Pages

Saturday, April 21, 2012

ஒரு இயக்கத்தை தலைமையேற்று நடத்துபவர்கள் தவறாக பேசிவிட்டால், அந்த இயக்கத்தை பின்பற்றுபவர்கள் அந்த தவறையே வழிமொழிந்து அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதையே நாம் கண்டு வந்துள்ளோம்.
அதுபோன்றுதான் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி "வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்" என்கிற கருத்துக்கும் அந்த அமைப்பின் தொண்டர்கள் பலரும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும், அதே மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவித்துக்கொண்டுள்ள சிலர் விதிவிலக்காக திரு. திருமுருகன் காந்தியின் கருத்தினை விமர்சிக்கிறார்கள் (இது இதர இயக்கங்கள் பலவற்றில் காண முடியாத காட்சியாகும்).

அந்த வகையில் மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமி என்பவரது விரிவான கருத்தை கீழே அளித்துள்ளேன்.

திரு. திருமுருகன் காந்தியின் கருத்து குறித்த எனது பதிவில் (மே 17 இயக்கத்தின் சாதிவெறி: வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமாம்!) "சாதி, மதம், மொழி, இனம், நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் ஒரு இடத்தில் நீண்டகாலமாக வாழும் மக்களை வெளியேற்றக் கூறுவது மயிரிழை அளவும் ஏற்புடையது அல்ல. ஆனாலும், பெரும்பாலும் வன்னியர்களைத் தவிர வேறு எவரும் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு கூறாமல் மௌனமாக இருப்பது வியப்பளிக்கிறது." என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதேகருத்தை மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமியும் குறிப்பிடுகிறார். குறிப்பாக "இவை எல்லாவற்றையும் விட, சக தோழர் செய்கிற தவறை கண்டிக்க வேண்டிய உணர்வாளர்கள் யாருமே அதை செய்யவில்லை என்பதும், மாறாக பல தமிழ் உணர்வாளர்கள்(என்று நான் நம்பியவர்கள்) அதற்கு ‘விருப்பம்’ போட்டு தாங்களும் அந்த பட்டியலில் முனைப்புடன் சேர்ந்து கொண்டதும்....இதையெல்லாம் கண் கொண்டு கண்ட பின்பும், எதுவுமே நடக்காதது போல மௌனம் காத்து பொதுவான தமிழ்தேசியவாதிகள் (வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து) அதை ஊக்குவித்ததும் எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது." என்கிறார் அவர்,

இனி அவரது முகநூலில் இருந்து:
(மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமி )

"மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய ஒரு சுவரொட்டி மீது வெளியிட்ட கருத்தும் அதன் மீதான விவாதமும் பற்றி, என்னை மே 17 உறுப்பினர் என்று எண்ணும், தமிழ் தேசிய விசயங்களில் எனக்கு உதவிகள் செய்த என் நண்பர்களுக்கு என்னுடைய நிலைப்பாட்டை விளக்கவே இந்த பதிவு..

முதலில்.. இது என்னை பொருத்தவரை திருமுருகனின் தனிப்பட்ட கருத்து.. இது பற்றி என்னிடமோ, பிற சக உறுப்பினர்களிடமோ கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட நிலைப்பாடு அல்ல.. மே 17 இயக்கம் கூடி இதை ஆமோதித்ததாக நான் அறியேன்.

இரண்டாவதாக.. விவாதத்தின் ஆரோக்கியமற்ற போக்கு என்னை போன்ற தமிழ் உணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உங்களின் ஏமாற்றத்தை நானும் உணர்கிறேன். தனி நபர் விமர்சனம், ஒரு இனக்குழுவையே பொதுப்படையாக பேசுதல் (Generalization and Stereo typing), தீவிர போக்குகள், பொறுப்பற்ற விமர்சனங்கள், வீண் வீர வசனங்கள் என்று பல இதில் அடங்கும்.. நான் மிகவும் மரியாதை வைத்திருந்த திருமுருகனின் ஆதிமூல கருத்தே (ஒரு பிரிவை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்) இவ்வாறானவையாக இருக்க மற்றவர் யாரையும் குறை சொல்ல முடியாமல் நிற்கிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை சொல்லி உரிமைகளை இழக்காமல் பொது பெயரை சொல்லவேண்டும்.. என்ற செய்தி தாங்கிய அறிக்கை பற்றி திருமுருகன் சொன்ன கருத்துக்கள் பாரிய அளவில் பொதுமை படுத்தப்பட்ட (Excessive Generalization), மேற்கோள் காட்டப்படும் படத்திற்கு கொஞ்சமும் பொருத்தமற்ற, சனநாயகத்துக்கு முரணான தீவிரவாத போக்குடைய, நல்வழிப்படுத்தும் நோக்கமற்ற கருத்தாகவே என்னாலும் பார்க்க முடிகிறது. மேலும் விவரமாக கூறின்,

தமிழீழத்தில் படுகொலை நடந்தபோது ஒரு சாதி உதவவில்லை என்று சொல்லுவது எந்த ஆதாரம் அல்லது புள்ளி விவரத்தின் அடிப்படையில் என்று எனக்கும் தெரியவில்லை. திருமுருகன் தான் அதை புள்ளி விவரம் கொண்டு விளக்க வேண்டும். தமிழருக்கு ஒரு சாதி துரோகம் செய்தது என்று சொல்லுவதோ, இந்திய அரசுடன் கை கோர்த்தது என்று சொல்லுவதோ எந்த புள்ளியியலின் அடிப்படையில் என்று என் பள்ளி, கல்லூரி, அலுவல்வழி நண்பர்களாகிய உங்களைபோலவே நானும் குழம்பி தான் இருக்கிறேன்.

யார் தமிழன் என்பதும், யார் இங்கு வாழ்வது என்பதும் மிகப்பெரிய விவாதங்களுக்கு பிறகே முடிவு செய்ய முடியும். தனிநபர் தன்னிச்சையாக முடிவெடுப்பது தமிழ் தேசியத்துக்கு நல்லது கிடையாது. இயக்கத்தின் சனநாயகத்திற்கும் நன்மை பயக்காது. சனநாயக வழிமுறைகளை உடைத்து ஒரு குழுவை வெளியேற்றும் உரிமையை திருமுருகனுக்கு சக தமிழனாக, தோழனாக நான் வழங்கவில்லை. அதனால் என் மீது கோபம் கொள்வது தவறு.

சாதியத்தை ஒழித்து தமிழராக ஒன்றிணைய சபதம் ஏற்ற ஈழத்தின் வட்டுகோட்டை தீர்மானத்தில் கூட எந்த ஒரு பிரிவினரையும் ஒரு காரணம் காட்டி அங்கிருந்து விரட்டுவது நோக்கமாக இல்லை. சாதி வேறுபாடுகளை கடுமையாக தண்டித்த புலிகளின் கோட்பாடும் அதுவாக இல்லை.. மாறாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற தோட்ட தொழிலாளர் உட்பட தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இலங்கை தீவின் எந்த பகுதியில் இருந்தும் ஈழத்தில் குடியேறி சம உரிமையுடன் வாழலாம் என்றே வரவேற்கிறது. இதை தமிழருக்கு நினைவூட்ட வேண்டிய நிலையில் இருந்த திருமுருகன் அதற்கு மாறாக பேசியது எனக்கும் அதிர்ச்சி தான்.

“உன்னை சத்ரியன் என்று சொல்லாதே அதற்கு மாற்றான ஒரு தமிழ் சொல்லை பயன்படுத்து” என்று சொல்ல நினைத்திருந்தால் அதற்கு “உன்னை தமிழகத்தை விட்டு வெளியேற்றி எவன் உன்னை சத்ரியனாக ஏற்கிறானோ அவனிடம் அனுப்புவோம்” என்றா சொல்வார்கள்? இந்த சொற்றொடரை நான் சொற்குற்றமாக பார்க்கவில்லை.. அது தரும் பொருளிலும், அது கூறப்பட்ட நோக்கத்திலும் உள்ள குற்றமாவே கருதுகிறேன்.

ஒரே பட்டப்பெயர்கள்/உட்பிரிவுகள் உள்ள பல சாதிகள் BC/MBC/SC/ST போன்ற பல்வேறுபட்ட தரப்படுத்தலில் உள்ளன. அவற்றுக்கிடையில் கணக்கெடுப்பின் போது நிகழ்ந்த கவனக்குறைவான, திட்டமிட்ட குளறுபடிகள் அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளைந்த, விளையக்கூடிய பேராபத்தை அறியவில்லையா அல்லது அது பற்றிய அக்கறை இல்லையா? இரண்டுமே சமமான இழப்புகளை தமிழ் தேசியத்திற்கு உண்டாக்கும். அந்த சுவரொட்டியில் கையாளப்படும் செய்தியின் கணத்தை உணர்ந்திருந்தால் அதில் கையாளப்படும் ஒரு சொல்லின் (கருதப்பட்ட) பிழையை பிரித்தெடுத்து கண்டித்திருக்க முடியும்.

மேலும் ஏதோ ஒரு அமைப்பின் உள்சுற்றறிக்கையை போது மேடையில் வைத்து விவாதிப்பது எவ்வகை நியாயம் என்ற கேள்வி எழுந்தது. கருத்து எவ்வகையினதாயினும் அதன் மீது விவாதம் நடத்தலாம் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்கிறேன்..

ஆக மொத்தத்தில், சிறய பிழைகள் என்கிற அடிப்படையை கடந்த வரலாற்று பிழையாக இன்று இது நிற்கிறதென்பதே உண்மை.. தனது அதிதீவிரமான அந்த கருத்துக்கள் பலநூறு தமிழர்களை கடுமையாக மோதிக்கொள்ள வைக்கும் என்பதை எதிர்பார்க்கும் அளவு அரசியல் புரிதல் இல்லை என்று திருமுருகன் சொன்னால் அதனால் அதிகபட்ச அதிர்ச்சி அடைபவன் நானே. மாறாக இவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்தும் சக தோழர்கள், உறுப்பினர்களோடு இது பற்றி ஒரு முறை கூட விவாதிக்கவில்லை என்பதை உணர்ந்து அதிகபட்சமாக வருந்துபவனும் நானே.

இவை எல்லாவற்றையும் விட, சக தோழர் செய்கிற தவறை கண்டிக்க வேண்டிய உணர்வாளர்கள் யாருமே அதை செய்யவில்லை என்பதும், மாறாக பல தமிழ் உணர்வாளர்கள்(என்று நான் நம்பியவர்கள்) அதற்கு ‘விருப்பம்’ போட்டு தாங்களும் அந்த பட்டியலில் முனைப்புடன் சேர்ந்து கொண்டதும், இரு தரப்பின் பலரும் பாசிச அடிப்படையில் அழிப்பேன் ஒழிப்பேன் என்கிற பாணியில் கருத்து பதிவதும், இதையெல்லாம் கண் கொண்டு கண்ட பின்பும், எதுவுமே நடக்காதது போல மௌனம் காத்து பொதுவான தமிழ்தேசியவாதிகள் (வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து) அதை ஊக்குவித்ததும் எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.

திருமுருகனின் கருத்துக்கள் உங்களில் பலருக்கு தயக்கங்களையும், அசௌகரியத்தையும் உண்டாக்கி இருக்கும் என்றே நம்புகிறேன்.. “உனக்காக எல்லாம் நாங்கள் போராடவில்லை, போராட போவதுமில்லை” என்பது தவறு என்று உணர்ந்திருப்பீர்கள். ஆனால் எதிர்ப்பு கூறாமல் ஊமையானது ஏன்? கருத்தியலின் மீதான பற்று என்பதையும் தாண்டி தலைவர்கள் மீதான அபிமானத்தையும், அமைப்பின் கட்டுப்பாடுகளையும் மனதில் கொண்டு இயங்குவது தமிழ் தேசிய இயக்கத்தை படுகுழியில் தள்ளிவிடும். இதற்கு இந்தியம், சாதி மத பற்று, திராவிடம் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்த பட்டியலில் தமிழ்தேசியம் சேருவதை நான் வெறுக்கிறேன்.

தமிழ்தேசியம் பற்றி இனி பேசிவரும் யாரையும் இந்த பிரச்சனை தொடர்பான தன் கருத்தை கூறுமாறும், இந்த சந்தர்ப்பத்தில் தன் கருத்தை பதியாதமைக்கான காரணங்களை கேட்பதும் கடமையாக கருதுகிறேன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மக்களை துன்பப்படுத்தும் பிரிவினைவாதம் இன்று ஒரு தமிழ் தேசிய இயக்கத்திற்கும் அடித்தளமாகிறதோ என்று கவலை கொள்கிறேன்..

எந்த குறிப்பிட்ட விவாதத்தின் அடிப்படையிலும் ஒப்புக்கொள்ளப்படாத இந்த கருத்தை பொதுவெளியில் என்னை கேட்டு திருமுருகன் பதியவில்லை.. என் நண்பர்களின் புரிதலை தெளிவுபடுத்தும் இந்த பதிவை யாரை கேட்டும் நான் பதிவிட வேண்டியது இல்லை.

எப்படியோ தமிழினம் ஒன்றுபடும் என்ற எனது கனவில் மண் அள்ளிப்போட்டமைக்கு வேதனையும் கண்ணீரும் நிறைந்த கைகூப்பிய நன்றி!

திருமுருகன், பாசிச தமிழ் தேசியவாதிகள், சாதிகள் மீதான அக்கறையை மீறிய வெறியர்கள், பேசா மடந்தையான பிற மே 17 உறுப்பினர்கள், களப்பணி அறியா Facebook போராளிகள், மௌனம் காக்கும் உண்மையான தமிழ் தேசியவாதிகள் உட்பட உலகின் ஒட்டுமொத்த தமிழினமும் எனக்கு எதிரே திரண்டு நின்று கூட்டமாக “You are most welcome” என்று கூவுவதை போல உணர்கிறேன். அவமானம் தலைப்பட வாயடைத்து போய் நிற்கிறேன் மூன்று வருடங்களுக்கு முன்பு மௌனித்த துப்பாக்கிகள் போல.

குறிப்பு: உங்கள் சந்ததிகள் கோடி புண்ணியம் ஈட்டட்டும், பதிவை முழுதாக படித்து பின் கருத்து பதியவும்.""

இவ்வாறு மே 17 இயக்கத்தின் திரு. சூரியபிரகாசு தங்கசாமி தனது முகநூலில் எழுதியுள்ளார். http://www.facebook.com/promankind

கருத்து 2:


இதே போன்ற ஒரு கருத்தினை கணேஷ் அருநாடன் என்பவரும் திரு. திருமுருகன் காந்தியின் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து இதோ:

"திருமுருகன்...உங்களது முந்தைய பதிவில் நீங்கள் போட்ட பதிவில் இருந்த நியாயமற்ற வன்னியர் எதிர்ப்பை, "விரட்டுவோம்" என்ற கோணல் பார்வையை முதலில் எதிர்த்தவன் என்ற முறையில் இங்கு நான் சில கருத்துகளை முன் வைக்கிறேன்.

1) இப்போது நீங்கள் போட்ட பதிவில் உள்ள decency-ஐ பாருங்கள். இதுவன்றோ அரவணைத்து செல்லும் முறை. இதனை நான் மனமாற பாராட்டுகிறேன். "சத்திரியன்" என்ற சொல்லாடல் வேண்டாம் என்கிறீர்கள். அதனை விவாதிக்க intellectual வன்னியர்கள் என்றுமே தயாராகவே இருக்கிறார்கள்.

2) உங்களது முந்தைய பதிவில் நீங்கள் இட்ட விரும்பத்தகாத சொற்கள் பல வன்னியர்களை புண்படுத்திவிட்டது என்பது தான் உண்மை. இதற்கு நீங்கள் இன்னும் வருத்தம் தெரிவிக்காதது உங்களது முதிர்வின்மையை காட்டுகிறது.

3) 1.25 கோடி வன்னியர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் தேசியம் பேசினால் அது நாமெல்லாம் வேண்டும் என்று நினைக்கின்ற தமிழ் தேசியத்திற்கு தான் இழப்பே தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

4) இந்த ஒட்டுமொத்த விவாதத்தில் ஒரு விஷயம் நன்றாக புலப்படுகிறது. உங்களை சுற்றி சிந்திக்க தெரியாத காக்காய் கூட்டம் மிகுந்து விட்டது. இந்த நிலை ஒரு இழி நிலை. இதனை முதலில் போக்குங்கள். இந்த கூட்டம் உங்களை முதிர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லாது. இது உங்களுக்கு போலியான கர்வத்தை கொடுக்கும். இறுதியில் உங்கள் பெயரையே அழித்து விடும். இதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.

5) If there is one thing I admire in you, it is your undeterred die hard support for the cause of Tamil Nationalism. ஆனால் சாதியை கண் மூடி எதிர்ப்பவன் எதார்த்தம் தெரியாதவன். அவனால் தமிழ் தேசியத்தை வளர்க்க இயலாது. என்னை போன்றவர்கள் சாதியை ஒழித்து வரத் தயார். ஆனால் ஒரு குப்புசாமி படையாச்சியோ, சீனித்தேவரோ, ராமசாமிக் கவுண்டனோ, இந்த சாதாரணப் பட்டவர்கள் இன்னும் வர தயாராக இல்லை என்பது தான் யதார்த்தம். அதனால் அவர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் தேசியம் பேசலாம் என்றால், உங்கள் / நமது இயக்கத்தில் 50,000 பேர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

இறுதியாக எனது ஒரே வேண்டுகோள் - யதார்த்தத்தை புரிந்துக் கொண்டு களத்தில் தொடருங்கள். உங்களுக்கு எமது ஆதரவு இன்று போல் என்றும் உண்டு. அது போல தவறாக, உணர்ச்சி உந்த post செய்துவிட்டால் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள். தவறேதும் இல்லை. மன்னிப்பு கேட்பவன் பண்பட்டவனே தவிர, பண்பால் குறைந்தவன் ஆகமாட்டான். infact மன்னிப்பு கேட்பவன் உயர்நிலைக்கு தன்னை தானே செலுத்திக் கொள்பவன்."

-- இவ்வாறு திரு. கணேஷ் அருநாடன் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் முகநூலில் எழுதியுள்ளார்.

இயக்க ஒருங்கிணப்பாளரின் தவறை அதே இயக்கத்தினர் கண்டிக்கும் பண்பாட்டினை வரவேற்போம்.

3 comments:

செந்திலான் said...

do you have same guts to condemn ayya's mistakes?

சக்தி said...

ஏன் திருமுருகன் காந்தி அவர்களே பதில் எழுதுவதை நிறுத்தி விட்டீர்கள். என்ன எழுதுவது என்று தெரியவில்லையா?
செய்த தவறை ஒப்புக்கொள்ளாத நீங்கள் எப்படி தமிழ் தேசியத்திற்கு வித்திட முடியும்? தமிழ் மக்களை ஒருங்கிணைக்க முடியும்? மானமுள்ள வன்னியன் எவனும் எண்ண முதிர்ச்சி இல்லாத உன் பின்னால் வரமாட்டான்.
வன்னியர்கள் உங்களுக்கு அவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டார்களா? ஏன் மன்னிப்பு கேட்க உங்கள் மனம் இடம் தரவில்லையா? கர்வம் உள்ள எவனும் நல்ல தலைவன் அல்லன்.

Unknown said...

மே 17 இயக்கத்தில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது... ஆனால் எதோ ஒரு தெருப்பொருக்கியும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிகிறதே அதை பற்றி தங்களின் கருத்து என்ன...