Pages

Saturday, September 01, 2012

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

தமிழ்நாட்டு மக்கள் எல்லோருமே செல்பேசியைப் பயன்படுத்துகிறார்கள் என்கிற நிலை வந்துவிட்டது. ஆனால், செல்பேசி உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது எத்தனைப்பேருக்குத் தெரியும்?

செல்பேசிகளால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதர்களின் உடல்நலமும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுகளில் மின்காந்தக் கதிர்வீச்சு முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில்,கண்களால் பார்க்காமலும் காதால் கேட்காமலும் மனிதனின் புலன்களால் உணரப்படாமலேயே மின்காந்தக் கதிர்வீச்சால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

மின்அலை மற்றும் காந்தஅலை இரண்டும் ஒன்றாக பாய்வதை மின்காந்த கதிர்வீச்சு (electromagnetic radiation - EMR) என்கின்றனர். இதனை மின்காந்தப்புல கதிர்வீச்சு (electromagnetic radiation field - EMF) என்றும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மாசுபாட்டினை மின்நச்சுப்புகை (electrosmog) என்று பொதுவாகக் கூறுகின்றனர்.
electromagnetic radiation - EMR
கதிர் வீச்சானது ஆற்றல் மிக்கது. அலை வடிவத்தில் பரவக்கூடியது. ஓளி, நுண்ணலைகள், ரேடியோ அலைகள் போன்றவை மின்காந்த அலைகள் எனப்படுகின்றன. இத்தகைய அலைகள் ஒரு ஊடகத்தினூடாக அல்லது ஒரு வெளியினூடாக கடந்து செல்வது கதிர்வீச்சு (radiation) எனப்படுகிறது.

அலைக்கற்றை 

மின்காந்த கதிர்வீச்சு இயற்கையிலேயே இருப்பதாகும். எடுத்துக்காட்டாக நாம் கண்ணால் காணக்கூடிய சூரிய ஒளி ஒரு மின்காந்த கதிர்வீச்சுதான். இதுபோலக் கண்ணால் காணமுடியாத மின்காந்த கதிர்வீச்சு அலைகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துதான் "மின்காந்த அலைக்கற்றை" (Electromagnetic spectrum) என்கின்றனர். பெரிதளவில் பேசப்பட்ட அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு இந்த மின்காந்த அலைக்கற்றையைத்தான் குறிக்கிறது.

ஒரு குளத்தின் நடுவில் கல்லை எறிந்தால் அலை எழுவது போன்றுதான் மின்காந்த அலையும் பரவுகிறது. ஒரு வினாடியில் எத்தனை அலைவுத்துடிப்பு நேருகிறதோ அதற்கேற்ப மின்காந்த அலையின் சக்தி மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடியில் ஒரு துடிப்பு என்பது ஒரு ஹெர்ட்ஸ் (Hertz) ஆகும். கம்பிவழியே வரும் மின்சாரத்தின் அளவு 60 ஹெர்ட்ஸ். அதாவது வினாடியின் 60 இல் ஒருபங்கு நேரத்தில் ஒரு அலைவு (oscillation) இருக்கும். இது 9000 ஹெர்ட்சைத் தாண்டினால் மின்காந்தஅலை கம்பி இல்லாமலேயே பயணிக்கும்.
Electromagnetic spectrum
இவ்வாறு 1 ஹெர்ட்சில் ஆரம்பித்து பலகோடி ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசைகளைத் தான் மொத்தமாக  மின்காந்த அலைக்கற்றை என்கின்றனர் (இதில் சூரிய ஒளியின் அலைவு 477,000,000,000,000 ஹெர்ட்ஸ் ஆகும்). சுருக்கமாக சொல்வதானால், சூரிய ஒளியைக் கண்ணால் காண்கிறோம், அவ்வாறு காண முடியாத மின்காந்த அலைகள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்திதான் வானொலி, தொலைக்காட்சி, செல்பேசி அனைத்தும் இயக்கப்படுகின்றன.

மின்நச்சுப்புகை 

செயற்கையான மின்காந்தப்புலத்தால் ஏற்படும் மாசுபாட்டினை மின்நச்சுப்புகை (electrosmog) என்று பொதுவாக அழைக்கின்றனர். இதில் ஒன்றுதான் செல்பேசி மாசுபாடு ஆகும்.
மின்நச்சுப்புகை (electrosmog) 
இன்றைய உலகில் மனிதவாழ்க்கை மின்காந்தப்புல மாசுபாட்டிற்கு நடுவில் நடக்கிறது. ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்நச்சுப்புகை சூழ்ந்திருக்கிறது. குறிப்பாக நகர்ப்புரங்கள் மின்நச்சுப்புகை எனும் கடலில் மூழ்கியுள்ளன. கைபேசிக் கருவிகள், செல்பேசிக் கோபுரங்கள், கம்பியில்லாத கணினி இணையத் தொழிநுட்பம் ஆகியவற்றால் மின்காந்தக் கதிர்வீச்சு - மின்நச்சுப்புகை முதன்மையாகத் தாக்குகிறது.

அதேநேரத்தில் இயற்கையான மின்காந்தப் புலம் என்பது மனிதர்களுக்கு புதிதானதல்ல. மனித உடல் அதனை இயற்கையாகவே பயன்படுத்தி வருகிறது. மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் இயற்கையான மின்காந்தப் புலம் இருக்கிறது. உடல்தன்னைத் தானே சீரமைக்கவும் மூளை உடலின் பாகங்களுடன் தொடர்புகொள்ளவும் மின்காந்தப் புலம்தான் பயன்படுகிறது. இவ்வாராக மனித உடலுக்குள் இயற்கையாகவே இருக்கும் மின்காந்தப்புலம் இப்போது செயற்கை மின்நச்சுப்புகையால் பாதிக்கப்படுகிறது.
அதாவது, மனித உடலுக்குள் இருக்கும் மின்காந்தப் புலத்தின் அலைவரிசை வேறு. இப்போது செயற்கையாக செல்பேசிகளால் உருவாக்கப்படும் மின்நச்சுப்புகையின் அலைவரிசை வேறு. செல்பேசி அல்லது செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் இந்த மின்நச்சுப்புகை தன்னிச்சையாக மனித உடலுக்கு ஊடுருவக்கூடியது. இதனால் மனித உடலின் இயல்பான மின்காந்தப்புலம் பாதிப்படைகிறது. பலவிதமான உடல்நல, மனநல பாதிப்புகள் நேருகின்றன.

குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், செல்பேசி கோபுரங்களுக்கு அருகே வசிப்போர், நோயாளிகள், அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் ஆகியோரை மின்நச்சுப்புகை அதிகம் பதிக்கிறது. மறுபுறம் விலங்குகள், பறவைகள், தேனீக்கள், தாவரங்கள் எல்லாமும் மின்நச்சுப்புகையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

இந்தப் பேராபத்து உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய சுட்டி:

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் பதிவைப் போல் இந்தப் பதிவும் அருமை...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...

JP said...

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...