Pages

Thursday, August 25, 2011

இலங்கை மீதான விவாதம்:மண்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், எட்டி உதைத்த இந்திய அரசு!

நாடாளுமன்றத்தில் நடந்த இலங்கை மீதான விவாதத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கண்களில் ஈரம் கசியுமளவிற்கு ஈழத்தமிழர்களின் அவலநிலையை விவரித்தனர். ஆனால், அவர்களது உருக்கமான பேச்சுக்கள் எதுவும் இந்தியப்பேரசின் போக்கில் சிறிதளவு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, ஒருபோதும் ஏற்படுத்தாது என்பது எசு.எம்.கிருட்டினா பதிலில் தெளிவாகத்தெரிந்தது.
ஒருமுறை வெளியுறவுத்துறை அமைச்சர் எசு.எம்.கிருட்டினா ஐ.நா. அவையில் பேசும்போது இந்தியநாட்டின் அறிக்கையைப் படிப்பதற்கு பதிலாக பக்கத்தில் அமர்ந்திருந்த போர்த்துகீசிய நாட்டு அமைச்சர் லூயிசு அமடோவின் அறிக்கையைப் படித்தார். ஆனால், இன்று (25.8.2011) இந்திய நாடாளுமன்ற மேலவையில் அதுபோன்ற தவறை செய்யவில்லை. மாறாக, எசு.எம்.கிருட்டினா இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராகவே மாறியிருந்தார்.
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்த விவாதம் ஐ.நா அவையில் எப்போதாவது வந்தால் அப்போது இந்தியா தனது நிலையை முடிவு செய்யும் என்றார் எசு.எம். கிருட்டினா. ஐ.நா'வில் சொல்வது இருக்கட்டும் - இந்திய நாடாளுமன்றத்தில் உங்கள் நிலையைச் சொல்லுங்கள் என்று கேட்டார் சி.பி.ஐ'யின் து. ராசா. கிருட்டினாவிடம் அதற்கு பதில் இல்லை என்பதால் வெளிநடப்பு செய்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவது குறித்து - அது இந்திய "தமிழ்" மீனவர்களுக்கும் இலங்கை "தமிழ்" மீனவர்களுக்கும் இடையேயான தகராறு என்றார் எசு.எம். கிருட்டினா.

இலங்கை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எதுவும் சொல்லவில்லை என்பதாலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்றும் வெளிநடப்பு செய்தது அதிமுக.

சி.பி.எம் கட்சி மறுவாழ்வு குறித்து தவறான தகவல் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்தது. திமுகவின் சிவா முடிவாக ஏதோ மறுவாழ்வு குறித்து பேசினார். அவர் வெளிநடப்பு செய்தாரா? இல்லையா? என்பது புரியவில்லை.
மாநிலங்களவையில் இவ்வாறெல்லாம் நடக்கும் போது, மக்களவையிலும் உருக்கமான விவாதம் நடந்தது. ராச்டீரிய சனதா கட்சி உறுப்பினர் ரகுவன்சு பிரசாத் ஈழப்படுகொலைப் புகைப்பங்களை எல்லாம் சுட்டிக்காட்டி பேசினார். திருமாவளவன் பேசும்போது - கண்ணீரை அடக்கிக்கொண்டு புலம்பினார். ஈழத்தமிழர் பற்றி பேசுகிறார்கள் என்றவுடன் 90 விழுக்காடு நாடாமன்ற உறுப்பினர்கள் வெளியே சென்று விட்டனரே, இந்த நாடே எங்களை புறக்கணிக்கிறதா? என்று கதறினார்.
மொத்தத்தில் சுமார் ஏழுகோடி தமிழர்கள் - 110 கோடி பேரை எதிரொலிக்கும் இந்திய நாடாளுமன்றம் - இவற்றைவிட ராசபட்சே கும்பலிடம் கூலிவாங்கும் ஒருசில வெளியுறவுத்துறை அதிகாரிகளே வலிமையானவர்கள் என்பது மீண்டுமொருமுறை தெளிவாகியது. இலங்கைக்கு விசுவாசமான அதிகாரிகளின் கருத்து எதுவோ, அதுவே இந்திய அரசின் கருத்தாகவும் எதிரொலித்தது.

நாடாளுமன்றத்தில் பேசிய அத்தனை உறுப்பினர்களுமே இலங்கையை கண்டிக்கும் ஒரு விவாதத்தில் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக - இலங்கையின் பிரதிநிதி போல பேசுவது என்னவிதமான சனநாயகம் என்று தெரியவில்லை.

என்னவோ போங்கள்: பாரத் மாதா கீ ஜே. வந்தே மாத்ரம். ஜெய் ஹிந்த்.

3 comments:

Jeyapalan said...

//பாரத் மாதா கீ ஜே. வந்தே மாத்ரம். ஜெய் ஹிந்த்.//
குமட்டிக் கொண்டு வரவில்லை?

Prabu Krishna said...

கருணையற்ற அரசாங்கம் காரித்துப்பத் தோன்றுகிறது.

rajamelaiyur said...

அங்கு செத்து மண்ணோடு மண்ணாக போன பின்பு விவாதம் நடத்தி என்ன பயன் ?