Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

புவி வெப்பமடைதல்: பொருத்தமில்லாத இடங்களில் "சுற்றுச்சூழல்" கருத்துகளைப் பேசுதல்.

அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, பத்திரிகை உலகில் ஒரு சோ - இவர்களைப்போன்று, பதிவுலகில் அறியப்பட்டவர் டோண்டு இராகவன். அவரது பதிவில் நான் "சம்பந்தமில்லாமல் காலநிலை மாற்றம் குறித்து" எழுதிய சில பின்னூட்ட விவாதங்கள் இவை:

டோண்டு ராகவன் பதிவு: அ. முத்துலிங்கத்தின் அமர்க்களமான வலைப்பூ
http://dondu.blogspot.com/2010/07/blog-post_26.html

சூழலியல் விஞ்ஞானி சஞ்சயன் நிகழ்த்திய உரையை அ.முத்துலிங்கம் தனது பதிவில் வெளியிட்டு, அதனை டோண்டுவும் வெளியிட்டிருந்தார். அதில்

"சுற்றுச்சூழல் கேடு பூமியில் உச்சத்தை தொட்டதும் எங்கள் தலைமுறையில்தான். பூமியை காப்பாற்றும் முழுப் பொறுப்பும் எங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவையும் வைத்துக்கொண்டு பூமியை காப்பாற்ற நாங்கள் தவறினால் அடுத்த தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் போதாது. எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்காது, ஏனென்றால் காலம் கடந்துவிடும்."

எனது கருத்து (அருள்):

வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிக அளவாக, 350 ppm தான் இருக்கலாம். (ppm-பத்துலட்சத்தில் ஒரு பகுதி) ஆனால் அது 392 ppm அளவை எட்டிவிட்டது. (300 ஆண்டுகளுக்கு முன்பு இது 275 ppm தான்.)

புவி வெப்பமடைவதை தடுக்கத் தவறியதால் ஏறக்குறைய நாம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டோம். பூமி காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பும் தவறிப் போகுமா என்பது 2010 டிசம்பரில் மெக்சிகோ நாட்டில் கூடும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தெரிந்துவிடும்."

ராம்ஜி_யாஹூ வின் கருத்து:

"நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவில் மதம், சாதி சம்பந்தம் இல்லாதா செய்திகள் பார்க்க முடிகிறது., மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
அருளின் பின்னூட்டமும் அருமை. மாற்றத்தை உங்கள் வலைப்பதிவில் இருந்து தொடங்குவோம்."

எனது கருத்து (அருள்):

"புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:

1. தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணையுங்கள்.

2. எந்த ஒரு மின்கருவியையும் தொலையுணர்வு கருவி மூலம் "standby" இல் வைக்காமல் முற்றிலுமாக அணையுங்கள்.

3. குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்துங்கள்.

4. மின்கருவிகள் வாங்கும் போது BEE முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்குங்கள்.

5. குப்பையைக் குறையுங்கள். முடிந்தவரை அதிக "Package" உள்ள பொருட்களை தவிருங்கள். கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று நெகிழிப் பைகளை தவிருங்கள்.

6. தண்ணீரை வீணாக்காதீர். முடிந்தவரை பாட்டில் தண்ணீரைப் புறக்கணியுங்கள்.

7. வீட்டில் மழைநீர் சேகரிப்பு முறையை சரியாக அமையுங்கள்.

8. புதிதாக சமைத்த உணவை சாப்பிடுங்கள். பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி உணவுகள் போன்றவற்றைத் தவிருங்கள். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உள்ளூர் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணுங்கள்.

9. போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள்."

NO என்பவரின் கருத்து:

"நண்பர் அருள் ஒன்றை விட்டு விட்டார், அது - மரங்களை வெட்டாதிருத்தல்!!

அவன்: அட, பிளாட்பாரம் கேசு அந்த ஆளு ஆனா பெயர கேட்டா கோடீஸ்வரன் எண்டு சொல்லுதான்!
இவன்: அடஅதுலே என்னங்க ஆச்சரியம், அவிங்க கூடதான் பசுமை தாயகம் அப்படின்னு ஒண்ணு நடத்துறாங்க, ஆனால் ............"

எனது கருத்து (அருள்):

அடடா...உங்கள் அறியாமையைக் காட்டிவிட்டீரே!

தனிமனிதர்கள் யாரும் வேறு வேலையில்லாமல் மரம் வெட்டிக்கொண்டிருக்கவில்லை. நீங்கள் சொல்லவருவது "காடுகள்" அழிப்பைதான் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

காடுகள் அழிக்கப்படுவதால் மட்டும் புவிவெப்பமடைவதற்கு காரணமான வாயுக்களில் 20% வெளியாகிறது. காடுகள் அழிக்கப்படுவதைதடுக்க REDD (Reducing Emissions from Deforestation and Forest Degradation) எனும் சிறப்புத் திட்டத்தை ஐ.நா.அவை செயல்படுத்தி வருகிறது. காண்க: http://www.un-redd.org/AboutREDD/tabid/582/language/en-US/Default.aspx

இந்த சிக்கலில் தனிமனிதர்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை. அதிபட்சமாக தாள்கள், காடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்கும் போது அதில் FSC எனும் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கலாம். காண்க: http://www.fsc.org/about-fsc.html

மற்றபடி தனிமனிதர்கள் மரங்களை நட்டு வளர்க்கலாம். ஆனால், "புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நீங்கள் செய்யக்கூடிய "சில எளிய செயல்கள்" என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

மரம் நட்டு வளர்ப்பது ஒரு "எளிதான செயல் அல்ல" என்பது நீங்கள் முன்பின் மரம் நட்டு வளர்த்திருந்தால் தெரியும். இன்றைய நிலையில் சென்னை போன்ற ஒரு நகரத்தில் ஒரு மரம் நட்டுவளர்க்க குறைந்தது ரூ. 500 தேவைப்படும். கூடவே சிலமாதங்கள் கண்ணும் கருத்துமாக அதனைக் கவனித்து வரவேண்டும்.

அது ஒரு எளிய செயல் அல்ல."

1 கருத்து:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

good, 1st time visiting yr blog, pls add follow option.