Pages

Tuesday, September 27, 2016

பாரிஸ் நகரின் சாலையில் கார்களுக்கு தடை!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் பிரதான சீன் (Seine) ஆற்றின் ஓரத்தில் இருக்கும் முதன்மையான சாலையில் கார்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றே கால் கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த சாலையில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 2700 கார்கள் ஓடுகின்றன. பரபரப்பான இந்த சாலையில் கார்களுக்கு தடை விதிப்பதாகவும், இனி அந்த சாலை முழுவதும் நடைபாதையாக மட்டுமே இருக்கும் என்றும் பாரிஸ் நகரசபை நேற்று (26.09.2016) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இப்போது இருக்கும் சீன் ஆற்று சாலை
இனிமேல் வர இருக்கும் மாற்றம் குறித்த கற்பனைக் காட்சி

கார் பயன்படுத்துவோர் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட, மக்களின் உடல்நலம் கருதி கார்களுக்கு தடை விதிப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த புதிய தீர்மானத்தின் மூலம் - இனி சீன் ஆற்றின் இரண்டு கரைகளும், மக்கள் நடப்பதற்கும், பொழுது போக்குவதற்கும் மட்டுமே பயன்படும்.

கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தையும் நடைபாதைகளையும் அதிகமாக்க வேண்டும். இது மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கும், மாசுபாட்டுக்கும் தீர்வாகும் - என்பதை உலகின் முன்னணி நகரங்கள் உணர்ந்துவிட்டதன் வெளிப்பாடே, பாரிஸ் நகரின் இந்த மாற்றம் ஆகும்.

இதுபோன்ற நல்ல திட்டங்களை சென்னை எப்போது கண்டு கொள்ளுமோ!

No comments: