Pages

வெள்ளி, அக்டோபர் 12, 2012

செல்பேசிக் கோபுரம்: கண்டுகொள்ளப்படாத புதிய விதிமுறைகள்!

செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படும் கேடுகள் குறித்து எனது முந்தைய பதிவுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது:

1. எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

2. செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?


3. செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


4. சுற்றுச்சூழலும் செல்பேசிக் கோபுரமும்:அழிவின் விளிம்பில் தேனீக்கள், சிட்டுக்குருவிகள்!


செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்தும் விதிகள் 

இந்தியாவின் செல்பேசி செவை நிறுவனங்கள் அனைத்தும் செல்பேசிக் கோபுரங்களை அமைக்கும் போது, அவை "இந்திய அரசும் ICNIRP பன்னாட்டு அமைப்பும் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக" கூறுகின்றன. இந்த வாதம் தந்திரமானது, மக்களை ஏமாற்றக்கூடியது.
செல்போன் கோபுரங்களால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு விதிமுறை மிகப்பழமையானது (International Commission on Non-Ionizing Radiation Protection - ICNIRP guidelines). 1998 ஆம் ஆண்டி உருவாக்கப்பட்ட்து. இந்த விதிமுறை கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய வெப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், வெப்ப விளைவை விட உயிரியல் விளைவுகள் நான்கு அல்லது ஐந்து மடங்கு தீவிரமானவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது, எது மிகப்பெரிய பாதிப்போ, அதை இந்த ICNIRP கட்டுப்பாடு கணக்கில் கொள்ளவில்லை.

காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகள்

மிகப்பழமையான ICNIRP விதிமுறைக் கூட இந்தியாவில் உண்மையாகக் கடைபிடிக்கப்படவில்லை. ICNIRP விதிமுறைப்படி GSM900 வகை செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் (Milliwatt/m2) அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உச்சவரம்பு என்பது ஒரு குறிப்பிட இடத்தின் ஒட்டுமொத்த அளவாகும். அதாவது, ஒரு பகுதியில் எததனை செல்பேசிக் கோபுரங்கள் இருந்தாலும் அவற்றின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு அளவு சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் அளவுக்கு மேல் போகக்கூடாது.

ஆனால், இந்தியாவில் இதனை ஒரு நிறுவனத்தின் ஒரு செல்பேசிக் கோபுரத்தின் உச்ச அளவாக நிருணயித்துள்ளனர். ஒரு பகுதியில் பத்து செல்பேசிக் கோபுரங்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் 4500 மில்லிவாட் கதிர்வீச்சு அனுமதி உண்டு.  அவற்றின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு அளவு சதுர மீட்டருக்கு 45000 மில்லிவாட் அளவுக்கு போகக்கூடும். இது ICNIRP பன்னாட்டு அளவைவிட பலமடங்கு அதிகமாகும்.

இப்படி ஒரு காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகளை வைத்துக்கொண்டுதான், "இந்திய அரசும் ICNIRP பன்னாட்டு அமைப்பும் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக" கூறுகின்றன நிறுவனங்கள்.

ஆனால், உலகின் மற்ற நாடுகள் தமது குடிமக்களை காப்பாற்றுவதில் வெகுதூரம் சென்றுவிட்டன. ICNIRP பன்னாட்டு அமைப்பின் உச்சவரம்பை விட 100 மடங்கு முதல் 1000 மடங்கு வரை குறைத்துவிட்டன.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் என்ற அளவு பின்பற்றப்படும் போது, சீனாவில் இது 400 மில்லிவாட், இத்தாலி, போலந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 100 மில்லிவாட் என மிக மிக குறைக்கப்பட்டு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு, பள்ளி, மருத்துவமனை, விளையாட்டுத்திடல் பகுதிகளில் இந்த அளவும் வெறும் 42 மில்லிவாட்டிற்கு மிகக் கூடாது என்கிற கடுமையான விதிமுறை உள்ளது.

ஆக, இந்தியாவில் பல ஆயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சினை வெளியிடும் செல்பேசி நிறுவனங்கள் தாங்கள் 'நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக' கூறுகின்றன.

அரசாங்கம் செய்வது என்ன?

மக்கள் நலனைக் காப்பாற்றுவதில் இந்திய அரசாங்கம் மிக மெத்தனமாக இருந்து வருகிறது. அதில் தமிழ்நாடு அரசு இன்னும் அலட்சியமாக இருக்கிறது என்று கூறலாம்.
மக்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும் வகையில், செல்பேசிக் கோபுரங்களை அமைப்பதற்கான இடங்கள் குறித்து முறையான விதிமுறைகள் இந்தியாவில் இல்லை. இக்கோபுரங்களை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

புது தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அருகில் செல்பேசிக் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்கிற விதிமுறை உள்ளது. இதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டில் செல்பேசிக் கோபுரம் அமைக்க அனுமதியே தேவையில்லை என்கிற நிலை உள்ளது.

புதிய விதிமுறைகள்

இந்திய அரசாங்கம் செல்பேசிக் கோபுரங்களை முறைப்படுத்துவது குறித்து 2010 ஆம் ஆண்டில் இரண்டு குழுக்களை அமைத்தது. ஒரு நிபுணர் குழு 'வனவிலங்குகள், பறவைகள், தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்' குறித்தும், அமைச்சரகங்களுக்கு இடையேயான மற்றொருக் குழு 'மின்காந்தப்புலனால் ஏற்படும் கதிர்வீச்சு' குறித்தும் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டன.

இந்த குழுக்களின் அடிப்படையில் இரண்டு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவு

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2012 ஆகஸ்ட் 9 ஆம் நாள் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
  • மின்காந்தக் கதிர்வீச்சு குறித்து மாநில அரசுகளும் உள்ளாட்சிகளும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் கண்காணிக்க வேண்டும். சிக்கலுக்குரிய செல்பேசிக் கோபுரங்கள் இடம் மாற்றப்பட வேண்டும்.
  • தெளிவான எச்சரிக்கைப் படங்களை செல்பேசிக் கோபுரங்களைச் சுற்றிலும் அமைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அருகே செல்பேசிக் கோபுரங்களை அமைக்கும் முன்பு அதுகுறித்து தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும். வனத்துறையிடம் ஆலோசிக்க வேண்டும்.
  • செல்பேசிக் கோபுரங்கள் குறித்தும் மின்காந்த ஆபத்துகள் குறித்தும் மாநில சுற்றுச்சூழல் துறை விளம்பரங்களையும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்த வேண்டும்.
  • ஏற்கனவே செல்பேசிக் கோபுரம் உள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இனி புதிய செல்பேசிக் கோபுரங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
  • ஒரு ஊர், நகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் உள்ள செல்பேசிக் கோபுரங்கள் குறித்த தகவலகள் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். செல்பேசிக் கோபுரங்கள் அனைத்தைக் குறித்தும் அவை வெளியிடும் மின்காந்தக் கதிர்வீச்சுக் குறித்தும் தகவல் பகிரங்கமாக்கப்பட வேண்டும்.
  • இந்தியாவுக்கு என புதிய கதிர்வீச்சு உச்ச வரம்பை மத்திய தொலைத்தொடர்புத் துறை உருவாக்க வேண்டும். அத்தகைய உச்சவரம்பு நிருணயிக்கப்படும் வரை வருமுன் காப்பது என்கிற முன்னெச்சரிக்கை கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்.
- என நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. (இங்கே காண்க)

இந்திய தொலைத் தொடர்புத்துறைஉத்தரவு

இந்திய தொலைத் தொடர்புத்துறை 2012 செப்டம்பர் 1 முதல் செயலுக்கு வரவுள்ளதாகக் கூறி வெளியிட்டுள்ள உத்தரவில்:
  • செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை பத்தில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும். அதாவது ஒரு சதுர மீட்டரில் 4500 மில்லிவாட் என்கிற பழைய உச்ச வரம்பு அளவு இனி 450 மில்லிவாட்டாக குறைக்கப் பட வேண்டும்.
  • நகரங்களின் முக்கிய பகுதிகளில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து அதனை மக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
  • தேசிய அளவில் செல்பேசிக் கோபுரங்களின் புள்ளிவிவர கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இணையத்தின் மூலம் தகவல் வெளியிடப்படும்.
  • தேசிய ஆளவிலான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏற்படுத்தப்படும்.
  • அதிகக் கதிர்வீச்சு இல்லாத புதிய தொழிநுட்பங்கள் இனி பயன்படுத்தப்பட வேண்டும்.
  • செல்பேசி விற்கும் இடங்களில் மின்காந்தக் கதிர்வீச்சு குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
- என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகளை 1.9.2012 முதல் செயல்படுத்தி உத்தரவிட்டுள்ளது இந்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை.  (இங்கே காண்க)

இனி என்ன?

அரசின் இப்போதைய விதிமுறைகள் போதுமானவை அல்ல என்றபோதிலும் புதிய விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.ஆனால், அவை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை
அரசின் விதிமுறைகளில் உள்ள மிகப் பெரிய குறைபாடு - செல்பேசிக் கோபுரங்களில் வெளியாகும் கதிர்வீச்சு மாசினை செல்பேசி சேவை நிறுவனங்களே கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதுதான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற பொதுவான அமைப்புகளால் கண்காணிக்கப்படும் நிலை வரவேண்டும்.

மத்திய அரசின் உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், செல்பேசிக் கோபுரங்கள் அமைப்பது நகராட்சிகள், உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் வருவதால் - இதுகுறித்து தமிழ்நாடு அளவில், மக்களின் உடல் நலத்தைக் காக்கும் நோக்கிலான முற்போக்கான விதிமுறைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மிக முதன்மையாக பள்ளிகளுக்கு அருகில் சுமார் 100 மீட்டர் வரை செல்பேசிக் கோபுரங்கள் இல்லை என்கிற விதியை செயல்படுத்த மாநில அரசாங்கம் முன்வர வேண்டும். அதற்காக மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

புதிய விதிமுறைகள் சட்டப்படி செப்டம்பர் 2012 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும் இதுவரை இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பையும் வேதனையையும் தருகிறது. நம்நாட்டில் பொதுநலனுக்கு தரப்படும் மதிப்பு அவ்வளவுதான்!

பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்கு முன்பு பொதுநலன் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்ன?

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்கள் பகிர்வின் மூலம் தான் சில தகவல்களை அறியப் பெற்றேன்...

முடிவில் உண்மையான கேள்வி...

நன்றி...

திவ்யாஹரி சொன்னது…

Tower al yaravathu bathikka pattal mattum than kandu kolvarkal. Kan ketta piragu than....