Pages

Friday, April 28, 2017

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மதிமுக பொய்ப்பிரச்சாரம்

"தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - என்கிற வைகோ வேண்டுகோளை ஐநா மன்றம் சுற்று அறிக்கையாக முன் வைத்துள்ளது" - என்று மதிமுக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கபட்டதாகவும், அதன் படி வைகோ அவர்களின் கோரிக்கை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆய்வுக்காக சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மதிமுகவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உண்மை என்ன?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் இந்த அறிக்கையை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா அவையின் விதிகளின் படி, மதிமுக தலைவர் வைகோவின் கடிதத்தை சுற்றுக்கு விடவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இடம் ஏதும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள், உறுப்பினர் அல்லாத நாடுகள், ஐநா அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பங்கேற்பின் வழியாக மூன்று வழிகளில் கருத்துக்களை முன்வைக்கலாம். 1. எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிப்பது (NGO Written Statement). 2. மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசுவது (NGO Oral Statement). 3. துணைக்கூட்டங்கள் (NGO Side-Event) நடத்துவது - ஆகியனவே பங்கேற்கும் வழிகள் ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பாக 2005 ஆம் ஆண்டுமுதல் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் நீதிக்கான குரலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பி வருகிறது.

மதிமுக குறிப்பிட்டுள்ள அதே 34 ஆம் கூட்டத்தில் - பசுமைத் தாயகம் சார்பில் இரண்டு எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆறு முறை மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசப்பட்டது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரும் பேசினர்.  இரண்டு துணைக்கூட்டங்கள் பசுமைத் தாயகம் சார்பில் நடத்தப்பட்டன.

வைகோவின் கோரிக்கை விவகாரம் என்ன?

மதிமுக ஐநாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, அவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பும் வாய்ப்பு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் எழுத்துபூர்வமான அறிக்கைகளை வைக்கலாம் என்கிற வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 2 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஐநா மனித உரிமைகள் பேரவை சுற்றுக்கு விட்டது. இதுபோன்று, 34 ஆம் கூட்டத்தொடரில் மொத்தம் 259 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன.
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 10 தலைப்புகளாக பிரிக்கப்படும். அதில் எந்த ஒரு தலைப்பின் கீழும் அறிக்கைகள் சமர்ப்பிக்கலாம். பசுமைத் தாயகம் அமைப்பின் அறிக்கைகள் முறையே நிகழ்ச்சி நிரல் 2 மற்றும் 4 ஆவது தலைப்பின் கீழ் சுற்றுக்கு விடப்பட்டன. (எண்: HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam) மற்றும் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam)

இதே போன்று - வைகோ அவர்களின் கடிதமும், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (எண்: HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance,). பசுமைத் தாயகம் அறிக்கை சுற்றுக்கு விடபட்டது போலவே, இந்த அறிக்கையும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
வைகோ கடிதம் - ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் பெயரில்  HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance

அதாவது, வைகோ அவர்களின் கடித்ததை ஐநா மன்றம் சுற்றுக்கு விடவில்லை. மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அரசுசாரா அமைப்புகளின் அறிக்கைதான் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த அறிக்கைக்குள் வைகோ அவர்களின் கடிதம்  அறிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 34 ஆம் கூட்டத்தொடரின் 259 அறிக்கைகளில் இதுவும் ஒன்று.

அதுமட்டுமல்லாமல் - //ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக'//  வைக்கப்படவில்லை. 259 அறிக்கைகளை தலைப்பு வாரியாக பிரிக்கும் வகையில், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் அறிக்கை 2 ஆவது தலைப்பின் கீழ் உள்ளது.

பசுமைத் தாயகத்தின் பணி

2009 ஆம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் அறிக்கை, நேரடி பேச்சு, துணைக்கூட்டம் என எல்லா வழிகளிலும் பசுமைத் தாயகம் பங்கேற்று வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 50-க்கும் மேற்பட்ட நேரடியாக உரைகள், 10 துணைக் கூட்டங்களை நேரடியாக நடத்தியுள்ளது பசுமைத் தாயகம்.

ஆனால், ஒரு முறை வேறு அமைப்புகள் மூலம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, அதனை ஐநா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தது போல மதிமுக அறிக்கை விடுவது வியப்பளிக்கிறது!.

அதிலும் 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது என்றும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கப்பட்டது என்றும் கூறுவது அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் தவிர வேறு எதுவும் இல்லை.

(குறிப்பு: வைகோவின் கோரிக்கையை ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக சமர்ப்பித்ததை வரவேற்கிறோம். ஆனால், அது குறித்த மிகையான கட்டுக்கதைகள் நியாயமற்றவை).

Saturday, April 15, 2017

தமிழகத்தில் மதக்கலவரம் நடத்த சதி: வன்னியர்களின் வீரம் துலுக்கனிடம் செல்லுமா?

தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இங்கும் பெரிய மதக்கலவரம் நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த மதக்கலவரத்தில் பிராமணர்களோ, முன்னேறிய சாதியினரோ பலியாகக் கூடாது. அதற்கு பதிலாக 'எளிதில் உணர்ச்சிவசப்படும்' வன்னியர்களை பலி கொடுக்க திட்டமிட்டு முனைந்துள்ளார்கள். இதற்கான கூட்டம் ஒன்று 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பெயரில் திருக்கழுகுன்றத்தில் 9.4.2017 அன்று நடந்துள்ளது.

இக்கூட்டத்தில் பிராமணரான வகுப்பை சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் படுமோசமாகப் பேசியுள்ளார். "முஸ்லிம்களுடன் வன்னியர்கள் சண்டை போட வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை புறக்கணிக்க வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை" என்று அவர் பேசியுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ் மணியனின் மதவெறி பேச்சு:

மணியனின் மதவெறி பேச்சு: “சிவத்துரோகம் செய்கிறவன் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துவோம். இதுதான் வன்னியனுடைய பாரம்பரியம். ஆனால், இன்றைய வன்னியர்கள் சிலர் மதம் மாறிப்போயிருக்கிறார்கள். மதம் மாறிப்போய், மானம் கெட்டுப்போன அந்தக் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்கிறோம் வன்னியன் என்பதாகச் சொல்லி. அவன் உண்மையாகவே ஹிந்துவாக இருந்தால் தானே வன்னியன். அன்னியனாகப் போனதற்கு பின்னாலே வன்னியன் என்னடா உறவு, வன்னியன். கிறித்தவ வன்னியர்களிடம் எக்காரணம் கொண்டும் நாம் உறவு கொண்டாடக் கூடாது. வன்னியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களாக இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். ஜாதி பகிஷ்காரம் செய்ய  வேண்டும். 
அதுமட்டுமல்ல .... போராடுகிறோம், பெரிய வீர பாரம்பரியம் என்பதாகச் சொல்கிறோம். வன்னியனுக்கு இருக்கக் கூடிய வீரம் தெரியுமா? அவனுடைய வாளின் வலிமை தெரியுமா? அவனுடைய துணிச்சல் தெரியுமா? இதெல்லாம் நானும் பார்த்து விட்டேன். நம்ம ஊர்ல இருக்கிற ஒரு சில ஜாதிக்காரன் கிட்டதான் இந்த வன்னியனுடைய திமிர், இந்த வன்னியனுடைய அகம்பாவம் எல்லாம் செல்லும். யார்கிட்ட செல்வதில்லை தெரியுமா?  துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. இஸ்லாமியனை பகைத்துக்கொண்டு வன்னியனுக்காக வாதாடுவதற்கு, போராடுவதற்கு, குரல் கொடுப்பதற்கு அமைப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நிலையில வெறும் அரசியல் ரீதியாக நாம பிளந்து கிடந்தால் நிச்சயமாக வன்னியச் சமுதாயத்துக்கு வலிமை கிடையாது. ஆன்மீக ரீதியாக கலாச்சார ரீதியாக சமுதாய ரீதியாக ஹிந்து என்கின்ற கண்ணோட்டத்தில் தான் நாம் அத்தனை வன்னியர்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும். அப்படி ஊரிய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.

ஆனால், இன்றைக்கு Most Backward (MBC) என்பதாகச் சொல்லி, நான் நான்கு பேர் கிட்ட கையேந்தினேனா? சத்திரியன் எப்படிடா கையேந்தறது? சத்திரியர்கள் எவர் கிட்டயாவது போய் ரிசர்வேஷன் கேட்பானா? சத்திரியன் தானே மற்றவர்களுக்கே வேலை கொடுக்க வேண்டியவன்? அப்படி வேலை கொடுக்க வேண்டிய சத்திரியன் இன்றைய தினம் கை நீட்டுகிறான். எனக்கு 20 சதவீதம் கொடு என்று.

நான் வேலூரில் பேசுகிற போது சொன்னேன். வன்னியர்கள் மத்தியிலும் சொன்னேன். உண்மையிலேயே நீ கேட்க வேண்டியது அரசாங்கத்திடம் 20 சதவீதம் அல்ல. மெடிக்கல் காலேஜில் 20 சதவீதம் அல்ல.

மாறாக, நீ கேட்க வேண்டியது எங்கே தெரியுமா? வேலூரில் பஜாரில் துலுக்கன் கடை வச்சிருக்கான் டா. நம்மைச் சுற்றியிலும் துலுக்கன் வியாபாரத்தில் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், வன்னியரில் எத்தனை பேர்கள் வியாபாரிகள்? எத்தனை பேரிடத்தில் பணம் இருக்கிறது? ஆகவே நீங்கள் அத்தனை பேரும் வேலூர் பஜாரில் வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளை ஒதுக்கு. எனக்கு கடைகளைக் கட்டிக் கொடு. வியாபாரத்திற்கு பணம் கொடு. அப்படி தான் டா கேட்கனும்"

- இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியுள்ளார். Youtube காணொலியாக இந்த இணைப்பில் காண்க: https://youtu.be/W70LfxkUXak


வன்னியர் உரிமைக்கு குரல் கொடுக்குமா ஆர்.எஸ்.எஸ்?

முஸ்லிம்கள் சொத்தில் வன்னியர்கள் பங்கு கேட்கவேண்டும் என்று சொல்லும் இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், வன்னியர்களின் உரிமையை அபகரித்து வைத்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் வன்னியர்களான பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு சொந்தமானதாகும். தினமும் இரவு பூஜை முடிந்த பிறகு பூஜை செய்யும் தீட்சிதர்கள், கோவிலை பூட்டி அதன் சாவியை பல்லக்கில் வைத்து மன்னர் குடும்பத்தின் அரண்மனையில் ஒப்படைப்பார்கள். காலையில் மீண்டும் அவ்வாறே வாங்கி வந்து கோவிலை திறப்பார்கள்.
காலப்போக்கில் மன்னர் குடும்பம் நலிவடைந்ததால், சாவியை பிராமணர்களான தீட்சிதர்களே வைத்துக்கொண்டனர். பின்னர், உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மூலம் வழக்குத் தொடுத்து - இந்தக் கோவில் பிராமணர்களுக்கே சொந்தம் என்கிற மோசடி தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.

இப்போது, பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் சார்பில், சிதம்பரம் கோவில் உரிமையை மீண்டும் பிச்சாவரம் மன்னர் குடும்பத்திடமே அளிக்க வேண்டும் என்று கோர முடியுமா?

அப்படி சிதம்பரம் கோவிலில் வன்னியர்களின் உரிமைப் பற்றி பேச வக்கற்றுப் போன இந்த கும்பல் தான் -  வன்னியர் உரிமையை அபகரித்த பிராமணர்களை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத முஸ்லிம்களிடம் சண்டை போடுங்கள் என்று மூளைச்சலவை செய்கிறது.
திருக்கழுகுன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியன், மற்றும் கல்யாணராமன் (நடுவில்)

பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் தலைவராக, பாஜக சார்பில் 2016 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு 2605 ஓட்டுகள் வாங்கிய வ.கோ. ரங்கசாமி உள்ளார். 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தமிழ் இனத்துரோகி,  போதைப்பொருள் கடத்தல்காரன்' என்று அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாணராமன் தான் இந்த அமைப்பின் ஆலோசகர் ஆகும் (நாயுடு வகுப்பை சேர்ந்த இவர் தன்னை வன்னியர் என்று கூறிக்கொள்வதாக சொல்கிறார்கள்).

மதவெறியை தடுக்க தமிழகம் ஒன்றிணைய வேண்டும்

வன்னியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை மூட்டும் இந்த படுபயங்கர மதக்கலவர சதியை தடுக்காமல் விட்டால், ஆயிரக்கணக்கான வன்னியர்களும், முஸ்லிம்களும் பலியாகும் ஆபத்து விரைவில் வரக்கூடும். இதனை வருமுன் தடுப்பதே, தமிழகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலமானதாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி:

Monday, April 10, 2017

எச்சரிக்கை: வன்னியர்களை பலிகொடுக்கத் துடிக்கும் மதவெறி கும்பல்!

'கிறிஸ்தவர்களுடனும் இஸ்லாமியர்களுடனும் வன்னியர்கள் போரிட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்கிற இடஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்' என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. 

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசியிருக்கின்றனர். (வீடியோ ஆதாரம் உள்ளது)

இது வன்னியர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் தந்திரம். பாஜக மற்றும் முன்னேறிய சாதியினரின் சுயநலத்துக்காக, தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, வன்னியர்களை இஸ்லாமியர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் கலவரத்தில் இறக்கிவிட செய்யப்படும் சதி இதுவாகும். இந்தச் சதிக்கு வன்னியர்கள் எவரும் பலியாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை

வன்னியர் என்கிற அடையாளத்துக்கு மதம் தடையாக இருந்தது இல்லை. வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் ஒற்றை மத அடையாளத்துடன் மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.
வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம். வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை.

சமண மதமும் வன்னியர்களும்

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே வன்னியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பௌத்த மதமும் வன்னியர்களும்

பல்லவ பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்றைக்கும் வன்னியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' அதே பல்லவ வம்சம்தான். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

இஸ்லாமும் வன்னியர்களும்

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்று கருதப்படுகிறது.  நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார்.
கேரளாவில் சேரமான் மசூதி
அவரது பெயரால் அமைந்த சேரமான் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள். சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா அவர்கள் 'சேரமான் பெருமாள் நாயனார்' பெயரில்தான் இந்திய விடுதலைக்கான தீவிரவாதிகள் அமைப்பை உருவாக்கினார்.

சேரமான் பெருமான் அரேபிய மண்ணிலேயே மறைந்தார் என்று கருதப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஓமன் நாட்டின் சலாலா நகரில் தர்காவாக உள்ளது.  (Dargah Name: Hazrat Syedina Tajuddin (Razi Allahu Thaalahu Anhu), Also famous as Cheraman Perumal ( Indian King) in Salalah, Sultanate of Oman)

திரௌபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா போர்மன்னன் மற்றும் முத்தால ராவுத்தன் ஆகியோர் திரௌபதியின் பாதுகாவலனாகக் கூறி வழிபடப்படுகின்றனர். இதில் போத்துராஜா என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும். முத்தால ராவுத்தன் என்பது ஒரு முஸ்லீம் வீரனைக் குறிக்கிறது. இந்த வழிபாட்டு முறை வன்னியர்களின் தனிப்பட்ட பண்பாடாகும்.
இஸ்லாமிய தர்காவில் திரௌபதி கரகம், பெங்களூரு
திரௌபதி அம்மன் வழிபாடு மிகப்பெரிய அளவில் நடப்பது பெங்களூரில் தான். அங்கு பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் திரௌபதி கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.

கிறித்தவ மதமும் வன்னியர்களும்

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசாபரூர் கச்சிராயர்கள், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள். இன்றைக்கும் இந்தக் கிறித்தவ கோவில் விழாக்களில் இந்து கச்சிராயர்களே மதிக்கப்படுகின்றனர்.
கச்சிராயர் கட்டிய கோணான் குப்பம் புனித பெரியநாயகி தேவாலயம்
இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படையாட்சி கட்டிய கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம்
இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் எனும் கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 

மருத்துவர் அய்யாவும் - கிறித்தவ வன்னியர்களும் 

திண்டுக்கல்லில் உள்ள மிகப்பெரிய தேவாலயமான புனித வளனார் ஆலயத்தில் 'கிறித்தவ வன்னியர்களுக்கும் - கிறித்தவ ஆதிதிராவிடர்களுக்கும்' இடையே சர்ச்சை உருவானது. இதனால், வன்னியர்கள் வழிபட்டுவந்த புனித வளனார் தேவாலயம் மூடப்பட்டது.

2000 ஆவது ஆண்டுவாக்கில், மூடப்பட்ட புனித வளனார் தேவாலயத்தை திறக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மருத்துவர் அய்யா அவர்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள்:

"1. மூடப்பட்ட தேவாலயத்தை உடனடியாக திறக்காவிட்டால், மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் புனித வளனார் தேவாலயம் திறக்கப்படும்.

2. தமிழ்நாட்டு கிறித்தவர்களில் வன்னியர்கள் ஒரு முதன்மையான சமுதாயமாக இருப்பதால் - பிஷப் எனப்படும் மறைமாவட்ட ஆயர்களாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும்" - என்கிற கோரிக்கைகளுக்காக மருத்துவர் அய்யா போராடினார்கள்.
மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து புனித வளனார் தேவாலயம் திறக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாயத்தில் ஒரு பிஷப் கூட இல்லை என்கிற கோரிக்கையையும் போப்பாண்டவரின் வாட்டிகன் அலுவலகம் கவனத்தில் கொண்டது. இது குறித்து அப்போதைய வாட்டிகன் பிரதிநிதி கார்டினல் சைமன் லூர்துசாமி அவர்கள் திண்டுக்கல் வந்து ஆய்வு செய்தார் (அவரும் ஒரு வன்னியர்).
கர்தினால் லூர்துசாமி
இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, வன்னியர் ஒருவர் பிஷப் ஆக நியமிக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் தமிழகத்தில் 20 மறை மாவட்டங்கள் உள்ளன. இவை மூன்று உயர் மறைமாவட்டங்களாக (ஆர்ச் பிஷப்) பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் அய்யா அவர்கள் போராடிய போது, வன்னியர் சமூகத்தில் ஒரே ஒரு பிஷப் கூட இல்லை. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 4 பிஷப்கள் வன்னியர்கள். (20 மறை மாவட்டங்களும் 3 உயர்மறை மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன. பிஷப்களுக்கும் மேலான இந்த 3 ஆர்ச் பிஷப் பதவிகளில்  2 இல் வன்னியர்கள் உள்ளனர்.)

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த 20 மறைமாவட்டங்களுக்கும் தலைவராகவும் - பிஷப் கவுன்சில் தலைவர் எனும் உயர் பொறுப்பில் வன்னியரான அந்தோணி பாப்புசாமி உள்ளார்.

மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் போராட்டங்களின் விளைவாகவே கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் வன்னியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கிறித்தவ வன்னியர்கள் கருதுகின்றனர்.

"திண்டுக்கல் - கரியாம்பட்டி" 

2013 ஆம் ஆண்டில் திண்டுக்கல் அருகே கரியாம்பட்டியில் வன்னிய பெண்ணை கேலி செய்தது தொடர்பாக "வன்னியர் - அருந்ததியினர்" இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய வன்னியர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அருந்ததியினரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் என்பதால் திண்டுக்கல் பகுதியில் உள்ள வன்னிய கிராமங்களின் ஊர்த்தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடினர்.

திண்டுக்கல் பகுதியில் சுமார் மூன்று லட்சம் வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் 75% கிறித்தவர்கள். திண்டுக்கல் பகுதி வன்னியர்களில் மிகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்களாக இருந்தாலும், அனைத்து கிறித்தவ வன்னிய கிராம ஊர்த்தலைவர்களும், இந்து வன்னியர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் நாங்கள் வன்னியர்கள் என்கிற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபட்டதனால் அப்பகுதியில் வன்னியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

"கற்றுக்கொண்ட பாடம்"

# கரியாம்பட்டி போராட்டத்தில் "இந்துக்களுக்குள்" வன்னியர் - அருந்ததியினர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என கிறித்தவ வன்னியர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

# திண்டுக்கல் போராட்டத்தில் "கிறித்தவர்களுக்குள்" வன்னியர் - ஆதிதிராவிடர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என இந்துவான மருத்துவர் அய்யா அவர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

மதத்தைத் தாண்டி, வன்னியர்கள் எல்லோரும் உறவினர்களாக ஒன்றுபட்டு நின்றார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை நிரூபித்தார்கள்.

மதவெறி கலவரத்தில் வன்னியர்களா?

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

வன்னியர்கள் எல்லா மாற்றுக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அரசியல் ரீதியில் எதிர்எதிர் இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குள் உறவினர் என்கிற அடிப்படையில் மோதல் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டபோது, பல மாற்றுக்கட்சி வன்னியர்கள் துடிதுடித்தார்கள்.

ஆனால், பாஜக ஆதரவு வன்னியர்கள் மட்டும்தான் 'இந்துக்கள் என்றும் கிறித்தவர்கள் என்றும்' வன்னியர்களுக்குள் பிளவினை ஏற்படுத்த துடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களை அடியாட்களாக மாற்றத் துடிக்கின்றனர். 
முப்பதாண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா போன்று இடதுசாரி நக்சலைட் தீவிரவாதிகளாக வன்னியர்கள் மாறாமல் தடுத்து அவர்களை நல்வழிக்கு திருப்பியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அது போல இப்போது மதவெறி அரசியலுக்காக வன்னியர்களை பலிகொடுக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

‘மதவெறி அரசியலின் மூலமாக பாஜக வளர வேண்டும் என்பதற்காக வன்னியச் சாதியை பலி கொடுக்கத் துடிக்கும்' இந்த மாபெரும் சதியை மருத்துவர் அய்யா அவர்கள் முறியடிப்பார்கள்.

Sunday, April 09, 2017

பங்குனி உத்திரம்: வீர வன்னியர் கதையும் விடுதலைக்கான வழியும்

ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன.

தோற்றத் தொன்மம் (origin myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தொன்மங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். "தொன்மம் போன்ற வெளிப்பாடுகள் ஓர் இனத்தின் கூட்டுமனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு; தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு ஆகும். ஆதலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டுமனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்" - என்கிறது "வரலாற்று மானிடவியல்" எனும் நூல்.

வலிமையான இனக்குழுக்கள் அனைத்தும் தமது தோற்றம் குறித்த பூர்வீக வரலாற்று கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலமும், அதனை அடையாளப் படுத்துவதன் மூலமுமே நீடித்திருக்கின்றன. உலகின் பல நாடுகளும் இப்படித்தான் தம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன.

யூதர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்

இஸ்ரேல் என்கிற நாடு உருவானதற்கும், இன்றும் தொடரும் பாலஸ்தீன சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம் புராணக் கதைதான். எகிப்தில் வாழ்ந்த ஆபிரகாமையும் அவரது சந்ததிகளையும் – “நான் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தை (promised land) காட்டுகிறேன். அதனை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று இறைவன் சொன்னதாக புனித பைபிளும், யூத வேதமும் சொல்கிறது. அவ்வாறு பைபிளில் காட்டப்பட்ட நிலத்தையே யூதர்கள் தங்களுக்கான நாடாக 'இஸ்ரேல்' நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் (promised land)
கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்ரேலை உருவாக்குவது கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றுவது என்று இப்போதும் நம்புகிறார்கள். அதனால்தான் - பாலஸ்தீன சிக்கல் எப்போதும் முடியாத போராக தொடர்கிறது.

ஜப்பானியர்களின் ஜிம்மு

ஜப்பானிய நாடு ஜிம்மு எனும் மன்னன் குறித்த கற்பனை கதையிலிருந்து உருவானதாகும். சூரிய வம்சத்தை சேர்ந்த ஜிம்மு எனும் மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி கொண்டு ஜப்பானிய தேசத்தை நிர்மானித்தான் என்று அவர்கள் நம்புகிறர்கள்.
ஜிம்மு
ஜிம்மு மன்னன் வெற்றியடைந்த நாள் பிப்ரவரி 11 என்று அறிவித்து, அதனை ஜப்பான் உருவான நாள் என்று இப்போதும் அந்த நாடு கொண்டாடுகிறது.

ரோம சாம்ராஜயத்தின் கதை

உலகப் புகழ்பெற்ற ரோம சாம்ராஜ்யம் கற்பனை கதையின் மீது உருவானது. செவ்வாய் கடவுளுக்கு பிறந்த குழந்தைகளான ரோமுலசும் ரெமூசும் ஆற்றங்கரையில் வீசப்பட்டார்கள். அவர்களை ஒரு ஓநாய் காப்பாற்றி வளர்த்தது.
ஓநாய் வளர்க்கும் குழந்தைகள்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு இடையிலான மோதலில் ரெமூசை அவனது சகோதரன் ரோமுலஸ் கொன்றான். பின்னர் ரோமுலஸ் ரோம் நகரை நிர்மானித்தான் என்பது ரோம சாம்ராஜ்யத்தின் வரலாறாகும். இந்த வரலாற்றை ரோம் நகரம் இப்போது அடையாளப்படுத்துகிறது.

ஜெர்மனியை உருவாக்கிய ஹெர்மன்

ஹெர்மன் எனும் போர் வீரன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களை எதிர்த்து போரிட்டு, வெற்றிக்கொண்டு ஜெர்மனியை உருவாக்கினான் என்று ஜெர்மானியர்கள் நம்புகிறார்கள். இந்தக் கதைதான் ஜெர்மானிய தேசியவாதத்தின் அடையாளம் ஆகும். பலநூறு ஆண்டுகள் கழித்து 1800 களில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனானிய தேசியவாததை கட்டமைக்க ஹெர்மன் கதையை பயன்படுத்தினார்கள். பிரான்சுக்கு எதிரான போரில் வெற்றியும் அடைந்தார்கள்.
மாபெரும் ஹெர்மன் சிலை
ஹெர்மன் ஜெர்மனியின் தேசத்தந்தை என்று குறிப்பிட்டு 1885 ஆம் ஆண்டில் 175 அடி உயரத்துக்கு ஒரு மாபெரும் செப்புச்சிலையை நிர்மானித்தார்கள். இந்த சிலையின் கையில் உள்ள வாளில் "ஜெர்மனியின் ஒற்றுமையே எனது வலிமை. எனது வலிமையே ஜெர்மனியின் ஒற்றுமை" என்று தங்கத்தால் எழுதி வைத்துள்ளனர். ஜெர்மனியர்கள் குடிபெயர்ந்த அமெரிக்காவில் மின்னசோட்டா, நியூயார்க், மிசௌரி என பல இடங்களிலும் ஹெர்மனுக்கு சிலை வைத்துள்ளனர்.

சிங்கப்பூரின் சிங்கம்

சிங்கப்பூர் தீவுக்கு வந்த ஸ்ரீதிரிபுவன மன்னன் கடலை கடக்கும் போது புயலில் சிக்கினான். அதிலிருந்து தப்ப தனது கிரீடத்தை கடலில் வீசினான். உடனே புயல் நின்றுவிட்டது. தீவில் இறங்கிய போது விநோதமான விலங்கை கண்டான். அது சிங்கத்தைப் போன்று இருந்ததால் அந்த இடத்துக்கு சிங்கபுறம் என்று பெயரிட்டான் என்கிறது சிங்கப்பூரின் வரலாறு.
சிங்கப்பூர் சிங்கம்
அவ்வாறே, சிங்கப்பூர் மக்களை பாதி சிங்கமும், பாதி மீனும் கலந்த ஒரு விலங்கு புயலில் இருந்து காப்பாற்றியது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கதைகளே அந்த நாட்டின் அடையாள சின்னமும் ஆகும்.

இது போன்று - ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறுகளை முற்றிலும் உண்மை என்று ஏற்கவும் முடியாது. முழுக்க முழுக்க பொய் என்று மறுக்கவும் முடியாது.

கட்டமைக்கப்பட்ட இந்திய நம்பிக்கைகள்

ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்து திராவிடர்களை தோற்கடித்தார்கள் என்கிற கதையின் மீதுதான் திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டது. ராமராஜ்யம் என்கிற ஒன்று இருந்தது என்கிற கதையின் மீதுதான் பாஜகவின் இந்து தேசிய அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிங்கமும் அதனை எதிர்க்கும் புலியும்

சிங்கள இனத்தின் முன்னோடி விஜயன் சிங்க வம்சத்தில் வந்தவன் என்கிறது மகாவம்சக் கதை. அதனால் இலங்கை நாடு சிங்கத்தை சின்னமாகக் கொண்டுள்ளது. இலங்கையை வெற்றிகொண்ட சோழர்கள் புலியை சின்னமாகக் கொண்டனர். சோழர்களின் ஆன்மீக தலைமையிடமான சிதம்பரம் புலிவனம் எனப்பட்டது. அங்கு முதலில் வழிப்பட்டவர் புலிக்கால் முனிவர் ஆகும். சிங்களர்கள் தமிழர்களை கொட்டியா (புலி) என்று அழைத்தனர். என்றாவது ஒருநாள் தமிழ் நாட்டு தமிழர்கள் தங்களை மீண்டும் வெற்றி கொள்வார்கள் என்கிற பயம் எப்போதுமே சிங்களர்களுக்கு இருந்தது.
புலியும் சிங்கமும் 
சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தேசியத்தலைவர் பிரபாகரன் தொடங்கிய இயக்கம் விடுதலைப் புலிகள். அதன் சின்னம் புலிக்கொடி. இப்படியாக, சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாகவும், அதனை எதிர்த்து போரிடும் விடுதலைப் போரின் அடையாளமாகவும் தொன்மக் கதைகளே உள்ளன.

தமிழகத்தின் இனக்குழு தொன்மங்கள்

உணவை படைப்பதற்காக கங்காதேவி மரபாளனை உருவாக்கினாள். பசியை தீர்க்கவல்ல உழவுத் தொழிலை அவனுக்கு இந்திரன் பணித்தான். இந்திரனும் குபேரனும் அவனுக்கு பெண் கொடுத்தனர் என்பது கொங்கு வெள்ளாளர்களின் ஒரு கதை ஆகும்.

தகாத உறவில் பிறந்த கூத்தன் எனும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, ஸ்ரீவைகுண்டத்துக்கு ஓடி அங்கு கோட்டைக் கட்டி வாழ்ந்தவர்கள் கோட்டைப்பிள்ளைமார் என்பது அவர்களது கதை. இதே போன்று, பூம்புகாரில் இருந்த நகரத்தார்கள் சோழ மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, தங்களது எல்லா பெண்களையும் கொலை செய்துவிட்டு - ஆண்கள் மட்டுமே காரைக்குடி பகுதிக்கு தப்பிச்சென்று, அங்கு வேளாளர் பெண்களை திருமணம் செய்துகொண்டனர் என்பது நகரத்தாரின் கதை.

தேவலோகக் கன்னிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத்து வளர்த்தார். அவர்கள் வழி வந்தவர்களே நாடார்கள் என்பது ஒரு கதை ஆகும். மீன் பிடிக்க வலைவீசிய பருவதராஜா, மீனோடு சேர்த்து முனிவரையும் பிடித்துவிட்டார். அதனால் பெற்ற சாபத்தால் - பருவதராஜ குலத்தினர் மீன்பிடி தொழிலை செய்கின்றனர் என்பது அவர்களது நம்பிக்கை.

இது போன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொன்மக் கதைகள் உள்ளன.

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
வன்னியர் சின்னம்
‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)  
வல்லாள மகராஜன், திருவண்ணாமலை
அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது.

‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. அதே போன்று இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.
திரௌபதி, பெங்களூர்
இதே போன்று, வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும்.

வன்னிய ராஜன் கதை

வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு. பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். (நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது).

மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில்  விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா.
'ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்.

சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன.
 வன்னிய நாடகம்
வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளை வன்னியர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வன்னியர் குறித்த வன்னிய புராண தொன்மக் கதையை பரப்பவும், குழந்தைகளுக்கு படிப்பிக்கவும் வேண்டும்.

வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும்.

மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செய்ல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை.

லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான்.

அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளத்தின் ஆணிவேறாக இருப்பது நெருப்பில் தோன்றிய வீர வன்னிய மகாராஜனின் கதை. 

வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளைக் வன்னியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
குறிப்பு: வன்னியர்கள் மட்டுமல்ல. இதே போன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகமும் தது தொன்ம வரலாற்றுக் கதையை போற்ற வேண்டும்.  ஏனெனில், தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆபத்துகளான, ஏக இந்தியக் கொள்கை, மதவெறி தீவிரவாதம், தமிழர் அடையாள அழிப்பு, திராவிடத் திணிப்பு, கம்யூனிச சர்வதேசியம் ஆகிய கேடுகளில் இருந்து - பன்முக அடையாளங்களே தமிழகத்தை காப்பாற்றும். இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கும். தமிழகத்தின் புதிய தேசிய வாதம் என்கிற எழுச்சியின் ஆதாரமாக பன்முக அடையாளங்களே இருக்கும்.