Pages

சனி, நவம்பர் 27, 2010

பீகாரில் தோற்ற சாதி = ஆதிக்க சாதி வெறியர்களின் சதி!

பீகார் தேர்தலில் நிதீஷ்குமார் வெற்றி பெற்றதை "சாதி தோற்றது, வளர்ச்சி வென்றது" என்று பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன. இது உண்மையை மூடிமறைக்கும் மேல்சாதி சதியே அன்றி வேறல்ல! - என்று நான் எனது பதிவில் எழுதியிருந்தேன். (பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?)

ஐக்கிய சனதாதளத்தின் வெற்றியை "சாதியின் தோல்வி" என்று பேசுவது பித்தலாட்டம் என்று நான் கூறியிருப்பதற்கு மறுப்பு ஓசை பதிவில் வந்துள்ளது: தணியுமோ சாதீய வெறி..

அதில் "சாதீயை கடந்து, மதத்தை கடந்து நேர்மையுடன் தில்லுமுல்லற்ற தேர்தல் மூலம் வென்று இருக்கிறார் (நிதீஷ்குமார்).  இது பிடிக்காத சிலர், அவரது வெற்றியையும் சாதீய கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். என்ன பெரிய வளர்ச்சி, என்ன பெரிய வெற்றி என்கின்றனர். அது நிச்சயம் துரதிருஷ்டவசமானது." என்று கூறப்பட்டுள்ளது.

ஓசை பதிவிற்கு எனது மறுப்பு:

1. நிதீஷ்குமாரின் வெற்றியை நான் கொச்சைப்படுத்தவில்லை. அவருக்கு எதிராகவும் பேசவில்லை. "தோற்றுப்போன லாலு சாதி வெறியர், வெற்றி பெற்ற நிதீஷ்குமார் சாதி கடந்தவர்" என்று பேசுவது என்ன நியாயம்? என்பதுதான் எனது கேள்வி. நிதீகுமாரோ அவரது கட்சியோ எந்த விதத்தில் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி? அதுவும் சாதிவாரி உரிமைக்காக போராடுகிற கட்சி என்பதுதானே உண்மை.

சாதி மறுப்பு பேசும் ஆதிக்க சக்திகள் - வெற்றி பெற்றவர்களை தங்களது ஆளாக மாற்றும் முயற்சி இது இல்லையா? ஒருவேளை நிதீஷ்குமார் தனியார்துறை இடஒதுக்கீட்டை கொண்டுவந்தால் அவர் உடனே சாதிவெறியர் ஆக்கப்பட மாட்டாரா?

நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காகவும், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டும் போராடும் கட்சி ஐக்கிய சனதாதளம். பிற்படுத்தப்பட்டோருக்காக போராடும் தலைவர்களில் முன்னிலையில் நிற்பவர் ஐக்கிய சனதாதளத்தின் தலைவர் சரத் யாதவ்.

நாடாளுமன்றத்தில் சரத்யாதவையும் அவரது கட்சியையும் சாதி வெறியர்களாக சித்தரித்த அதே பத்திரிகைகள் - இப்போது பீகாரில் மட்டும் அவரது கட்சியை சாதிக்கு எதிரான கட்சியாக சித்தரிப்பது ஏன்?

பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியும் (லாலு) தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சியும் (பாஸ்வான்) பீகாரில் தோற்றுப்போனதாக எழுதும் பத்திரிகைகள் - வெற்றிபெற்ற கட்சியும் (நிதீஷ்) ஒரு பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சிதான் என்கிற உண்மையை மறைப்பது ஏன்?

பீகாரில் சாதி தோற்றது உண்மையானால் - அங்கு காங்கிரஸ் கட்சிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். சாதிக்கு அப்பாற்பட்ட தலைவர் ராகுல் காந்தியின் கட்சி வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது ஏன்?

2. வளர்ச்சிக்குதான் மக்கள் வாக்களித்தார்கள் என்பது உண்மையானால் - நிதீஷ்குமாரைப் போலவே, மத்திய பிரதேசத்தின் திக் விசய சிங்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் கூடத்தான் வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள். அவர்கள் தோற்றது ஏன்? உத்திரபிரதேசத்தில் மாயாவதி மாபெரும் வெற்றி பெற்றாரே - அதற்கு பின்னால் இருந்தது சாதியா? வளர்ச்சியா?

3. மதவாதத்தையும் மதசார்பின்மையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக ஒப்பிடலாம். தீவிர முதலாளித்துவத்தையும் தீவிர பொதுவுடமையையும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கூறலாம். அது போல சாதி பேசுவதையும் வளர்ச்சியையும் எதிரானதாக எதன் அடிப்படையில் ஒப்பிடுகிறார்கள்?

நீடித்த வளர்ச்சி என்பது ஒரு கொள்கை. வளர்ச்சிக்கு ஆதாரமான சுற்றுச்சூழல் காக்கப்பட்டால்தான் வளர்ச்சி நீடிக்கும் என்பது இதன் அடைப்படை.  எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பேசினால் அது வளர்ச்சியை எதிர்ப்பது ஆகாது. அதாவது, ஒருகட்சி ஒரே நேரத்தில் வளர்ச்சிக்காகவும் - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் பேச முடியும்.

அதுபோலத்தான் வகுப்புவாரி உரிமைக் கொள்கையும். வளர்ச்சியின் பலன் ஒருசிலரிடம் சேராமல் அது எல்லோருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை. வளர்ச்சிக்காகப் பேசும் ஒரு கட்சி சமூக நீதிக்காகவும் பேச முடியும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

ஆனால், ஆதிக்க சாதிவெறி பத்திரிகைகள் சமூகநீதிக் கோள்கைக்கு சாதிச்சாயம் பூசி அதனை வளர்ச்சிக்கு எதிராக நிறுத்துகின்றன. இதுஒரு பித்தலாட்டம் அல்லாமல் வேறு என்ன?

உண்மையில் ஒருதேர்தலில் வெற்றி தோல்விக்கு பல காரணங்கள் இருக்கும். அதில் வளர்ச்சிக்கும் ஒரு பங்கு இருக்கும், அவ்வளவுதான். சாதியின் தாக்கம் மாநிலத்துக்கு ஏற்ப மாறுபடும். மேற்கு வங்கத்திலோ, குஜராத்திலோ சாதிக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருக்காது. ஆனால், உத்திரபிரதேசம், பீகாரில் அதற்கு முக்கிய பங்கு உண்டு.

சாதி தோற்றது என்று பத்திரிகைகள் எழுதுவது ஒரு போலிவேடம், சதிச்செயல். இதன் மூலம் சமூகநீதிக் கொள்கைக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என்கிற மாயத்தோற்றத்தை அவை விதைக்கின்றன.

அதாவது - நிதீஷ் வென்றார், லாலு தோற்றார். வளர்ச்சி வென்றது, சாதி தோற்றது - எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, தனியார் துறை இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் இனி எடுபடாது - என்கிற மாயத்தோற்றத்தை பத்திரிகைகள் எற்படுத்த முயல்கின்றன.

இந்த பிரச்சாரத்தை "ஆதிக்க சாதி வெறியர்களின் தொடர்சதியின் ஒரு அங்கம்" என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

9 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

// வெற்றிபெற்ற கட்சியும் (நிதீஷ்) ஒரு பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சிதான் என்கிற உண்மையை மறைப்பது ஏன்?//

நிதீஷ் குமாரும் ஒரு ஜாதி கட்சி தலைவர்தான் என்பதில் ரகசியம் எதுவும் இல்லையே.


// பீகாரில் சாதி தோற்றது உண்மையானால் - அங்கு காங்கிரஸ் கட்சிதானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். சாதிக்கு அப்பாற்பட்ட தலைவர் ராகுல் காந்தியின் கட்சி வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது ஏன்?//

அப்படி வாங்க வழிக்கு....... Let the cat out of the bag!!

யார் சொன்னது காங்கிரஸ் கட்சி ஜாதிக்கு அப்பால் பட்டது என்று? காங்கிரஸ் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் ஜாதி ஒழிந்து விட்டது என்று நம்பும் உங்களை. நினைத்தால் பாவமாக இருக்கிறது.



// அதாவது - நிதீஷ் வென்றார், லாலு தோற்றார். வளர்ச்சி வென்றது, சாதி தோற்றது - எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, தனியார் துறை இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் இனி எடுபடாது - என்கிற மாயத்தோற்றத்தை பத்திரிகைகள் எற்படுத்த முயல்கின்றன. //


இன்றுவரை எந்த ஒரு ஊடகமும் இவாறான கருத்துக்களை சொல்லவே இல்லை. இது வெறும் யூகம் மட்டுமே. பீகார் தேர்தல் முடிவில் இட ஒதுக்கீடு பற்றி எவரும் பேசவில்ல.

நிறைய ஜாதி கட்சிகள் போட்டி இட்டாலும், ஒரு குறிப்பிட்ட ஜாதி யை சேர்ந்த ஒருவர் மட்டும்தான் அங்கீகரிக்க படுகிறார் என்றால் தன் ஜாதி பார்க்காமல் பிறரும் அவரை ஆதரிகின்றனர் என்று பொருள்.இதில் ஜாதி கொடாடுவது எங்கிருந்து?

50 வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் செய்ததை விட சென்ற 5 வருடங்களில் நிதீஷ் செய்ய ஆரம்பித்ததை பீகார் மக்கள் புரிந்து கொண்டனர் என்பதே முடிவுகளின் பொருள்.

சாதிக்கு அப்பால் பட்டவர் ராகுல் என்பது நகைப்புக்கு உரிய விஷயம். :))))

ஒசை சொன்னது…

தாமதமாக தான் வர முடிந்துள்ளது. சில கருத்துகளை சொல்லி விடுகிறேன்.

நிதிஷ்குமார் சாதி அரசியல் நடத்தவில்லை. அதனால் அவரது வெற்றியை சாதிய வெற்றியாக பார்க்க வேண்டாம்.

சரத்யாதவ்விற்காக யாரும் ஓட்டும் போடவில்லை.

ராகுல்காந்திக்கு வோட்டு போடாததற்கும் காரணம். காங்கிரஸ்க்கு இது வரை போட்ட வோட்டு போதா.

வளர்ச்சி பாதைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து போனதாக சொன்ன போது தான் விவசாயிகளின் கொத்து கொத்தான தற்கொலை நிகழ்ந்தது.

nerkuppai thumbi சொன்னது…

ஐயா! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்? ஒரு மாநிலத்து முதல் அமைச்சர் சாதியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? லாலு பிற்படுத்த சாதிகளின் காப்பாளர் என ஒரு தோற்றம் அளித்து அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தாலும், கடைசியில் ஒன்றும் செய்யவில்லை. அரசு செய்த செலவில் உருப்படியாக ஒன்றும் நடக்க வில்லை. ஊழல் மிகுந்தது. திருடுவது , ஆள் கடத்துதல், முதலியன நிகழ்ந்தன . எவராவது கொஞ்சம் வியாபாரத்தில் சேமிப்பு காட்டினால் அதை பிடுங்கிக்கொள்வர் என்று பயம்; மாலை நேரத்தில் பெண்கள் வெளியே பயம் என்று இருந்தது மாறி, மக்கள் தங்கள் தொழிலை பயமில்லாமால் செய்ய சூழலை உருவாக்கினார். முதல் போட்டு தொழில் தொடங்கலாம் என சிலர் முன் வந்தனர். ஆட்சிக்கு நிதீஷ் மீண்டும் வந்ததால் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று அனைத்து சாதியினரும் - அதாவது மேல் சாதி பத்திரிகை கார்கள் மட்டும் அல்ல = நம்புகின்றனர்.
இதில் உங்களுக்கு எது சரியாகத் தோன்றவில்லை? சாதியை கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?
பொருளாதார வளர்ச்சி ஏற்படும் பொது காலப் போக்கில் மேல் தட்டினர் அதிகமாகவும், கீழ் தட்டு நன்மை அடைய வில்லை எனவும் தோன்றினால், அது போது, சாதி பிரிவுகளை முன் நிறுத்தி சலுகைகள் வழங்குவது நியாயம் தான். அது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு செய்ய வேண்டியது.
நீங்கள் பீகாரைப் பற்றியே பேசி சாதி பிரிவுகள் இல்லாமல் போய் விடும் என்று பயம் அடைய வேண்டாம்: அரசியல் கட்சிகள் அவ்வாறு நடக்காமல் சாதி என்ற பேய் நாட்டை விட்டு போகாமல் பார்த்துக் கொள்வர். தெரியாதவர்களுக்கு பாடம் நடத்த எண்பத்தைந்து வயது ஆசிரியர் தயார்.

அருள் சொன்னது…

@கக்கு - மாணிக்கம்

நிதீஷ்குமாரின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் சட்டம் ஒழுங்கை காப்பாற்றினார், வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்பதெல்லாம் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை.

இந்த தேர்தல் வெற்றியில் சாதி எங்கிருந்து வந்தது? எதற்காக பல பத்திரிகைகள் சாதி தோற்றதாக எழுதுகின்றன? என்பதுதான் எனது கேள்வி.

லாலு சாதியை முன்னிறுத்தினார் என்றால் - நிதீஷ்குமார் சாதிக்கு அப்பாற்பட்டவரா?

அருள் சொன்னது…

ஒசை. சொன்னது…

// //நிதிஷ்குமார் சாதி அரசியல் நடத்தவில்லை. அதனால் அவரது வெற்றியை சாதிய வெற்றியாக பார்க்க வேண்டாம்.// //

சாதி அரசியல் என்று பத்திரிகைகள் சமூகநீதிக் கொள்கையைத் தான் அடையாளப்படுத்துகின்றன. அதனடிப்படையில் பார்த்தால் நிதீஷ்குமார் "சாதி அரசியல் நடத்தவில்லை" என்பது தவறான கருத்தாக ஆகிவிடும்.

மற்றபடி, நான் அவரது வெற்றியை சாதிய வெற்றியாக பார்க்கவில்லை. அதேநேரம், "அது சாதியின் தோல்வி" என்பதையும் ஏற்க முடியாது.

பொன் மாலை பொழுது சொன்னது…

// இந்த தேர்தல் வெற்றியில் சாதி எங்கிருந்து வந்தது? எதற்காக பல பத்திரிகைகள் சாதி தோற்றதாக எழுதுகின்றன? என்பதுதான் எனது கேள்வி.//

--------அருள் சொன்னது.


நிதீஷ் குமார் சாதி அரசியலே செய்திருக்கட்டும். (இன்று அணைத்து கட்சிகளும் அதைதான் செய்து கொண்டுள்ளன என்றால் ஆமொதிபீர்கள் என்று தெரியும் ) ஆனால் பல சாதி அமைப்புக்கள் ,பிளவுகள் நிறைந்த பீகாரில், நிதீஷ் குமார் , அவர் சார்ந்த கட்சி நிறைய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.வழக்கமாக காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் மக்கள் கூட இவரின் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்று செய்திகள்.

"தன் ஜாதிக்காரன் "மட்டுமே வரவேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் உண்மையில் நிதீஷ் குமாரால் இந்த மகத்தான வெற்றியை பெற்று இருக்க முடியாது. இதைதான் பத்திரிக்கைகள் அவ்வாறு எழுதுகின்றன. உண்மையில் நம் பத்திரிக்கைகள் அவ்வாறு எழுதுவதும் நன்மைக்கே!

நான் ஊடங்களில் பார்த்தவரை, பீகாரில் உள்ள இளம் தலை முறையினர் அணைவரும் நிதீஷ் குமாரின் முன்னால் ஆட்சியினை பாராட்டுகின்றனர். இவர்கள் எவருமே ஜாதி அடிபடையில் இவைகளை அணுக வில்லை என்பது உண்மை. 2001 இல் இருந்ததைவிட இப்போது நம் இளந்தலை முறையினர் நல்ல அறிவோடும் தெளிவோடும் இருக்கின்றனர் என்று மட்டும் எனக்கு புரிகிறது. வரும் காலங்களில் சாதியை , மதத்தை காட்டி ஓட்டு வாங்கும் முறை இவர்களிடம் செல்லாது.

பொன் மாலை பொழுது சொன்னது…

// லாலு சாதியை முன்னிறுத்தினார் என்றால் - நிதீஷ்குமார் சாதிக்கு அப்பாற்பட்டவரா?//
---------------------அருள் சொன்னது.

ஒருவர் ஜாதி அரசியல் செய்தே பிரபலமாகட்டும். ஆனால் அவர் இறுதிவரை அப்படியே , அவரின் ஜாதி காப்பாலராகவே இருக்க வேண்டும் என்று எதிபார்கிரீர்கள். ஏனென்றால் ஜாதி ஒழியக்கூடாது என்று நினைகிறீர்கள். இது என்ன வாதமோ? அவர் வந்த வழி எப்படி இருந்தாலும் இன்று அவர் பல ஜாதி மக்களால் கவரபட்டுள்ளார் அல்லது பல ஜாதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இல்லையா?
இதுதானே சாமி நமக்கு வேண்டும்.
ஜாதி மதம் பார்க்காமல் ஓட்டு போடுபவர்கள் தெளிவாக இருந்தால் ஜாதி மத அரசியல் வாதிகளுக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்ற பயமா உங்களுக்கு? மக்களே திருந்தினாலும் நாம் அப்படியே இருப்போம் என்றால் யார் என்ன செய்வது?

நாம் அவர்களை திருந்த விட மாட்டோம் என்பது போல உள்ளது உங்களின் கருத்து. ஏன் இன்னமும் ஜாதிகளை கட்டிக்கொண்டு அழவேண்டும்?
உங்களின் சிந்தனைகள்
ஜாதிகளை உரம் போட்டு வளர்கவே செய்யும் . மாறாக ஜாதி பேதங்களை அகற்ற உதவாது.

பொன் மாலை பொழுது சொன்னது…

இன்றைய நிலவரப்படி ஜாதி எதிர்பாளர்கலாக தங்களை காட்டிக்கொண்ட அனைவரும் மக்கள் தங்கள் ஜாதிகளை தேர்தலில் , வோட்டு போடும் முறைகளில் கொண்டாட வில்லை என்றால் பயப்பட ஆரம்பித்து விட்டனர் என்று தெரிகிறது. ஏனெனில் (மேல்சாதியோ கீழ்சாதியோ) பொதுமக்கள் இவைகளை குறைந்த பட்சம் தேர்தல் சமயங்களில் இந்த உணர்வுகளை காட்ட மறுத்தால் அல்லது மறந்தால் ஜாதி எதிர்பாளர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்ற பயம் தான். ஜாதிகளை மறக்க முயலும் மக்களை அவ்வாறு நிகழாமல் வைத்துக்கொள்ளத்தான் நிற பேர் இருக்கிறார்கள்.

அருள் சொன்னது…

@ கக்கு - மாணிக்கம்

நிதீஷ்குமார் அனைவருக்கும் பணி செய்தார் என்பது வரவேற்க வேண்டிய விடயம்தான். ஏனென்றால், ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுபவர்களை எதிர்ப்பதுதான் சாதி அரசியலின் அடிப்படை. எனவே, சாதி அரசியலின் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவதாக இதனைக் கருதலாம்.