நடப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான மக்கள் தொகை புள்ளி விவரங்களையும் அரசு திரட்டும் என்று மத்திய அரசு அறிவித்தது முதல், இது நாட்டிற்குக் கேடு பயக்கும் என்றும், ஜாதிச் சண்டைகளை இது பெருமளவில் ஏற்படுத்தும் என்றும் கூறி ஊடகங்கள் ஒரு பெரும் தவறான பரப்புரையை மேற்கொண்டன. தற்போது நிலவும் குழப்பத்தைப் போக்கி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர்களுக்கான நலஉதவித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், ஜாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் மிகுந்த உதவியாக இருக்கும் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பது என்ற முடிவை அரசு தானாக மேற்கொள்ளவில்லை. நாடு முழுவதிலும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் தலைவர்கள் அதைக் கோரினர். ஜாதிவாரி மக்கள் தொகையின் சரியான புள்ளி விவரங்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு மக்கள் தொகைக் கணக்-கெடுப்பை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள உச்ச நீதி-மன்றம் ஆணையிட்டு இருந்தது.
2001 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் கூட இவ்வாறு ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற பலமான கோரிக்கை இருந்தது. இந்தப் புள்ளி விவரங்கள் திரட்டப்படும் என்று உதவிப் பிரதமர் எல்.கே.அத்வானி கூறியது பதிவாகியுள்ளது. ஆனால் வலதுசாரி ஆதிக்க சக்திகள் குறிப்பாக சமூக இயலாளர்கள் மற்றும், மனித-இயல்பு இயலாளர்களின் குழு ஒன்று, அத்தகைய கணக்கெடுப்பு ஆளும் உயர்ஜாதி மற்றும் சமூகங்களின் நலனுக்கு எதிரானது என்பதால், அதை மேற்கொள்ள வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆலோசனை கூறினர்.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உயர்ஜாதியினர்தான் எதிர்க்கின்றனர்
அதிகார மய்யங்களை இன்னமும் தங்களின் பிடியில் வைத்திருக்கும் உயர்ஜாதியினரிடமிருந்துதான் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்-கான எதிர்ப்பு வருகிறது. இதர ஜாதியினர் எப்போதுமே அதை எதிர்த்தது இல்லை. கொள்கை வகுப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் மக்கள் தொகை தெரிய வந்தால், சமூகம் மேலும் பிளவுபட்டுப்போகும் என்ற விவாதம் தவறாக வழிகாட்டுவதாகும்.
தங்கள் ஜாதி மக்கள் தொகை அதிகம் என்று ஒவ்வொரு ஜாதியினரும் கூறுவதை எவ்வாறு மறுக்க முடியும்?
ஜாதி கலாச்சாரம் நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இருக்கிறது. உயர்ஜாதி மக்கள் மொத்தத்தில் 15 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர் என்று தாழ்த்தப்பட்ட பிரிவினர் கூறுகின்றனர். இது தவறாகவும் கூட இருக்கலாம். கீழ் ஜாதிகள் பலவற்றில் மக்கள் தொகை எண்-ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்படு-கின்றது. ஒவ்வொரு ஜாதியும் தங்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று உரிமை கோரி தங்களுக்குச் சேரவேண்டிய சரியான பங்கினை அளிக்கக் கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை தவறானது என்று அவர்களுக்கு எவ்வாறு கூறுவது? அன்றாட வாழ்க்கை முறையில் ஜாதி என்பது இது போன்ற ஒரு முக்கியமான அம்சமாக விளங்கும் நிலையில், உங்கள் ஜாதியில் இவ்-வளவு மக்கள் தொகைதான் உள்ளது, இதற்கு மேல் நீங்கள் உரிமை கோரமுடியாது என்று அவர்களிடம் சொல்வதற்கு, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் கையில் தயாராக இருக்க வேண்டும்.
ஜாதியின் அடிப்படையிலேயே அனைத்தையும் விநியோகிக்க நம்மால் முடியாது என்பது உண்மைதான். கல்வி அறிவு பெற்றவர் விகிதாசாரம் மற்றும் பிரதிநிதித்துவ அளவு ஆகியவை குறித்த ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்தான் சரியான அடிப்படையாக இருக்கும். மக்கள் தொகைக் கணக்கை நாம் ஒரு முறை சொல்லிவிட்டால், அந்த ஆதாரத்திற்கு எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது.
மேல் ஜாதியினரின் அச்சம்
கீழ் ஜாதி மக்கள் தொகை பற்றிய விரிவான புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்து விட்டால், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் சரியான அளவு விகிதாசார பிரதி-நிதித்துவம் கோருவதற்கான அடிப்படையாக ஆகிவிடுமே என்று உயர்ஜாதியினர் அஞ்சுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் ஒரு முறை கிடைத்துவிட்டால், இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 விழுக்காடு உயர் அளவு பற்றி கேள்வி எழுப்பப் பட-லாம். ஒட்டு மொத்த தாராளமான மக்களாட்சி நடைமுறை நீடித்து நிலைக்க இது உதவும். எண்ணிக்-கையின் அடிப்படையிலான மக்களாட்சி இன்னும் ஆழம் நிறைந்ததாக ஆகிவிடும்.
மக்களாட்சி முறையே எண்ணிக்கையின் அடிப்படையிலானதுதானே?
கம்யூனிசம் போல் அல்லாமல் மக்களாட்சி என்பது உண்மையில் ஓர் எண்ணிக்கை முறையாகும். ஓர் அரசை ஏற்படுத்தும்போது கம்யூனிசம் எண்ணிக்கையைப் பார்ப்பதில்லை. மக்களாட்சி முறையில், அரசு ஒரு தேர்தல் நடைமுறை மூலம் உருவாக்கப்படுகிறது. இது போன்றதொரு நடைமுறையில், பால், இனம், மதம், ஜாதி போன்ற அனைத்து கோணங்களிலும் மக்கள் எண்ணப்படவேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையிலான மக்களாட்சி முறையில், சமூகத்தின் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரமுடியும்.
மதவாரி கணக்கெடுப்பு இல்லாமல் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்று எப்படி தெரியவந்தது?
மதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதால், இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் உரிமை கோருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாடு பிரிவதைத் தடுக்க முகம்மது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்க வேண்டும் என்று காந்தி கேட்டபோது, இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு நாடு இந்தியா என்பதால், ஒரு முஸ்லிம் பிரதமரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜவஹர்லால் நேருவும், சர்தார் படேலும் கூறினர். இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள் என்ற கண்ணோட்டம் எங்கிருந்து வந்தது? அது எண்ணிக்கையில் இருந்து வந்தது.
எண்ணிக்கை அடிப்படையில் பெண்கள் அதிகாரத்துக்கு வரமுடியாதா?
இதே வாதத்தையே வைத்துக் கொண்டு, மதப் பிரிவினையைக் கடந்து, பெண்கள் தங்களை எண்ணிக்கொண்டு, ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தால், அதில் என்ன தவறு இருக்க முடியும்? மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 50 விழுக்காடு இருக்கின்றனர். பாலியல் மக்களாட்சிக்கு போராட அவர்கள் விரும்பினால், அவர்களாலும் அதிகாரத்திற்கு வரமுடியும். அப்படிப் பார்த்தால், பால் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் எழவேண்டும் அல்லவா?
மக்கள் ஆட்சி முறையில் உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டு விடவும் கூடும் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், கீழ் ஜாதி மக்களின் உறுதியான ஆதரவுடன் இந்தியாவின் மக்களாட்சி சிறப்பாக செயல்படும். தங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்களின் பங்கைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். இந்த மாதிரியான ஒரு மாற்றம் ஏற்பட்டால், மக்களாட்சி முறையில் இருந்தே உயர்ஜாதியினர் தனிமைப்படுத்தப்பட்டுவிடக்கூடும். பெண்களால் ஆளப்படும் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ பெண்களாட்சி முறை என்று அவர்களால் அழைக்க முடியுமா?
அனைத்து கோட்பாடுகளுமே, வசதியான இடம் என்று அறியப்பட்டுள்ள ஒரு வசதியின் மீது கட்டமைக்கப்பட்டவைதான் என்று ஆழ்ந்த சிந்தனையின்பால் வெளிப்பட்ட சமூகமனோதத்துவம் கூறுகிறது. சிவப்பு நிறம் கொண்ட உயர்ஜாதியினர் வெள்ளையர் சமூகத்தில் வாழ்ந்தால், அவர்கள் காணும் சிவப்பு நிறத்தின் அடியில் கருப்பு நிறமும் மறைந்து இருப்பதைக் காண்பர். வெள்ளையர் சமூகத்தில் சிவப்பு நிற மனிதர்கள் இணக்கமாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆனால், இந்தியாவில் தங்கள் சிவப்பு நிறத்தைப் பெருமையாகக் கருதும் அவர்கள் கருப்பு நிறத்தவர்களை இணக்கமாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன் இந்தியாவில் ஜாதியே இருக்கவில்லையா?
ஆங்கிலேயர் காலனி நாடுகளில் மேற்கொண்ட நடைமுறைதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைக் கணக்கிடுவது என்று உயர்ஜாதி அறிவாளிகள் பலர் கூறுகின்றனர். ஆங்கி-லேயர் இத்தகைய ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முறையை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு இந்தியாவில் ஜாதியே இல்லாமல் இருந்தது போல அவர்கள் பேசுகின்றனர். இந்த வாதத்தை வைத்துப் பார்த்தால், மதவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தும் முன், இந்தியாவில் மதங்களே இல்லாமல் இருந்திருக்க வேண்டுமே? இது போன்ற கருத்துப் பார்வையற்ற கரும்புள்ளிகள் இந்தியாவில் பல இடங்களில் இருப்ப-தால்தான், நாம் இன்றும் அறிவியல் களத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.
நமது மக்களாட்சி நடைமுறை பலம் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மட்டுமன்றி அனைத்து ஜாதியினருமே கணக்கிடப்பட வேண்டும். எனது கோட்பாடும் கரும்புள்ளியாக இருக்கலாம்; ஆனால் அது தீங்கை நீக்கும் ஓர் எதிர்மறை பாதிப்பாகவும் இருக்கக் கூடும்.
நன்றி: டெக்கான் கிரானிகல்,
11.6.2010 இல்காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்--"விடுதலை” 14-6-2010
11.6.2010 இல்காஞ்சா அய்லய்யா அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்--"விடுதலை” 14-6-2010
நன்றி: தமிழ்ஓவியா
http://thamizhoviya.blogspot.com/2010/06/blog-post_15.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக