Pages

Sunday, July 21, 2013

அரசியல் கொலைகளுக்கு கண்டனம்: பாஜக முழு அடைப்புக்கு பாமக ஆதரவு

"தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதன் வெளிப்பாடு தான் சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், தணிக்கையாளருமான ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்புக்களைச் சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதுதொடர்பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமுமே ஏற்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதற்கும், காவல்துறையினரின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதற்கும் இவை தான் உதாரணம் ஆகும். திருச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளில் கடந்த பல மாதங்களாக குற்றவாளிகளை காவல்துறையினரால் நெருங்கக் கூட முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விசயமாகும்.

தமிழக காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால் கொலைகாரர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் அச்சம் போய்விட்டது. பொதுமக்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை எவருமே சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது தான் தமிழகத்தின் இன்றைய நிலை ஆகும்.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடமும், அரசிடமும் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படுவதில்லை. தமிழக அரசின் இந்த அலட்சியம் தான் அரசியல் படுகொலைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷின் படுகொலை உட்பட தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் நாளை(22.07.2013) திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." - இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: