Pages

செவ்வாய், மார்ச் 13, 2012

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்: காமெடியா? லூசுத்தனமா? (பகுதி 2) சாதிக்கட்சி ஆபத்தானதா? 


"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் எனும் 'பிரபல' பதிவர் "அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி" எனும் ஒரு பதிவினை எழுதியுள்ளார். 
பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள "புதிய அரசியல் புதிய நம்பிக்கை" எனும் ஆவணத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களையொட்டி இப்பதிவினை அவர் வெளியிட்டுள்ளார். (புதிய அரசியல் புதிய நம்பிக்கை - இங்கே காண்க)

கேலி பேசுதல், லூசுத்தனமாக பேசுதல், விஷமப் பிரச்சாரம் செய்தல், அவதூறு என பலவற்றையும் அது உள்ளடக்கியிருக்கும் அவரது பதிவில் - மருத்துவர் இராமதாசு அவர்களை குற்றம்சாட்டும் விதமாக:
1. சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்.
2. சாதிக்கட்சி வைப்பது ஆபத்தானது.
3. சாலைமறியல் போராட்டத்தில் மரம் வெட்டப்பட்டது ஒரு பெரும் குற்றம்
-- என்பன "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமாரின் கருத்துகளாகக் கூறப்பட்டிருந்தன. 

இதில் "சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்"தானா? என்பது குறித்து எனது முந்தைய பதிவில் விளக்கியிருந்தேன். இந்த பதிவில் "சாதிக்கட்சி வைப்பது ஆபத்தானது" தானா? என்பது குறித்து விளக்க விரும்புகிறேன்.


சாதிக்கட்சி ஆபத்தானது என்பது ''அயோக்கியத்தனமான' வாதம்'!

சாதிச் சண்டை, தீண்டாமை, சாதி அரசியல் - இவை மூன்றையும் ஒன்றாகக் குழப்பி, கடைசியில் சாதி அரசியலும் சாதிவெறியும் ஒன்றுதான் என்ற முடிவினை திராவிட ஆதிக்க சாதிவெறியர்கள் காலம்தோரும் கட்டமைத்து வருகின்றனர்.

இந்தியாவில் பொதுவாக நான்கு விதமான அடையாளங்கள் அரசியலில் எதிரொலிக்கின்றன. அவை:

1. தலித் அரசியல், 
2. சிறுபான்மை அரசியல், 
3. மொழிவாரி தேசிய இன அரசியல், 
4. சாதி சார்ந்த அரசியல்.

இவற்றில் தலித் அரசியல், சிறுபான்மை அரசியல், மொழிவாரி தேசிய இன அரசியல் - இவை மூன்றையும் பெரும்பாலும் யாரும் குற்றம் சொல்வது இல்லை. ஆனால், சாதி சார்ந்த அரசியல் என்று வரும்போது வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கின்றனர். அதற்கு 'சாதிவெறி' என்கிற முத்திரையைக் குத்துகின்றனர். 
சாதி அரசியல் என்பது 'சாதிவெறியோ, தீண்டாமையோ, பிற்போக்கோ' அல்ல. மாறாக, அது முற்போக்கான அரசியலே ஆகும். ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எந்த அடையாளம் ஆதிக்கக் கூட்டத்தால் பயன்படுத்தப் படுகிறதோ, அதே அடையாளத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்படுவோரும், சுரண்டப்படுவோரும் ஒன்றிணைவதும் உரிமைக் கேட்பதும் மிகமிக இயல்பானதும் நியாயமானதும் ஆகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை நடுத்தெருவில் விட்டுவிடவில்லை. அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்பது மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. அட்டவணை சாதியினர் (SC), 2. அட்டவணைப் பழங்குடியினர் (ST), 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமைகள் இறுதி செய்யப்படாமல், பிரிவு 340- இன் கீழ் ஆணையம் அமைத்து உரிமைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்றே கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ்தான் மண்டல் குழு அமைக்கப்பட்டது.

அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1. அட்டவணை சாதியினர் (இப்போது தலித்), 2. அட்டவணைப் பழங்குடியினர் ஆகியோரின் அரசியல் சரி என்றால், இதர பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் மட்டும் எப்படி தவறானதாகும்? எப்படி சாதிவெறி ஆகும்? 
மதச் சிறுபான்மையினரின் அரசியல் சரி என்றால், சாதி அரசியல் எப்படிக் குற்றமானதாகும்?
"சாதி அரசியல் தவறு" என்கிற கட்டுக்கதையை திராவிட ஆதிக்க சாதியினர்தான் தங்களது ஊடக பலத்தால் போலியாகக் கட்டமைத்துள்ளனர். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை நசுக்கி தங்களது திராவிட மேலாதிக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.


