Pages

திங்கள், மார்ச் 06, 2017

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை: உண்மை நிலை என்ன?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது. இதுகுறித்த சில கேள்விகளும் பதிலும் கீழே:

1. ஐநா மனித உரிமைகள் பேரவையில் 34 ஆம் கூட்டத்தில் என்ன நடக்கும்?

இக்கூட்டத்தொடரில் மார்ச் 22 ஆம் நாள் இலங்கை மீதான 30/1 தீர்மானத்தின் நடவடிக்கைள் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். அதற்கு அடுத்த நாள் மார் 23 ஆம் நாள் இலங்கை மீதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படலாம்.

மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சித்தரவதை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐநா சிறப்பு தூதுவர்கள் இலங்கையின் நிலைமை குறித்த அறிக்கைகளை இக்கூட்டத்தொடரில் முன்வைத்துள்ளனர்.

2. இலங்கை மீதான தீர்மானத்தில் என்ன இருக்கும்?

இலங்கை மீதான புதிய தீர்மானத்தில் என்ன இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 2015-ல் நிறைவேற்றப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதை தொடரும் வகையில், அதற்கான கால எல்லையை நீட்டித்து புதிய தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. புதிய தீர்மானம் குறித்து பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடு என்ன?

நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசை விடுவிக்க வேண்டும், அல்லது பன்னாட்டு நீதிபதிகள் என்பதையாவது நீக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் விருப்பம் ஆகும்.

அதே நேரத்தில், 30/1 தீர்மானத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது. அதனை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில் கால அட்டவனையை உருவாக்க வேண்டும் என்பது பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கை ஆகும்.

கால நீட்டிப்பு கூடாது என்றும் ஐநா பொதுச்சபைக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும் சில தமிழர் அமைப்புகளின் கோரிக்கை ஆகும்.

4. இலங்கை அரசின் கோரிக்கை சரிதானா?

மிக மோசமான கோரிக்கையை இலங்கை அரசு முன்வைக்கிறது. இலங்கை அரசு தானே முன்னின்று 2015 கொண்டுவந்த தீர்மானத்தை தானே மறுப்பது நியாயம் அல்ல. இலங்கை அரசின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

5. பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கை சரிதானா?

சரிதான். 30/1 தீர்மானத்தில் ஒரு வார்த்தையைக் கூட கைவிடாமல், அதனை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடு மிகச் சரியானதாகும். இதற்கான குறிப்பிட்ட கால எல்லையையும் தீர்மானிக்க வேண்டும் என்பதும் சரியான கோரிக்கையே ஆகும். ஐநா மனித உரிமைகள் ஆணையரும் தனது அறிக்கையில் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

6. தமிழர் அமைப்புகளின் கோரிக்கை சரிதானா?

இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியானது. ஆனால் 'கால அவகாசம்' என்கிற வார்த்தையை தமிழர் அமைப்புகள் குழப்பமான பொருளில் பயன்படுத்துகின்றன.

7. 'கால அவகாசம்' என்கிற வார்த்தையில் என்ன குழப்பம்?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை பொருத்தவரை, கால அவகாசம் என்பது சரியான பொருளில் பயன்படுத்தபடவில்லை. ஐநா மேற்பார்வைக்கான காலத்தை நீட்டிப்பது என்பதையே பலரும் இலங்கைக்கான கால அவகாசம் என தவறாக பொருள் கொள்கின்றனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடருடன் இலங்கை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. இதனை எதிர்வரும் கூட்டங்களுக்கு விரிவுபடுத்தி, இலங்கையை பன்னாட்டு நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும். இதுதான் இப்போது மிக முக்கியமானது ஆகும். மேலும், ஏற்கனவே உள்ள தீர்மானத்திலுருந்து கீழிறங்காமல், மேலும் வலுவான நிலையில் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பும் பங்களிப்பும் தொடர வேண்டும்.

அதாவது, இப்போது மனித உரிமைகள் பேரவையில் பேசப்படும் கால நீட்டிப்பு என்பது - ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக்குத்தான். இலங்கை அரசுக்கு அல்ல.

8. அப்படியானால் 'இலங்கை அரசுக்கு கால நீட்டிப்பு' வழங்கலாமா?

ஐநா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் வேண்டும் என்பதை இலங்கைக்கான கால நீட்டிப்பு என்பதாக புரிந்துகொள்வது ஒரு தவறான பார்வை.

உண்மையில் 30/1 தீர்மானத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டுக்கு கால எல்லை எதுவும் வகுக்கப்படவில்லை. இலங்கை அரசுக்கு 25 செயல் திட்டங்கள் அளிக்கப்பட்டன. சில செயல்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக்கூடியவை. சில செயல்திட்டங்களை செயலாக்க ஒரு சிலஆண்டுகள் கூட ஆகலாம். எடுத்துக்காட்டாக, புதிய அரசியல் சாசனம், இராணுவத்தை மாற்றியமைத்தல், அரசியல் தீர்வு என்பனவெல்லாம் 18 மாதத்தில் முடியக்கூடிய வேலைகள் இல்லை.

எனவே, 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதை 18 மாதங்கள் கடந்து 34 ஆம் கூட்டத்தில் ஆராய வேண்டும் என்றுதான் 2015 அக்டோபர் தீர்மானம் கூறியது. மாறாக, 18 மாதங்களில் 25 செயல்திட்டங்களையும் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறவில்லை.

(HRC/RES/30/1: Requests the Office of the High Commissioner to continue to assess progress on the implementation of its recommendations and other relevant processes... and to present ... a comprehensive report followed by discussion on the implementation of the present resolution at its thirty-fourth session)

9. ஐநா 2015 தீர்மானத்தின் தற்போதைய நிலைமை என்ன?

2015 தீர்மானத்தின் நிலைமை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையர் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'கவலை கொள்ளும் அளவுக்கு இலங்கை அரசு காலதாமதம் செய்வதாகவும், எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றைக்கூட செய்யவில்லை எனவும்' கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். எனவேதான், உரிய கால வரையறையுடன் கூடிய செயல்திட்டம் தேவை என்று கூறியுள்ளார்.

(HRC/34/20) Present a comprehensive strategy on transitional justice, with a time-bound plan to implement the commitments welcomed by the Human Rights Council in its resolution 30/1 and the recommendations contained in the present and previous reports of the High Commissioner to the Council

இதே கோரிக்கையை பல பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் முன்வைத்துள்ளன.

அதாவது - இதுவரை கால அட்டவணை இல்லாத நிலையில் இலங்கை மீதான தீர்மானம் இருந்தது. இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஒரு கால அட்டவணையை கோரியுள்ளார். எனவே, ஐநாவின் கண்காணிப்பு தொடர வேண்டும் என்பதும், கால அட்டவணை வேண்டும் என்பது நீதிக்கான பயணத்தில் ஒரு முன்னேற்றமே ஆகும்.

10. ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை மீது குற்றவிசாரணைக்கு உத்தரவிட முடியாதா?

முடியாது. அந்த அதிகாரம் அவருக்கு இல்லை. ஐநா மனித உரிமை பேரவைக்கும் கூட அந்த அதிகாரம் இல்லை. ரோம் உடன் படிக்கையில் கையொப்பமிடாத நாடுகள் மீது பன்னாட்டு குற்றவிசாரணைக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் மட்டுமே உத்தரவிட முடியும்.
11. ஐநா மனித உரிமைகள் ஆணையர் கேட்டபடி கால அட்டவணையாவது உருவாகுமா?

அப்படியும் கூறிவிட முடியாது. ஐநா மனித உரிமைகள் ஆணையர் தனது பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஐநா மனித உரிமைகள் பேரவைதான் முடிவெடுக்க வேண்டும். அதாவது, அடுத்தக்கட்டத்தை தீர்மானம் செய்ய வேண்டியது 47 உறுப்பு நாடுகள்தான்.

ஐநா மனித உரிமைப் பேரவை என்பது ஒரு அரசியல் அவை மட்டுமே. அது நீதிமன்றமும் அல்ல. எனவே, பன்னாட்டு சட்டமும் நியாயத்துக்கான கோரிக்கைகளும் ஒருபக்கம் இருந்தாலும் -  பன்னாட்டு புவிஅரசியல் வியூகங்களுக்கு ஏற்பவும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் போக்கினை கவனித்தும், தத்தமது நாடுகளின் நலனுக்கு ஏற்பவுமே உறுப்பு நாடுகள் முடிவு செய்யும்.

12. இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு 'மாற்ற' வேண்டுமா?

இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு 'மாற்ற' வேண்டும் என்பது தவறான பொருள்படும் கோரிக்கை ஆகும். மாறாக, ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.

அதாவது, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் நீட்டிக்கப்படும் அதே நேரத்தில், இதனை ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கும் விரிவாக்க வேண்டும்.

13. ஐநா பொதுச்சபைக்கு மாற்றுவதால் பயன் இருக்குமா?

உடனடிப் பலன் எதுவும் இருக்காது. ஏனெனில், ஐநா பொதுச்சபையானது இதனை பாதுகாப்பு மன்றத்துக்கு பரிந்துரை செய்யலாம். அங்கு சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தால் தடை செய்யும். இப்படியாக பல ஆண்டுகள் நீடிக்கலாம். அதே நேரத்தில் இலங்கை விவகாரம் பன்னாட்டு அரங்கில் ஒரு பேசு பொருளாக இருப்பது மட்டும் ஒரு பயனாக இருக்கக் கூடும்.

14. ஐநா மனித உரிமைப் பேரவை பொதுச்சபைக்கு பரிந்துரைக்குமா?

இந்த 34 ஆம் கூட்டத்தொடரில் அப்படி ஒரு பரிந்துரையை ஐநா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளாது. ஏனெனில், இப்போது உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் ஒரு நாடுகூட இந்தக் கோரிக்கையை ஏற்பதாக இதுவரை கூறவில்லை.

15. ஐநா மனித உரிமைகள் பேரவை 30/1 தீர்மானத்தின் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்பது சரியா?

மிகத் தவறான கோரிக்கை. இதற்கு பதிலாக 'இலங்கை அரசுக்கு முழு விடுதலை அளிக்க வேண்டும்' என்று நேரடியாகவே சொல்லி விடலாம். ஐநா மனித உரிமைப் பேரவையில் மார்ச் 23 ஆம் நாள் இலங்கை மீது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் - இலங்கை அரசினை கேள்வி கேட்க இனி எவருமே இருக்க மாட்டார்கள்.

அதாவது, அடுத்த தீர்மானம் வராவிட்டால் - பன்னாட்டு குற்றவியல் விசாரணை நெருக்கடியில் இருந்தும், ஐநாவின் நேரடி கண்காணிப்பில் இருந்தும் இலங்கை ஒரேயடியாக விலக்கப்பட்டுவிடும். இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் முழுவதுமாக தப்பி விடுவார்கள்.

15. இப்போது என்ன தான் தேவை?

தமிழீழம் அமைய வேண்டும் என்பது ஒரு உறுதியான லட்சியம். அதற்காக ஈழத்தமிழர் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கை நடக்க வேண்டும் என்றால் - இலங்கை விவகாரம் சர்வதேச அரசியலில் நீடித்திருப்பது முக்கியம் ஆகும்.

ஐநா அவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு நீடிக்க வேண்டும் என்றால் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் காலத்தை நீட்டிக்கும் புதிய தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தின் ஒரு வார்த்தையைக் கூட மாற்றவோ நீர்த்துப்போகச் செய்யவோ கூடாது. மாறாக, அதன் அனைத்து செயல்திட்டங்களுக்கும் உறுதியான கால எல்லையை கட்டாயமாக்க வேண்டும். மேலும், இத்தீர்மானத்தின் செயல்பாட்டை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் கண்காணித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மீது தொடர் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் - இவை அனைத்தும் புதிய தீர்மானத்தில் இடம் பெற வேண்டும்.

மேலும், இலங்கை விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தலாம்.

16. வடகொரிய விவகாரம் போன்று இலங்கையை கையாளக் கூடாதா?

வடகொரியா போன்று இலங்கையையும் நடத்த ஐநா அவையைக் கோரலாம். ஆனால், வடகொரிய விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கும் பாதுகாப்பு மன்றத்துக்கும் பரிந்துரை செய்ததால், ஐநா மனித உரிமைப் பேரவையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

வட கொரிய அதிபர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் பொதுச்சபைக்கும், அதன் வழியே பாதுகாப்பு மன்றத்துக்கும் ஐநா மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்தது. அந்த விவகாரம் முன்று ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஆண்டுதோரும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணைக்கு பரிந்துரை செய்யப்படவில்லை.

இதனிடையே - வடகொரியா மீது ஆண்டுதோரும் பழைய தீர்மானங்களை தொடர்ந்து ஐநா மனித உரிமைப் பேரவையும் நிறைவேற்றி வருகிறது. 2016 ஆம் ஆண்டில் இரண்டு சிறப்பு நிபுணர்களை நியமனம் செய்து, வடகொரிய அதிபரை சர்வதேச சட்டங்களின் கீழ் தண்டிப்பதற்கான வழிகளை ஆராயுமாறு பணித்தது. தென் கொரியாவில் ஒரு சிறப்பு அலுவலகத்தையும் அமைத்துள்ளது.

அதாவது, பொதுச்சபைக்கும், அதன் வழியே பாதுகாப்பு மன்றத்துக்கும் வடகொரிய விவகாரத்தை பரிந்துரைத்த பின்னரும் கூட - தமது பழைய நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கும் தீர்மானங்களை ஐநா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் - இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தம் மென்மேலும் அதிகமாக வேண்டும் என்பதே முதன்மையான தேவை ஆகும்.
படம்: ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு எதிராக இலங்கை சிங்கள இனவெறியர்களின் போராட்டம்.

குறிப்பு: ஐநா பாதுகாப்பு சபைக்கு போனால், இனப்படுகொலை உறுதியாகும். அதன் வழியே பொது வாக்கெடுப்பு நடக்கும். தமிழீழம் அமையும் என்கிற நம்பிக்கை பரவலாக பேசப்படுகிறது. ஆனால், விடுதலைக்கான பாதை இப்படி நேரானதாகவும் தெளிவானதாகவும் இல்லை என்பதே உண்மை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இப்போதே, உடனடியாக 'ஐநா பொதுச்சபைக்கு பரிந்துரைக்கும் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டால் கூட, ஐநா பாதுகாப்பு அவையில் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற வாய்ப்பு இல்லை.  ஏனெனில், அவற்றை மிக எளிதாக வீட்டோ அதிகாரம் மூலம் சீனாவும் ரஷ்யாவும் முறியடித்துவிடும்.

ஒருவேளை அவ்வாறு ஒரு தீர்மானம் வந்த பின்பும் கூட - அது நேரடியாக பொது வாக்கெடுப்புக்கு அழைத்துச் செல்லாது. இனப்படுகொலை நடந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற நேரடி விதிகள் எதுவும் இல்லை.

ஒரு புதிய நாடு அமைவது அந்த காலத்துக்கு ஏற்ற புவி அரசியல் சூழலைப் பொருத்துதான் சாத்தியம் ஆகும். குறிப்பாக, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் மட்டுமே சாதகமான புவிஅரசியல் சூழலை உருவாக்கும்.

நீதிக்கான போராட்டம் என்பது ஒரு நெடிய பயணம். சர்வதேச அரங்கில் இப்போது தமிழர்களுக்கான இடம் ஐநா மனித உரிமைப் பேரவையில் மட்டுமே இருக்கிறது. இதனை மென்மேலும் வலிமையாக்கி கொண்டு - அடுத்தக் கட்டத்திற்கும் முயற்சிக்க வேண்டும்.

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்." - குறள்

(செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.)

கருத்துகள் இல்லை: