Pages

வியாழன், செப்டம்பர் 08, 2011

ராசபட்சேவின் "போலி விசாரணை" அம்பலம்! போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பும் நாடகத்தை தகர்த்தது அம்னெஸ்டி.


"இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. எனவே, அங்கு நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசே விசாரித்து நீதி வழங்கும்" என்கிற நாடகத்தை பன்னாட்டரங்கில் நடத்தி வந்தது ராசபட்சே கூட்டம். பன்னாட்டு விசாரணை முயற்சிக்கு எதிரான இந்த நாடகத்திற்கு இந்தியாவின் அபார ஆதரவும் உண்டு.

ஆனால், இந்த நாடகத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளது அம்னெஸ்டி அமைப்பு. 
அந்த அறிக்கையை இங்கே காணலாம்:


Sri Lanka: When will they get justice? Failures of Sri Lanka's Lessons Learnt and Reconciliation Commission


இதுகுறித்து தினமணி செய்தி:

இலங்கை அரசின் விசாரணைக்கு ஆம்னஸ்டி கண்டனம்

வாஷிங்டன், செப்.7: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் நிராயுதபாணிகளான தமிழர்களை வஞ்சகமாக போர்ப் பகுதியில் தள்ளி, தப்பவிடாமல் பீரங்கிகளுக்கும் தானியங்கி துப்பாக்கிகளுக்கும் இரையாக்கி ஆயிரக்கணக்கானவர்களை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக்கொன்ற ராணுவத்தின் கயமையை முறையாக விசாரிக்காமல் பூசி மெழுகப் பார்க்கிறது இலங்கை அரசு நியமித்த விசாரணைக் கமிஷன் என்று லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட "ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கற்ற பாடங்கள் மூலம் சமரசம் காண்பதற்கான கமிஷன் (எல்.எல்.ஆர்.சி.) என்ற பெயரில் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான கமிஷனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச நியமித்திருந்தார்.

போரின் கடைசி கட்டத்தில் தமிழர்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்ற எதிர்ப்பிரசாரத்தை இலங்கை அரசு மேற்கொண்டது.

அப்படியே நடந்திருந்தது என்றாலும் இலங்கை அரசின் விசாரணை வெளிப்படையாகக் கூறப்பட்ட புகார்களைக்கூட விசாரிக்காமல், பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் வெளியான தகவல்களைக் கூட சரிபார்க்காமல் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கிற கதையாக, இருபத்தொராவது நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித இனப் படுகொலையை எதுவுமே நடக்காத மாதிரி மூடி மறைத்துவிட்டது. இதைத்தான் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழர்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்கூட விட்டுவைக்கப்படாமல் போர் தீவிரமாக நடந்த பகுதியையே போர் நிறுத்தப் பகுதியாக அறிவித்து, அடிபட்டவர்கள் பெயரளவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ முகாம்களையும் இரக்கமின்றி தாக்கி அழித்த விடியோ ஆதாரங்களைக் கூட புனைந்தது, செயற்கையானது என்று கூறி நிராகரித்துவிட்டது இலங்கை அரசு.

ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட நடுநிலைப் பார்வையாளர்களும் சமாதானத் தூதர்களும் போர் தொடங்கும் முன்னதாக இலங்கையிலிருந்து புறப்பட்டபோது தமிழர்கள் அவர்களைப் போக வேண்டாம் என்று கெஞ்சி கதறியதன் காரணம் என்னவென்று பிறகு நடந்த படுகொலைகள் எடுத்துக்காட்டிவிட்டன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்கூட, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவது நடுநிலையாளர்களை, மனித உரிமை ஆர்வலர்களை திடுக்கிடச் செய்கிறது.

இந்த நிலையில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் இந்த அக்கிரமத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழர்களுக்கு ஈழம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் பட்ட துயரத்துக்கு சிறிதளாவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியிருக்கிறது. போர்க் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை, போர்க் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்படும் அதிபரே நியமித்த குழு மேற்கொள்ளும் என்று உலகம் எதிர்பார்ப்பது வெட்டிவேலைதான்.

சர்வதேச சமூகம் வேறு ஏதாவது வழிமுறைகள் மூலம்தான் உலுத்தர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டும்.

திட்டமிட்ட படுகொலைகளையும் ஏராளமான தமிழர்கள் கைதும் செய்யப்படாமல் காவலிலும் வைக்கப்படாமல் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்களையும் சரியாக விசாரிக்கவில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய-பசிபிக் பகுதி இயக்குநர் சாம் ஜாரிஃபி சுட்டிக்காட்டுகிறார். அவரது அறிக்கை 69 பக்கங்களுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. "அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?' என்று பொருத்தமான தலைப்பையும் இட்டிருக்கிறார்.

இலங்கை அரசு நியமித்த கமிஷன் விசாரித்து அளித்த அறிக்கையானது சர்வதேச தரத்துக்கு வெகு தொலைவில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

உண்மைகள் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் நடந்த விசாரணைகளிலிருந்து என்ன மாதிரி அறிக்கை தயாரிக்க முடியும்? இப்படிப்பட்ட தகுதிக்குறைவான அறிக்கையைத்தான் இலங்கை அரசால் தர முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பொருமுகின்றனர். இனியாவது சர்வதேசச் சமுதாயம் விழித்தெழுந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை உரிய கண்ணோட்டத்தில் பார்த்து போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சாம்பலை மூடி மறைத்துவிடலாம் நெருப்பை...


உண்மையை எத்தனை போட்டு மூடினாலும் அது வெளியில் வந்துவிடும்...

குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்...

ராஜ நடராஜன் சொன்னது…

இலங்கையின் காலம் கடத்தும் செயலும்,தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் முயற்சியே தனக்குத்தானே விசாரணை.அமெரிக்காவும்,பிரிட்டன்,பிரான்ஸ் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாமல் ஒன்றும் ஆகப் போவதில்லை.மனித உரிமைக்குழுக்கள் அறிக்கைகள் மட்டுமே தர இயலும்.

Unknown சொன்னது…

குற்றம் செய்தவன்,துணை போகிறவர்களுக்கு அதற்கான பதிலை காலம் நிச்சயமாக கொடுக்கும்.

Unknown சொன்னது…

இன்றைய சூழலில் இது மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருக்கப் பட வேண்டியது அவசியம். உண்மை அவ்வளவு எளிதாக தூக்கி எறியப்பட முடியாது.

சுதா SJ சொன்னது…

உண்மைதான்

Unknown சொன்னது…

நிஜம் தான் நண்பரே. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது போல குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5