்ஹீத் ஜமாத்" என் ஒரு இஸ்லாமிய இயக்கத்தவரும் இருக்கிறார்.

இப்படி, தமிழ்தேசியம், இஸ்லாமிய வாதம் என்கிற அடையாள அரசியலைப் பேசுவர்களைக் கொண்டுள்ள இந்தக் கும்பல்தான் வெட்கமே இல்லாமல் "அடையாள அரசியல் என்பது இருபக்கமும் கூரான கத்தி" என்றும் பேசுகிறது.

முதலில் தனது அறையிலேயே உட்கார்ந்து அறிக்கையை எழுத வேண்டியது. அதன்பிறகு ஒரு கூட்டமாக சுற்றுலா சென்றுவந்து உண்மையாக அறிவிக்க வேண்டியது. இப்படியும் ஒரு பிழைப்பு நாட்டில் இருக்கிறது பாருங்கள்!


பாமக தொண்டர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

"மரக்காணம் கலவரத்தின்போது பா.ம.க. தொண்டர் செல்வராஜ் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பி.செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவுக்காக எங்கள் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில் சென்றோம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மதுரா கழிகுப்பம் கிராமத்தை அடைந்தபோது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு எங்கள் வாகனம் மீது தாக்கியது. நாங்கள் அங்கிருந்து தப்பி விட்டோம். எனது சகோதரர் செல்வராஜ் அந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கூறியபடி எனது தம்பியை அந்தக் கும்பல் கொன்றுவிட்டதாக அன்று இரவு எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன்.
எனது சகோதரர் விபத்தினால் உயிரிழக்கவில்லை. அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும் எனது சகோதரர் விபத்தினால் உயிரிழந்ததாக காவல் துறையும், ஊடகங்களும் கூறி வருகின்றன.

தற்போதைய சூழலில் இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸôர் விசாரணை நடத்தினால் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள். ஆகவே, எனது சகோதரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் செல்வம் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்."

தினமணி (9.05.2013)

செவ்வாய், மே 07, 2013

கூடங்குளத்தில் 2,27,350 பேர் மீதுவழக்கு: மருத்துவர் இராமதாசு ஒருவர் மட்டும் கைது - உச்சநீதிமன்றத்தை அவமதித்தது தமிழ்நாடு அரசு!

கூடங்குளம் போராட்டம் இதுவரை தொடர்பாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் மருத்துவர் அய்யா அவர்கள் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப. உதயகுமார் அவர்களுடன் மருத்துவர் இராமதாசு கலந்து கொண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இடிந்த கரையில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை மீறியதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது போலவே, மருத்துவர் அய்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், வேறு ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், மருத்துவர் அய்யா ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (6.05.2013) உத்தரவிட்டது. அதனை அவமதித்து இன்று கூடங்குளம்  வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
 உச்சநீதிமன்ற உத்தரவு (6.05.2013) 

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

"மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை அடுத்தடுத்து பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வழக்கில் மருத்துவர் அய்யாவை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் மருத்துவர் அய்யா தடையை மீறி பங்கேற்று அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்காக மருத்துவர் அய்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை மருத்துவர் அய்யா சட்டப்படி சந்தித்து வருகிறார். மருத்துவர் அய்யாவைப் போலவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இடிந்தகரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறித் தான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இன்று வரை  2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றஞ்சாற்றப்பட்டவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 பேரின் அடையாளம் கூட இதுவரைக் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை மட்டும் அரசு கைது செய்திருக்கிறது. இதிலிருந்தே மருத்துவர் அய்யாவுக்கு எதிராக தமிழக ஆட்சியாளர்கள் எத்தகைய கொடூரமான பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதற்கு வசதியாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் தொடரப்பட்ட  குற்ற வழக்குகளைத் திரும்பப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இத்தகைய தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நாளே கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்வதென்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் கூறிய அமைதியையும், இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது.

மருத்துவர் அய்யா மீதான 4 வழக்குகளில், மூன்றில் இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் அவர் விடுதலை ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது இன்னொரு வழக்கில் அவரை கைது செய்திருக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை பழிவாங்கும் விஷயத்தில் சட்டம், நீதி, மனித உரிமை உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு காலில் போட்டு மிதித்துவருகிறது.

தமிழக அரசின் இந்த சட்டத்தை மதிக்காத, சர்வாதிகாரத்தனமான, அடக்குமுறைப் போக்கிற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது."


தொடர்புடைய சுட்டி: 

கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்: அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா? 

மரக்காணம் படுகொலை: இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்!

மரக்காணத்தில் ஒரு கலவர நிகழ்வு நடந்துவுடனேயே, இதுகுறித்து 'இந்தியா டுடே ஒரு கவர்ஸ்டோரி வெளியிடும், அதைக்கூட கவின்மலர் என்பவர்தான் எழுதுவார்' என நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்தது போல கவர்ஸ்டோரி வெளியாகவில்லை, ஆனாலும் சிறப்புக் கட்டுரை என்கிற வடிவில் அதனை எழுதியிருந்தார் கவின்மலர்.

"முழுநிலவு நாளில் சாதிய கிரகணம்" என மூன்று பக்கம் விரியும் இந்த 'சிறப்பு' கட்டுரையில் 7 குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அது குறித்து மிக விரிவாக வர்ணனை செய்துள்ளார் கவின்மலர். 7 குடிசைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நிழற்படம், அவர்களின் நேர்காணல் என நீள்கிறது அந்தக் கட்டுரை. அப்புறம் 'பணத்தைக் காணோம், நகையைக் காணோம்' என்கிற 'ரெடிமேட்' செய்திகளும் உண்டு.
விவேக் 
குமபகோணம் விவேக் படுகொலை
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவரது சாதி மதத்தைப் பார்க்காமல், அவர்களின் இழப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சரியான ஊடக தருமமாக இருக்க முடியும். அந்த வகையில் தலித் மக்களின் பாதிப்புகளை விரிவாக பதிவு செய்துள்ள இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் நன்றி.

அப்புறம், இந்த மோதலின் மற்றொரு தரப்பான, வன்னியர்கள் தரப்பில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ஒன்று கொலை என்றும், மற்றொன்று விபத்து என்றும் காவல்துறை கூறுகிறது. மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளனர். வன்னியர்களின் எதிர் பிரிவினரால் தாக்கப்பட்டவர்களில் படுகாயமடைந்தவர்கள் பலர் கடலூர், நாகை, அரியலூர், சேலம் மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுமார் 500 வாகனங்கள் வன்னியர்களின் எதிர் பிரிவினராலும், காவல்துறையினராலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இப்படி அதிக பதிப்புகள் வன்னியர்கள் தரப்பில் இருக்கும் நிலையில் 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
தீக்குளித்து இறந்த திருவண்ணாமல பாண்டியன்
எனவே, மரக்காணத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி போராடிய மருத்துவர் இராமதாசு அவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்படியாக - வன்னியர் தரப்பில் இரண்டு உயிர்ப்பலி, மூன்று பேருக்கு துப்பாக்கிச் சூடு, பலர் படுகாயம், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம், 1512 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், இதற்கெல்லாம் நீதிகேட்டு போராடிய மருத்துவர் இராமதாசு என பத்திரிகைகளில் வெளியிடத் தகுதியான பல நியாயங்கள் உள்ளன.

ஆனாலும், தனது மூன்று பக்க கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் - அதாவது 7 குடிசைகள் எரிந்தன - என்பதை மட்டுமே வளைத்து வளைத்து மிகக் கவனமாக எழுதியுள்ளார் கவின்மலர். வன்னியர் தரப்பின் வாதங்களை முற்றிலுமாக குழிதோண்டி புதைத்துள்ளார் கவின்மலர்.

இந்திய பத்திரிகை கவுன்சிலின் நன்னடத்தை நெறிகளில் (Press Council: NORMS OF JOURNALISTIC CONDUCT) மிக முதன்மையானது "துல்லியம் மற்றும் நியாயம்" (Accuracy  and Fairness) என்பதாகும். அதிலும் குறிப்பாக ஒரு நிகழ்வின் எல்லா பக்க நியாயமும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பது முதன்மையாகும். (All sides of the core issue or subject should be reported).

துல்லியம் மற்றும் நியாயம் என்பதையெல்லாம் இந்தியா டுடேவிலும் கவின்மலரிடமும் எதிர்பார்ப்பவன் யாராவது இருந்தால் அவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும்.

அப்புறம் எதற்கு 'இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்'? என்று கேட்கிறீர்களா?

இந்த மூன்று பக்க கட்டுரையில், ஒரே ஒரு வரியில் "வன்னியர்கள் இருவர் விபத்தில் இறந்ததாக முதலில் கூறிய காவல்துறை ஒரு வழக்கை மட்டும் கொலை முயற்சி வழக்காக்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.

நீங்களே பாருங்கள்! "இரண்டு வன்னியர்கள் இறந்துள்ளார்கள், அதில் ஒன்று கொலையாகக் கூட இருக்கலாம்" என்று கவின்மலர் கூறியுள்ளாரா இல்லையா? அந்த ஒருவர் கூட 'அவரேதான் வெட்டிக்கொண்டு செத்தார் 'என்று கவின்மலர் தன் மனதில் நினைத்ததை எழுதாமல் தவிர்த்துள்ளாரா இல்லையா?

அதற்காகத்தான் "இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்".
வன்னியருக்கு எதிரான தரப்பினரின் படுகொலைத் தாக்குதலில் காயமடைந்த வன்னியர்.

திங்கள், மே 06, 2013

கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்: அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா? 

(கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் -247 பக்கம்- கீழே)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. (மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தற்போது சிறையில் வாடுகிறார்.) அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான இலட்சக்கணக்கான ரூபாய்க்கான விளம்பரங்களை மக்கள் தொலைக்காட்சிக்கு கொடுத்த போது அதை வேண்டாம் என்று மறுத்த ஒரே தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான்.

கூடங்குளம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் முழுவதும் (247 பக்கம்) - இதோ! (கீழே உள்ள நகல்மீது சொடுக்கவும்)http://www.scribd.com/doc/139721944/Kudankulam-Judgment

கூடங்குளம் அணுவுலை செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடர்ந்த இந்த வழக்கில், இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

கூடங்குளம் அணுவுலை செயல்பட அனுமதி அளித்துத் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை மதிப்பதாகத் தெரிவித்தது. மேலும், எரிசக்தித் தேவைக்காக அணுவுலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

கூடங்குளம் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பவும், பொது நலன் கருதியும், நாட்டின் வளர்ச்சி கருதியும் கூடங்குளம் திட்டம் அவசியத் தேவை. அணுவுலைகள் நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அவசியம் தேவை. இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணு மின்சாரம் தேவை என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

அணுவுலை தொடர்பான பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரியான கருத்தையே தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அணுவுலை பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதுகாப்பாக செயல்படத் தேவையான அனைத்து அம்சங்களும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதை கவனத்தில் கொள்வதாகவும் கூறியது. (செய்தி: தினமணி)
தொடர்புடைய சுட்டி:


அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

ஞாயிறு, மே 05, 2013


பா.ம.க பெயரில் விடுதலை சிறுத்தைகளின் வன்முறைச் சதி அம்பலம் - பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்.

தாக்குதல் நடத்திய தேசிங்குவின் அடையாள அட்டை
விழுப்புரம் அருகே பேருந்துகள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசித் தாக்குதல். பாமக மீது பழிபோட சதி. அக்கட்சியின் தொண்டர் தேசிங்கு என்பவர் கைது. 

அதே போன்று வேலூரிலும் பேருந்துகளை உடைத்த விடுதலை சிறுத்தைகள் பிடிபட்டனர். 

கலவரப் பழியை மருத்துவர் இராமதாசு அவர்கள் மீது சுமத்தி குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க மாபெரும் சதி! 

சதிச்செயலின் முழு விவரத்தை காண கீழே உள்ள காணொலி இணைப்பின் மீது சொடுக்கவும்: 


நடுநிலை நியாயவான்களே, உங்கள் பதில் என்ன?

(உங்கள் எண்ணம் ஏற்கனவே தெரிந்தது தானே! "எப்படியாவது வன்னியர்கள் ஒழிந்தால் சரி")

வெள்ளி, மே 03, 2013

அடித்து கொன்றவன் போராளி ஆனதால், செத்து விழுந்தவன் வெறியன் ஆகிறான்..


அடித்து கொன்றவன் போராளி ஆனதால்,
செத்து விழுந்தவன் வெறியன் ஆகிறான்..

வீழ வைத்தவன் தலைவன் ஆனதால்,
வாழ வைத்தவன் விரோதி ஆகிறான்..

மனிதனை வெட்டியவன் புனிதனாய் ஆனதால்,
மரத்தை வெட்டியவன் மிருகமாய் ஆகிறான்..

கெடுநிலை தருபவன் நடுநிலை ஆனதால்,
விடுதலை கேட்டவன் தறுதலை ஆகிறான்.

-Sooriya Prakash Thangaswamy


தமிழ்நாட்டின் சாதிவெறியர்களே - மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைக் கேளுங்கள்! உங்கள் மனம் குளிரட்டும்! உங்கள் கொலைவெறி இனியாவது அடங்கட்டும்!

சட்டப்படி கைது செய்து உள்ளே தள்ளுகிறார்கள். மிக்க சரி. 

மனித உரிமை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்று கோருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்கள் 'குற்றவாளிகள்' அல்ல. பன்னாட்டு மனித உரிமை கொள்கைகளின் அடிப்படையில் அவர்கள் 'மனசாட்சி கைதிகள்'. அதாவது தான் கொண்ட கொள்கைக்காக சிறை சென்றவர்கள். அவர்கள் குற்றவாளிகளைப் போன்று நடத்தப்படக்கூடாது.

ஒரு சமுதாயத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைக்கும் 74 வயது முதியவரை இரவும் பகலுமாக - அந்த ஊருக்கும் இந்த ஊருக்குமாக அலைகழிக்கிறார்கள். வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக்காக பேசுவது அவ்வளவு பெரிய குற்றமா?

இந்த அநீதியான மனித உரிமை மீறல் பற்றி பேசினால் - தமிழ்நாட்டின் மனித உரிமை போர்வாள்கள் எல்லாமும் "உங்களுக்கு இது தேவைதான்" என்கிறார்கள்? மனித உரிமைப் பேசுவதிலும் சாதி வெறி. 
மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகள் இதோ:

மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைக் கேளுங்கள்! உங்கள் மனம் குளிரட்டும்! உங்கள் கொலைவெறி இனியாவது அடங்கட்டும்! 

வாழ்க ஜனநாயகம், வாழ்க மனித உரிமை

வியாழன், மே 02, 2013

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு ஜாமீன் இல்லை - பழைய வழக்குகளை தூசுதட்டி தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டம்! வன்னியர்களுக்கு எதிராக மாபெரும் சதி! 


மரக்காணத்தில் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் வன்னியர் அவர்களின் குழந்தை!
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கினை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று (2.5.2013) தாமதமாக மதியம் ஒரு மணிக்கு மேல் வந்துள்ளார்.

'தான் புதிதாக வந்துள்ளதால் இந்த வழக்கு குறித்து விவரங்கள் எதுவும் தெரியாது. நாளை தான் முடிவெடுக்க முடியும்' என்று கூறியுள்ளார். நாளையும் காலதாமதமாக வந்து வேறு காரணம் சொல்லவும், அல்லது வேறு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் ஏற்கனவே போடப்பட்டுள்ள பழைய வழக்குகளை தூசுதட்டி எடுத்து மீண்டும் மருத்துவர் அய்யா அவர்கள் மீது வழக்குபோட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் இருக்கின்றனவோ, அந்த நீதிமனறங்களுக்கெல்லாம் மருத்துவர் அய்யா அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வாழ்க ஜனநாயகம், வாழ்க மனித உரிமைகள். 
மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா?

மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? தொலைக்காட்சியில் எனது நேர்காணல்-காணொலி!

மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான வன்னியர்கள் அடித்தும் வெட்டியும் காயப்படுத்தப்பட்டனர். வன்னியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகாயப் படுத்தப்பட்டுள்ளனர். வன்னியர்கள் வந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட கலவரம் குறித்து நீதிவிசாரணை கேட்டுப்போராடிய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் காவல்துறையால் அலைகழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மரக்காணத்தில் கொல்லப்பட்ட வன்னியர்கள் விபத்தில் இறந்தார்கள் என்று சாதித்த காவல்துறையினர் , பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் படுகொலைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த கொடுமைகள் குறித்து 01.05.2013 அன்று மக்கள் தொலைக்காட்சியின் "நீதியின் குரல்" நேரலை நிகழ்ச்சியில் எனது நேர்காணல்.
மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 1


மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 2


மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 3


மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 4



புதன், மே 01, 2013

மனுஷ்ய புத்திரன் - இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற விரும்புகிறாரா?


உயிர்மை எனும் பத்திரிகையை நடத்தும் மனுஷ்ய புத்திரன், மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாடு குறித்து நக்கீரன் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் "நான் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்காக என்னையும் சூத்திரன் என்று அழைப்பீர்கள் என்றால் என் வாழ்க்கையில் வேறு எதையும் விட அந்தப்பட்டத்தை நான் மிகுந்த கௌரவத்துடன் ஏற்பேன்" என்று கூறியுள்ளார்.
மனுஷ்ய புத்திரனின் இந்த விருப்பம் விபரீதமானது. அவரே விரும்பினாலும் அது நடக்கவும் நடக்காது. இஸ்லாமியர் ஒருவர் சூத்திரனாக விரும்பினால், அதற்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதைத் தவிற வேறு வழி இல்லை. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது. அதாவது அவர் ஒரு இஸ்லாமியர். இவர் எப்படி சூத்தரன் ஆக முடியும்?

இஸ்லாமியர் ஒருவர் தன்னை "சூத்திரன்" என கருதினால், அவர் இந்து மதத்திற்குள் வந்துவிடுகிறார். இஸ்லாமியர் ஒருவர் இந்து மதத்தின் சாதிக்கொடுமைகளை எதிர்ப்பது என்பது வேறு, அவரே இந்து மதத்துக்குள் வருவது என்பது வேறு. ஒரே நேரத்தில் ஒருவர் இந்து - இஸ்லாமியர் என்கிற இரட்டை வேடங்களையும் போட முடியாது.

மனுஷ்ய புத்திரனின் வாதத்தை இஸ்லாமியர்கள் ஏற்பார்களா? என்பதை இஸ்லாமியர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். எனவே, முற்போக்கு வேடம் போடுவதாக நினைத்துக்கொண்டு, இஸ்லாமிய மதத்துக்கு துரோகம் இழைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் எஸ். அப்துல் ஹமீது. இது தேவைதானா?

மனுஷ்யபுத்திரன் சாதிக்கொடுமை குறித்து ஊருக்கு உபதேசிப்பதற்கு முன்பு, குழந்தைத் திருமணக் கொடுமை குறித்து அவர் பேசிப் பார்க்கட்டும்!