Pages

Friday, January 06, 2017

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு நாடார் சமூகத்தின் பாராட்டு விழா: ஒரு மாபெரும் தொடக்கம்

மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்து போராடி வருகிறார்கள். அந்த தியாகப் பணிக்காக முதல் முறையாக நாடார் சமூகம் தனது பாராட்டினை தெரிவித்து விழா நடத்தியிருக்கிறது.

இந்த நிகழ்வுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். (அதே நேரத்தில் இதுபோன்ற பாராட்டுகள் எதையும் மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்பார்க்காமல், எப்போதும் 'என்கடன் பணி செய்து கிடப்பதே' என்பதில் உறுதியாக நின்று போராடி வருகிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்).

காலம் தோரும் மாறும் போராட்டங்கள்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான மோதல் போக்கு சமூகத்தில் நிலவுகின்றது.

'இடங்கை - வலங்கை மோதல்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 'இடங்கை - வலங்கை சாதி மோதல்' என்பதுதான் தமிழ் மண்ணில் பெரும் போராட்டமாக இருந்தது. எந்த சாதிக்கு என்ன உரிமை, விழாக்களில் பயன்படுத்தும் கொடிகள், சின்னங்கள் என்ன, என்பதெற்கெல்லாம் பெரும் கலவரம் நடந்தது. இன்றைய காலத்தில் "இடங்கை - வலங்கை" பிரச்சினையை கண்டுகொள்ள எவரும் இல்லை.

சூத்திரர் பட்டம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, யாரெல்லாம் சூத்திரர் இல்லை. யாரெல்லாம் தீண்டத்தகாதோர் இல்லை என்று மெய்ப்பிப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. தனித்தமிழ் இயக்கம் மற்றும் சமய எழுச்சி இயக்கங்கள் என்பதெல்லாம் கூட சூத்திர பட்டத்தை துறப்பதற்கான வழிகளில் ஒன்றாக இருந்தன. இன்று அந்த போராட்டங்கள் இல்லை.

சத்திரியர் பட்டம்

கடந்த நூற்றாண்டு வரை சத்திரியர் யார் என்கிற போராட்டங்கள் நடந்தன. உண்மையில் சௌந்திரபாண்டியன் நாடார் அவர்கள் சத்திரிய போராட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக மாறியதும் கூட நாடார் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற போராட்ட காலங்கள் கடந்த நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டன. இடங்கை - வலங்கை போராட்டம், சூத்தர விடுதலை, சத்திரியப் போராட்டம் என்பதெல்லாம் இப்போது வரலாற்று தழும்புகள் மட்டுமே.

1950 ஆம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் ஏற்கபட்ட பின்னர் 'உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி' என்கிற பாகுபாடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.

இடங்கை - வலங்கை போராட்டம், சத்திரியப் பட்டம் என்பதற்கெல்லாம் இப்போதும் யாராவது குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் - அவர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை. கற்பனையான கடந்த காலத்தில் உழல்கிறார்கள் என்பதே உண்மை ஆகும்

மருத்துவர் அய்யாவின் சமூகநீதி இயக்கம்

சாதி ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான கருத்துகளை முற்றிலுமாக ஒழித்து, ஒரு நாகரீகமான சமூகத்தை படைப்பதற்கான சமுதாயப் பணியை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார்கள்.

சாதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டை முதல் கோரிக்கையாக வைத்து, ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். 'ஒவ்வொரு சமூகமும் முன்னேறினால் நாடு தானாகவே முன்னேறியதாகிவிடும்' என தந்தை பெரியார் காட்டிய வழியில் மருத்துவர் அய்யா அவர்களும் போராட்டங்களை முன்வைத்தார்கள்.

தமிழக வரலாற்றின் மாபெரும் சாதனையான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீடு எனும் சாதனையை மருத்தவர் அய்யா அவர்கள் படைத்தார்கள். இது 60 ஆண்டுகள் தாமதத்துக்கு பின்னர் கிடைத்த நீதி ஆகும்.

அனைத்து சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் ஏராளமான சமூக ஒற்றுமை மாநாடுகளை நடத்தினார்கள். தேவேந்திரகுல சமூகத்தினருடன் சேர்ந்து ஒருதாய் மக்கள் மாநாட்டை நடத்தினார்கள். அருந்ததியர், முத்தரையர், இஸ்லாமியர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்காகவும் மாநாடுகளையும், போராடங்களையும் மருத்துவர் அய்யா நடத்தினார்கள்.

எல்லா சாதிகளும் சமம். ஒவ்வொரு சாதிக்கும் அதன் விகிதாச்சார எண்ணிக்கைக்கு ஏற்ப 'வகுப்புவாரி உரிமை' என்கிற ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி பாடுபடும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு - இபோதாவது - நாடார் சமூகம் பாராட்டுவிழா நடத்தியிருப்பது ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு ஆகும்.

உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்

வாழுமிடம், சாதி, பிறப்பு, நம்பிக்கை, மொழி என எந்த அடிப்படையிலும் எந்த ஒரு மக்கள் குழுவும் ஒதுக்கப்படாத, புறக்கணிக்கப்படாத (Non-discrimination) ஒரு உன்னதமான தமிழ்நாட்டை மருத்துவர் அய்யா அவர்கள் உருவாக்கி காட்டுவார்கள். அதற்காக நாம் பாடுபடுவோம்.

'ஒருவரும் பின்தங்கவிடப்படாத வளர்ச்சி' (Leaving no one behind) எனும் ஐநா அவையின் உலகளாவிய வளர்ச்சி இலக்கினை (UN Sustainable Development Goals 2030) மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் சாத்தியமாக்குவோம்.

No comments: