Pages

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

தி இந்துவில் வெளியான அநியாய விளம்பரம்: பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

மலேரியா கொசுவை இன்னும் ஒழிக்க முடியவில்லை. அதற்குள் மருத்துவமனைகளில் எலிகளை ஒழிப்பது நியாயம் தானா? என்று எலிகள் கூட்டமைப்பு விளம்பரம் கொடுத்தால் எப்படி இருக்கும்?

சாலை விபத்துகளால் அதிகமானோர் சாகிறார்கள். அதனை முழுவதுமாக தடுக்காமல், எதற்காக எய்ட்சை ஒழிக்கிறீர்கள்? என்று எச்.ஐ.வி கிருமிகள் கூட்டமைப்பு விளம்பரம் கொடுத்தால் எப்படி இருக்கும்?

நல்ல வேளையாக எலிகளும் எச்.ஐ.வி கிருமியும் மனிதர்கள் இல்லை. அவற்றுக்கெல்லாம் கூட்டமைப்பு சங்கம் இல்லை. இருந்திருந்தால் - தி இந்து பத்திரிகையில் கீழே உள்ளது போன்று விளம்பரம் வந்திருக்கும்!
குட்கா - பான் மசாலா தயாரிப்பாளர் கூட்டமைப்பின் விளம்பரம் 
(30.09.2012  தி இந்து மற்றும் டெக்கான் க்ரோனிக்கல்). 

சிகரெட்டை தடை செய்யாமல், குட்காவை தடைசெய்தது நியாயமா? என்று கேட்கின்றனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம். தி இந்து மற்றும் டெக்கான் க்ரோனிக்கல் ஆகிய நாளிதழ்கள் அதனை தாராளமாக விளம்பரப்படுத்தும் (வாழ்க பத்திரிகா தர்மம்)

குட்கா - பான் மசாலா: கொடிய விஷம்
  • குட்காவில் 3095 நச்சு ரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 28 நச்சுக்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
  • குட்கா - பான் மசாலா ஆகியன வாய் மற்றும் பற்களில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துகின்றன.
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு குட்கா வழி செய்கிறது. 
  • குட்கா - பான் மசாலாவால் பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
  • பெண்களையும் வயிற்றில் வளரும் சிசுவையும் குட்கா கடுமையாக பாதிக்கிறது.
  • உலக சுகாதார அமைப்பு குட்காவும் பான்மசாலாவும் புற்று நோயை ஏற்படுத்தும் பொருள் என தெளிவாக வகைப் படுத்தியுள்ளது.
குட்கா - பான் மசாலா போதைப் பாக்குகளை இந்தியாவின் 14 மாநிலங்கள் தடை செய்துள்ளன. இதனை எதிர்த்து மராட்டிய மாநிலம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், கேரளா ஆகிய மாநில உயர்நீதி மன்றங்களில் குட்கா நிறுவங்கள் வழக்குத் தொடுத்தன.

ஆனால், அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களும் "குட்கா - பான்மசாலா போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என்று தீர்ப்பளித்துள்ளன.

இப்படிப்பட்ட நிலையில்தான் 30.09.2012 அன்று தி இந்து மற்றும் டெக்கான் க்ரோனிக்கல் ஆகிய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரம் குட்கா - பான்மசாலாவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ளது.

அதுவும், அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு குட்கா - பான்மசாலாவைத் தடை செய்ய வேண்டும் என்று பசுமைத் தாயகம் கையெழுத்து இயக்கம் தொடங்கியதற்கு மறுநாள் இந்த அநியாய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

குட்கா - பான் மசாலா படுகொலைகள்

2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5, 56, 000 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். (தி இந்து செய்தி: Cancer killed 5.56 lakh in India in 2010) புற்றுநோய் தாக்குவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது புகையிலை. ஆண்களில் 45 விழுக்காடு வரையிலும் பெண்களில் 20 விழுக்காடு வரையிலும் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது புகையிலைப் பொருட்கள்தான்.

உலக அளவில் மிக அதிக வாய்ப்புற்று நோய் தாக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் ஒட்டுமொத்த வாய் புற்றுநோய் பாதிப்பில் 25 விழுக்காடு பாதிப்புகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றது. இந்திய புற்றுநோய் பதிவேட்டின் படி நாட்டிலேயே அதிக வாய் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆட்பட்ட நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாய், தொண்டை, கழுத்து புற்றுநோய் தாக்குவதற்கு பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைதான் 90 விழுக்காடு காரணமாகும். அதாவது பான்மசாலா, குட்கா, கைனி இல்லையென்றால் 90 விழுக்காடு வாய் தொண்டை, கழுத்து புற்றுநோய் தடுக்கப்பட்டுவிடும்.

இப்போதையக் கணிப்பின்படி சென்னையில் மட்டும் 2012 - 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 32 விழுக்காடு அளவிற்கு புற்றுநோய் தாக்குதல் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (தி இந்து செய்தி: Article predicts 32% increase in total cancer burden in Chennai) இதுபோல தமிழ்நாடு முழுவதும் புற்றுநோய் தாக்குதல் அதிகமாகிவருகிறது. ஆண்டுதோரும் புதிதாக 55,000 பேர் புற்றுநோயால் தாக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பரிய ஆபத்தாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதற்கான சாதகமான சூழலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடையும் விதித்துள்ளது. (2.3.4: Product not to contain any substance which may be injurious to health: Tobacco and nicotine shall not be used as ingredients in any food products) எனவே, தமிழ்நாடு அரசுக்கு இப்போது பான்மசாலா, குட்காவைத் தடைசெய்ய முழு அதிகாரம் உள்ளது.

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவினை செயல்படுத்தி இப்போது உத்தரவிட்டால் போதும். அத்தகைய ஒரு சட்டபூர்வமான உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் மீதானத் தடை செயலுக்கு வந்துவிடும்.

அப்படிப்பட்ட ஒரு உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

பத்திரிகைகள் பொறுப்புடன் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று குடிமக்கள் எதிர்பார்ப்பது நியாயம்தான். அதனை, பத்திரிகையாளர்கள்தான் வலியுறுத்த வேண்டும்.

விளக்கம் 1: தி இந்து விளம்பரம் விதிமுறைகளுக்கு எதிரானது.

விளம்பரங்களை முறைப்படுத்தும் ASCI (The Advertising Standards Council of India) அமைப்பு விளம்பர வழிகாட்டி நெறிகளை வகுத்துள்ளது. அதன்படி விளம்பரம் உண்மையைப் பேச வேண்டும் என்பது விதியாகும்.

Declaration of Fundamental Principles - ASCI Codes: “To ensure the truthfulness and honesty of representations and claims made by advertisements and to safeguard against misleading advertisements”

ஆனால், தி இந்துவில் வெளியான விளம்பரம் "சிகரெட் ஆரோக்கியமானது என்று 14 மாநிலங்கள் நம்புகின்றன" என உண்மையில்லாத கருத்தைக் கூறுகிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சிகரெட் ஆரோக்கியமானது என நம்பவில்லை. அவ்வாறு நம்பினால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்தாகும். இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட COTPA 2003 சட்டம் சிகரெட் தீங்கானது என்று கூறும்போது, மாநிலங்கள் அதை எவ்வாறு மறுக்க முடியும்?

எனவே, ASCI விதிமுறைகளுக்கு எதிராக தி இந்து விளம்பரம் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

விளக்கம் 2: குட்காவைத் தடை செய்ய வேண்டும் - சிகரெட்டை மட்டும் தடை செய்ய வேண்டாமா?

சிகரெட்டை தடை செய்ய வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இந்திய சட்டங்களில் இப்போது என்ன இருக்கிறதோ அதை பின்பற்றக் கோருகிறோம். இனிமேல் வரவேண்டிய புதிய சட்டங்களை அப்புறம் பார்க்கலாம்.

FSSAI சட்டத்தின் படி, உணவுப்பொருளில் புகையிலை இருந்தால் தடை செய்யப்பட வேண்டும். உணவுப்பொருளாக கருதப்படும் குட்காவில் புகையிலை இருப்பதால் அது தடை செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

சிகரெட் ஒரு உணவுப்பொருளாக வகைப்படுத்தப்படவில்லை. எனவே, இப்போதைய FSSAI சட்டத்தால் சிகரெட் தடை செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் COTPA 2003 எனும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் சிகரெட் விளம்பரங்களை தடை செய்கிறது.

சிகரெட் உட்பட எல்லா புகையிலைப் பொருட்களையும் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே பசுமைத் தாயகத்தின் கோரிக்கை. ஆனால், அது சட்டமாக இன்னும் பலகாலம் ஆகலாம். எனவேதான், இப்போதைய சட்டங்களை முழுமையாகப் பின்பற்றக் கோருகிறோம்.

குட்கா - பான்மசாலாவைத் தடை செய்வது புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான கருத்து அல்ல.


தொடர்புடைய சுட்டி:

குட்கா - பான் மசாலாவுக்கு தடை: இதுவே தக்க தருணம்!

குட்கா - பான் மசாலாவால் பாதிக்கப்பட்டோர் அதுபற்றி என்ன சொல்கின்றனர் என்று இங்கே காண்க: 

http://www.vovindia.org/

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அது என்ன?குட்கா-பான்மசாலாவை முற்றிலுமாக தடைசெய்யவேண்டும்.சிகரெட்டுக்கு மட்டும் விளம்பரத்தை தடைசெய்யவேண்டும்.நல்ல கொள்கை!!!

அருள் சொன்னது…

@suji

சிகரெட்டை தடை செய்ய வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இந்திய சட்டங்களில் இப்போது என்ன இருக்கிறதோ அதை பின்பற்றக் கோருகிறோம். இனிமேல் வரவேண்டிய புதிய சட்டங்களை அப்புறம் பார்க்கலாம்.

FSSAI சட்டத்தின் படி, உணவுப்பொருளில் புகையிலை இருந்தால் தடை செய்யப்பட வேண்டும். உணவுப்பொருளாக கருதப்படும் குட்காவில் புகையிலை இருப்பதால் அது தடை செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

சிகரெட் ஒரு உணவுப்பொருளாக வகைப்படுத்தப்படவில்லை. எனவே, இப்போதைய FSSAI சட்டத்தால் சிகரெட் தடை செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் COTPA 2003 எனும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் சிகரெட் விளம்பரங்களை தடை செய்கிறது.

சிகரெட் உட்பட எல்லா புகையிலைப் பொருட்களையும் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே பசுமைத் தாயகத்தின் கோரிக்கை. ஆனால், அது சட்டமாக இன்னும் பலகாலம் ஆகலாம். எனவேதான், இப்போதைய சட்டங்களை முழுமையாகப் பின்பற்றக் கோருகிறோம்.

குட்கா - பான்மசாலாவைத் தடை செய்வது புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான கருத்து அல்ல.

பெயரில்லா சொன்னது…

விளக்கத்திற்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

விழிப்புணர்வுக் கட்டுரை. எதிர்பார்ப்புகள் என்பது ஏமாற்றத்தைத் தருவதே வழக்கமாக இருக்கிறது! விளம்பரங்களைத் தடை செய்ய முடியாது என்று நினைக்கிறேன்!

அருள் சொன்னது…

ஸ்ரீராம். சொன்னது…

// //விளம்பரங்களைத் தடை செய்ய முடியாது என்று நினைக்கிறேன்!// //

பொதுவான விளம்பரங்களைத் தடை செய்ய முடியாது எனபது உண்மைதான். ஆனால், புகையிலையை நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரப்படுத்தும் விளம்பரங்கள் COTPA 2003 சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன. மேலே, குறிப்பிட்டுள்ள தி இந்து விளம்பரம் புகையிலையை விளம்பரப்படுத்துகிறதா? என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

எனினும், விளம்பரங்களை முறைப்படுத்தும் ASCI (The Advertising Standards Council of India)
அமைப்பு விளம்பர வழிகாட்டி நெறிகளை வகுத்துள்ளது. அதன்படி விளம்பரம் உண்மையைப் பேச வேண்டும் என்பது விதியாகும்.

Declaration of Fundamental Principles - ASCI Codes: “To ensure the truthfulness and honesty of representations and claims made by advertisements and to safeguard against misleading advertisements”

ஆனால், தி இந்துவில் வெளியான விளம்பரம் "சிகரெட் ஆரோக்கியமானது என்று 14 மாநிலங்கள் நம்புகின்றன" என உண்மையில்லாத கருத்தைக் கூறுகிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சிகரெட் ஆரோக்கியமானது என நம்பவில்லை. அவ்வாறு நம்பினால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்தாகும். இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட COTPA 2003 சட்டம் சிகரெட் தீங்கானது என்று கூறும்போது, மாநிலங்கள் அதை எவ்வாறு மறுக்க முடியும்?

எனவே, ASCI விதிமுறைகளுக்கு எதிராக தி இந்து விளம்பரம் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

gnani சொன்னது…

குட்கா விளம்பரத்துக்கு மிக எளிய பதில் இதோ: குட்காவை தடை செய்துவிட்டு சிகரெட்டை தடை செய்யாமல் இருப்பது தவறுதான். அதற்குத்தீர்வு குட்கா மீதனா தடையை நீக்குவது அல்ல. உடனடியாக சிகரெட்டையும் தடை செய்ய வேண்டும் என்பதுதான் தீர்வு.

அருள் சொன்னது…

@gnani

மதிப்பிற்குரிய ஞானி அய்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறோம். முழுமையாக உடன்படுகிறோம்.

குட்கா தடை என்பது ஏற்கனவே சட்டத்தில் உள்ளது. உயர்நீதி மன்றங்களினாலும், உச்சநீதி மன்றத்தாலும் ஏற்கப்பட்டது. எனவே, இதனை தமிழ்நாடு அரசு நாளையே செயல்படுத்த முடியும், செயல்படுத்த வேண்டும்.

ஆனால், சிகரெட்டுக்கு முழு தடைவிதிப்பதற்கு நாடாளுமன்றம் புதியதாக சட்டம் இயற்ற வேண்டும். சிகரெட் நிறுவனங்களின் 'லாபி பவரை' கணக்கில் கொண்டால் - இது உடனடி சாத்தியமில்லை.

நியூசிலாந்து நாடு படிப்படியாக 2025 ஆம் ஆண்டிற்குள் புகையிலையை முற்றிலுமாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

http://smokefree.org.nz/smokefree-2025

அதுபோல இந்திய அரசு ஒரு இலக்கினை வகுத்து செயல்பட முன்வர வேண்டும். அதுவே, மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.அருள்,

// சிகரெட் உட்பட எல்லா புகையிலைப் பொருட்களையும் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே பசுமைத் தாயகத்தின் கோரிக்கை. //

-----------சிறந்த கோரிக்கை. இதுவே எனது கோரிக்கையும்..!

அந்த விளம்பரத்தில் ஒன்றை கவனித்தீர்களா...?

//Unlike cigarette gutkha is not harmful for others around you.//

ஹா...ஹா...ஹா... இது மட்டும் சரியான பாயின்ட்..!

எனக்கான தூய சுவாசகாற்றை அசுத்தமாக்கி நச்சாக்க யாருக்கும் எந்த உரிமை இல்லை..! இந்த வழக்கை நான் எந்த கோர்ட்டில் போட்டாலும் தனி மனித உரிமை அடிப்படையில், தீர்ப்பு எனக்கு சாதகமாகவே வரும்..!

ஆனால்,
இதே வழக்கை automobile exhaust, industrial exhaust போன்றவற்றில் பொருத்தினால்.. அதன் மூலம் சமூகத்துக்கு ஏற்படும் பயனை முன்னிருத்தி எதிர்தரப்பு வெல்லக்கூடும்..!

ஆனால், 'தான் சிகரட் குடிப்பதால் சமூகத்துக்கு இன்ன நன்மை' என்று எவராலும் வாதாட வழி இல்லை.

ஆக,
according to the pollution control norms..... "தூய காற்றை சுவாசிக்க விரும்புவோர் சங்கம்" சார்பாக.... 'சிகரட் தடை' உடனடி தேவை..!


---இப்படிக்கு,
அகில உலக தலைவர்,
"தூய காற்றை சுவாசிக்க விரும்புவோர் சங்கம்"

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருள் - சிந்தனை நன்று - சிகரேடினைத் தடை செய்ய நாட்கள் பிடிக்கும் - ஆனால் குட்காவினைத் தடை செய்ய உடனே செய்யலாம். இயன்றதை உடனே செய்லலாமெ எனவது சரியான வாதம் தான். மீதமுள்ள அரசுகளூம் தடை செய்வது பற்றிச் சிந்திக்கலாம். நல்ல்தொரு கட்டுரை. நன்று. நல்வாழ்த்துகள். - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தவறு என்று பயன்படுத்துபவர் எல்லோருக்கும் தெரியும்... மாற வேண்டும் என்கிற எண்ணம் வந்தாலே போதும்... அது தான் முதல் படி... மற்றபடி அவரவர் தான் திருந்த வேண்டும்...

நல்ல கட்டுரை... நன்றி...

Unknown சொன்னது…

விளம்பரத்தில் உள்ள கேள்வியே உங்கள் வினாக்களை அர்த்தமற்றதாக்குகிறது. அது ஒரு கருத்து திரட்டும் முயற்ச்சியே!இங்கே யார் வேண்டுமானாலும் என்ன கருத்தையும் பரப்பலாமே! அதுதானே நிலவரம்!
அன்புடன்
சீ.புருஷோத்தமன் கோவில்பட்டி