Pages

சனி, அக்டோபர் 27, 2012

நெருக்கடியில் இலங்கை: ஐநாவில் உலகநாடுகள் சரமாரிக் கேள்வி! இந்தியா மவுனம்!!


நவம்பர் 1 அன்று ஜெனீவாவில் நடைபெற உள்ள இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணைக்காக, பல்வேறு நாடுகள் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளன. இலங்கைக்கு ஆதரவான நாடுகள் என்று கணிக்கப்படும் சீனாவும் பாகிஸ்தானும் கூட கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசுவோரைக் குடிமக்களாகக் கொண்ட இந்தியா ஒரே ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல் மவுனம் சாதிக்கிறது. (நான் முதலில் இந்தியன், அப்புறம்தான் தமிழன் என்று வசனம் பேசுவோர் கவனிக்க.)

இலங்கை மீதான விசாரணையும் இந்தியாவின் மவுனமும்

ஐநா மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணை (Universal Periodic Review - UPR) என்பது ஒவ்வொரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்தும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். இந்த நிகழ்வின் போது அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையும், ஐநாவின் சார்பில் ஒரு தொகுப்பறிக்கையும், அரசு சாராத அமைப்புகளின் சார்பில் ஒரு தொகுப்பறிக்கையும்  ஆய்வுக்காக முன்வைக்கப்படும்.

அதன் பிறகு, விசாணை தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஐநா மனித உரிமை அவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே எழுத்து பூர்வமாக வைப்பர்கள். விசாரிக்கப்படும் நாடு அந்தக் கேள்விகளுக்கு விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு நாடுகள் இலங்கையிடம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளன.
ஸ்பெயின், டென்மார்க், லிச்டென்ஸ்டெய்ன், மெக்சிகோ, கனடா, செக் குடியரசு, நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கியூபா, சுலோவேனியா, சுவீடன், ஆஸ்திரேலியா, சீனா, அயர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மொத்தமாக பதினோரு பக்கத்திற்கு கேள்வி கேட்டுள்ளன. அதிலும், இலங்கையை ஆதரிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் கூட கேள்வி எழுப்பியுள்ளன.

ஆனால் மனித உரிமைகள் குழுவில் ஒரு முக்கிய நாடான இந்தியா இலங்கையிடம் ஒரே ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை. (பன்னாட்டு அரங்கில் மவுனம் சாதிக்கும் இந்தியா - தன்னை தெற்காசியாவின் வல்லரசு என்று நினைப்பதும், பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் தகுதி வேண்டும் என்று கேட்பதும் வெட்கக்கேடு!)

சரமாரிக் கேள்விகள்

உலக நாடுகள் கேட்டுள்ள கேள்விகளில் சில:

1. இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து எப்போது நியாயமான விசாரணை நடத்தப்படும்?

2. இதுகுறித்த ஐநா மனித உரிமை அவைத் தீர்மானத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

3. ஆள்கடத்தல், சட்டவிரோத படுகொலைகளைத் தடுப்போம் என்று 2008 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயின?

4. இலங்கையின் மற்ற பகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும், வடக்கில் தேர்தல் நடத்தப்படாதது ஏன்? வடக்குப் பகுதியில் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்துவதற்கான நாளைக் குறிப்பிட முடியுமா?

5. வடக்குப்பகுதியில், குறிப்பாக வன்னியில், ராணுவத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஏதேனும் உண்டா?

6. கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க என்ன செய்தீர்கள்?

7. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்போது கொண்டு வருவீர்கள்?

8. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகள் எந்த ஆளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன? இதற்கான தேசிய செயல்திட்டத்தின் நிலைமை என்ன? இதனை செயல்படுத்த போதுமான பணம் ஒதுக்கப்பட்டதா? செயல்படுத்தப்பட்டதை உறுதி செய்வது எப்படி? யார் கண்காணிப்பது?

9. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளில் 91 மட்டுமே தேசிய செயல்திட்டதில் உள்ளது. மீதமுள்ள 194 பரிந்துரைகளின் நிலை என்ன?

10. பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுக்கவும் பேச்சுரிமையைக் காக்கவும் என்ன செய்தீர்கள்?
11. மானிக் ஃபார்மில் இருந்த உள்நாட்டு அகதிகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேற முடியாத நிலை இருப்பது ஏன்? மறுவாழ்வு அளிப்பதில் பன்னாட்டு விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? 300,000 பேர் உள்நாட்டு அகதிகளாக இருந்த நிலையில், அவர்களுக்கான வீட்டு வசதி ஏற்பாடுகள் எப்படி உள்ளது? சரணடைந்த போராளிகளின் நிலை என்ன?

12. போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆna பின்னரும் ஏன் அரசியல் தீர்வு எட்டப்படவில்லை? 13 ஆவது சட்டத் திருத்தத்தின் நிலை என்ன? அதிகாரப்பகிர்வை மறுப்பது ஏன்?

13. தன்னிச்சையான மனித உரிமைகள் ஆணையத்தை எப்போது அமைப்பீர்கள்?

14. மனித உரிமைக்காக குரல் கொடுப்போருக்கு என்ன பாதுகாப்பு? அரசை விமர்சிப்போரை மிரட்டுவது ஏன்? பாக்கியசோதி சரவணமுத்து மிரட்டப்பட்டது ஏன்? இதுபோன்ற நிலைமைகள் எதற்காக இன்னமும் நீடிக்கின்றன?

15. காணாமல் போனவர்களின் நிலை என்ன? அதனை விசாரிப்பதற்கான நடைமுறைகள், தீர்வுகள் என்ன?

16. மக்களின் நிலத்தை ராணுவமும் அரசும் பிடுங்கிகொள்வது குறித்து விளக்க முடியுமா? வடக்கிலும் கிழக்கிலும் சிவிலியன் அரசாங்க முறை மூலமாக நில உரிமை சச்சரவு சரி செய்யப்படுவதற்கான திட்டம் என்ன?

17. சேனல் 4 வீடியோ, திரிகோணமலையில் மாணவர்கள் கொலை, 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொல்லப்பட்டது, பொட்டுவில் பத்து பேர் படுகொலை, லசந்தா விக்கரம சிங்க படுகொலை, பிரகீத் எக்னலிகோடா காணாமல் போனது ஆகிய நிகவுகளின் விசாரணை என்ன ஆனாது?

18. போர் முடிந்து மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் எதற்காக?

19. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இரண்டாண்டுகளாக பேசியும் முன்னேற்றம் இல்லாதது ஏன்? ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதற்கான திட்டம் அரசிடம் உண்டா?

20. ஐநா அவையின் சார்பில் ஆறு சிறப்புக் குழுக்கள் இலங்கையின் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே அனுமதி கேட்டுள்ளனர். அந்தக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? எப்போது?

21. மொழி உரிமைகள், மத உரிமைகள் காப்பாற்றப்பட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

- இப்படியாக நீண்ட கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் இலங்கை அரசு பதிl அளித்தாக வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் காலமுறை மதிப்பீட்டு விசாரணை தொடர்பாக 1. இலங்கை அரசு அளித்துள்ள அறிக்கை, 2. ஐநா அமைப்புகள் அளித்துள்ள அறிக்கை, 3. அரசு சார்பற்ற அமைப்புகள் அளித்த அறிக்கைகளின் தொகுப்பு, 4. இலங்கையிடம் பல்வேறு நாடுகள் கேட்டுள்ள கேள்விகள் - ஆகிய அனைத்தையும் காண இங்கே சொடுக்கவும்:

http://www.ohchr.org/EN/HRBodies/UPR/Pages/LKSession14.aspx
தொடர்புடைய சுட்டி:

அவசரம்: இலங்கை மீது ஐநா மனிதஉரிமை விசாரணை - இந்திய துரோகம் தொடருமா? இப்போதே செயல்படுக! 

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.