Pages

Saturday, March 15, 2014

இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

தற்போது ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைப் பேரவையில், ஐநாவின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பான பசுமைத் தாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவை ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கை: "இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை என்னால் நிறுவப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இலங்கைப் போர் முடிவடைந்த நாளிலிருந்தே இலங்கை மீது போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் பசுமைத்தாயகம் வலியுறுத்தி வருகிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த 12 ஆவதுக் கூட்டத்தில் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற 24 ஆவதுக் கூட்டம் வரையிலான 13 கூட்டங்களிலும், இடையில் நடந்த பல சிறப்புக் கூட்டங்களிலும் இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என பசுமைத்தாயகம் குரல் கொடுத்தது.

மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டம் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதை மனித உரிமைப் பேரவையின்  அனைத்து உறுப்பினர்களுக்கும் கடந்த 27 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் போரின் போதும், போருக்குப் பிறகும் சிங்களப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளையும், அட்டூழியங்களையும் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள பசுமைத்தாயகம், ‘‘இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுபேற்றல் மற்றும் சமரசம் செய்தல் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு மதித்து செயல்படுத்தவில்லை. இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும், அதிகார வர்க்கம் மற்றும் இராணுவ அதிகாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய அம்சங்கள் இல்லாதது குறித்தும் கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க நம்பகமான  விசாரணை அமைப்பை இலங்கை ஏற்படுத்தும் என்பது சந்தேகம் தான். எனவே இலங்கையின் இப்போதைய மற்றும் கடந்தகால போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவை குறித்து விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் ஆணையிட  வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலககெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைப் பிரச்சினையின் பின்னணி மற்றும் தீவிரத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் புரிந்து கொள்வதற்கு பசுமைத்தாயகம் அமைப்பின் அறிக்கை உதவும் என்று நம்புகிறேன்.

எனினும், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளிலாவது நீதி கிடைக்க வேண்டுமென்றால், இலங்கை மீதான இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாற்றுகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு உடனடியாக ஆணையிடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை செய்து முடிக்க வேண்டிய கடமை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது.

எனவே, ஈழத்தமிழருக்கு அமெரிக்காவோ அல்லது வேறு ஏதேனும் நாடோ நீதி பெற்றுத்தரும் என்று எதிர்பார்ப்பதைவிட, இந்திய அரசே அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும். எனவே, இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு  எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்பதை தனித் தீர்மானமாகவோ அல்லது ஏற்கனவே அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் திருத்தமாகவோ கொண்டுவந்து நிறைவேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ள பசுமைத் தாயகத்தின் அறிக்கை கீழே:

No comments: