Pages

புதன், செப்டம்பர் 05, 2012

சுற்றுச்சூழலும் செல்பேசிக் கோபுரமும்:அழிவின் விளிம்பில் தேனீக்கள், சிட்டுக்குருவிகள்!

செல்பேசிக் கோபுரங்களால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் கேடுகள் முந்தைய பதிவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன (இங்கே காண்க). செல்பேசிக் கோபுரங்களால் சுற்றுச்சூழலும் உயிரினங்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்வது குறித்து இனி பார்க்கலாம்.

செல்பேசிக் கோபுரக் கதிர்வீச்சால் மனிதனைவிட பறவைகள், விலங்குகள் அதிகமாக பாதிப்படைகின்றன. 

பறவைகளுக்கு ஏற்படும் கடும் பாதிப்புகள்

கோடை வெய்யில் தாக்கத்தை மனிதர்கள் வெறுக்கின்றனர். சூரிய வெப்பத்தை மனிதஉடல் உணர்வதால்தான் இந்த வெறுப்பு. ஒருவேளை, சூரிய வெப்பத்தை உணரும் தன்மை இல்லாமல் போயிருந்தால் நாம் கோடை வெய்யிலுக்கு பயப்பட மாட்டோம். அதேபோன்றுதான், செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்தக் கதிர்வீச்சை நாம் நேரடியாக உணர்வது இல்லை. அதனால், நமக்கு வெளிப்படையான துன்பமும் இல்லை.
ஆனால், பறவைகள் இதிலிருந்து மாறுபட்டவை. அவை, செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்த அலைகளை நேரடியாக உணர்கின்றன. அதனால்தான், மரங்கள், கோவில்கள், கட்டடங்கள் என எல்லா உயரமான இடத்திலும் உட்காரும் பறவைகள் ஒன்று கூட செல்பேசிக் கோபுரத்தின் மீது உட்காருவது இல்லை.

செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்த அலைகளைக் கண்டு பறவைகள் அஞ்சி ஓடுகின்றன. அதனால்தான், செல்பேசிக் கோபுரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வானில் ஒரு பறவையைக் கூட பார்க்க முடிவதில்லை.

சிட்டுக்குருவிகளின் அழிவு: 

நகர்ப்புறங்களில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை எதனால் குறைந்து போனது என்பது குறித்து உலகின் பலபகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகள் எல்லாமும் செல்பேசிக் கோபுரங்களைத் தான் முதன்மையாகக் குற்றம் சாட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டிற்கு பின்னர் இப்போது வரை லண்டன் மாநகரின் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் 75 விழுக்காடு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறே ஐரோப்பியக் கண்டத்தின் பல பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் பெருமளவு குறைந்து போயுள்ளது. இதற்கெல்லாம் செல்பேசிக் கோபுரங்களே காரணம்.
இந்தியாவில் போபால், நாக்பூர், குவாலியர், இந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன.

செல்பேசிக் கோபுரங்களின் மின்காந்த நுண்ணலைகளில் சிக்காமல் நகர்ப்புற சிட்டுக்குருவிகள் வாழ வேண்டியுள்ளது. மறுபுறம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் போது, செல்போன் கோபுரக் கதிர்வீச்சால் பெருமளவு முட்டைகள் சேதமடைந்து விடுகின்றன. இந்த புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இதே போன்ற நிலைதான் மற்ற பறவைகளுக்கும். அதிலும் குறிப்பாக வவ்வால்களின் நிலைமை மிகமோசம். அவை கண்ணால் பார்த்து பறப்பது இல்லை. இயற்கையான மின்காந்த அலையை வைத்துதான் பறக்கின்றன. இப்போது செல்பேசிக் கோபுரத்தின் செயற்கை மின்காந்த அலைகள் வவ்வால்களின் இயக்கத்தை முற்றாக சீரழித்து விட்டன.

தேனீக்களின் அழிவு: 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேனீக்கள் எண்ணிக்கையில் 2010 ஆம் ஆண்டில் திடீரென 30 விழிக்காடு தேனீக்கள் காணாமல் போனதைக் கண்டறிந்தார்கள். அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 விழுக்காடு தேனீக்கள் மாயமாகின. 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்' (CCD) என இதற்கு பெயரிட்டுள்ளனர். இந்த புதிய சிக்கலுக்கு செல்பேசிக் கோபுரங்கள்தான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனீக்கள் தமது தேன்கூட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை பறந்து சென்று பூக்களில் தேனைச் சேகரித்து கூட்டிற்கு திரும்புகின்றன. இந்த போக்குவரத்து முறைக்கு அவை முழுக்க முழுக்க பூமியின் மின்காந்த அலைகளைத்தான் நம்பியுள்ளன. அதாவது இயற்கையான மின்காந்த அலையை உணர்வதன் மூலமே அவை கூட்டிற்கு திரும்பும் வழியைக் கண்டறிகின்றன.

தேனீக்களின் இந்த இயற்கை வழிகாட்டி முறைக்கு செல்பேசிக் கோபுரங்கள் வேட்டு வைத்து விட்டன. இதனால், கூட்டை விட்டு தேனெடுக்க சென்ற தேனீக்கள் திரும்புவதற்கு வழிதெரியாமல் கூட்டமாக தற்கொலை செய்துகொண்டன. இந்த நிலையைதான் 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்' என்று அழைக்கின்றனர்.

தேனீக்களின் அழிவு சாதாரணமானது அல்ல. புகழ்பெற்ற விஞ்சானி ஐன்ஸ்டின், "தேனிக்கள் முற்றிலுமாக அழிந்து போனால், அதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்து போகும்" என்று குறிப்பிட்டார். ஏனெனில், உலகின் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகைத் தாவரங்களில் உற்பத்தி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே நடக்கிறது. மனித உணவின் பெரும்பகுதி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே கிடைக்கிறது. இந்த அயல் மகரந்தசேர்க்கை பணியில் பெரும்பகுதியை தேனீக்கள்தான் செய்கின்றனர்.
செல்போன் கோபுரங்களால், தேனீக்களும் இதர பூச்சிகளும் அழியும்போது தாவரங்கள் அழியும். இதிலிருந்து மனிதன் மட்டும் தப்பிவிட முடியாது.

- மொத்தத்தில் மனிதனுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், இதர உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என மிக மோசமான விளைவுகளை செல்பேசிக் கோபுரங்கள் ஏற்படுத்துகின்றன.
தொடர்புடைய சுட்டிகள்:

1. செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

2. எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

3. செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல் + தகவல்கள் சார்...

இவை எங்கு கொண்டு போய் முடியுமோ என்னும் அச்சமும் ஏற்படுகிறது... மாற்று வழி கண்டு பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு இருக்க வேண்டியது தான்...