நல்லவேளையாக மலைவாழ் பழங்குடிமக்கள் சாதியில் சிக்கவில்லை. (ஒரு சாதி உயர்ந்தது மற்றொரு சாதி தாழ்ந்தது என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல - மனிதர் அனைவரும் சரிசமமே.)
இந்த இரு பிரிவினர் தவிர வேறு எந்த ஒரு சாதியைப் பற்றி பேசினாலும் - அந்த சாதியை ஒருசிலர் "மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதி" எனவும், வேறு சிலர் "மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதி" எனவும் ஏட்டிக்குப் போட்டியான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, ஆதிக்க சாதி என்பது எது? என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது.
ஆதிக்கம் என்பது 'நீ தாழ்ந்தவன் - நான் உயர்ந்தவன்' என்பது மட்டுமல்ல. கூடவே கல்வி, வேலை, பொருளாதாரம், அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வளம், வாய்ப்பு, அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே உண்மையான ஆதிக்கம்.
இன்றைய நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி - தமிழ்நாட்டின் "வளம், வாய்ப்பு, அதிகாரம்" அனைத்தும் அவரவர் சாதி மக்கள் தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இந்த நிலைபாட்டை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் வரவேற்கும் சாதிகள் ஆதிக்கத்திற்கு எதிரான சாதிகள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் எதிற்கும் சாதிகள் ஆதிக்க சாதிகள், என்று அடையாளம் காண்பதே சரியாக இருக்கும்.
2 கருத்துகள்:
சாதிவாரிக் கணக்கெடுப்பு நிச்சயம் தேவை.
விளக்கம் எளியதாக இருக்கிறது. கணக்கெடுப்பது கூட ஓரளவுக்கு எளியதாகத்தான் இருக்கும். ஆனால் "வளம், வாய்ப்பு, அதிகாரம்" அனைத்தும் சாதி பிரதிநிதித்துவப்படுத்தி பகிர வேண்டும் என்கிறீர்களே, அதுதான் நினைத்துப் பார்க்கவே பகீரென்று இருக்கிறது. முதலில் சில சந்தேகங்களை நிவிர்த்தி செய்யுங்கள்.
(1) வளம், வாய்ப்பு, அதிகாரம் இவை இப்போதுள்ள வளம், வாய்ப்பு, அதிகாரம் ஆகியவையா? இனி எதிர்காலத்தில் உருவாக்கப்படப் போகின்றன்றவையா? உதாரணமாக, நிலவளத்தை எடுத்துக் கொள்வோம். இப்போது இருக்கும் நிலவளம் எதிர்காலத்தில் அதிகரிக்கும். இன்று இருக்கும் நிலவளத்தை சாதி ரீதியாக பிரித்து வழங்கச் சொல்கிறீர்களா? அல்லது எதிர்காலத்தில் அதிகரிக்கப் போகும் வளம் சாதி ரீதியாக பிரித்து வழங்கச் சொல்கிறீர்களா?
(2) வளம், வாய்ப்பு ஆகியன பொது உடைமையாக இருப்பன மட்டுமா? அல்லது, தனி உடைமைக்கும் பொருந்துமா? மறுபடியும் நிலவளத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக முதல்வரின் 2-ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் வெற்றி பெறாததன் பின்னணியைப் பார்ர்கும் போது, பொது உடைமை நிலவளம் மாநிலத்தில் அதிகமில்லை என்றே தோன்றுகிறது. பெரும்பாலான நிலவளம் தனி உடைமையாக விளங்கும் நிலையில் அதை எப்படி சாதி ரீதியாக பங்கிடுவீர்கள்?
வாய்ப்பு என்ற வகையில் வேலை வாய்ப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மறுபடியும், அரசு வேலை வாய்ப்பை மட்டும் பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்கிறீர்களா, அல்லது தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட வற்புறுத்துவீர்களா? சுய வேலை வாய்ப்புகள் குறித்து என்ன செய்வதாக திட்டம்? வணிகத் துறையில் நாடார்கள் போன்ற சில சாதியினர் தங்களது சுய முயற்சியாலும், கடும் உழைப்பாலும் தங்களது சாதி மக்கட்தொகைக்கு மேலேயே பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்களே, அதை எப்படி சமப்படுத்த திட்டமிட்டிருக்கிறீர்கள்?
(3) சாதிவாரிக் கணக்கெடுப்பும், வகுப்புவாரிப் பங்கீடும் 2010ற்கு மட்டும்தானா, அல்லது 2020, 2030, 2040 என்று தொடருமா? எந்த ஆண்டு வரை இது தேவை? 2010ல் பிரதிநிதித்துவம் அதிகம் இருந்ததால், வளம், வாய்ப்பு, அதிகாரம் அதிகம் பெற்ற ஒரு சாதியின் மக்கள் தொகை 2030-ல் குறைந்தால், அவர்களது வளம், வாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றைக் குறைத்து விடுவீர்களா? உதாரணமாக, அவர்களுக்கு 2010ல் நிலவளம் வழங்கப்பட்டிருந்தால், 2030ல் அதைக் கொஞ்சம் குறைத்து விடுவீர்களா? ஒரு சாதிக்கான நிலம் என்று வரையறை செய்வது எப்படி?
மேற்கண்ட சந்தேகங்கள் தனிப்பட்ட ஒருவனான எனக்குத் தோன்றியவையே. நான் பிறந்த சாதிக்கும் இந்த சந்தேகங்களுக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் சிறுபான்மையிலும் சிறுபான்மையான சூத்திர சாதிகள் ஒன்றில்தான் நான் பிறந்தேன். சாதிவாரிக் கணக்கெடுப்பையும், வகுப்புவாரிப் பங்கீட்டையும் ஆதரித்தோ, எதிர்த்தோ இந்த சாதி ஒரு நிலைப்பாட்டிற்கு வரப் போவதுமில்லை. அப்படி ஒரு நிலைப்பாடு எடுத்தால் கூட அதனால் எந்த வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. நான் பிறந்த சாதி உங்களது நிலையின் அடிப்படையில் ஆதிக்க சாதி என்பீர்களா, ஆதிக்கத்திற்கு எதிரான சாதி என்பீர்களா?
தயவு செய்து நான் உங்களது கருத்துக்களை கேலி செய்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நீண்ட நெடுங்காலமாக அடிமைகளாக நடத்தப்பட்ட சாதிகளுக்கு கல்வி, வேலை, அரசியல் அதிகாரம் முதலியவற்றில் தனி ஒதுக்கீடு செய்து, அவர்களை மேலே கொண்டு வருவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த முன்னேற்றம் விரைந்து நடத்தப்பட்டு, சாதியடிப்படையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு, விரைவில் தகுதியடிப்படையில் மட்டுமே வளமும், வாய்ப்புகளும், அதிகாரமும் அமைய வேண்டுமென்பது என் விருப்பம். நீங்கள் பரிந்துரை செய்யும் வகுப்புவாரிப் பங்கீடு, இந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைவது மட்டுமல்லாமல், நடைமுறைச் சாத்தியமில்லாதது என்றும், பலவந்தமாக நடைமுறைபடுத்தப்பட்டால், பலவித சமூக, பொருளாதார சீர்குலைவுகளுக்கும் வழி வகுக்கும் என்று தோன்றுகிறது.
எனது சந்தேகங்களுக்கு நீங்களே முழுசாக பதிலளிக்க வேண்டுமென்பதில்லை. சுட்டிகள் இருந்தால் போதுமானது.
கருத்துரையிடுக