Pages

Monday, December 28, 2015

பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ: ஊடகங்களுக்குத் தேவை ஆத்மபரிசோதனை!

ஆடு வளர்ப்பவனை நம்பாது.... கசாப்புக்கடைக் காரணத்தைத் தான் நம்பும் என்பதற்கு சென்னையில் நேற்று புதிய உதாரணம் படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சித் (கட்சி பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில் தான்) தலைவரான நடிகர் விஜயகாந்த் செய்தியாளர்கள் மீது ‘த்த்தூதூ’ என காறித் துப்பியிருக்கிறார்.  ("பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ" - இது விஜயகாந்த் வாசகம்)
ஓர் அரசியல் கட்சித் தலைவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இனி இப்படி ஒரு அசிங்கம் அரங்கேறக் கூடாது என்று விரும்புவோம்.

விதைத்ததை அறுவடை செய்

விஜயகாந்தின் செயல் கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த அவமதிப்புக்கு ஊடகவியலாளர்கள் தகுதியானவர்கள் தான். அவர்கள் விதைத்ததை அவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். ஒரு ஜீரோவை ஹீரோவாக்க பாடுபட்ட பத்திரிகையாளர்கள் இப்போது காமெடியன்களை விட கீழானவர்களாக மாறியிருக்கிறார்கள்.

விஜயகாந்தின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து விடும். சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ‘‘ஏண்டா... உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் தருகிறது? போடா நாயி’’ என்று திட்டியது, தில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது, ‘‘அப்படியே... மைக்கை தூக்கி அடிச்சிடுவேன்’’ என்று மிரட்டியது, சென்னையில் கட்சி அலுவலகத்தில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைப் பார்த்து,‘‘ உங்களை நாங்களாய்யா கூப்பிட்டோம்....கூப்பிடாமலேயே ஏன்ய்யா இங்க வரீங்க?’’ என்று விரட்டியது என பத்திரிகையாளர்களை விஜயகாந்த் இழிவுபடுத்திய நிகழ்வுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

அறிவிருக்கா? என்று கேட்டதற்காக இளையராஜாவை கடுமையாக விமர்சித்த ஊடகக் காரர்களும், கருத்துரிமை போராளிகளும் விஜயகாந்தின் இந்த செயல்களுக்காக அவரை கண்டித்ததே இல்லை.

தன்மானம் பற்றி வாய்கிழிய பேசும் பத்திரிகையாளர்களுக்கு, உண்மையாகவே அப்படி ஒன்று இருந்திருந்தால் விஜயகாந்த் பற்றிய செய்திகளையும், அவரது நிகழ்வுகளையும் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட அப்படி செய்யவில்லை... செய்யவும் மாட்டார்கள். காரணம் பத்திரிகையாளர்கள் சிக்கியுள்ள டிசைன் அப்படி.

விஜயகாந்தை பாதுகாக்கும் ஊடகங்கள்

ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு அருகில் அதைவிட பெரிய கோட்டை கிழிக்க வேண்டும். அதுவே, ஒரு சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற வேண்டுமானால் அதற்கு அருகில் அதைவிட சிறிய கோட்டை போட வேண்டும். விஜயகாந்த் என்ற சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற நடக்கும் டிசைனில் ஊடகங்களும் ஓர் அங்கம் என்பதால் தான் அவருக்கு எதிராக ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

விஜயகாந்த் காறி துப்பிய பிறகும் கூட அவரிடம் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘‘இந்த கேள்வியையெல்லாம் ஜெயலலிதாவிடம் கேட்க உங்களுக்கு துப்பில்லையா?’’ என விஜயகாந்த் கேட்டார். இந்த கேள்வி சரியானது தான். ஆனால், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசின் சலுகைகள் அனைத்தையும் அனுபவிக்கும் விஜயகாந்த் ஆட்சியின் அவலங்களைப் பற்றி ஒருமுறையாவது சட்டப்பேரவையில் பேசியிருப்பாரா? இதைப் பற்றி விஜயகாந்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? அதை செய்தார்களா? செய்யவில்லையே?

2014 நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கட்டும், 2016 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும், எந்த கொள்கையுமே இல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தரப்புடன் கூட்டணி பேசி டிமாண்டை அதிகரித்துக் கொள்ளும் விஜயகாந்தின் வணிக நோக்கத்தை ஏதாவது ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருக்குமா?  அம்பலப்படுத்தவில்லையே?
மாறாக, கொள்கைக் கோமாளியை கிங் மேக்கராகத் தானே ஊடகங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடின. தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் தே.மு.தி.க. கட்சியின் நிலைப்பாடு என்னவென்று விஜயகாந்துக்கு தெரியுமா? அதைப்பற்றி எந்த ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கின்றனவா? எழுப்பவில்லையே?

காரணம் என்ன? 
அது தான் மில்லியன் டாலர் கேள்வி

ஒரு கடையில் இரு பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டுமே அழுகிப் போன பழங்கள். அதன் அருகில் ஒரு நல்ல பழத்தை விற்பனைக்கு வைத்தால் அந்த பழம் தான் விற்பனையாகும். ஆனால், வியாபாரியின் நோக்கம் நல்ல பழத்தை விற்பதல்ல... அழுகிப் போன பழங்களை விற்பது தான் நோக்கம். அப்படியானால் அழுகிய பழங்களை விற்க என்ன செய்வது?  வேறென்ன... மீண்டும் சிறிய கோடு... பெரிய கோடு தத்துவம் தான்.

அழுகிப் போன பழங்களை விட மோசமான பழத்தை விற்பனைக்கு வைத்தால் அழுகிய பழமே பரவாயில்லை என்று வாங்கிச் செல்வார்கள் அல்லவா? அதனால் தான் இரு திராவிடப் பழங்களை நல்லவையாக்க இன்னொரு தேசிய திராவிடப் பழத்தை முன்வைக்கிறார்கள் ஊடக நிறுவன வியாபாரிகள். நல்ல பழம் எதுவும்  வாடிக்கையாளர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தாம் ‘மாம்பழத்தை’ மறைத்து வைக்கிறார்கள்.

விஜயகாந்த் விஷயத்தில் ஊடகங்கள் தங்களின் செயலை ஆத்மபரிசோதனை செய்து கொள்ள இதுவே சரியான தருணம். ஆனால், ஊடகங்கள் அதற்கு தயாராக இருக்காது. இதற்கு முன் விஜயகாந்தின் அவமதிப்புகள் எப்படி ஊடகங்களை பாதிக்கவில்லையோ, அதேபோல் இந்த காறித் துப்பலும் பாதிக்காது. இதற்குப் பிறகும்  விஜயகாந்தை  ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவே செய்யும். விஜயகாந்தும் ஊடகங்களை காறித் துப்பிக் கொண்டு தான் இருப்பார்.

துப்புங்க கேப்டன் துப்புங்க.... ரொம்ப நல்லாவே காறித் துப்புங்க!

No comments: