Pages

Tuesday, May 31, 2011

இந்தியாவின் மூடத்தனமும் ஜெர்மனியின் முன் எச்சரிக்கையும்!


உலக வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வொன்று ஜெர்மன் நாட்டில் நடந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகின் மிகமுன்னேறிய நாடான ஜெர்மனி "அணுசக்திக்கு விடை கொடுப்பதாக" அறிவித்துள்ளது. அதாவது, ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ள இந்தியா புதிய அணுசக்தி திட்டங்களை தொடங்கும் இந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாடு அதை ஒரே அடியாக ஒழிக்க முன்வந்துள்ளது.

ஜெர்மன் மட்டுமல்ல, ஜப்பான் நாடும் கூட அண்மை சுனாமியில் சிக்கி சீரழிந்த பின்னர் புத்திவந்து 38 அணு உலைகளை மூடிவருகிறது.

மக்கள் எழுச்சி

ஜெர்மன் நாட்டின் அணுமின் நிலையங்கள் மூடும் திட்டம் தானாக வந்ததல்ல. அது மக்கள் எழுச்சியால் உருவானது. செர்னோபில் அணு உலை கதிர்வீச்சால் ஜெர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆளும் கிறித்தவ ஜனநாயகக் கட்சியின் அணுசக்தி ஆதரவு திட்டங்களை ஜெர்மன் பசுமைக் கட்சி கடுமையாக எதிர்த்தது. மார்ச் 2011 இல் நடந்த Baden-Wuerttemberg எனும் மாநிலத் தேர்தலில் கிறித்தவ ஜனநாயகக் கட்சி படுதோல்வியடைந்து பசுமைக் கட்சி ஆட்சியை பிடித்தது. (உலகிலேயே பசுமைக் கட்சி ஒரு மாநில ஆட்சியை பிடிப்பது இதுதான் முதல் முறை).
ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தனது கோள்கைகள் வலுவிழந்து வருவதை உணர்ந்த ஆளும் ஜெர்மன் தேசிய அரசாங்கம், இப்போது அணுசக்திக்கு முடிவு கட்ட முன்வந்துள்ளது. இதன்படி, இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022-க்குள் மூடிவிட அந்நாடு முடிவு எடுத்துள்ளது.

ஜெர்மன் அரசின் அறிவிப்பு

அணுசக்தி பிரச்னை தொடர்பாக 30.05.2011 அன்று நடந்த கூட்டத்தில் 'அணுமின் நிலையங்களை ஒரேயடியாக மூடுவது' என்று எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த கிறித்தவ ஜனநாயகக் கட்சி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் "எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன" என்று கூறியுள்ளார்.

இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் "இந்த முடிவு இறுதியானது. மாற்றப்படாதது. நாட்டில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பழைமையான 8 அணுமின் நிலையங்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படும். 6 அணுமின் நிலையங்கள் 2021-லும், 3 அதிநவீன அணுமின் நிலையங்கள் 2022-லும் மூடப்படும்" என்று கூறியுள்ளார்.
அணுமின் உற்பத்தியின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஜெர்மனி மாற வேண்டியுள்ளது. இதற்காக எரிசக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டின் 40 சதவீத மின் தேவையை அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயிர் மலிவானது!

இந்தியாவின் மின் தேவையில் வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே இந்தியாவின் இப்போதைய 20 அணுமின் திட்டங்கள் நிறைவு செய்கின்றன. இதனை 2050 ஆண்டு வாக்கில் 25 சதவீதமாக அதிகரிக்கப் போகிறார்களாம். பொருளாதாரத்திலும் தொழில்நுபத்திலும் இந்தியாவைவிட பன்மடங்கு முன்னேறியுள்ள ஜெர்மனியிலேயே "அணுசக்தி பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்காது" என்றால் - அது பின் தங்கிய இந்தியாவில் மட்டும் எப்படி நன்மையானதாக அமையும்?

தங்கள்து மின் தேவையில் 40 சதவீத மின்சாரத்திற்கு மாற்று வழியை ஜெர்மனி தேடும் போது, வெறும் 2.5 சதவீத மின்சக்திக்கு மாற்றுவழி கண்டுபிடிக்க இந்தியாவால் முடியாதா? அணுசக்தி முட்டாள்தனத்தை இந்திய ஆட்சியாளர்கள் எப்போது கைவிடுவார்களோ?

அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தைவிட இந்திய மக்களின் உயிர் மலிவானது என்கிற நிலை நீடிக்கும் வரை இந்த மூடத்தனம் தொடரவே செய்யும்.


10 comments:

சிநேகிதன் அக்பர் said...

நம் நாட்டில் இதன் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு.

ஆனால் நம் நாட்டிலுள்ள ஜனத்தொகை நெருக்கடியில் சிறு விபத்து நடந்தாலும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். இதையறிந்தும் இன்னும் பல இடங்களில் உலைகளை தொடங்கிக்கொண்டிருக்கும் அரசை என்னவென்று சொல்ல?

யாரோ அதிக லாபம் பெற அப்பாவி மக்கள் ஏன் உயிரிழக்க வேண்டும்?

Anand said...

இந்திய அரசியல்வாதிகள் எலும்பு துண்டுக்கு அலையும் துரோகிகள், இந்திய மக்கள் பெரும்பாலோர் இப்போது சுயநலவாதிகள்.

கூடல் பாலா said...

அழுத்தமான பதிவு .இது தொடர்பான மேலும் பல பதிவுகளை எதிபார்க்கிறேன் ....நன்றி !

Anonymous said...

நல்ல பதிவு. உங்கள் அக்கறையைப் போலவே பெரும்பான்மை மக்களுக்கும் உள்ளது. அரசியல்வாதிகளை திட்டுவதாலோ அல்லது நாங்கள் தனித்தனியே வேதணைப்படுவதாலோ இந்த பிரச்சனை தீர்ந்துவிடுவதில்லை. இந்த அமைப்பின் நீர்த்துப் போன தன்மை அது தனது கோடூர வழிகளில் உழைப்பைச் சுரண்டி தொழிலாள வர்க்கத்தை மலிவுப் பொருட்களாக மாற்றி வருகின்றது. இந்தியாவில் அணுஉலைகளை நிறுவதற்கு பக்க பலமாக இருப்பவை பெரும் லாபத்தை உறிஞ்சும் நிறுவனங்களே. அந்த நிறுவனங்களுக்காக வக்காளத்து வாங்கி அந்த நிறுவனங்கள் கொடுக்கும் பிச்சையில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள். பெரும்பான்மை தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதற்குதான் ஒரு சரியான அமைப்பை கட்டுவது இன்றை முக்கிய தேவையாக உள்ளது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இந்த வாரம் முழுக்கவே நீங்க கலக்குறீங்க... சகோ.அருள்.!
நட்சத்திர பிரகாசத்துடன் இந்த பதிவும் அருமை.

ஜெர்மனி நல்ல முடிவை எடுத்துள்ளது. 17 மூடுவிழாக்கள் காண்கிறோம் அங்கே...! இனி, நிறைய திறப்புவிழாக்களை எதிர்பார்த்துள்ளோம் இங்கே..!

ஓரிடத்தில் எந்த வளம் மிதமிஞ்சி உள்ளதோ... பொதுவாக அதற்கு அங்கே மதிப்பு இருக்காது. நம் நாட்டில் மனிதவளம்..! எனவே,அப்படித்தான்..!

sathishsangkavi.blogspot.com said...

அனைவரும் அறிய வேண்டிய பதிவு....

seeprabagaran said...

ஜெர்மன் போன்ற வளர்ந்த நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் அந்த நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சியை நடத்துகிறார்கள். இந்திய ஆட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், தரகர்களுக்காகவும் ஆட்சி நடத்துகிறார்கள்.

“நமது நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துவிட்டது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்திய அரசுக்கு வேறுவழியில்லை. அதனால் புதிது புதிதாக அணுமின்நிலையங்களை உருவாக்கி அவைகளை வெடிக்கச்செய்து மக்கள்தொகையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்று நமது நடுவண் அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Anonymous said...

All in all, once you examine it closely, the idea that "renewable" energy is green and clean looks less like a deduction than a superstition.


http://www.rationaloptimist.com/blog/why-renewables-keep-running-out

J.P Josephine Baba said...

நல்ல கருத்து! http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html

சீனுவாசன்.கு said...

என்னவளே
எல்லா ஆயுதங்களையும்
பயன் படுத்த தெரிந்தவனே
மிகப்பெரிய வீரன் என்று சொன்னேன்

நீயோ
ஆயுதங்களின் தீமையறிந்து
அதை பயன்படுத்த தெரிந்தும்
தொடாதவனே மாவீரன் என்கிறாய்!