Pages

சனி, டிசம்பர் 04, 2010

அரசாங்கமே சட்டத்தை மதிக்காத அவலம்: சட்டம் உண்டு - புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் இல்லை

2010 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை படத்தை வெளியிட வேண்டும் என்கிற விதியை நாட்டின் ஒரு இடத்திலும் அரசு செயல்படுத்தவில்லை. அதாவது, சட்டப்படி அரசு உத்தரவு செல்லும். ஆனால், ஒரு இடத்திலும் அது செயல்பாட்டில் இல்லை.

சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்துபோகின்றனர். புகையிலை தீமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நடுவண் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்கிற விதிமுறை முக்கியமானதாகும். கூடவே, ஒவ்வொரு ஆண்டும் எச்சரிக்கைப் படங்களை கட்டாயமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இது இந்திய அரசு கையொப்பமிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் படியும் (WHO - FCTC), இந்திய புகையிலை கட்டுப்பாடு சட்டப்படியும் (COTPA 2003) கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

இதன்படி புகையிலைப் பொருட்களின் மீது எச்சரிக்கை படங்களை வெளியிடும் முறை 31.5.2009 முதல் நாடெங்கும் செயல்பாட்டுக்கு வந்தது. நுரையீரல் பகுதியின் எக்ஸ்ரே மற்றும் தேள் ஆகியன எச்சரிக்கைப் படங்களாக வெளியிடப்பட்டன.

31.5.2009 முதல் இடம்பெற்ற படங்கள்
இந்தப் படங்களுக்கு மாற்றாக புதிய படங்கள் 1.6.2010 முதல் இடம்பெற வேண்டும் என்பது விதியாகும். எனவே, புதிதாக 'வாய்ப்புற்றுநோய்' படத்தை அச்சிட வேண்டும் என 5.3.2010 இல் நடுவண் நலவாழ்வுத்துறை உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 176).

ஆனால், கால அவகாசம் போதாது என்று புகையிலை நிறுவனங்கள் கோரியதால் 1.6.2010 ஆம் நாளுக்குப் பதிலாக 1.12.2010 முதல் புதிய படத்தை புகையிலை வெளியிட வேண்டும் என அரசு உத்தரவிட்டது (அரசாணை எண்: GSR 411, நாள் 17.5.2010)

1.12.2010 முதல் இடம்பெறவேண்டிய படம்


இந்த உத்தரவை மீறி, புதிய எச்சரிக்கைப் படம் இல்லாது 1.12.2010 முதல் புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டால் - ரூ. 5000 தண்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்கிறது இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாடு சட்டம்.

ஆனால், இந்தியாவின் ஒரே ஒரு இடத்தில் கூட இந்த சட்டம் பின்பற்றப் படவில்லை.

2.12.2010 அன்று சென்னையில் வாங்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் (ஒன்றில் கூட புதிய படம் இல்லை)

சட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, அரசின் உத்தரவு தெளிவாக இல்லை என்று கூறி, ITC , GPI ஆகிய இந்திய சிகரெட் நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு 5.3.2010 அன்றே புதிய படத்தின் CDயை  இந்திய அரசு வெளியிட்டது. இதனை 1.12.2010 முதல் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பு 17.5.2010லேயே அரசு தெளிவாக உத்தரவிட்டது. ஆனாலும், இதுகுறித்து குழப்பம் நிலவுவதாக சிகரெட் நிறுவனங்கள் பசப்புகின்றன.

சிகரெட் நிறுவனங்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து - அரசு இந்த உத்தரவை பின்வாங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள்தோரும் 2500 பேர் புகையிலைப் பொருட்களால் முன்கூட்டியே செத்துப்போகும் கொடுமையை விட, ஒரு சில சிகரெட் - குட்கா நிறுவனங்களின் இலாப வெறி அரசுக்கு முக்கியமாகப் போய்விட்டது.

வாழ்க சனநாயகம்!

கருத்துகள் இல்லை: