Pages

Friday, February 25, 2011

கூட்டணி தாவல்: கட்சிகளை குறைசொல்வது நியாயமா?


கூட்டணி மாற்றத்திற்கு அரசியல் கட்சிகளைக் குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது. இது நமது தேர்தல் முறையில் உள்ள குறைபாடு.

(எனது முந்தைய பதிவை பார்க்கவும்: 1. விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்! 2. தேர்தல் விபச்சாரம்: மக்களவை தேர்தலிலும்தான்!)


இந்திய தேர்தல் முறை என்பதே, சனநாயகத்திற்கு எதிரான தேர்தல் முறையாகும். இந்த தேர்தல் முறைதான் அரசியல் கட்சிகளை கூட்டணி அரசியலில் தள்ளுகின்றது.

"முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு அடிப்படை காரணமாகும். இது ஒரு பழமையான முறை. காலமாற்றத்திற்கு ஏற்ப பல புதிய தேர்தல் முறைகள் இப்போது வந்துவிட்டன.

நமது தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன. அவை மதிப்பில்லாமல் வீணாக்கப்படுகின்றன.

சிறுபான்மையினரும் மாற்று கருத்துள்ளோரும் ஒருநாளும் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தல் முறை சாதி முறையை வளர்க்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதியினர் அதிகமோ, அந்த சாதியினர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட இது வழி செய்கிறது. பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது. இதனால், தீவிரவாதம் வளரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய கட்டாயம் தூக்கி எறியப்பட இதுவே வழி.



1 comment:

Unknown said...

அருள் இருக்கீங்களா? புதுசா ஒரு போஸ்ட் போடுறது