Pages

Monday, December 24, 2012

திராவிடர் கழகம் வீரமணி அவர்களின் விதண்டாவாதம்: தந்தை பெரியார் கொள்கைக்கு மருத்துவர் அய்யா எதிரானவரா? 

பெரியார் பிறந்த மண்ணில் காதலுக்கு எதிராகவும் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராகவும் பேசலாமா? அப்படிப்பட்ட நோக்கத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இயக்கம் தொடங்குவதை ஏற்கமுடியுமா? என்றெல்லாம் கேட்டு திடீரென ஒரு மிதமிஞ்சிய முற்போக்கு கூட்டம் தமிழ்நாட்டில் முளைத்துள்ளது.

இந்நிலையில், '21 வயதுக்கு முன் திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை' என்கிற சட்டத்தைக் கோரும் மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையை எதிர்த்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்:
""நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?"" என்று கேட்டுள்ளார் ஆசிரியர் வீரமணி அவர்கள்!  (இங்கே காண்க)

வாக்குரிமையும் வாழ்க்கைத் துணையை முடிவு செய்வதும் ஒன்றா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் ஆசிரியர்  வீரமணி . நாட்டில் சிகரெட் வாங்க ஒரு வயது (18), சாராயம் வாங்க வேறொரு வயது (21) என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வயது வரம்பு உள்ளது.

மருத்துவர் அய்யா அவர்களை எதிர்த்து ஒரு அறிக்கை விடவேண்டும் என்கிற உணர்ச்சி உந்துதலில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் போலும். இதன்மூலம் தன் சார்ந்த அமைப்பின் கருத்தையும் தந்தை பெரியாரின் கருத்தையும் எதிர்த்துள்ளார் ஆசிரியர் வீரமணி!

ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலான பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் 25.11.2012 அன்று  பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட, "மன்றல் 2012 - சாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா" எனும் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

"ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்பும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மனவளர்ச்சி சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர்" (இங்கே காண்க)

 '21 வயதுக்கு முன் திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை' என மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னால் அது ""நியாயந்தானா? சிந்தியுங்கள்!" என்று சொல்லும் ஆசிரியர் வீரமணி, அவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சியில் மட்டும் 'திருமணம் செய்யவே 21 வயதாக வேண்டும்' என்று கூறுவது ஏன்? இந்த இரட்டைவேடம் எதற்காக?!

பெண்களின் திருமண வயது குறித்து தந்தை பெரியாரின் கருத்து:

"சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றால் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு இத்திறமைகள் இல்லாத ஒரு புருஷனைக் கட்டிக்கொள்வதாய் இருந்தால் மாத்திரம் ஆண்களைப் பெண்கள் அடக்கியாள முடியும்; முடியாவிட்டாலும் சம சுதந்திரமாகவாவது இருக்க முடியும். இதில்லாமல் எவ்வளவு சுயமரியாதையும், சமசுதந்திரமும் போதித்தாலும் பெண்களுக்குச் சம சுதந்திரமும், சமகற்பு என்பதும் ஒரு நாளும் முடியக்கூடிய காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். அன்றியும் அப்படிப்பட்ட திறமை அற்றவர்களுக்கு சமசுதந்திரம் அளிப்பதும் ஆபத்தான காரியம்தான்.
ஆதலால், பெண்கள் சுதந்திரம், இந்த மாதிரிக் கல்யாண காலங்களில் பேசிவிடுவதாலோ, "சுத்த" சுயமரியாதை முறையில் திருமணம் செய்து விடுவதாலோ ஏற்பட்டு விடாது.

தனி உரிமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் ஆண்பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல் பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். ஜீவனத்துக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்.

...இதை நான் இங்குள்ள தாய்மார்களுக்காகவே சொல்லுகிறேன். உங்கள் பெண்களை நன்றாகப் படிக்க வையுங்கள்; தொழில் சொல்லிக் கொடுங்கள்; 20 வயது வரை கல்யாணம் செய்யாதீர்கள். அப்போதுதான் பெண்களுக்குச் சுதந்திர உணர்ச்சி உண்டாகும்"

-ஈரோட்டில் 28.2.1939 அன்று நடந்த கா. வேலாம்பால் - சேலம் சி. இரத்தினம் திருமணத்தில் தந்தை பெரியாரின் சொற்பொழிவு, குடி அரசு 1.3.1936

ஆக, "20 வயது வரை கல்யாணம் செய்யாதீர்கள்" என்கிற தந்தை பெரியாரின் கருத்தைதான் மருத்துவர் அய்யா அவர்களும் வலியுறுத்துகிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் காதலையோ கலப்பு மணத்தையோ எதிர்க்கவில்லை

மருத்துவர் அய்யா அவர்களோ அல்லது அனைத்து சமுதாய கூட்டமோ காதலையோ கலப்பு மணத்தையோ எதிர்க்கவில்லை என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறைக்கின்றனர். 2.12.2012 அன்று சென்னையில் நடந்த அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானம் "நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது சரியாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க)
"உரிய வயதை எட்டாத இளம் வயதினர் காதல் நாடக மோசடியால் பாதிக்காமல் தடுக்கும் நோக்கில், பிரேசில், சிங்கப்பூர், ஜப்பானில் உள்ளது போன்று, 21 வயது நிரம்பாதோர் திருமணம் செய்ய பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தைத் தான் 'காதலுக்கு எதிர்ப்பு, கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு' என்று திசைதிருப்புகின்றனர் மிதமிஞ்சிய முற்போக்கு கூட்டத்தினர்.

1 comment:

Aruna said...

ஆ சிரியர் வீரமணி


ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், அவர் சமூகநீதி காத்த வீராங்கனை. கருணாநிதி ஆட்சியில் இருந்தால் இவர் கலியுகக்கர்ணன். வீரமணியிடம் சிக்கித்தவிக்கிறது திராவிடர் கழகம்.