Pages

புதன், டிசம்பர் 01, 2010

சாதி அரசியல் தவறானதா?    பகுதி 2

இந்திய அரசியல் வளர்ச்சியில் சாதியின் பங்கு

சமூகம் ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம். ஆனால், இந்திய சமூகத்தில் 'ஒன்றை அழித்து மற்றொன்று தோன்றுவதற்கு' பதிலாக - இருக்கும் ஒன்றே வேறொரு வடிவம் எடுக்கிறது. இதற்கு சான்றாக இருப்பது சாதி.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்த தலைவர்கள் பலருக்கு சுதந்திர இந்திய நாட்டில் சாதி இருக்காது என்கிற நம்பிக்கை இருந்தது - அல்லது அவ்வாறு நம்பவைக்க முயற்சி நடந்தது. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரை தவிர வேறு எவரும் இதனை கேள்விக்குள்ளாக்கவில்லை.

இந்திய நாடு அரசியல் விடுதலை அடைந்த போது நாடு சிதறுண்டு போகும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்தியா ஒரு ஒற்றை நாடாக, சனநாயக நாடாக நீடித்திருக்கும் என்று நம்பப்படவில்லை. "இந்திய நாடு மிகக்கேடடைந்து பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போய்விடும். கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனம்தான் எஞ்சி நிற்கும்" என்று எச்சரித்தார் வின்சென்ட் சர்ச்சில். அதாவது, கல்வி அறிவற்ற இந்திய மக்கள் சனநாயக அரசியலை புரிந்து, ஏற்று நடக்க மாட்டார்கள் எனக்கருதப்பட்டது.

ஆனால், இதனை மாற்றி சனநாயக அரசியலை வளர்த்தெடுப்பதில் சாதி அமைப்புகள் முக்கிய பங்காற்றின.

மேலை நாடுகள் சனநாயக அரசியல் முறையை ஏற்றபோது, அங்கெல்லாம் மக்கள் அமைப்புகள், தன்னார்வ குழுக்கள் உருவாகி - மக்களை சனநாயக அரசியல் அமைப்பில் பங்கெடுக்கச்செய்தன. ஆனால், இந்தியாவில் அப்படியெல்லாம் பொதுவான அமைப்புகள் எதுவும் பெரிதளவில் காணப்படவில்லை. இந்தநிலையில், படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் கூட புதிய அரசியல் சூழலை புரிந்துகொள்ள வழிவகுத்தவை சாதி சங்கங்கள்தான்.

இதுகுறித்து விரிவாக ஆராய்ந்துள்ள Lloyd L Rudolph மற்றும் Susanne Hoeber Rudolph எனும் அறிஞர்கள், இவர்களது 1960 ஆம் ஆண்டின் "The Political Role of India's Caste Associations" எனும் ஆய்வுக்கட்டுரையில் "இந்திய கிராமங்களுக்கு சனநாயக அரசியலை எடுத்துச் சென்றவை சாதி சங்கங்கள்தான். இதன் மூலம் சாதியின் அடையாளத்தையும் சாதி சங்கங்கள் மாற்றியமைக்க தொடங்கின. சமூக அந்தஸ்து, சாதி பழக்க வழக்கங்களில் சாதியின் பலம் இருந்த நிலையை மாற்றி - சாதியின் பலம் வாக்கு எண்ணிக்கையில் உள்ளது என்கிற உண்மையை சாதி சங்கங்கள்தான் உணரவைத்தன" என்கின்றனர்.

இக்கட்டுரையில் தமிழ் நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு வன்னியர் சங்கம் எவ்வாறு பங்களித்தது என்பதை விவரித்துள்ளனர்.

காண்க: Explaining Indian Democracy - A Fifty Years Perspective 1956 - 2006, by Lloyd L Rudolph & Susanne Hoeber Rudolph, Published by Oxford University Press 2008.

எனவே, சாதி என்பது கட்டாயம் தீமையை தான் செய்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சாதி கேடானதாகவே இருந்து வந்தது. ஆனால், சாதி அமைப்புகள் தீங்கானவை அல்ல. அவை ஒடுக்கப்பட்ட பிரிவினரின் விடுதலைக்குதான் பாடுபட்டன. கூடவே, இந்திய சனநாயக அமைப்புக்கும் சாதி சங்கங்கள் நன்மையையே செய்துள்ளன.        


சாதி சங்கங்களின் அடுத்தக்கட்டமாக பார்க்கப்படும் சாதி அரசியல் என்பதும் கூட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைக்கான அரசியல்தான்.

இதனை பிற்போக்காக பார்ப்பதுதான் உண்மையான பிற்போக்கு.

கருத்துகள் இல்லை: