Pages

Friday, December 09, 2011

முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்


கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கல்லணை மூலமாக கடலுக்கு செல்லும் நீரை பாசனத்துக்கு திருப்பினான் கரிகால் சோழன். உலகிலேயே முதன்முதலாக நீரின் பாதையை திருப்பிய நிகழ்வு அதுதான். அதுபோல மேற்கு மலைகளின் வழியே அரபிக்கடலுக்கு சென்ற தண்ணீரை 116 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகப் பகுதிகளுக்கு திருப்பினார் பென்னி குக். இரண்டு அணைகளும் இன்னும் செயல் பாட்டில் உள்ளன.
முல்லைப்பெரியாறு - தண்ணீரை தேக்கி பின்னர் திறந்து விடும் அணை அல்ல. மாறாக, பள்ளத்தில் வீழும் தண்ணீரை தடுத்து நிறுத்தி ஒரு அளவுக்கு மேல் உயரச் செய்து - மேட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லும் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையாகும். எனவே, மற்ற அணைகளைப் போல வண்டல் தேங்கி வயதாகிப்போகும் ஆபத்து இந்த அணைக்கு இல்லை.

176 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்படுகிறதோ அந்த உயரத்துக்கு ஏற்ற அளவு அதிக தண்ணீர், அணையின் பக்கவாட்டில் உள்ள மலைச்சுரங்க வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது. 

1947 இல் இந்திய நாடு அரசியல் சுதந்திரம் அடைந்த போதும், 1956 இல் கேரள மாநிலம் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த போதும் - முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு திருப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றன. இந்த உரிமையை இந்திய அரசோ, கேரள அரசோ தட்டிப்பறிக்க முடியாது.
ஆனால், 1970 களில், அணை பலவீனமாக இருக்கிறது என்கிற கட்டுக்கதையைப் பரப்பி, அதனை பலப்படுத்த வேண்டும் என்று இரண்டு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு - அதற்காக, ஒரு தற்காலிக ஏற்பாடாக அணையின் உயரத்தை 136 அடியாக குறைத்தார்கள். தமிழ்நாடு அரசின் செலவில் அணை பலப்படுத்தப்பட்ட பின்னர் அணையின் உயரத்தை மீண்டும் உயர்த்த, ஏற்கனவே ஒப்புக்கொண்டதற்கு மாறாக கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

கடைசியில் உச்சநீதிமன்றம் அணையை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணை எனப்படும் பகுதியில் நடைபெற வேண்டிய சிறிய மராமத்து பணிகள் முடிந்த பின்னர் 152 அடிக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று 2006 ஆண்டு ஆணயிட்டது.

ஆனால், முதுகெலும்பற்ற தமிழ் நாடு அரசு - உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவில்லை. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இப்போது - புதிதாக அணை (அதாவது, கேரள அரசின் கட்டுப்பாடு), 120 அடிக்கு மட்டுமே தண்ணீர் (அதாவது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை) என்கிறது கேரள அரசு. இத்தனைக்கும் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரால் மின்சாரம் தவிர வேறு பாசன பயன் எதுவும் கேரளாவுக்கு இல்லை.

தமிழ்நாடு அரசின் நேர்மையற்ற கோழைத்தனத்தால் - தமிழ்நாட்டின் பாசன பரப்பு 2,17,000 ஏக்கரிலிருந்து 46,000 ஏக்கராக சுருங்கியதுதான் கிடைத்த பலன்.

முல்லைப்பெரியாறு சிக்கல் குறித்த சந்தேகங்களை போக்கும் காணொளி:
http://vimeo.com/18283950

9 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

nice

Unknown said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

தமிழ்மலர் said...

இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்

http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_09.html?utm_source=BP_recent

அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள்

இருவரும் சொல்வது :-

திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் :( இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய்களின் ஆழத்தை கூட்டி அல்லது புதிய கால்வாய் வெட்டி கூடுதலான தண்ணீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். இதனால் அணையின் பயன்பாடு இல்லாமலும் தமிழகம் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.

திரு. கம்பம் அப்பாசு தமிழக போராட்டக்குழு தலைவர் ( இவர்தான் தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொ£டர்ந்தவர்.)

முல்லைபெரியாறு அணையில் கூடுதாலான தண்ணீரை தேக்குவது கேரள மக்களுக்கு அச்சத்தை தருகிறது. இதற்கு மாற்றாக தாழ்வான கால்வாய்களை அமைத்து தமிழகம் 34 அடியில் இருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இதற்கு கேரள அரசும் கேரள மக்களும் சம்மதம் தருவார்களானால் அதை தமிழக அரசும் தமிழக மக்களும் முழு மனதாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த திட்டம் எங்களுக்கு ழுழு திருப்தி.

இந்த திட்டம் தான் திரு. பென்னிகுயிக் அவர்களினவ் கனவு திட்டம் அப்போது நிதி இல்லாததால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. இதை திரு.பென்னிக்குயிக் தமது டைரி குறிப்புகளில் எழுதியுள்ளார். இந்த டைரி திரு.கம்பம் அப்பாசு அவர்களிடம் உள்ளது.

சக வலைபதிவர்களே இந்த முயற்சிக்கு தமிழக கேரள ஊடகங்கள் ஒத்துழைப்பது இல்லை. தமிழக கேரள அரசியல்வாதிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் பிரச்சனை தீர்வதில் விருப்பம் இல்லை. இந்த இருவரின் பேட்டியை ஒளிபரப்ப எந்த ஊடகமும் தயாரில்லை. எந்த பத்திரிக்கையும் தயாரில்லை. கேரளாவின் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களில் கேரள தமிழக போராட்டக்குழுக்கள் சந்தித்து பேசி சுமூக முடிவை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அருள் said...

தமிழ்மலர் கூறியது...

// தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.//

இந்திய விடுதலையின் போதும் கேரள மாநிலம் உருவான போதும் முல்லைப்பெரியாறு தண்ணீரை தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்று வந்துள்ளனர்.

எனவே, இது அடிப்படை உரிமை.

இந்தியா பாகிஸ்தான் இடையே, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கூட நீர் உரிமைகள் மதிக்கப்படுகின்றன. எனவே, கேரளாவின் "தார்மீக" கருணைக்கான தேவை எதுவும் இல்லை.

அருள் said...

வருகைக்கு நன்றி

@ நண்டு @நொரண்டு -ஈரோடு
@ இராஜராஜேஸ்வரி
@ jaisankar jaganathan
@ திண்டுக்கல் தனபாலன்
@ தமிழ்மலர்
@ T.V.ராதாகிருஷ்ணன்

வலிப்போக்கன் said...

ஆதாரமுள்ளபதிவு

நெல்லி. மூர்த்தி said...

"முல்லைப்பெரியாறு - தண்ணீரை தேக்கி பின்னர் திறந்து விடும் அணை அல்ல. மாறாக, பள்ளத்தில் வீழும் தண்ணீரை தடுத்து நிறுத்தி ஒரு அளவுக்கு மேல் உயரச் செய்து - மேட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லும் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையாகும். எனவே, மற்ற அணைகளைப் போல வண்டல் தேங்கி வயதாகிப்போகும் ஆபத்து இந்த அணைக்கு இல்லை."

மிகச் சரியாக சொன்னீர்கள். உண்மையைக் கூறவேண்டுமெனில் முல்லை பெரியாறு அணைக்குறித்து பொதுமக்களிடமும் சரி (தமிழக கேரள மக்கள்) தீவிர ஆதரவு / எதிர்ப்பு நிலை கொண்டுள்ள மக்களிடமும் சரி உண்மையான தகவல் அறிவின்றி மாநில/இன/அரசியற் கட்சி அடிப்படைகளில் தான் நோக்குகின்றனர்.