Pages

Monday, September 05, 2016

திருட்டுப் பிள்ளையாரும் வன்னியர் வரலாறும்: வியக்க வைக்கும் பின்னணி!

வீட்டிலோ, கோவிலிலோ பிள்ளையாரை வைத்து வழிபட விரும்புகிறவர்கள் - அதனை வேறொரு இடத்திலிருந்து திருடிக் கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் விநோதமான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அதில் வன்னியர்களின் வீர வரலாறும் இணைத்திருக்கிறது. வியப்பாக இருந்தாலும் இது உண்மை.

திருட்டுப் பிள்ளையார்

"புதிதாகப் பிள்ளையார் கோயில் கட்டி மூர்த்திப் பிரதிஷ்டை செய்வதில் வேடிக்கையாக ஒரு உலக வழக்கு இருக்கிறது. அதாவது புதிதாகப் பிள்ளையார் விக்கிரஹம் அடிக்கக் கொடுக்காமல், ஏற்கனவே ஒரு கோயிலில் இருக்கிற பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வந்துதான் புதுக்கோயில் வைக்கவேண்டும் என்பார்கள்" - என்று சொல்கிறார் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரியார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான "கிரீடம்" படத்தில் பிள்ளையாரை திருடுவது ஒரு முதன்மையான காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

பிள்ளையார் திருட்டும் தமிழ் மன்னர்களின் போரும்

பிள்ளையார் சிலையை திருடுவதின் பின்னணியில் உள்ள வரலாற்று நிகழ்வு, சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த பெரும் போராகும். கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படமும் இந்த போரின் கதைதான்.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மக்கள் எல்லோரையும் போர்க்குணம் மிக்கவர்களாக மாற்றியதன் பலனாக, பெரும் படைத் திரட்டி புலிகேசி மீது போர்த்தொடுத்தான் நரசிம்மவர்மன். கி.பி.642 ஆம் ஆண்டில் பல்லவப் பெரும்படையால் புலிகேசியின் 'பாதாமி நகர்' தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் 'வாதாபி'). 

ஒரு மன்னன் எதிரி நாட்டை வெற்றி கொள்ளும் போது, அவனது தலைநகரை அழித்து, கோட்டைகளை இடித்து, ஊரை எரிப்பது வழக்கமாகும். அவ்வாறு, பாதாமி நகரை அழித்து நிர்மூலமாக்கும் நிகழ்வை "வாதாபி சூரனின் இரத்தினாபுரி நகரை அழிப்பதாக" வன்னிய புராணம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
திருச்செங்காட்டன் குடி உத்திராபதீஸ்வரர் கோவில்
புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் பிள்ளையார். நரசிம்மவர்மனின் படைக்கு தலைமையேற்று சென்ற பரஞ்சோதி, பாதாமி நகரில் இருந்த பிள்ளையார் சிலையை கொண்டுவந்து, அவரது சொந்த ஊரான திருச்செங்காட்டன் குடியில் வைத்தார்.

பல்லவர்களின் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பிற்காலத்தில் சைவ சமயத்தின் "சிறுத்தொண்ட நாயனார்" ஆக மாறினார். சிறுத்தொண்டர் தான் பிள்ளையாரை கொண்டுவந்தார் என்பதை -

"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக 
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"

- என்று திருஞ்சானசம்பந்தர் பாடுகிறார்.

வாதாபியில் - கணபதி இல்லாத கோவில்

தமிழ்நாட்டில் இப்போதும் பிள்ளையாரை வாதாபி கணபதி என்று அழைக்கிறார்கள். முத்துச்சாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம் பஜே" என்கிற புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலாகவும் இதனை அமைத்துள்ளார்.

இவ்வாறாக, வாதாபி கணபதி என்றும், திருட்டுப்பிள்ளையார் என்பதாகவும் சுமார் 1400 ஆண்டுகளாக, நரசிம்மவர்மன் வெற்றி பெற்றதன் தாக்கம் இன்னமும் தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
திருச்செங்காட்டன் குடியில் வாதாபி கணபதி சிலை

திருவாரூர் அருகே திருசெங்காட்டன்குடியில் இப்போதும் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட அதே சிலை உள்ளது. 
பாதாமியில் சிலை இல்லாமல் இருக்கும் கணபதி கோவில்.

ஆனால், உண்மையான வாதாபியில் உள்ள கணபதி கோவிலில் இப்போது கணபதி சிலை இல்லை. பாதாமி நகரில் எந்தக் கோவிலில் இருந்து சிலையை எடுத்தார்களோ - அதே கோவில் இப்போதும் சிலை இல்லாத கோவிலாகவே இருக்கிறது. (அக்கோவில் இப்போது கீழ் சிவாலயம் -Lower Shivalaya- என்று அழைக்கப்படுகிறது)

தொடரும் பாரத மரபு

பல்லவ மன்னர்கள் உருவாக்கிய பாரதம் படிக்கும் பழக்கத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடெங்கும் திரௌபதி அம்மன் கோவில்கள் ஏற்பட்டன. கூத்துக் கலை உருவானது. கூத்தாண்டவர் வழிபாடு வந்தது. கோவில் திருவிழாக்களில் இப்போதும் நடக்கும், பாரதம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தமிழ் மன்னர்களின் போர்களின் தொகுப்பாக உள்ள வன்னிய புராணம், சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட கதையாக பரவியிருந்தது. இப்போதும் பல ஊர்களில் வன்னிய புராணம் நாடகமாக நடத்தப்படுகிறது. வீரவன்னிய ராஜனின் கோவில்களும் உள்ளன.

தமிழர் வீரத்தின் அடையாளம்

கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை.
சிலை இல்லாமல் இருக்கும் கணபதி கோவிலின் பின்னணியில் பாதாமி நகரம்

தமிழகத்தின் பிள்ளையார் வழிபாடு என்பது வட இந்திய பழக்கம் இல்லை. மாறாக, வட இந்திய மன்னர்களை தமிழ் மன்னர்கள் வெற்றி கொண்டதன் அடையாளம். அது இந்துக்களின் வீரத்தையோ இந்தியர்களின் வீரத்தையோ கொண்டாடுவது அல்ல. மாறாக, தமிழர்களின் வீர அடையாளம் ஆகும்

இதனை இந்து மதவெறிக் கருத்தாகவோ, மாற்று மதத்தினருக்கு எதிரான பிரச்சாரமாகவோ மாற்ற அனுமதிப்பது - தமிழர்களின் வீரத்துக்கும் மானத்திற்கும் இழுக்காகும்.

1 comment:

Unknown said...

என்னுடைய புரிதல் படி பல்லவர்கள் வன்னியர்கள் என்று கூற வருகிறீர்கள், அப்படித் தானே ?