Pages

Tuesday, September 13, 2016

காவிரி: மாநிலங்களின் மோதல் அல்ல - தமிழ்நாட்டின் மீதான போர்!

முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டார். இதனை ஊடகங்கள் நேரடியாக ஒளிப்பதிவு செய்து தமிழ்நாட்டில் ஒலிபரப்பின. இராமேஸ்வரத்தில் கன்னடர் ஒருவரை சிலர் மிரட்டினர். இதையும் ஊடகங்கள் நேரடியாக ஒலிப்பதிவு செய்து பெங்களூருவில் ஒளிபரப்பின.

இப்போது - 'இரு மாநிலங்களுக்குள் மோதல் வேண்டாம்' என்றும், 'இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்' என்றும் கலைஞர் கருணாநிதியும் சிபிஎம் ராமகிருஷ்ணனும் கருத்து கூறியுள்ளனர்.

'கன்னடர்களை தாக்க வேண்டாம்' என்று சித்தாராமையாவும், 'தமிழக மக்களை தாக்க வேண்டாம்' என்று ஜெயலலிதாவும் பரஸ்பரம் கடிதங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார். (அமைதியாக இருக்கும் தமிழக மக்கள் - அமைதி காக்க வேண்டும் - என்பது என்ன மாதிரியான கோரிக்கையோ!).

இதையே சாக்காக வைத்து - ஊடகங்கள் எல்லாம் 'இரு மாநிலங்களும் மோதுகின்றன' என்கிற செய்தியை பரப்புகின்றன.
'இரு மாநிலங்களும் மோதுகின்றன'  Times of India
'இரு மாநிலங்களும் மோதுகின்றன' The Hindu

 உண்மை என்ன? 

பெங்களூருவில் ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 60 -க்கு மேற்பட்ட தமிழக பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன, 100 -க்கு மேற்பட்ட லாரிகள் கொளுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில் செல்வோர் ஒவ்வொருவரும் நிறுத்தப்பட்டு - கன்னடத்தில் பேச வேண்டும், கன்னட நாளிதழை படித்துக்காட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனை செய்ய முடியாதவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் The ‘speak Kannada’ test . இந்த நிமிடத்திலும் பெங்களூரு போர்க்களமாகவே உள்ளது.
தற்போதைய நிலை படம் 13.9.2016
கர்நாடகத்தில் நடக்கும் கலவரத்துக்கு ஆளும் அரசாங்கம் முழு ஆதரவை அளித்து வருகிறது. கலவரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, சிறைகளில் இருந்து 600 ரவுடிகள் வெளியே விடப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் எந்தக் கலவரமும் இல்லை. கன்னடர்களின் உடமைகளுக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பு அளித்துள்ளது. உண்மையில், கன்னடர்கள் மீதான எந்த தாக்குதலையும் தமிழக மக்கள் ஆதரிக்கவும் இல்லை.

இது எப்படி இரு மாநில மோதல் ஆகும்?

தமிழ்நாட்டின் மீதான போர்

கர்நாடகம் தமிழ்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. இதுதான் உண்மை. ஆனால், இந்த போரினை எதிர்கொள்ளும் இடத்தில் தமிழ்நாட்டு மக்கள் இல்லை. (தமிழக மக்கள் தமது தன்மானத்தை 200 ரூபாய்க்கு விற்றதோடு எல்லாம் போய் விட்டது.)

தமிழ்நாட்டின் மீதான கன்னட தேசத்தின் போரினை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்திய அரசுதான் முதல் குற்றவாளி என்பது தமிழக மக்களுக்கு புரியவில்லை.

இந்த தக்குதலை முன் கூட்டியே தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தமிழக அரசு - கன்னட மக்களை காப்பாற்றும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. 'பெங்களூருவில் இருக்கும் தமிழர்களின் பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை?' என்று யாரும் தமிழக அரசைக் கேட்கவில்லை.

இந்த சிக்கல் எல்லாவற்றுக்கும் காரணமாக உள்ளவை திராவிடக் கட்சிகள் தான் என்கிற உண்மையை உணரும் நிலையில் கூட தமிழக மக்கள் இல்லை.

எனவே 'தமிழகம் கர்நாடகத்தோடு மோதுகிறது' என்பது முட்டாள் தனமான கருத்து. அப்படிப்பட்ட சூழலோ, நிலையோ தமிழ்நாட்டில் இல்லை.

தொடர்புடைய சுட்டி:

பெங்களூரு: இன்னொரு முள்ளிவாய்க்காலா?

No comments: