Pages

Saturday, April 02, 2016

தேர்தல் 2016: தமிழக அரசியலின் உண்மை நிலை என்ன?

இந்திய தேர்தல் முறையே ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். உலகில் இரண்டுவிதமான ஜனநாயக தேர்தல்கள்தான் நேர்மையானவை என்று கருதப்படுகின்றன. 1. கருத்தொற்றுமை ஜனநாயகம் (Consensus democracy), 2. பெரும்பான்மை ஜனநாயகம் (Majoritarian Democracy). இவை இரண்டுமே இந்தியாவில் இல்லை. தமிழ்நாட்டிலும் இல்லை. இங்கு இருப்பது ஒரு சிறுபான்மை ஆதிக்க ஜனநாயக முறை ஆகும். இதில் பெரும்பான்மையினரின் விருப்பங்கள் மதிக்கப்படுவது இல்லை.
மிகச்சிறந்த தேர்தல் முறை என்பது எல்லா வாக்காளர்களின் வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் விகிதாச்சார தேர்தல் முறை (Proportional representation) ஆகும். இதுவே கருத்தொற்றுமை ஜனநாயகம் (Consensus democracy) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக பெரும்பான்மை ஜனநாயகம் (Majoritarian Democracy) ஏற்கப்பட்ட முறை ஆகும். பெரும்பான்மை முறையில் 50% +1 வாக்கு அல்லது அதற்கு மேலாக ஆதரவு பெற்றவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆகும்.

ஆனால், இந்தியாவில் 'முதலில் வந்தவரே வெற்றி பெற்றவர்' (First Past the Post - FPTP) என்கிற மிக மோசமான தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நடக்கும் பெரும்பாலான தேர்தல்களில் 50% அளவுக்கு கீழான வாக்குகளை பெற்ற கட்சிகளே ஆட்சியமைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு சுமார் 31% வாக்குகளை மட்டுமே பெற்றது. மீதமுள்ள 69% வாக்காளர்கள் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

தமிழக தேர்தலில் நடப்பது என்ன?

இந்திய தேர்தலே ஜனநாயகத்துக்கு எதிரானதாக இருக்கும் நிலையில், எதிர்வரும் மே மாதம் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் - ஒரு நயவஞ்சக தேர்தல் பாதையில் பயணிக்கிறது. ஊடகங்கள் கட்டமைக்கும் பார்வையில் இந்த தேர்தல் நடைபெறவில்லை. உண்மை அதற்கும் அப்பால் இருக்கிறது.

நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராக மாறியுள்ள இந்த தேர்தலில் உண்மையை விட, பொய்யே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தப் போரில், நியாயம் வெல்ல வேண்டும் என்று விரும்பினால் - முதலில் தேர்தல் களத்தில் நடப்பது என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இக்கட்டுரை ஆகும்:

1. தேர்தல் களத்தில் நிற்கும் கட்சிகள்/அணிகள் எத்தனை?

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் கணக்குகளின் படி, 50 கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்தன. இந்த முறையும் இதற்கு இணையான எண்ணிக்கையில் கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கும். ஆனால், இந்த 50 கட்சிகளுக்கும் இடையே போட்டி என்று கருத முடியாது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டிடும் கட்சிகள் அல்லது அணிகளின் எண்ணிக்கையை வைத்தே போட்டியை கணிக்க முடியும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் அல்லது அணிகள் என்று பார்க்கும் போது - தற்போது

1. அதிமுக, 
2. திமுக, 
3. பாமக, 
4. தேமுதிக, 
5. பாஜக, 
6, நாம் தமிழர் 

- ஆகிய ஆறு முனைகளில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமது வலிமையை மெய்ப்பித்துள்ள கட்சிகளையும், இதுவரை தேர்தல் அரசியலில் வெற்றி பெறாத அல்லது கணிசமான வாக்குகளைப் பெறாத கட்சிகளையும் சமமாக பார்க்க முடியாது. அந்த வகையில் 1. அதிமுக, 2. திமுக, 3. பாமக, 4. தேமுதிக, 5. பாஜக ஆகிய கட்சிகளுடன் சீமான் அவர்களின் 'நாம் தமிழர்' கட்சியை ஒப்பிட முடியாது.

இதனை 'நாம் தமிழர்' கட்சியை குறைத்து மதிப்பிடுவதாகக் கருத முடியாது. எந்த ஒரு போட்டியிலும் முதலில் தகுதிச்சுற்று என்றும், பின்னர் பிரதானப் போட்டி என்றும் இருப்பது போல - தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யாத வரை, நாம் தமிழர் கட்சியை ஒரு பிரதானக் கட்சியாகக் கருதக் கூடாது.

ஆக மொத்தத்தில், 

1. அதிமுக, 
2. திமுக, 
3. பாமக, 
4. தேமுதிக, 
5. பாஜக 

- ஆகிய 5 கட்சிகள் அல்லது அணிகள்தான் 2016 தமிழக தேர்தல் களத்தில் உள்ளன.

2. தேர்தல் களத்தில் நிற்கும் முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

தற்போதைய நிலவரப்படி, 

1. ஜெயலலிதா, 
2. கருணாநிதி, 
3. அன்புமணி, 
4. விஜயகாந்த் 

- ஆகிய நான்கு பேரும், பாஜக சார்பில் 'யாரோ ஒருவர்' என்பதாக ஐந்து நபர்கள் இருக்கலாம். ஒருவேளை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் இல்லை எனில் - இது நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் இடையேயான போட்டியாக இருக்கும்.

ஆக, ஐந்து முனைப்போட்டி அல்லது நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் இடையே போட்டி என்பதாக இருக்கும்.

3. ஐந்து முனைப்போட்டி என்பது உண்மையா?

நிச்சயமாக இல்லை. இது ஒரு காட்சிப் பிழை ஆகும். 2016 தமிழக தேர்தலில் ஐந்து முனைப்போட்டி நடப்பது போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயற்சிக்கின்றன. ஆனால், உண்மை அதுவல்ல. 

இதற்கு முன்பெல்லாம் வாக்குச்சாவடி அளவில் பினாமி முகவர்களை இறக்குவதற்காக பினாமி வேட்பாளர்களை நியமிப்பார்கள். அது போல, தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக சில பினாமி அணிகளை ஒரு கட்சி களத்தில் இறக்கி விட்டிருக்கிறது. இந்த பினாமி அணிகள் திசை திருப்புவதற்காக போடும் அட்டைக் கத்தி சண்டையை, உண்மை சண்டைப் போல ஊடகங்கள் இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்கின்றன. இதுவே உண்மை.

4. பினாமி அணிகள் எவை?

தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் 'விஜயகாந்த அணி' மற்றும் 'பாஜக அணி' ஆகிய இரண்டு அணிகளும், ஆளும் அதிமுகவின் B Team 1 மற்றும் B Team 2 என்று அழைக்கப்படுகின்றன. சில தனிப்பட்ட நலன்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் அடிப்படையில் இந்த பினாமி அணிகள் செயல்படுவதாக கருதப்படுகிறது.

5. அதிமுக 'B டீம் 1': விஜயகாந்த் அணியின் நோக்கம் என்ன?

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால், விஜயகாந்த் திமுகவின் பக்கம் சேர்ந்துவிடக் கூடாது என்பது அதிமுக நலன் விரும்பிகளின் நோக்கம் என்று தமிழக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. எனவே, பாஜக மற்றும் முன்னாள் மக்கள் நலக் கூட்டணியின் மூலமாக விஜயகாந்த்துடன் பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகளில் முன் வைக்கப்பட்ட 'பேரங்கள்' குறித்து ஊடகங்களில் பரவலாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன.
பொதுவாக, கூட்டணி பேரம் என்பது கொள்கை அடிப்படையில் நடப்பது இல்லை. யார் பக்கம் கூட்டணி சேர்ந்தால் அதிக 'லாபம்' கிடைக்குமோ - அந்தப் பக்கத்தில் சேர வேண்டும் என்கிற வியாபார நோக்கமே சில கட்சிகளிடம் இருக்கிறது.

எனவே, திமுகவுடன் கூட்டணி சேர்வதால் கிடைக்கும் 'லாபத்தை' விட, முன்னாள் மநகூவுடன் கூட்டணி சேர்ந்து 'விஜயகாந்த் அணியாக' செயல்படுவதால் - விஜயகாந்திற்கும், அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கும் 'அதிக லாபம்' என்பதால்தான் விஜயகாந்த் அணி உருவானது என்பது தமிழக அரசியலில் பலரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.

இந்த பேரம் குறித்து, வைகோவின் விசுவாசியாக இருந்த ஆனந்தவிகடன் திருமாவேலன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 

"விஜயகாந்தை தர்மனாகவும், வைகோவை அர்ஜுனனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், தொல். திருமாவளவனை பீமனாகவும் தன்னை சகாதேவனாகவும் முகம்காட்டுகிறார் முத்தரசன்." 

"மக்களுக்குத் தெரியாதது ஒன்றுதான்... உங்களை இயக்கும் கிருஷ்ணன் யார்?"

- ஆனந்த விகடனின் இந்தக் கேள்வியிலும் பதிலிலும் - விஜயகாந்த் அணி என்பது அதிமுகவின் பி டீம் 1 என்பது தெளிவாகிறது.

எனவே, "விஜயகாந்த் அணியின் நோக்கம் என்ன?" என்றால், அதற்கான பதில் "அதிமுகவை வெற்றிபெற வைப்பது" என்பதுதான்.

6. அதிமுக 'B டீம் 2': பாஜக அணியின் நோக்கம் என்ன?

'அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு' என்பார்கள். அதுபோல 'பாஜகவும் அதிமுகவும் ஒன்னு அதை அறியாத தமிழக மக்கள் வாயில் மண்ணு' என்பதுதான் உண்மை.

கொள்கை, கோட்பாடுகள் அடிப்படையில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பாபர் மசூதியை பாஜக இடித்தபோது, அதற்கு தமிழ்நாட்டிலிருந்து கரசேவகர்களை அனுப்பிய ஒரே கட்சி அதிமுகதான்.

இன்றைக்கு, மத்திய அரசினை நடத்தும் மோடி அரசுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அதிமுக தான். குறிப்பாக, நாடாளுமன்ற மேலவையில் அதிமுக ஆதரவு இல்லாமல், மோடியால் எதுவும் செய்ய முடியாது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் நடக்கவுள்ள 'நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில்' அதிமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றுவது மோடி அரசுக்கு முக்கியமானதாகும்.   தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றால், அவர்களின் நாடாளுமன்ற மேலவை இடங்களும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

எனவே, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்யும் பாரதீய ஜனதா கட்சி. தமிழக சட்டமன்றத்தில் அதிமுக முதன்மை இடத்தைப் பிடித்தால், அதன் மூலம் தேசிய அளவில் பலனடையப் போவது பாரதீய ஜனதாக் கட்சி! இரண்டு கட்சிகளும் Made for each other.

"வழக்கும் தீர்ப்பும்!"

இதற்கிடையே, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 'கணக்குப்புகழ்' குமாரசாமி தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் - தேர்தல் நெருக்கத்தில் 'ஜெயலலிதா குற்றமற்றவர்' என்று அறிவித்து, அவரை விடுவிக்கும் வகையிலான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன. 

இவ்வாறு 'ஜெயலலிதா நிரபராதி' என அறிவித்து தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வந்தால் - அதன் விளைவு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோரும் அறிந்ததே!

(கிரானைட் கொள்ளை வழக்கில் மதுரை மாஜிஸ்ட்ரேட் ஒருவர், 'குற்றம் சாட்டப்பட்ட பி.ஆர். பழனிச்சாமி குற்றவாளி அல்ல, ர் நிரபராதி. குற்றம் சுமத்திய கலக்டர் தான் குற்றவாளி' என்று தீர்ப்பு அளித்ததை மறந்துவிடாதீர். இந்திய நீதித்துறையில் எது வேண்டுமானாலும் நடக்கும்!)

மொத்தத்தில் - "பாஜக அணியின் நோக்கம் என்ன?" என்றால், அதற்கான பதிலும் "அதிமுகவை வெற்றிபெற வைப்பது" என்பதுதான்.

பாஜக நிலைப்பாடு குறித்த சில கேள்விகள்?

பாஜகவின் நோக்கம் அதிமுகவை வெற்றி பெற வைப்பது தான் என்றால், அப்புறம் எதற்கு அவர்கள் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். உண்மையில் இது ஒரு நுட்பமான நாடகம் ஆகும். சுமார் 15 நாட்களாகத்தான் பாஜவினர் ஒட்டுமொத்தமாக அதிமுகவை எதிர்க்கின்றனர். இதன்மூலம் - திமுக, பாமக போன்று நாங்களும் அதிமுக எதிர்ப்புக் கட்சிதான் என்று காட்டி, அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகளை பிரிப்பதே பாஜகவின் உண்மையான விருப்பம்.

இதற்குப் பதில் 'அதிமுகவுடன் பாஜக கூட்டு சேரலாமே' என்கிற கேள்வியும் எழக்கூடும். பாஜக அதிமுக கூட்டணி அமைத்தால் அதனால் அதிமுகவிற்கு இழப்புதான் அதிகம். அதிமுகவிற்கு கிடைக்கக் கூடிய சிறுபான்மை வாக்குகளை விட, பாஜகவால் கிடைக்கக் கூடிய வாக்குகள் மிக மிகக் குறைவாகும். அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தால், ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்குகளும் திமுகவுக்கு போகும் வாய்ப்பு உண்டு. எனவே, எதிரிபோல நடிக்கும் நண்பனாக பாஜக செயல்படுகிறது.

(குறிப்பு: பாஜகவின் நோக்கத்திற்கும் ஜெயலலிதா வழக்கு குறித்தும் நாம் குறிப்பிட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல).

7. தமிழக தேர்தலில் நடக்கும் உண்மையான போட்டி என்ன?

2016 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் உண்மையாக மூன்று அணிகள் மட்டுமே உள்ளன. இங்கு ஐந்து முனைப் போட்டி எதுவும் இல்லை. நடப்பது மூன்று முனைப் போட்டி மட்டுமே.

1. அதிமுக அணி

அதிமுக அணி என்பது ஒற்றைக் கூட்டணி அல்ல. அதில் மூன்று கூட்டணிகள் உள்ளன. அதிமுக கூட்டணி, விஜயகாந்த் அணி, பாஜக கூட்டணி ஆகிய இந்த மூன்றுமே - ஜெயலலிதா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பாடுபடும் கூட்டணிகள் தான்.

இந்த அணிகளுக்குள் உள்ள வேறுபாடு என்னவென்றால், அதிமுக அணி ஒரு பக்கம் விளையாடும் போது - விஜயகாந்த் அணி, பாஜக கூட்டணி இரண்டும் எதிர்ப்பக்கத்தில் நின்று, சேம் சைட் கோல் (same side goal) போடுகின்றன.
சாராய விற்பனையை அதிகமாக்க வேண்டும். ஊழலை இன்னும் அதிகமாக்க வேண்டும். நிர்வாக சீர்க்கேட்டால் நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டும் என்பதே இந்த அணியின் நோக்கம்.

2. திமுக அணி

திமுக அணி என்பது தமிழின அழிப்பு அணி. ஈழத்தமிழர்களை கொன்றொழித்த காங்கிரசும், விடுதலைப் புலிகள் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் என்று சொன்ன சிவகாமியும் அங்கம் வகிக்கும் கொடூரமான கும்பல் அது.
ஊழலை இன்னும் அதிகமாக்க வேண்டும். நிர்வாக சீர்க்கேட்டால் நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டும். மிக முக்கியமாக கருணாநிதியின் குடும்பத்திற்கு தமிழ்நாட்டை பங்குபோட்டு கொடுக்க வேண்டும் என்பதே இந்த அணியின் நோக்கம்.

3. பாட்டாளி மக்கள் கட்சி

அதிமுக அணி, திமுக அணி ஆகிய இரண்டு ஊழல் மற்றும் சர்வாதிகார அணிகளுக்கு ஒரே மாற்றாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி அவர்களும் மட்டுமே.
மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு மற்றும் சிறந்த நிர்வாகம், கல்வி மற்றும் மருத்துவத்தை மக்கள் உரிமையாக்குதல், வீட்டுக்கு ஒரு வேலை, வேளாண்மையை முதலிடத்துக்கு கொண்டு வருதல் என தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருக்கும் ஒரே முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி அவர்கள் மட்டுமே.

என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலும் - திமுக அணி, அதிமுக அணி - என பிரிந்து கிடக்கின்றன. அந்த அணிகளுக்கு கீழ்ப்படிந்து, சேவகம் செய்கின்றன. உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை விட அவரவர் எஜமானர்களுக்கு, அதாவது திமுக அல்லது அதிமுகவுக்கு ஆதரவாக செய்திகளை இட்டுக்கட்டுவதே பத்திரிகைகளின் தொழிலாக உள்ளது.
இந்தச் சூழலில், திமுக அணி, அதிமுக அணி ஆகிய தீய சக்திகளுக்கு ஒரே மாற்று பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி அவர்களும்தான் என்பதை - தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீது அக்கறைக்கொண்டுள்ள ஒவ்வொரு சாமானிய மனிதரும் சக தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

நீதியை நம்பும் ஒவ்வொருவரும், சக மனிதன் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் - மருத்துவர் அன்புமணிக்கான தூதர்களாக மாறி, உண்மையை எல்லோரிடமும் கொண்டு செல்வதே இன்றுள்ள உடனடித் தேவை.

உண்மையான போட்டி என்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்து சீரழித்து வரும் அதிமுக - திமுக சர்வாதிகார கும்பலுக்கும்: மாற்று வளர்ச்சி அரசியலை முன்வைக்கும் மருத்துவர் அன்புமணி அவர்களுக்கும் இடையேதான்.

"அசதோ மா சத் கமய 
தமஸோ மா ஜ்யோதிர் கமய 
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய"

- என்பது உபநிஷதம் காட்டும் வழியாகும். இதன் பொருள் -

"பொய்மையிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்வாய்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் 
அழிவில் இருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்வாய்"

தமிழ்நாட்டை பொய்யிலிருந்து உண்மைக்கு, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, அழிவிலிருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனில், அதிமுக - திமுக கும்பலை தோற்கடித்து, மருத்துவர் அன்புமணி வெற்றிபெற நாட்டு நலன் விரும்பும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இதுவே தக்க தருணம். செய்வோமா...?

5 comments:

karikalan said...

மிக சிறந்த,உண்மை பொதிந்துள்ள கட்டுரை..இந்த கட்டுரையை முதலில் நமக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள் படிக்க வேண்டும்...

Unknown said...

தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஒரே மாமனிதர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே

Unknown said...

நுட்பமான கட்டுரை , எளிய மக்கள் அறியாத முடியாத வன்மனா அரசியலை மேற்க்கொள்ளும் அரசியல் கட்சிகளை எப்போதுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள் 😑

Unknown said...

பாராட்டினால் ஒப்புதல் கொடுக்கப்படும்

Unknown said...

i think this share to public in notice . because people want to know the actual contention in the election