Pages

திங்கள், அக்டோபர் 24, 2011

வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு: பேராசைக்கு எதிரான போராட்டம்!

தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் எனப்படுகிற கட்டற்ற பொருளாதாரத்தினை உலகெங்கும் பரப்பும் நாடாக இருப்பது அமெரிக்கா. அங்கிருக்கும் நியூயார்க் பங்குசந்தை உலகின் எல்லா பங்குசந்தைகளுக்கும் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. நியூயார்க் பங்குசந்தையும் உலகின் மிகப்பெரிய வங்கிகளும் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட் உலகின் பொருளாதார அச்சாணியாகும். அப்படிப்பட்ட மிகமுக்கியமான இடத்தில் "வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" என்கிற முழக்கத்துடன் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடந்து வருகிறது.

உலகின் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு ஆதரவான உலகவங்கி போன்ற அமைப்புகள், பெருமுதலாளித்துவ அரசாங்கங்கள் என எல்லோருக்கும் எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிப்பதாக இந்த போராட்டம் உருவெடுத்துள்ளது.
பேராசைக்கு எதிராக போராட்டம்
வால் ஸ்ட்ரீட்டில் நான் - நியூயார்க் July 2011
"உலகின் வளங்களைக் கொண்டு உலக மக்கள் எல்லோரது தேவைகளையும் ஈடு செய்ய முடியும், ஆனால் எல்லோரது பேராசைகளையும் ஈடு செய்ய முடியாது" என்றார் மகாத்மா காந்தி. அவரேதான் "உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடும்" அறப்போர் முறையையும் உருவாக்கினார். இன்று அதே அறப்போர் வழியில் பேராசைக்கு எதிரான போராட்டம் உருவெடுத்துள்ளது.

"வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" என்றால் என்ன?

கனடா நாட்டிலிருந்து நுகர்வுவெறிக்கு எதிராக நடத்தப்படும் பத்திரிகை 'அட்பஸ்டர்ஸ்' ஆகும். இப்பத்திரிகை சூலை மாதவாக்கில், பன்னாட்டு நிறுவனங்கள் சனநாயகத்தை சீரழிப்பதாகவும் இதனால் ஏழை - பணக்காரர் வேறுபாடு அதிகரிப்பதாகவும் கூறி - அரசியலில் தனியார் தொழில் நிறுவனங்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற போராட்டத்தை முன்வைத்தது. இதனைக் குறிக்கும் விதமாக பங்குசந்தைகளின் அடையாளமாக விளங்கும் காளைமாட்டின் மீது ஒரு பெண் நடனமாடுவது போன்ற படத்தை 'அட்பஸ்டர்ஸ்' வெளியிட்டது.
போராட்டத்தை தூண்டிய படம்
பங்குசந்தை காளைக்கு காவல்
வால் ஸ்ட்ரீட் காளை அருகே நான் - நியூயார்க் July 2011
'அனானிமஸ்' எனப்படும் முகமற்ற போராட்ட அமைப்பினர் 'கூடாரம், சமையல் கருவிகளுடன் வால் ஸ்ட்ரீட்டை நிரப்ப வேண்டும்' என அழைப்பு விடுத்தனர். அறிவிக்கப்பட்டபடி 2011 செப்டம்பர் 17 அன்று சுமார் மூன்றாயிரம் பேர் வால் ஸ்ட்ரீட் முற்றுகையில் ஈடுபட்டனர். அத்தெருவின் வடக்கு பக்கத்தில் உள்ள சுக்கோட்டி பூங்கா எனும் இடத்தில் அவர்கள் முகாமிட்டு தங்கினர். அந்த பூங்காவிற்கு விடுதலைப் பூங்கா என பெயரிட்டனர். அங்கேயே கூட்டமாக தொடர்ந்து தங்கிவருகின்றனர். பல அமைப்புகள் பங்கேற்றாலும், இப்போராட்டம் தனிப்பட்ட அமைப்புகள் எதனாலும் நடத்தப்படவில்லை. தலைவர், வழிகாட்டி என்று யாரும் கிடையாது. அரசியல் கட்சி சார்பு எதுவும் இல்லை.

உலகின் மிகமுக்கிய பொருளாதார மையத்தில் நடந்துவரும் இந்த போராட்டத்தை பத்திரிகைகள் முதலில் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. செப்டம்பர் 24 அன்று அப்பகுதியில் மறியலில் இறங்கிய போராட்டக்காரர்கள் மீது எரிச்சல் தரும் மிளகுச்சாறு தெளிக்கப்பட்டது, 80 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் ஊடகங்களில் பெரிதாக வெளியானது. அக்டோபர் 1 அன்று போராட்டக்காரர்கள் புரூக்ளின் பாலம் நோக்கி நடத்திய போராட்டத்தில் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
 விடுதலைப் பூங்கா , நியூயார்க்
ஸ்பெயின்-மாட்ரிட்டில் 5 லட்சம் பேர் திரண்டு போராட்டம்
படிப்படியாக வளர்ந்த இந்த போராட்டம் - அமெரிக்காவின் எல்லா நகரங்களுக்கும் பரவியது. பின்னர் உலகளாவிய போராட்டமாக மாறியது. அக்டோபர் 15 அன்று உலகின் 82 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் - பல லட்சம் பேர் பங்கேற்ற போராட்டமாக "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டம் மாறியிருந்தது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மட்டும் ஐந்து லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். லண்டன் பங்குச்சந்தை உள்ள புனித பால் கதீட்ரல் பகுதி உட்பட உலகின் பல இடங்களில் ஆக்கிரமிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 லண்டன் பங்குச்சந்தை-புனித பால் கதீட்ரல் போராட்டம்
 லண்டன் போராட்டத்தில் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே
புனித பால் கதீட்ரல் அருகே நான் -  லண்டன்  July 2011

போராட்டம் எதற்காக?

சமூக நீதி, சமத்துவத்தை வலியுறுத்தும் போராட்டம் இதுவாகும். இதே கொள்கையை வலியுறுத்திய தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டமும் தொடங்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும் (பெரியார் பிறந்தநாளுக்கும் இதற்கும் தொடர்பில்லை). பொருளாதார வளர்ச்சியின் பலன் மிகச்சிலருக்கே செல்வது, அரசாங்கத்தை பெரும் நிறுவங்கள் கட்டுப்படுத்துவது, மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக நடக்கும் போராட்டும் இதுவாகும்.

அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் நிருவாகிகளாக உள்ள 400 தனிநபர்களின் ஆண்டு மொத்த வருமானமும், அந்த நாட்டின் 18 கோடி அமெரிக்க மக்களின் ஆண்டு மொத்த வருமானமும் சமமாகும். அமெரிக்க மக்களில் கீழ்நிலையில் உள்ள 42 விழுக்காட்டினரின் மொத்த வருமானமும், மேல்தட்டில் உள்ள 1 விழுக்காடு மக்களின் மொத்த வருமானமும் சமமாகும் - இந்தக்கருத்தை முன்வைத்துதான் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. "நாங்கள் 99 விழுக்காட்டினர்" என்கிற முழக்கம் அங்கு எழுப்பப்படுகிறது.
ஆஸ்திரேலிய போராட்டம்
இதையே உலகளவில் நாடுகளுக்கு இடையே பார்க்கும்போது உலகின் ஒட்டுமொத்த வருமானத்தில் 42 விழுக்காடு மேல்தட்டின் 10 விழுக்காட்டினருக்கு செல்கிறது. கீழ்தட்டில் இருக்கும் மக்களுக்கு வெறும் 1 விழுக்காடு பங்குதான் கிடைக்கிறது. இப்படி நாடுகளுக்கு இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு மட்டுமின்றி நாட்டிற்கு உள்ளே வருமானம் பெருமளவில் வேறுபடுகிறது.

கூடவே, வருமான ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இப்படி ஏழை - பணக்காரர் வேறுபாடு 1982 ஆம் ஆண்டிற்கு பின்னரே அதிகரித்து வந்துள்ளதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. எனவே, தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளே இன்றைய சிக்கல்களுக்கு காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அநீதியான பொருளாதார வளர்ச்சிப்போக்கிற்கு முடிவு கட்டுவதே வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் அடிப்படை இலக்காகும்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன?

வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் ஒரு வேறுபட்ட போராட்ட முறையாகும். அதற்கு தலைவர்கள் எவரும் கிடையாது. அவ்வப்போது பொதுச்சபை என்கிற கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அங்கு எல்லோருக்கும் பேச வாய்ப்பு அளிக்கின்றனர். எல்லோரும் ஒத்துக்கொள்ளும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். எனவே, திட்டவட்டமாக இதுதான் எங்கள் கோரிக்கை என்று அவர்கள் எதையும் முன்வைக்கவில்லை. இதனால் அது ஒரு இலக்கில்லாத போராட்டம் என்றும் கருதிவிட முடியாது.

போராட்டத்தின் ஒற்றை இலக்கு - அரசியலை, அதாவது அரசாங்கத்தை பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் - என்பதுதான். ஏனென்றால், ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வறுமை என எல்லாவற்றுக்கும் பெரும் தொழில் நிறுவனங்களும், வங்கிகளும், பங்குசந்தையுமே காரணமாக இருக்கின்றன. மக்கள் வாக்களிப்பதன் மூலம் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தலைவர்களுக்கும் பணம்படைத்த பெரும் முதலாளிகளுக்கும் இடையே உள்ள நெருக்கத்தின் காரணமாக - அரசாங்கம் பணம் படைத்தோருக்கு சாதகமாகவே இருக்கிறது.
நியூயார்க்
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக - அரசாங்கம் தனது கடைமைகளை தனியாரிடம் விட்டுவிடுகிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை குறைப்பது என்கிற பெயரில் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக தனியாரின் கருணையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வங்கிகளும் பங்குச்சந்தையும் 99 விழுக்காட்டினரின் பணத்தைப் பிடுங்கி 1 விழுக்காடு பணக்காரர்களிடம் கொடுக்கின்றன. இந்த சமத்துவமற்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் பொதுவான இலக்காகும்.

எங்கே வலிக்குமோ அங்கே அடியுங்கள்

தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படைகளைத் தகர்க்கும் கோரிக்கைகள் இப்போராட்டத்தின் மூலம் உலகெங்கும் எழுப்பப்படுகிறது. பெரும் பணக்காரகள் மீது அதிக வரிவிதிக்க வேண்டும். இந்த வரியைக் கொண்டு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை அரசாங்கமே வழங்க வேண்டும் என்கின்றனர்.

இப்படி உள்நாட்டில் வரி விதிப்பது மட்டுமின்றி - உலகளாவிய பணப்பரிமாற்றத்தின் மீதும் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தை ஏழை நாட்டின் மக்களின் தேவைகளுக்காக செலவிட வேண்டும் என்பது மிக முக்கிய கோரிக்கையாக எழுந்துள்ளது. இப்படி பணக்காரர்களிடம் பிடுங்கி ஏழைக்கு அளிக்கும் இந்த பன்னாட்டு பணப்பரிமாற்ற வரிக்கு "ராபின் குட் வரி" என்று பெயரிட்டுள்ளனர்.

போராட்ட பிரகடனம்

"மக்களின் கூட்டுறவே மனித இனத்தின் எதிர்காலத் தேவை. அரசாங்கங்கள் மக்களிடம் இருந்தே அதிகாரத்தைப் பெருகின்றன. ஆனால், பூமியின் வளங்களை பெருநிறுவனங்கள் எடுப்பதற்கு மக்களின் அனுமதியினைப் பெறவில்லை. எனவே, பொருளாதார வலிமையைக் கொண்டு எல்லாமும் தீர்மானிக்கப்படும் வரை உண்மையான சனநாயகம் ஒருபோதும் சாத்தியமில்லை. மக்களைவிட இலாபம் பெரிது, நீதியைவிட சுயநலம் பெரிது, சமத்துவத்தைவிட ஒடுக்குமுறை பெரிது என்று கருதும் பெரும் நிறுவனங்களே நமது அரசாங்கங்களை இயக்குகின்றன.
பெரும் நிறுவனங்கள் அரசிடமிருந்து வரிப்பணத்தை எடுத்துக்கொண்டனர். வேலை இடங்களில் சமத்துவமின்மையையும் ஒதுக்குதலையும் கடைபிடித்தனர். உணவு முறையை நஞ்சாக்கினர். தொழிலாளர் உரிமைகளை மறுத்தனர். மக்களுக்கு மருத்துவ சேவைகளை மறுத்தனர். மக்களின் அந்தரங்கங்களை விற்று காசாக்கினர். இராணுவத்தையும் காவல்துறையினரையும் மக்கள் மீது ஏவினர். தவறான பொருளாதாரக் கொள்கைகளை வலுக்கட்டாயமாகத் திணித்தனர். தம்மை கண்காணிக்கும் அரசியல் தலைவர்களுக்கே பெரும் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தனர். மாற்று ஆற்றல் எரிபொருளைத் தடுத்தனர். காப்புரிமை இல்லாத பொதுவான உயிர்க்காக்கும் மருந்துகளைத் தடுத்தனர். சுற்றுச்சூழலை சீர்கெடுத்தனர். ஊடகங்களை கட்டுப்படுத்தி கட்டுக்கதைகளைப் பரப்பினர். உலகெங்கும் காலனியாதிக்கத்தை திணித்தனர். அரசின் உதவியுடன் போர் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு வழிவகுத்தனர்."

இப்படியாக பெரும் நிறுவனங்களின் அநீதிகளைப் பட்டியலிட்டு அவற்றை ஒழித்துக்கட்டி மக்களின் உரிமையை நிலைநாட்டுவதே "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு" போராட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வு

அமெரிக்காவின் ஏழை - பணக்காரர் வேறுபாட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மாறுபட்டது அல்ல. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை என்பது குறைந்த வருவாய்ப் பிரிவினரிடமிருக்கும் பணத்தை அபகரித்து அதிக வருவாய்ப் பிரிவினரிடம் அளிப்பதாக மாறியுள்ளது.
வருவாய் ஏற்றத்தாழ்வை மதிப்பிட நாட்டின் மொத்த மக்கள் தொகையை வருமான அடிப்படையில் 5 பிரிவாக பிரிக்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முறையே 20 விழுக்காடு மக்கள் அடங்குவர். இதில் கீழ்தட்டில் இருக்கும் 20 விழுக்காடு மக்களின் வருவாயுடன் மேல்தட்டில் இருக்கும் 20 விழுக்காட்டினரின் வருமானத்தை ஒப்பிட்டு வருவாய் ஏற்றத்தாழ்வை அளவிடுகின்றனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வினை அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதுடன் - அந்த ஏற்றத்தாழ்வு ஆண்டுக்காண்டு அதிகரிப்பதையும் காட்டுகின்றன.  (The Official Poor in India Summed Up, Rajesh Shukla, Indian Journal of Human Development, Vol. 4, No. 2, 2010)

2004 - 05 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின் படி இந்தியாவின் மொத்த ஆண்டு வருமானத்தில் கீழ்த்தட்டு 20 விழுக்காடு மக்களுக்கு கிடைத்தது 6.3 விழுக்காடு ஆகும். அதுவே மேல்தட்டு 20 விழுக்காட்டினருக்கு கிடைத்த பங்கு 48 விழுக்காடு ஆகும். கீழ்தட்டு 20 விழுக்காட்டினரின் சராசரி ஆண்டு வருவாய் 3,692 ரூபாய் ஆக இருந்தது. அதுவே மேல்தட்டு 20 விழுக்காட்டினரின் சராசரி ஆண்டு வருவாய் 33,020 ரூபாய் ஆக இருந்தது. அதாவது கீழ்தட்டு பிரிவினரைவிட மேல்தட்டு பிரிவினரின் வருவாய் 9 மடங்கு அதிகம்.

தற்போதைய போக்கினை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தை மதிப்பிடும் போது அதிர்ச்சியளிக்கும் முடிவுகளே கிடைக்கின்றன. கடந்த இருபதாண்டு பொருளாதார தாராளமயமாக்கலால் - ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 1993 - 94 இல் மேல்தட்டு 20 விழுக்காட்டினருக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் கிடைத்த பங்கு 37 விழுக்காடு. இது 2004 - 05 இல் 48 விழுக்காடாக அதிகரித்தது. இனி 2014 - 15 இல் இதுவே 58 விழுக்காடாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் கீழ்தட்டு 20 விழுக்காட்டினருக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் கிடைக்கும் பங்கு 1993 - 94 இல் 7 விழுக்காடாக இருந்தது. 2004 - 05 இல் 6.3 விழுக்காடாகக் குறைந்தது. இது 2014 - 15 இல் 6 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறையும் என மதிப்பிடப்படுகிறது. ஆக, நாட்டின் வளர்ச்சி என்பது பணம் படைத்தோரின் வளர்ச்சி என்பதாக மாறியுள்ளது. மேல்தட்டின் 20 விழுக்காட்டினரைத் தவிர மீதமுள்ள 80 விழுக்காட்டினரும் வஞ்சிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர்.
பெரும் தொழிநிறுவனங்களுக்கும் பணம் படைத்தோருக்கும் ஆதரவான பொருளாதாரக் கொள்கையை அரசாங்கம் முன்னெடுப்பதால், பெரும்பான்மை மக்கள் பாதிப்படைகின்றனர். சனநாயகம் கேலிக்கூத்தாகிறது. உலகிலேயே மிகக்குறைவாக வரிவிதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கிறது. குறிப்பாக பணக்காரர்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி அளவு, உலக நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் மிகமிகக் குறைவு. அரசின் வருமானம் குறைவதால் - மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், குடிநீர், துப்புரவு போன்ற எல்லாவற்றிலும் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் அந்த நாட்டு மக்களின் வளத்தைக் கொள்ளையடிப்பது போல - இந்தியாவில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் கோள்ளையில் ஈடுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நாட்டின் எண்ணெய் வளத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளிக்கும் அரசின் ஒரேஒரு உத்தரவினால், அந்த நிறுவனத்திற்கு 81 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனம், திருப்பெரும்புதூர்
தமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு 625 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டும் வரியை திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவின் இதர மாநிலங்களில் அந்த நிறுவனம் செலுத்தும் மதிப்புக்கூட்டு வரியையும் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இதர மாநிலங்களில் நோக்கியா அலைபேசி கருவிகள் விற்கப்படும் போது, அந்த மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு அரசு ஈடுசெய்கிறது!

இதன்படி 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் 107 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, நோக்கியா நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ததோ, அதைவிட அதிக பணத்தை பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்கப்போகிறது, கூடவே தமிழ்நாட்டில் வரிவிலக்கும் உண்டு. நிலம், மின்சாரம், கட்டமைப்பு, தண்ணீர் வசதி போன்ற இன்னபிர இலவச இணைப்புகளும் உண்டு.

இப்படியாக, உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கும் வள்ளல்களாக நம்முடைய அரசுகள் மாறிவிட்டன. அரசியல்வாதிகளுக்கும் தனியார் பெருமுதலாளிகளுக்கும் இடையேயான 'நெருக்கமான நட்பு'தான் இதற்கெல்லாம் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எனவே, 'வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' என்கிற போராட்டம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கூட பொருந்தக்கூடியதுதான்.

தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளால் கேடு நேர்ந்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒப்புக்கொண்டுள்ளார். செப்டம்பர் 25 அன்று நியூயார்க் நகரில் ஐ.நா. கூட்டத்தில் பேசும்போது "பன்னாட்டளவில் இப்போது பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலகமயமாக்கல், நாடுகளுக்கிடையே ஒன்றை ஒன்று சார்ந்து இருத்தல் என்கிற தத்துவங்களால், நாடுகள் பலன் பெரும் என்ற முந்தைய நிலை மாறி, தாராளமயம், உலகமயக் கொள்கையை செயல்படுத்தியதால், இன்று காணப்படும் எதிர்மறை விளைவுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார் மன்மோகன் சிங்.

மேலும் "ஒருபக்கம் வங்கிகளின் அதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் அளிக்கும் போது மறுபுறம் மக்களின் வயிற்றினை இருக்கி கட்டிக்கொள்ள (செலவுகளைக் குறைக்க) சொல்லும் நிலையால் - அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன. வால் ஸ்ட்ரீட்டில் போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டங்களுக்கு வலுவான காரணம் இருக்கிறது." என்றெல்லாம் பேசுகிறார் மன்மோகன் சிங்.

(இந்தியாவில் தாராளமய பொருளாதாரக் கொள்கையைத் திணித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான். இப்போது இந்திய அரசின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தினை 'தாராளமயக்கொள்கை' அடிப்படையில் உருவாக்கிக் கொண்டிருப்பவர் அவரது நண்பர் மாண்டெக் சிங் அலுவாலியா.)

இனி என்ன?
இதுவரைக்கும் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்கிற போராட்டங்கள்தான் உலக வழக்காக இருந்தன. இப்போது பணம் படைத்தோர் மீது அதிக வரிவிதித்து எல்லோருக்குமான அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிறைவு செய்ய வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. அரசாங்கம் என்பது ஜனநாயக வழியில் நடக்க வேண்டும். தனியார் இலாபத்தைவிட மக்கள் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும். பெருநிறுவனங்களின் பேராசையை ஒழிக்க வேண்டும் - என்கிற கோரிக்கை வளர்ந்த பணக்கார நாடுகளிலேயே உருவெடுத்துள்ளது ஒரு முக்கிய மாற்றம் ஆகும்.

உலகெங்கும் சமூக நீதி, சனநாயகம், சமத்துவம் என்கிற சரியான இலக்கை இந்த போராட்டம் முன்வைக்கிறது. இந்த குரலுக்கு வலு சேர்க்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

14 கருத்துகள்:

நெல்லி. மூர்த்தி சொன்னது…

அருமையானக் கட்டுரை! பங்குசந்தையினை சூதாட்டகளமாக்கியுள்ளனர். உற்பத்தியோ குறைந்து வருகின்றடு. இல்லாத உற்பத்திக்கும் ஊக வணிகம் மூலம் இருக்கும் பொருட்களின் விலையினை பன்மடங்காக உயர்த்தும் குயுக்தி பங்கு சந்தையில் பணம் படைத்த மேதாவிகளில் இயலுகின்றது. தனியாரிடம் தான் சேவை சிறப்பாக இருக்கும் என்று கருதினால் அரசாங்கம் எதற்கு?!

தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் புது தகவலுகளுடன் விளக்கமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. தொடர்ந்து அசத்துங்க!

பாண்டியன் சொன்னது…

தற்போது தேவையான கட்டுரை.

Unknown சொன்னது…

ஐயோ.......... இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? தகவல்களுக்கு நன்றி தல!

தூயவனின் அடிமை சொன்னது…

நல்ல அருமையான கட்டுரை, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்து உள்ளது. என்னால் சுருக்கமாக தான் சொல்ல முடிந்தது, ஆனால் நல்ல

விளக்கமாக கூறியுள்ளிர்கள்.

அம்பாளடியாள் சொன்னது…

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ....

Rathnavel Natarajan சொன்னது…

உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கும் வள்ளல்களாக நம்முடைய அரசுகள் மாறிவிட்டன. அரசியல்வாதிகளுக்கும் தனியார் பெருமுதலாளிகளுக்கும் இடையேயான 'நெருக்கமான நட்பு'தான் இதற்கெல்லாம் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள், நன்கு எழுதுங்கள்.
எங்களது மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_24.html

kumaresan சொன்னது…

இன்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் இந்தப் பேராட்டம் சில தனிப்பட்ட நிறுவனங்களின் பேராசைக்கு எதிரான ஒன்றாகச் சித்தரிக்க முயல்கின்றன. அடிப்படையான சுரண்டல் அமைப்புக்கே எதிரான போராட்ட வெளிப்பாடு இது. முதலாளித்துவம் அத்தனை எளிதில் விட்டுக்கொடுத்துவிடாது. சாம தான பேத தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க முயலும். மக்கள் இயக்கங்கள் இதனை சரியான அரசியல் இலக்கோடு வழிநடத்தியாக வேண்டும். முழுமையான கட்டுரை. பாராட்டுகள். -அ. குமரேசன்

மாலதி சொன்னது…

தங்களின் கட்டுரை புது தகவலுகளுடன் விளக்கமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. .மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

மதுரை சரவணன் சொன்னது…

iniya theepaavali nal vaalththukkal

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.பாராட்டுகள்...

superlinks சொன்னது…

வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நட்புடன் ரமேஷ் சொன்னது…

arul..வாழ்த்துக்கள் நல்ல கட்டுரை. கார்ப்ரேட் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியவிலும் இயக்கங்களை துவக்குவோம். நன்றி

தமிழ்வாணன் சொன்னது…

மிகவும் அவசியமான பகிர்வு. இத்துடன் சாதாரண இந்திய குடும்பம் எப்படி உலக மயமாக்கள் எதிர்த்து போராடுவது என்று விவாதிக்க வேண்டும்.