Pages

Friday, November 05, 2010

தீபாவளிப் பண்டிகையின் பலன்கள் - தந்தை பெரியார்

""தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது.  அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.  தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.  அதாவது, விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றாராம்.  இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள்! விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்!  இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பதை நம் மக்கள் நினைப்பதே இல்லை.  அப் பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான்.  தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன்வாங்கியாவது - கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது. 

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போதலும், பட்டாசு சுடும்போது திடீரென வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம்வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவோ பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம்கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனைப் பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள்!

இவைகளை எந்த இந்திய பொருளாதார - தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்""

தந்தை பெரியார், "குடிஅரசு' 20.10.1929

No comments: