Pages

சனி, செப்டம்பர் 03, 2011

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

ராசீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் தூக்குதண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று பேர் காப்பற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இதற்காக அரசியல் ரீதியான வேறுபாடுகள் கைவிடப்பட்டு,  வழக்கத்திலில்லாத வகையில் எல்லோரும் ஒருகுரலாக ஒலிக்கும் சூழலும் ஓரளவுக்கு கனிந்துள்ளது.

இந்த நம்பிக்கையளிக்கும் சூழலில் - இரண்டு வகையான முன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1. சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி தூக்கு தண்டனையை ரத்து செய்வது,
2. அரசியல் ரீதியான முயற்சிகள் மூலமாக தண்டனையைக் குறைப்பது,

இந்த இரண்டு முயற்சிகளில் எது வெற்றி பெற்றாலும் - மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும். இந்த இரண்டு வழிகளில் எளிதான, உடனடி பலன் கிடைக்கும் வழி என்பது "அரசியல் ரீதியான" தீர்வாகவே இருக்கும். அதிலும், அரசியல் ரீதியான தீர்வு என்பது - நீண்டகால நோக்கில் தமிழ் நாட்டிலிருந்து மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவும் வழிவகுக்கக்கூடும்.
அரசியல் ரீதியிலான ஒரு தீர்வினை முன்வைத்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு அவசியத் தேவை எனக் கருதலாம். அது ஏன் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்:


1. "தன்னால் முடியாது" என்கிற நிலைபாட்டிலிருந்து முதல்வர் மாறவேண்டும்.

கடந்த 29.8,2011 அன்று சட்டமன்றத்தில் ஓர் அறிக்கையை முதலமைச்சர் வாசித்தார். அதில் "5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் - மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) - இன்படி கட்டளையிடுகிறது" என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், "மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் அந்த அறிக்கையை இங்கே காண்கhttp://www.tn.gov.in/seithi_veliyeedu/pr29Aug11/pr290811_110.pdf

இதற்கு மறுநாள் 30.8.2011 அன்றே, "மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது" என்கிற தீர்மானத்தை தமிழக முதல்வர் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். மேலும் "இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. இது இந்திய அரசினை தார்மீக சிக்கலில் ஆழ்த்தக்கூடியது. தூக்குதண்டனையைத் தடுக்க வேண்டும் என்கிற தமிழர்களின் போராட்டத்திற்கு இந்த தீர்மானம் வலு சேர்க்கக் கூடியது. அதே நேரத்தில் இந்த தீர்மானம் சட்டப்படியாக கட்டுப்படுத்தக் கூடியது அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அடிப்படையான விடயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. அது, தமிழக முதல்வர் குடியரசு தலைவரைக் கேட்டுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட, தனக்கு அதிகாரம் இல்லை என்கிற நிலைபாட்டினை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். தமிழக முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்கிற கருத்து மிகத் தவறான வாதம் ஆகும். இது மாற்றப்பட்டாக வேண்டும்.

2. தமிழக முதல்வருக்கு அதிகாரம் உண்டு. எப்படி?

தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால், அதன்பிறகு "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) - இன்படி மத்திய அரசு கட்டளையிடுகிறது" என்கிறார் முதல்வர்.

மத்திய உள்துறை அமைச்சரகம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு அனுப்பிய ஒரு உத்தரவைத்தான் முதலமைச்சர் குறிப்பிடுகிறார். அரசியலமைப்பின் 257 (1) என்பது "மத்திய அரசின் நிருவாக வரம்பில் மாநில அரசு தலையிடக்கூடாது" என்கிற பிரிவாகும். இதற்கும், அரசியலமைப்பின் 161 ஆம் பிரிவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஏனெனில், 161 ஆம் பிரிவு மாநில அரசின் தனிப்பட்ட இறையாண்மை அதிகாரம் ஆகும். இதற்கும் மத்திய அரசின் நிருவாகத்திற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரதாப் சிங் கைரோனை கொலைசெய்த குற்றத்திற்காக தூக்குதண்டனை அளிக்கப்பட்ட கைதி தயா சிங். இவரது கருணை மனுவை ஆளுநரும் நிராகரித்து, குடியரசுத் தலைவரும் நிராகரித்த பின்னர் அவர் இரண்டாம் முறையாக ஆளுநரிடம் கருணை மனு கொடுத்தார். அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அரியானா அரசு மத்திய அரசியம் விளக்கம் கேட்டது. கருணை மனு மீது முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் தாமதம் ஆனதால் - தயா சிங்கின் கடிதத்தை வழக்காக எடுத்துக்கொண்டது உச்ச நீதி மன்றம்.

உச்சநீதி மன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் 5.3.1991 நாளிட்ட கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சரகம் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பியது. அக்கடிதத்தில்தான் "குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை" என்கிற கருத்தை திணித்தது மத்திய உள்துறை அமைச்சகம். அந்தக் கடிதத்தைதான் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி "எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை" என்று கூறினார் தமிழக முதலமைச்சர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் - எந்த தயா சிங் வழக்கிற்காக இக்கடிதத்தை மத்திய அரசு எழுதியதோ, அதே வழக்கில் அக்கடிதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலைக் குற்றவாளியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும் 24.4.1991 அன்று உத்தரவிட்டது. ஆக, மத்திய அரசின் கடிதம் செத்துப்பிறந்த குழந்தையைப் போன்றதே ஆகும். அதற்கு அதிகாரம் எதுவும் இல்லை.

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Daya Singh v Union of India, 1991 (3) SCC 61


மன்னிப்பு - ஒரு வானளாவிய அதிகாரம்!

இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும். இந்த மன்னிப்புக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குற்றம் எதுவானாலும் விசாரணை தொடங்கும் முன்பு, விசாரணை நடக்கும் போது, தண்டனை அளிக்கப்பட்ட பின்பு என எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் எந்த ஒரு குற்றவாளியையும் மன்னிக்கலாம். இது ஒரு உச்சபட்சமான அதிகாரம் ஆகும்.
இந்திய அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவில் குடியரசுத் தலைவருக்கும், 161 ஆம் பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் இந்த மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னிக்கும் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்பதைக் குறிக்கும்வகையில், உச்சநீதிமன்றம்: இங்கிலாந்து நாட்டில் மன்னருக்கும், அமெரிக்காவில் அதிபருக்கும் உள்ள மன்னிக்கும் அதிகாரம் இந்தியாவில் ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் உண்டு என்கிறது.

"The view of the language of Articles 72 and 161,..the President and the Governors of the States in India had the same powers of pardon both in nature and effect, as is enjoyed by King in Great Britain and the President in the United States. Therefore, in India also the pardoning power can be exercised before, during, or after trial."

Nanavati v. State of Maharashtra AIR 1961 S.C. 112

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Nanavati v. State of Maharashtra AIR 1961 S.C. 112

ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல.

மன்னிக்கும் அதிகாரத்தின் படி, ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல. உயர்நீதி மன்றத்தில் நிராகரிக்கப்படும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது போல - ஆளுநர் கருணை மனுவை நிராகரித்தால் அதன் பிறகு குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யப்படுவதாக கருணை மனுவை பலரும் நினைக்கின்றனர். உணமை அதுவல்ல.

ஆளுநரிடம் முறையிடுவதும், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதும் - இரண்டும் இரண்டு தனித்தனி கருணை கோரிக்கைகளாகும். இருவரில் யாராவது ஒருவர் மன்னிப்பு வழங்கினால் போதும். இந்த இருவரது அதிகாரங்களும் தனித்தனி சமமான அதிகாரங்கள் ஆகும். இந்த மன்னிப்பு விடயத்தில் மட்டும் ஒருவரைவிட மற்றொருவர் மேலானவர் அல்ல.

அதாவது, ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரத்தைவிட குடியரசுத் தலைவரது மன்னிக்கும் அதிகாரம் மேலானது அல்ல. எனவே, "குடியரசுத் தலைவரே நிராகரித்து விட்டார், ஆளுநர் என்ன செய்ய முடியும்?" என்கிற பேச்சுக்கே இடமில்லை. இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:

The Governor vis a vis his Cabinet is no higher than the President save and narrow area which does not include Article 161. 


Maru Ram v Union of India (1981) SCC 1073

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Maru Ram v Union of India (1981) SCC 1073

ஆளுநர் மாநில அரசின் பேச்சைக் கேட்க வேண்டும்.

மாநில அரசாங்கம் கருணை மனுவை பரிந்துரை செய்தாலும் கூட, மாநில ஆளுநர் அதனை நிராகரித்தால் என்ன செய்வது? என்கிற கேள்வி எழலாம் (மாநில ஆளுநர் மத்திய அரசின் முகவர்தானே). இதற்கும் கூட உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அரசியலமைப்பின் 161 ஆம் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது உண்மையில் மாநில அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமே ஆகும். கருணை மனு விடயத்தில் மாநில அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதனை மாநில ஆளுநர் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும். மாநில அமைச்சரவை மன்னிப்பு வழங்கச் சொன்னால், ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மன்னிப்பு வழங்கிதான் ஆகவேண்டும் என்கிறது உச்சநீதி மன்றம்:

The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government…the Governor is The formal head and sole repository of the executive power but is incapable of acting except on, and according to, the advice of his council of ministers. The upshot is that the State Government, whether the Governor likes it or not, can advise and act under Art. 161, the Governor being bound by that advice.

Maru Ram v Union of India (1981) SCC 1073


அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Maru Ram v Union of India (1981) SCC 1073

மாநில அரசின் மன்னிக்கும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.

மன்னிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனும்போது, அதில் மத்திய அரசு தலையிடலாமா? என்றால், மத்திய அரசால் தலையிட முடியாது என்பதே முடிவாகும்.

இந்தியாவில் அரசாங்கத்தின் அதிகாரம் என்பது மூன்று வழிகளில் பெறப்படுகிறது. 1. அரசியல் அமைப்பு, 2. சட்டங்கள், 3. நிருவாக உத்தரவுகள். இவற்றில் உத்தரவுகளைவிட சட்டம் மேலானது, சட்டத்தைவிட அரசியலமைப்பு மேலானது.

மன்னிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு அரசியல் அமைப்பு அளித்துள்ளது. ஆனால், ஒரு சாதாரண நிருவாக உத்தரவால் "மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கட்டளையிடுகிறது" என்கிறார் முதலமைச்சர். இது ஏற்புடையது அல்ல. அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள முழுமையான, கட்டற்ற, விதிகளால் தடுக்க முடியாத அதிகாரத்தில் தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில், மன்னிக்கும் அதிகாரம் என்பது ஓர் இறையாண்மை அதிகாரம் எனவும், அது முழுமையான, மாற்ற முடியாத அதிகாரம் எனவும் குறிப்பிடுகிறது. குற்றவாளிகளை மன்னிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு சாதாரண உத்தரவால் மட்டுமல்ல, நாடாளுமன்ற சட்டங்களால் கூட மாற்ற முடியாது.

அதாவது, தூக்குதண்டனைக் கைதிகளை மன்னிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிற ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் கூட - அந்த சட்டம் தமிழ்நாடு அரசைக் கட்டுப்படுத்தாது.

“sovereign power to grant pardon has been recognised in our Constitution in Articles 72 & 161”


State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121


The power under Articles 72 and 161 of the Constitution is absolute and cannot be lettered by any statutory provision... This power cannot be altered, modified or interfered with in any manner whatsoever by any statutory provisions or Prison Rules. 


State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661

அந்த தீர்ப்புகளை இங்கே காணலாம்: 1.`State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121   2. State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661

ஏற்கனவே கருணை மனுவை நிராகரித்த பின்னர் மீண்டும் எப்படி மன்னிப்பது?

கடந்த 19.4.2000 அன்று கலைஞரது அமைச்சரவைதான் கருணை மனுவை நிராகரித்தது. ஆனால், ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒரே ஒருமுறைதான் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்கிற விதி எதுவும் இல்லை. மாறாக ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ மீண்டும் மீண்டும் கருணை மனுக்களை ப்ரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:

The rejection of one clemency petition does not exhaust the power of the President or the Governor.


`G. Krishta Goud and J Bhoomaiah v State of Andhra Pradesh (1976(1) SCC 157

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: `G. Krishta Goud and J Bhoomaiah v State of Andhra Pradesh (1976(1) SCC 157

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தின் கோவிந்தசாமி என்பவரது கருணை மனுவை முதல் முறை நிராகரித்த குடியரசுத் தலைவர் இரண்டாம் முறையாக மன்னித்த வரலாறு ஏற்கனவே உள்ளது. கருணை மனு விடயத்தில் குடியரசுத் தலைவரது அதிகாரமும் ஆளுநரின் அதிகாரமும் ஒன்றுதான் எனும்போது - மாநில ஆளுநர் இரண்டாம் முறையாக கருணை மனுவைப் பரிசீலிப்பது சாத்தியமே.

என்ன செய்யவேண்டும்?

தூக்கு தண்டனையிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இரண்டாவது முறையாக ஆளுநரிடம் கருணை மனு அளித்து - அதன் மீது மாநில அமைச்சரவை தூக்குதண்டனையைக் குறைத்து பரிந்துரைக்க வேண்டும்.
அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்று தூக்குதண்டனையைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்பது விதி.

அதுமட்டுமல்ல - தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைப்பது மட்டுமல்ல, இருபதாண்டு சிறைவாசத்தைக் கடந்துள்ள அவர்களை மன்னித்து விடுதலை செய்வதுகூட மாநில அரசால் முடிகிற எளிய செயல்தான்.

எனவே, அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் கீழ் மாநில முதலமைச்சர் மன்னிக்க முன்வரவேண்டும் என ஆர்வமுடைய எல்லோரும் வலியுறுத்த வேண்டும். இதுவே அவசரப் பணியாகும்.

முக்கிய இணைப்புகள்.

1. மருத்துவர் இராமதாசு அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் -இங்கே காண்க. (தமிழ்)


2. PUCL அமைப்பு முதல்வருக்கு எழுதியக் கடிதம்- இங்கே காண்க: Commutation Petition to CM of Tamil Nadu by PUCL (ஆங்கிலம்)


3. மரண தண்டனை - மறு ஆய்வு தேவை எனும் PUCL ஆவணம்-இங்கே காண்க: Clemency petition - Perarivalan, Santhan, Murugan by PUCL - Tamil (தமிழ்)


4. பேரறிவாளன் கருணை மனு நூல் இங்கே காண்க: An Appeal from the Death Row (RAJIV MURDER CASE - THE TRUTH SPEAKS) (ஆங்கிலம்)


5. Lethal Lottery - The Death Penalty in India: A study of Supreme Court judgments in death penalty cases 1950-2006 (ஆங்கிலம்)

34 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

ஆதாரங்களுடன் கூடிய ஆழ்ந்த அலசல்!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அற்புதமான பணி .வாழ்த்துக்கள் .

ராஜ நடராஜன் சொன்னது…

மூவரின் மரணதண்டனைக்கு எதிரான உழைப்பு உங்கள் பதில் தெளிவாகவே தெரிகிறது.ஆனால் இதில் நீங்கள் குறிப்பிடும் “தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும்.’’ வரிகள் காங்கிரஸ் மத்திய அரசின் நிலைப்பாடும் சல்மான் குர்ஷித் வெளியிட்ட தமிழக சட்டசபை தீர்மானம் மத்திய அரசைக்கட்டுப்படுத்தாது என்பதிலிருந்தே நமக்கு புரிகிறது.

//ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல.//

எங்களுக்கு புஸ்தகத்துல சொல்லிக்கொடுத்ததே ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப் என்றும்,மாநில முதல்வரையே வீட்டுல உட்கார்ன்னு சொல்லும் அதிகாரம் இருக்குதுங்கிற மாதிரிதான்:)

//ஆளுநர் மாநில அரசின் பேச்சைக் கேட்க வேண்டும்.//

நீங்க கர்நாடகா அரசியல் பேசவில்லையே?

//மாநில அரசின் மன்னிக்கும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.//

இந்த அதிசயம் தமிழகத்தில் இனிமேல் நிகழ்ந்தால்தான் உண்டு.

//தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைப்பது மட்டுமல்ல, இருபதாண்டு சிறைவாசத்தைக் கடந்துள்ள அவர்களை மன்னித்து விடுதலை செய்வதுகூட மாநில அரசால் முடிகிற எளிய செயல்தான்.//

இந்த வரிகள் மட்டுமே நம்பிக்கை.மக்களின் குரலும்,கட்சிகளின் ஒற்றுமையும்,சட்டசபையின் தீர்மானத்தின் மீதான ரோசய்யா ரோசமாய் செயல்படுவதைப் பொறுத்தே மூவருக்கான நம்பிக்கை.

வடக்கில் பருக் அப்துல்லா குரல் கொடுக்க,காங்கிரஸ் Justice vs Mercy க்கு சகுனித்தனம் செய்வதற்கு என்ன செய்யலாம் என திட்டமிட இப்ப அன்னா ஹசாரேவுக்கு ரொம்ப பிடித்துப்போய் ப.சியை ரொம்போ... நல்லவன்னு அத்தாட்சி வழங்குறளவுக்கு முன்னேறிட்டதால தமிழர்கள் அரசியல் ரீதியாகவும்,நீதித்துறை ரீதியாகவும் போராடவேண்டிய காலகட்டமிது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

எது எப்படியோ... அவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவேண்டும்...

மாய உலகம் சொன்னது…

அற்புதமான விரிவுரை அலசல் அனைவரும் அறிய வேண்டியது....வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமை....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒரு ஆய்வுக்கட்டுரையை வாசித்ததுபோல் இருக்கிறது....

அழகிய ஆய்வு...

அதிகம விவாதிக்க வேண்டிய விஷயம்..

ம.தி.சுதா சொன்னது…

பல அறியா விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளீர்கள் நன்றி சகோதரம்

ம.தி.சுதா சொன்னது…

சகோதரா இந்த சந்தேகத்தையும் தீருங்கள் ஒரு வழக்கில் முதன்மை கற்றவாளிகள் பிடிபடாத நிலையில் ஏனைய சாதாரண குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்கலாமா? உதாரணத்திற்க ராஜீவ் கொலைக்கு குண்டு தயாரித்தவரை பிடிக்கவில்லை ஆனால் பற்றி வாங்கி கொடுத்தார் என ஒரு பெட்டிக்கடைககாரன் சாட்சியை வைத்து ஒருவருக்கு தூக்கு. அந்தளவு இந்திய சட்டம் மட்டமானதா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

சுதா SJ சொன்னது…

நல்ல ஆராட்ச்சி பதிவு... சூப்பர் பதிவு. தெரியாத நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன்
நன்றி

Unknown சொன்னது…

இந்த பிரச்சனை பற்றி அருமையாக குழப்பமில்லாமல் தெளிவாக ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளீர்கள்.பாராட்டுக்கள். நம் நம்பிக்கையின் படி நல்லதே நடக்கட்டும.போராட்டம் தொடரட்டும் அதை அடையும் வரை.

Samy சொன்னது…

A powerful analysis. samy

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அற்புதமான ஆய்வுக்கட்டுரை சகோ.அருள்.

தங்கள் அளப்பரிய பணிக்கு பாராட்டுக்கள் உரித்தாகுக.

சட்டப்படி அம்சமாக அனைத்தும் இருக்கின்றன. ஆனால்... சட்டத்துக்கு வெளியே இடிக்கும் விஷயம் என்னவென்றால்...

ஒரு மாநில ஆளுநர் தம்மை தேர்ந்தெடுத்த ஜனாதிபதிக்கு அவரின் சொல்பேச்சை கேட்கும் அளவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்... இல்லியா..?

அதேபோல...
நம் ஜனாதிபதி தம்மை தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்துக்கு நன்றிக்கடன் பட்டவர். குறிப்பாக தம்மை தேர்ந்தெடுத்த ஆளுங்கட்சிக்கும் அதன் தலைவருக்கும் அவரின் சொல்பேச்சை கேட்கும் அளவுக்கு நன்றிக்கடன் பட்டவர் இல்லியா..?

ஆக... அவர்களை பொறுத்த மட்டில்... 'யாரோ மூன்று பேரின் உயிருக்காக' தாம் கஷ்டப்பட்டு அடைந்த பதவியை துரப்பார்களா அல்லது "சட்டப்படியான மனிதாபிமானப்படி" இவர்கள் நடப்பார்களா... என்று எப்படி எதிர்பார்ப்பது சகோ.அருள்..?

சத்ரியன் சொன்னது…

சிறப்பான அவசியமாக அனைத்து தமிழருமே அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் அற்புத பதிவுங்க அருள்.

Unknown சொன்னது…

அருமையாக அலசி ஆய்து
வந்துள்ள இப் பதிவுப் போற்றுதற்கு
உரியது
அதோடு உரிய காலத்தில்
வத்துள்ளது மிகவும் சிறப்பே
முதலவர் சிந்திக்க வேண்
டுகிறேன்
நன்றி நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

அருள் சொன்னது…

நன்றி

திரு.கோகுல் கூறியது,
திரு.நண்டு @நொரண்டு -ஈரோடு,
திரு.ராஜ நடராஜன்,
திரு.Thanjai Vasan (தஞ்சை.வாசன்),
திரு.மாய உலகம்,
திரு.# கவிதை வீதி # சௌந்தர்,
திரு.ம.தி.சுதா,
திரு.துஷ்யந்தன்,
திரு.R.Elan,
திரு.Samy,
திரு.~முஹம்மத் ஆஷிக்_citizen of world~,
திரு.சத்ரியன்,
திரு.புலவர் சா இராமாநுசம்,

வலையுகம் சொன்னது…

சரியான தகவல்களுக்கும் தீர்வுக்கும் நன்றி நண்பரே

அருள் சொன்னது…

ராஜ நடராஜன் கூறியது...

// //சட்டசபையின் தீர்மானத்தின் மீதான ரோசய்யா ரோசமாய் செயல்படுவதைப் பொறுத்தே மூவருக்கான நம்பிக்கை.// //

சட்டசபை தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது. எனவே, இது ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான். அதேநேரத்தில், 3 பேரும் புதிய மனுவை அளித்து அதன்மீது மாநில அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பினால் இந்த சிக்கல் எளிதாக முடிந்துவிடும்.

3 பேர் சார்பாக மற்றவர்களும் மனு அளிக்கலாம் என்கிற நிலை உள்ளதால், ஏற்கனவே பி.யு.சி.எல் அமைப்பு கருணை மனு அனுப்பியுள்ளதால் அதையே கூட ஏற்கலாம்.

இப்போதைய சிக்கல் சட்ட வழிகள் அல்ல, அரசியல் உறுதிதான். அந்த உறுதி இப்போதைய முதல்வருக்கு இருக்கும் என்றே நம்புகிறேன்.

அருள் சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...

// //முதன்மை கற்றவாளிகள் பிடிபடாத நிலையில் ஏனைய சாதாரண குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்கலாமா? உதாரணத்திற்க ராஜீவ் கொலைக்கு குண்டு தயாரித்தவரை பிடிக்கவில்லை ஆனால் பற்றி வாங்கி கொடுத்தார் என ஒரு பெட்டிக்கடைககாரன் சாட்சியை வைத்து ஒருவருக்கு தூக்கு. அந்தளவு இந்திய சட்டம் மட்டமானதா ?// //

இந்த வழக்கில் ஏராளமான தவறுகள் இருக்கின்றன. இப்போது காலாவதியாகிவிட்ட தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம்.

கீழ்நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டனர். அதுவும், அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதே தவறு எனக்கூறி விடுவிக்கப்பட்டனர். அதற்குள் அந்த நிரபராதிகள் 10 ஆண்டு சிறைத்தண்டனையை முடித்திருந்தனர். இதற்கு யார் பொறுப்பேற்பது? "அந்தளவு இந்திய சட்டம் மட்டமானதா ?" என்கிற உங்களது கேள்விக்கு இதுவே பதிலாக அமையும்.

'குற்றம் செய்யாதவனை தண்டித்தோமே என்கிற குற்ற உணர்ச்சியில் அந்த கணமே மாண்டுபோனான் பாண்டிய மன்னன்' என்கிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரக் காலத்தில் நாம் இப்போது வாழவில்லை!

ம.தி.சுதா சொன்னது…

அருள் சொன்னது…

மிக்க நன்றி சகோதரம் தெளிவாடைந்தேன்

அருள் சொன்னது…

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ கூறியது...

// //ஒரு மாநில ஆளுநர் தம்மை தேர்ந்தெடுத்த ஜனாதிபதிக்கு அவரின் சொல்பேச்சை கேட்கும் அளவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்... இல்லியா..?// //

மன்னிப்பு என்பது ஒரு இறையாண்மை அதிகாரம். அதாவது, இந்த அதிகாரத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது.

மன்னராட்சி காலங்களில் மன்னனை எவரும் கேள்வி கேட்க முடியாது. மன்னர் யாரை வேண்டுமானாலும் மன்னிக்க முடியும். இந்த அதிகாரத்தின் தொடர்ச்சிதான் - இப்போதுள்ள மன்னிக்கும் அதிகாரமும்.

மக்களாட்சி வந்த பின்னர் மன்னரின் இடத்தை ஆளுநர் பிடிக்கிறார். அதேநேரத்தில் - ஆளுநர் என்பவர் இந்த மன்னிக்கும் விடயத்தில் மாநில அமைச்சரவையின் முடிவை (ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) ஏற்று குற்றம்சாட்டப்பட்டோரை மன்னிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, குடியரசுத் தலைவருக்கோ அல்லது மத்தியில் உள்ள ஆட்சிக்கோ ஆளுநர் ந்ன்றிக்கடன் பட்டவராக இருப்பினும் அவர் மாநில அமைச்சரவை சொல்வதைத்தான் செய்தாக வேண்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.அருள்...

//அதேநேரத்தில் - ஆளுநர் என்பவர் இந்த மன்னிக்கும் விடயத்தில் மாநில அமைச்சரவையின் முடிவை (ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) ஏற்று குற்றம்சாட்டப்பட்டோரை மன்னிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவருக்கோ அல்லது மத்தியில் உள்ள ஆட்சிக்கோ ஆளுநர் ந்ன்றிக்கடன் பட்டவராக இருப்பினும் அவர் மாநில அமைச்சரவை சொல்வதைத்தான் செய்தாக வேண்டும்.//

---என் ஐயப்பாட்டை தீர்க்கும் அழகிய மறுமொழி. மிக்க நன்றி சகோ.அருள். இதுபோல நடந்தால் மிக்க மகிழ்ச்சி.

அனைத்துமே நல்ல படியாக நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Prabu Krishna சொன்னது…

உள்ளம் இனிக்க வைக்கிறது உங்கள் பதிவு. இதை கண்டிப்பாக அரசு கடைபிடிக்க வேண்டும்.

தமிழன் சொன்னது…

இன்றைய செப்டம்பர் 5ம் தேதி தினமலர் பார்த்தீங்களா? அதுபற்றி ஏதும் சொல்லலியே

அருள் சொன்னது…

தமிழன் கூறியது...

// //இன்றைய செப்டம்பர் 5ம் தேதி தினமலர் பார்த்தீங்களா? அதுபற்றி ஏதும் சொல்லலியே// //

தினமலர் எப்போதாவது அறிவுக்கு உகந்த கருத்துகளை வெளியிட்டால் அதை படிக்கலாம், பதிலும் சொல்லலாம். ஆனால், அப்படியெல்லாம் ஒருபோதும் நடக்கப்போவது இல்லை. எனவே, தினமலரை படிக்கும் வெட்டி வேலையை நான் செய்வதும் இல்லை.

எனினும், நீங்கள் சொன்னதற்காக அதனைப் பார்த்தேன். அது "ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்" எனும் இந்த கட்டுரையாக இருக்கலாம். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295

இக்கட்டுரையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதுவும் இல்லை. வழக்கம்போல தமிழர்களுக்கு எதிராகவும் மனிதஉரிமைக்கு எதிராகவும் மனசாட்சியின்றி எழுதும் தினமலரின் அதே பாரம்பரியம் இதிலும் தொடர்கிறது. அவ்வளவுதான்.

தூக்கு தண்டனை வேண்டாம் என்று கூறுவதற்கும் அந்த 3 பேரும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டனர் என்று கூறுவதற்கும் - தினமலரிடம் எதிர் கருத்து எதுவும் இல்லை.

ராசீவ் கொலை மற்றும் அவரோடு இறந்தவர்கள் குறித்து பேச நிறைய இருக்கிறது. அதனை பின்னொரு முறை பார்க்கலாம். நன்றி.

Jerry Eshananda சொன்னது…

Bravo.

செல்வா சொன்னது…

அன்புள்ள அருள்,

என்ன அருமையாக, கருத்துகளை முன் வைத்து, சான்றாவணங்களைச் சுட்டி பயன்மிக்க ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்! நெஞ்சார்ந்த பாராட்டுகள்! நன்றி!.

மர்மயோகி சொன்னது…

இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் புரிந்த பயங்கவாதிகளின் கைக்கூலிதான் என்று நிரூபிக்கும் தேச துரோக கட்டுரை இது..
விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து தின்னும் தேச துரோகிகளின் கூற்றை ஒட்டுமொத்த தமிழகத்தின் கூற்றுப்போல சித்தரிக்கும் தேச துரோகிகள் கூட தூக்குமேடைக்கு செல்ல வேண்டியவர்களே.
விடுதலைப்புலிகளின் தலைவன் பயங்கரவாதி பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொன்றதை "துன்பியல் நிகழ்வு" என்று ஒப்புக்கொண்டுவிட்டான்.
ஆனால் இந்த கோழைகள் இன்று உயிர் பிச்சைக்கு கெஞ்சிக்கொண்டிருக்கின்றன..தூ மானங்கெட்டவர்களே..
அவர்களை அப்பாவி என்று சொல்லும் - இவனுக்கு வக்காலத்து வாங்கும் ஒவ்வொருத்தனும் தேச துரோகிதான்..தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்..

அருள் சொன்னது…

@மர்மயோகி

ராசீவ் காந்தி கொலையே ஒரு பயங்கரவாத நிகழ்வு அல்ல. அது ஒரு தீவிரவாத செயலும் அல்ல. அது அரிதினும் அரிதான குற்றமும் அல்ல - என்று இந்திய உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது உங்களுக்கு தெரியுமா?

ராசீவ் காந்தியை கொன்றது பயங்கரவாதம் அல்ல, கொலை செய்தவர்களும் பயங்கரவாதிகள் அல்ல என்று கூறியதற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தூக்கில் போடப்பட வேண்டுமா?

தயவுசெய்து விளக்குங்கள் திரு. மர்மயோகி.

மர்மயோகி சொன்னது…

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..
ராஜீவ் காந்தி யை கொன்றது சாதாரண நிகழ்வா?
அந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டது, பாதிக்கப்பட்டதும் சாதாரண நிகழ்வா?
தமிழ் பற்று எனபது தேச துரோகம் செய்வது அல்ல நண்பரே..
தமிழன் என்பதற்காக இந்தியாவுக்கெதிராக நீங்கள் இருந்தால் யாழ்பாணத்துக்கு சென்று விடுங்கள்..
ராஜீவ் காந்தி சம்பவம் சாதாரணமானது என்றால்..இலங்கையில் பயங்கரவாதிகளுக்கெதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்ததும் சாதாரணமான நிகழ்வு என்று ஏன் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்?
தொப்புள் கொடி உறவு என்று சொல்லி மனிதாபிமானமற்று போய் இருக்கிறீர்கள்..
தொப்புள் தமிழனுக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து மனிதனுக்கும் இருக்கிறது.
ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களில் உங்கள் உறவினர்கள் யாராவது இருந்தால் உங்களுக்கு அதன் வலி தெரியும்..அதுவரைக்கும் தேச துரோகிகளுடன் சேர்ந்து நீங்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருங்கள்..

அருள் சொன்னது…

மர்மயோகி கூறியது...

// //ராஜீவ் காந்தியை கொன்றது சாதாரண நிகழ்வா?// //

சாதாரண நிகழ்வு என நான் கருதவில்லை. ஏனெனில், எந்த ஒரு கொலையையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மற்றபடி, "ராசீவ் காந்தி கொலையே ஒரு பயங்கரவாத நிகழ்வு அல்ல. அது ஒரு தீவிரவாத செயலும் அல்ல. அது அரிதினும் அரிதான குற்றமும் அல்ல" - என்பதாக ராசீவ் கொலை வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம்தான் கூறியது. நான் கூறவில்லை.

// //தமிழ் பற்று எனபது தேச துரோகம் செய்வது அல்ல நண்பரே... தமிழன் என்பதற்காக இந்தியாவுக்கெதிராக நீங்கள் இருந்தால் யாழ்பாணத்துக்கு சென்று விடுங்கள்..// //

எந்த தேசத்துக்கு நான் துரோகம் செய்தேன்? "நான் இந்தியாவில் இருக்கிறேனா? இல்லையா?" என்பதை இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் எதற்காக யாழ்பாணத்துக்கு போகவேண்டும்? தமிழனை இந்தியாவுக்கு வெளியே செல்லச் சொல்லாமல், தேவைப்பட்டால், இந்தியாவை தமிழ்நாட்டுக்கு வெளியே செல்ல சொல்லுங்கள்.

// //ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களில் உங்கள் உறவினர்கள் யாராவது இருந்தால் உங்களுக்கு அதன் வலி தெரியும்..// //

ஐ.பி.கே.எப் கொலை செய்த அப்பாவிகளில் உங்கள் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்திய உதவியுடன் 2009-ல் ஈழத்தில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகளில் உங்கள் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா?

Prakash சொன்னது…

முக்கிய தரவுகளுடன் கூடிய பதிவை தந்த தோழர் அருளுக்கு முதலில் வாழ்த்துக்கள். மேலும் ஒரு சிறிய சந்தேகம், இரண்டாம் முறை கொடுக்கும் கருணை மனு சிறைத்துறையை கட்டுபடுத்துமா? அதாவது எவ்வளவு காலம் அவர்கள் தாமதிக்கலாம்?

குறிப்பு: கேள்வியை யாரும் தவறாக புரிதுகொள்ள வேண்டாம்.

அருள் சொன்னது…

Prakash கூறியது...

// //இரண்டாம் முறை கொடுக்கும் கருணை மனு சிறைத்துறையை கட்டுபடுத்துமா? அதாவது எவ்வளவு காலம் அவர்கள் தாமதிக்கலாம்?// //

இரண்டாம் முறை மனு கொடுக்கப்பட்டவுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தண்டனை செயலாக்கத் தடை (Executive Stay)வழங்க வேண்டும். இதன் மூலம் தூக்குதண்டனை நிறுத்தப்பட்டுவிடும்.

அதன்பிறகு எப்போதாவது மன்னிப்பு மூலம் தண்டனையைக் குறைத்தால் போதும். அதற்கு கால எல்லை இல்லை. ஆனாலும் 3 மாதங்களில் மன்னிப்பு குறித்து முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இது உத்தரவு அல்ல. எனவே, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அரசாங்கம் முடிவெடுக்காமலேயே தள்ள முடியும்.

அல்லது உடனடியாக முடிவெடுத்து தண்டனையைக் குறைக்கவோ, அவர்களை வெளியே விடவோ முடியும். எதுவும் சாத்தியமே.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

"இருபதாண்டு சிறைவாசத்தைக் கடந்துள்ள அவர்களை மன்னித்து விடுதலை செய்வதுகூட மாநில அரசால் முடிகிற எளிய செயல்தான்."

முன்னர் இருந்த தி.மு.க அரசு கூட்டணி தர்மத்திற்க்காக தமிழினப் போராட்டத்தின் வீரியத்தை பல வகைகளில் காயடித்தது. இன்றைய அ.தி.மு.க அரசிற்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏதுமில்லை. அதே நேரத்தில் இவர்களின் மீது கருணை காட்டும் மென்முகமும் இருப்பதாக தெரியவில்லை. எமக்கு அதிகாரம் ஏதுமில்லை என கைகழுவியவர், உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை பெற்ற பின்னரே இவர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். தானைத்தலைவர் எனக்கூறிக்கொள்ளும் கருணாநிதியால் இயலாத ஒரு காரியத்தை இவர் தீர்மானமாய் இயற்றியது அகில இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இவரின் இச்செயல் மிகமிக பாராட்டிற்குரியது. உண்மையான அரசியற் கலப்பில்லாத மனித நேய உணர்வு அவரிடம் இருக்கும் பட்சத்தில், தனக்கிருக்கும் அதிகாரத்தினை உணர்ந்து இம் மூவருடன் நளினியையும் விடுவிக்க முயலவேண்டும். “சோ” போன்றோர் இவரது ஆலோசனைக் குழுவில் இருக்கும் வரை இது சாத்தியமா என எழுந்தாலும், சில நேரங்களில் அவர் வழி தனி வழியாக இருப்பதால் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம். மனித ஆர்வலர்களும் தங்கள் கருத்தினை இடைவிடாது பல்வேறு வடிவங்களில் அரசிற்க்கு உணர்த்துதலை தொடர வேண்டும். எட்டு வாரங்கள் என்பது விரைவில் கரைகின்ற காலம்.

“இதுவரை இது போன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை ஆதார பூர்வமாக எப்பதிவினிலும் கண்டதில்லை.” அற்புதமான ஆழ்ந்த அலசல்!