சாதி அரசியல் - தந்தை பெரியாரின் கருத்து

திராவிட சித்தாந்தத்தின் முகாமையான கர்த்தாவாகக் கருதப்படுபவர் தந்தை பெரியார். சாதி அரசியல் குறித்த அவரது நேர்மையானக் கருத்துகள்:

"எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச் சாதி மாநாடு கூடவேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது.  ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை 'வகுப்பு மாநாடுகள்' என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதுதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூறமுடியாது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வரையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல்தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்கு சமமானவர்களே என்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை அடைவதற்கே முயற்சி செய்வார்கள்" 

-- என்று தந்தை பெரியார் 29.09.1929 அன்று திருச்சியில் பேசிய பேச்சு 5.10.1929 அன்று திராவிடன் ஏட்டில் வெளியானது.

அன்று தந்தை பெரியாருக்கு இருந்த நேர்மை உணர்வு இன்றைய திராவிடக்கூட்டத்திற்கு இல்லை., இன்று திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் சாதி மாநாட்டையும் சாதி அரசியலையும் 'பிற்போக்கு' என்று தூற்றுகிறது.
"நமது நாட்டில் பல வகுப்புகளிலிருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்தில் வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்கமிருக்கிறதா என்பதைக் கவனித்து, வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்கு கொண்டுவந்ததாகும்...

ஒரு நாடு என்பது ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் நலத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் நலத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மையான நாட்டு நலத்தைத் தேடுவோர், தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும் பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள்" 

- என்று 14.2.1926 அன்று குடிஅரசில் தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார்.

"இந்த இந்திய உப கண்டமானது பல சாதி, பல மதம், பல வகுப்புகள் கொண்ட பிரதேசமாக இருந்துவருவதால் இந்திய அரசியல் தத்துவம் என்பது சாதியை, மதத்தை, வகுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்து வருகிறது." 

-  என்று 30.11.1946 இல் குடிஅரசில் தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார்

"எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?

வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?
ஏதாவது ஒரு மனிதன், தன்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், தன்னுடைய சாதி வலுவிழந்த சாதி என்றும், தன்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் தனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, 'என்னை நீ அடக்கியாள முடியாதபடி செய்துவிடு' என்று சொல்வதில் என்ன தப்பு? இதற்கு பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது தேசத்துரோகத்தனம் என்று சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை எப்படிச் சொல்லுவது? 

'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்" 

- என்று 8.11.1931 குடிஅரசு தலையங்கத்தில் எழுதினார் தந்தை பெரியார்.

ஆனால், இப்போது 'திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் 'சாதி அடிப்படையில் உரிமைக் கேட்பதை' தூற்றுகிறது. சாதிவெறி என்று அவதூற்றை அள்ளி வீசுகிறது. இதனை பெரியாரின் வார்த்தைகளில் சொன்னால் "'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது?"


சாதி அரசியல் எனும் முற்போக்கு அரசியல்

ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை. வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.
1. இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை ஆங்கிலேயர்கள் 1860களுக்கு பின்பு அறிமுகப்படுத்தியபோது, ஒருசில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்படுவதை எதிர்க்க சாதி ரீதியிலான அணிதிரட்டல் நடந்தது.

2. ஒருசில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டபோது சாதி ரீதியிலான அணிதிரட்டல் தேவைப்பட்டது.

3. தமிழ்நாடு திராவிட ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஒரு மாநிலமாக இருப்பதும், திராவிட கட்சிகள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கும் பின்னணி சாதி அரசியல்தான். “பார்ப்பனர்கள் ஒரு சாதி – பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லோரும் மற்றொரு சாதி” என்கிற தந்தை பெரியாரின் வகைப்படுத்தல்தான் திராவிட அரசியல் எழுச்சியின் அடிப்படை.
4. அண்ணல் அம்பேதகர் அவர்களால் முன்வைக்கப்பட்டு, இன்று தலித் அரசியலாக வளர்ந்து நிற்கும் அரசியல் எழுச்சியின் அடிப்படையும் சாதிதான்.

5. விடுதலையான காலகட்டத்தில் இந்தியாவின் சனநாயகத்தை வளர்க்க சாதியே வழிவகுத்தது. தேர்தல் முறையை ஊக்குவிக்கும்விதமாக பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கேற்க செய்தவை சாதி அமைப்புகள்தான்.

6. காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது. இன்று பெரும் அரசியல் சக்தியாக எழுந்து நிற்கும் முலாயம் சிங் யாதவின் எழுச்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பு அரசியல் எழுச்சியே ஆகும்.

இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது – சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.
ஆக, மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக – சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.

ஓரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வழிவகுத்ததும் சாதி அரசியல்தான். ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்.

இது எப்படி பிற்போக்கு ஆகும்? முற்போக்கை பிற்போக்கு என பிரச்சாரம் செய்யும் திராவிட ஆதிக்க சாதிவெறியர்களின் கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட வேண்டும்.

திருவாளர் "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் அவர்களே! 

நீங்களே சொல்லுங்கள்: 'சாதிக்கட்சி ஆபத்தானது' என்று எதற்காக சொல்கிறீர்கள்?

6 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

சாதி அரசியல் என்று தூக்கி பிடித்த பிறகு அது பழம் காலத்தின் சாதி கட்டமைப்பை உறுதி செய்கிறது, ஆகையால் இதை முற்போக்கு என்று சொல்வதை விட பழமையை தூக்கி பிடிப்பதால் இது பிர்போக்கே... மாறாக ஒரு குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் அவனது சமூக ஏற்றத் தாழ்வும் பின்னடைவும் கணக்கிடப் பட்டால் அது முற்போக்கு.. ஆனால் வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது கனவாகவே இருக்கும் என்பது கண் கூடு... ஏனெனில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இந்த இட ஒதுக்கீட்டை வைத்து எதோ ஒரு வகையில் லாபம் சம்பாதிக்கவே பார்க்கிறதே தவிர, எவனையும் கை தூக்கி விட எண்ணுவதில்லை...

அடுத்த பாகத்தில் மேலும் விரிவாக பேசுவோம்

தமிழன் சொன்னது…

சாதியின் பெயரால் போராடுவோர் பதவி கிடைத்தபோது சாதியினருக்கு என்ன செய்தார்கள் என கேட்கிறார்களே? தலித் கட்சி தலைவர்களுக்கும் இது பொருந்தும். இதற்கு என்ன பதில் 5 ஆண்டுகளில் அந்த சாதி மாணவ, மாணவியருக்கு 1500 எம்.பி.பி.எஸ். இடங்களை தனிப்பட்ட ஒதுக்கீட்டில் வழங்கியிருக்க முடியும். ஆனால் அவை எங்கே போயின? யார் இந்த கணக்கிற்கு பதில் சொல்வது.

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

வால்பையன் சொன்னது…

//சாதி அரசியல் என்பது 'சாதிவெறியோ, தீண்டாமையோ, பிற்போக்கோ' அல்ல. மாறாக, அது முற்போக்கான அரசியலே ஆகும்.//


சாதி என்னும் பார்ப்பீனிய அடுக்கில் அமர்வது தான் முற்போக்கு அரசியல் என்றால், டோண்டு ராகவன் தம்மை ராகவ அய்யங்கார் என சொல்வதும் முற்போக்கு அரசியல் தானே.

அய்யங்கார் என்பதும் சாதி தானே!

என்ன கொடும சார் இது!

JP சொன்னது…

இந்த பதிவில் "சாதிக்கட்சி வைப்பது ஆபத்தானது" தானா? என்பது குறித்து விளக்க விரும்புகிறேன்.
ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எந்த அடையாளம் ஆதிக்கக் கூட்டத்தால் பயன்படுத்தப் படுகிறதோ, அதே அடையாளத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்படுவோரும், சுரண்டப்படுவோரும் ஒன்றிணைவதும் உரிமைக் கேட்பதும் மிகமிக இயல்பானதும் நியாயமானதும் ஆகும்.அன்று தந்தை பெரியாருக்கு இருந்த நேர்மை உணர்வு இன்றைய திராவிடக்கூட்டத்திற்கு இல்லை., இன்று திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் சாதி மாநாட்டையும் சாதி அரசியலையும் 'பிற்போக்கு' என்று தூற்றுகிறது.
"எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?ஆனால், இப்போது 'திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் 'சாதி அடிப்படையில் உரிமைக் கேட்பதை' தூற்றுகிறது. சாதிவெறி என்று அவதூற்றை அள்ளி வீசுகிறது. இதனை பெரியாரின் வார்த்தைகளில் சொன்னால் "'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது?"சாதி அரசியல் எனும் முற்போக்கு அரசியல்ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை. வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது. இன்று பெரும் அரசியல் சக்தியாக எழுந்து நிற்கும் முலாயம் சிங் யாதவின் எழுச்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பு அரசியல் எழுச்சியே ஆகும்.ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது – சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக – சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்#############அருள் அண்ணா ...தங்களின் விளக்க கட்டுரை மிகவும் அருமை....இதை படித்த பிறகும் நண்பர் சூரிய ஜீவா இதை பிற்போக்கு என்று வாதிடுகிறார் என்றால் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்து வாதிட வேண்டும்...

ஊரான் சொன்னது…

"இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது – சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது."

சாதி ரீதியாலான ஏற்றத்தாழ்வு எங்கே ஒழிந்திருக்கிறது? அடக்குமுறை எங்கே ஒழிந்திருக்கிறது? சுரண்டல் எங்கே ஒழிந்திருக்கிறது? இவற்றில் சில இடங்களில் சிறிதளவேனும் ஒழிந்திருக்கிறது என்றால் அது பொதுவுடைமைவாதிகளின் விடாப்பிடியான போராட்டங்களால்தான். மற்றபடி சாதி அரசியல் என்பது ஒருசிலர் தங்களை அரசியல் ரீதியாக வளர்த்துக்கொள்ள மட்டுமே - தலித் அரசியல் உட்பட-பயன்பட்டுள்ளது்; பயன்பட்டு வருகிறது.

ஏற்றத்தாழ்வுகளையும் அடக்குமுறைகளையும் சுரண்டலையும் சாதி அரசியலால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. பொதுவுடமை அரசியலால் மட்டும்தான் இவைகளை முழுமையாக ஒழித்துக்கட்ட முடியும்.