Pages

வியாழன், ஜூன் 07, 2012

குட்கா - பான் மசாலாவுக்கு தடை: இதுவே தக்க தருணம்!

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள், இன்றைய முதல்வர் செல்வி. ஜெயலாலிதா அவர்கள் தலைமையிலான  தமிழ்நாடு அரசு ஒரு புரட்சிகரமான உத்தரவை (G.O.No.301) செயல்படுத்தியது. அன்று முதல் தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா, மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம், "பான்மசாலா, குட்கா, மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்க மாநில அரசுக்கு அரசியல் சட்டப்படி அதிகாரமில்லை" என்று கூறி தடையை நீக்கி உத்தரவிட்டது (Gutkha ban unconstitutional: court)

தமிழ்நாடு அரசின் அன்றைய தடை நீட்டிக்கப்பட்டிருந்தால், இன்று பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

குட்கா - பான் மசாலா படுகொலைகள்

2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5, 56, 000 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். (Cancer killed 5.56 lakh in India in 2010) புற்றுநோய் தாக்குவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது புகையிலை. ஆண்களில் 45 விழுக்காடு வரையிலும் பெண்களில் 20 விழுக்காடு வரையிலும் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது புகையிலைப் பொருட்கள்தான்.

உலக அளவில் மிக அதிக வாய்ப்புற்று நோய் தாக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் ஒட்டுமொத்த வாய் புற்றுநோய் பாதிப்பில் 25 விழுக்காடு பாதிப்புகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றது. இந்திய புற்றுநோய் பதிவேட்டின் படி நாட்டிலேயே அதிக வாய் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆட்பட்ட நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாய், தொண்டை, கழுத்து புற்றுநோய் தாக்குவதற்கு பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைதான் 90 விழுக்காடு காரணமாகும். அதாவது பான்மசாலா, குட்கா, கைனி இல்லையென்றால் 90 விழுக்காடு வாய் தொண்டை, கழுத்து புற்றுநோய் தடுக்கப்பட்டுவிடும்.

இப்போதையக் கணிப்பின்படி சென்னையில் மட்டும் 2012 - 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 32 விழுக்காடு அளவிற்கு புற்றுநோய் தாக்குதல் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (Article predicts 32% increase in total cancer burden in Chennai) இதுபோல தமிழ்நாடு முழுவதும் புற்றுநோய் தாக்குதல் அதிகமாகிவருகிறது. ஆண்டுதோரும் புதிதாக 55,000 பேர் புற்றுநோயால் தாக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பரிய ஆபத்தாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதற்கான சாதகமான சூழலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் இன்றைய முதல்வர் செல்வி. செயலாலிதா அவர்களின் ஆட்சியில்தான் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போதைய சூழலில் 'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது' என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது. ஆனால் இப்போது மத்திய அரசின் உத்தரவே பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடைசெய்வதற்கான எளிதான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்திய அரசின் புதிய உத்தரவு என்ன?

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (FSSAI) கடந்த 1.8.2011 அன்று 'உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011' (Food Safety and Standards-Prohibition and Restrictions on Sales-Regulations, 2011) எனும் அறிவிக்கையை வெளியிட்டது. அதன் 2.3.4 ஆம் பிரிவில், "உணவுப் பொருளில் உடல்நலத்திற்கு தீங்கு செய்யும் பொருட்கள் இடம்பெறக்கூடாது: புகையிலை மற்றும் நிக்கோட்டின் உணவுப்பொருள் எதிலும் கலக்கப்படக்கூடாது" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மனிதர்கள் உண்பதற்காகவோ குடிப்பதற்காகவோ உருவாக்கப்படும் பதப்படுத்தப்பட்ட, அரைகுறையாக பதப்படுத்தப்பட்ட, பதப்படுத்தப்படாத அனைத்து பொருட்களும் உணவுப்பொருட்கள்தான் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட உத்தரவு பான் மசாலா, குட்காவைத் தடைசெய்கிறது.

பான் மசாலா, குட்கா தடை: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

பான் மசாலா, குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் உணவுப்பொருட்கள் என்கிற வரையறைக்குள் வருமா, வராதா என்கிற வினாவிற்கு இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. "கொடவாட் பான் மசாலா பொருட்கள் நிறுவனம் எதிர். இந்திய அரசு" எனும் வழக்கில் 2004 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம் "பான் மசாலா, குட்கா, சுபாரி ஆகியன சுவைக்காகவும் அவற்றின் சத்துக்களுக்காகவும் சாப்பிடப்படுவதால் அவை இந்திய உணவு கலப்படத் தடுப்புச்சட்டத்தின் வரையறைப் படி உணவுப்பொருட்கள்தான்" என்று உத்தரவிட்டுள்ளது. ("Since pan masala, gutka or supari are eaten for taste and nourishment, they are all food within the meaning of Section 2(v) of the Act" Godawat Pan Masala Products I.P. ... vs Union Of India & Ors on 2 August, 2004)
இதேபோன்று மத்திய அரசு குட்கா, பான் மசாலாவுக்கு தடைவிதிக்க முடியுமா என்பது குறித்து 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் "உணவுப்பொருளில் தீங்கு செய்யும் பொருட்கள் இடம்பெறாமல் தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு" என்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், குட்கா, பான் மசாலாவுக்கு மத்திய அரசு தடைவிதிக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

கேரளா, பீகார், மத்திய பிரதேசத்தில் தடை

இந்திய அரசின் 'உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011'  2.3.4 ஆம் பிரிவில், "உணவுப் பொருளில் உடல்நலத்திற்கு தீங்கு செய்யும் பொருட்கள் இடம்பெறக்கூடாது: புகையிலை மற்றும் நிக்கோட்டின் உணவுப்பொருள் எதிலும் கலக்கப்படக்கூடாது" (2.3.4: Product not to contain any substance which may be injurious to health: Tobacco and nicotine shall not be used as ingredients in any food products) என்று உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து கேரளா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடைசெய்துள்ளன. 

மத்திய பிரதேச மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் 31.3.2012 அன்று வெளியிட்ட உத்தரவிலும் (Gutka Ban Order – Madhya Pradesh), கேரள மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் 22.5.2012 அன்று வெளியிட்ட உத்தரவிலும் (Gutka Ban Order – Kerala),  பீகார் மாநில அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் 30.5.2012 அன்று வெளியிட்ட உத்தரவிலும் (Gutka Ban Order – Bihar) அந்தந்த மாநிலங்களில் இந்திய அரசின் 'உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011'  2.3.4 ஆம் பிரிவினை செயல்படுத்தி உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி கேரளா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்களில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசு 2001 ஆம் ஆண்டிலேயே பான்மசாலா, குட்காவைத் தடைசெய்து முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது. அப்போதைய நல்ல முயற்சி நீதிமன்ற உத்தரவால் தடுக்கப்பட்டாலும், இப்போது சூழல் முற்றிலுமாக மாறியுள்ளது.
பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடையும் விதித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுக்கு இப்போது பான்மசாலா, குட்காவைத் தடைசெய்ய முழு அதிகாரம் உள்ளது.

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவினை செயல்படுத்தி இப்போது உத்தரவிட்டால் போதும். அத்தகைய ஒரு சட்டபூர்வமான உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் மீதானத் தடை செயலுக்கு வந்துவிடும்.

அப்படிப்பட்ட ஒரு உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

6 கருத்துகள்:

YUVA சொன்னது…

well said.. pls share this in all the mediums and spread the message, so people wont forgot these things..

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!நலமா?

மருத்துவர் பூட்டும் சாவியோடு சுற்றுவதாக கேள்விப்பட்டேனே!உண்மையாகவா?

எப்படியோ நாட்டுக்கு நல்லதுன்னா நாலு கடைக்கு பூட்டு போடறதுல்ல தப்பேயில்ல:)

vimalavidya சொன்னது…

This is a very important matter to be attended immediately..we all should press the Tamil nadu govt to ban the things immediately..you have written the subjects very simple manner..I sent to nearly 700 persons to day.. to morrow i am again going to forward your article to some hundreds.congratulations --vimalavidya

நம்பள்கி சொன்னது…

அருள் ஐயா,

இந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை; தொடர், பகுதி-1. நீங்கள் கேட்ட தொடர் ஆரம்பம்!

link:
http://www.nambalki.com/2012/06/1.html

அருள் சொன்னது…

@நம்பள்கி http://www.nambalki.com/2012/06/1.html

// //அருள் ஐயா அவர்களே! சரி, நம்ம விவாதத்திற்கு வருவோம்:....

இந்த வாரம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்: நான் சொன்ன Makaan, இருக்க இடம். இருக்க இடம் என்றால் குடி இருக்கும் இடம் அல்ல. நான் சொல்லும் "அந்த இருக்கும் இடம், இரண்டு கால்களை பரப்பி அந்த இருக்கும் இடம்." இந்தியாவில், உள்ள மக்களில் 76 விழுக்காடு ஒரு நாளைக்கு 32 ரூபாஇக்கு கீழே சம்பாதிக்கும் ஏழைகள். அவர்களுக்கு குடி இருக்க இடம் இல்லா விட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவர்களுக்கு அந்த இருக்க இடம் கட்டாயம் தேவை!.....

இதே கேள்வியை அருள் ஐயாவிடம் கேட்கிறேன்; உங்கள் வசதி எப்படி ஐயா? நீங்கள் இந்த கும்பியில் இறங்குவீர்களா? அல்லது தம் அடிச்சு சாவீர்களா? முதலில இந்த கும்பியில் மனிதனை இறக்குவதை நிறுத்துங்கள். அப்புறம் வாங்க அருள் சார், நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்.....

நான் ரெடி! நீங்க ரெடியா?// //

உங்களது விவாதம் மிக்க வேடிக்கையாக இருக்கிறது.

கொலை செய்வது ஒரு கொடும் குற்றம். பாலியல் வன்முறை இன்னொரு கொடும் குற்றம்.

அரசாங்கம் கொலை நடக்காமல் தடுக்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், "இல்லை இல்லை. முதலில் பாலியல் வன்முறையைத் தடுக்க வேண்டும்" என்று நீங்கள் பேசுவீர்கள். அதுவே பாலியல் வன்முறை நடக்காமல் தடுக்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், "இல்லை இல்லை. முதலில் கொலையைத் தடுக்க வேண்டும்" என்று நீங்கள் பேசுவீர்கள்.

இதற்கு பெயர் விவாதம் அல்ல. விதண்டா வாதம்.

இந்திய சமூகம் ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் எதிர்கொள்ளவில்லை. ஒரே நேரத்தில் பலப்பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஒரு தவறைச் சுட்டிக்காட்டும்போது அதற்கு பொருத்தமில்லாத வேறொரு தவறை சாக்கு சொல்வது நியாயம் அல்ல.

கழிப்பறை வசதி இந்தியாவில் இல்லை என்பது மிகப்பெரிய சிக்கல். ஆனால், அதற்கு "புகைபிடிப்பதைத் தடுப்பதுதான் காரணம்" என்று நீங்கள் வாதிட்டால், அதனை ஒரு விவாதாமாகக் கருத முடியும். அதைவிடுத்து அதை நிறுத்து, இதை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்வது விவாதம் அல்ல.

என்னைப் பொறுத்தவரை, கழிப்பரை வசதி இல்லை என்பதால் சாவதும், புகைபிடித்து சாவதும் மக்களைப் பாதிக்கும் இரண்டு சிக்கல்கள் என்றே கருதுகிறேன். இரண்டுக்கு எதிராகவுமே நான் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, தண்ணீர் இல்லாமை, வீட்டுவசதி இல்லாமை, மருத்துவ வசதி இல்லாமை, கல்வி நிலையங்கள் போதாமை, சாலை விபத்துகள், சாராயச் சாவுகள் என பலப்பல கேடுகள் உள்ளன.

இந்தியாவில் கழிப்பறைகள் இல்லை என்பதற்காக நீங்கள் ஒரு பதிவிட்டால் அதனை நான் ஆதரித்துதான் எழுதுவேன். ஆனால், இதற்காக "புகைபிடிப்பதை" என்னால் ஆதரிக்க முடியாது. (எனது ஆதரவு, எதிர்ப்புக்கு எந்த மதிப்பும் இல்லை).

உங்களது பதிவில் "அமெரிக்காவில் பேதி புடுங்கி சாவறது 1500 பேர்கள் என்றால், இந்தியாவில் 456,400 பேர்கள். நாம தான் இதில் முதலிடம்!" என்று சொல்லி அதற்கு இணைப்பும் தந்துள்ளீர்கள்.

உங்களுக்கு நானும் புள்ளிவிவரங்கள் அளிக்கிறேன்: "அமெரிக்காவில் புகைபிடித்து சாவறது 400,000 பேர்கள் என்றால், இந்தியாவில் 10,00,000 பேர்கள். நாம தான் இதில் உலகின் இரண்டாம் இடம்!"

Tobacco kills 10 lakh in India every year

http://www.asianage.com/india/tobacco-kills-10-lakh-india-every-year-974

இப்போது சொல்லுங்கள்: 456,400 பேரின் மரணம் பெரிதா? 10,00,000 பேரின் மரணம் பெரிதா? (என்னைப் பொறுத்தவரை இரண்டுமே பெரிதுதான்)

உங்களுக்கு இன்னும் ஒரு தகவல்:

ஏழைகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்பமான வருமானத்தை வீணடிக்கும் வழிகளில் புகையிலைப் பொருட்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் ஒருகோடியா 50 லட்சம் பேர் வறுமையிலிருந்து விடுபடமுடியாமல் புகையிலைத் தடுக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. அவர்கள் தோராயமாக ஓர் ஆண்டில் புகையிலைப் பொருட்களுக்காக செலவிடும் தொகையை சேமித்தால் அதைக்கொண்டு கழிப்பறையைக் கட்ட முடியும்.

அதாவது, இந்திய ஏழைகள் கழிய இடம் கிடைக்காமல் திண்டாடுவதற்கு புகையிலைப் பொருட்களும் கூட ஒரு கூடுதல் காரணம்.

இதுகுறித்து நானும் எனது பதிவில் விரிவாக எழுதுகிறேன். படித்துப் பாருங்கள்

அருள் சொன்னது…

நம்பள்கி said...
http://www.nambalki.com/2012/06/1.html

// //இந்தியா செய்ய வேண்டிய முதல் வேலை ஒரே ஒரு வேலை மனிதன் மலக் குழியில் இறங்குவதை தடுக்க வேண்டும்.// //

அடடா... நீங்கள் எங்கோ புறப்பட்டு வேறு எங்கோ வந்துவிட்டீர்கள். இப்போது இந்த விவாதத்தில் (!) மூன்று சிக்கல்கள் வந்துள்ளன.

1. புகைபிடிப்பது தவறில்லை.
2. இந்தியாவில் கழிவதற்கு வசதி இல்லை.
3. மனிதன் மலக்குழியில் இறங்குவதைத் தடை செய்ய வேண்டும்.

மக்களுக்கு கழிப்பிடம் இல்லை என்பது முதன்மையான சிக்கல் என்று கூறிய நீங்கள் இப்போது "ஒரே ஒரு வேலை மனிதன் மலக் குழியில் இறங்குவதை தடுக்க வேண்டும்" என்று வேறொரு பிரச்சினையை கையில் எடுத்துள்ளீர்கள்.

இந்த பிரச்சினையை முன்வைத்து சென்னையில் பாடம் திரு. அ.நாராயணன் என்பவர் போராடிவருகிறார். அவரது முயற்சியால் சென்னை உயர்நீதி மன்றம் "மனிதன் மலக் குழியில் இறங்குவதை" தடை செய்துள்ளது.

Human entry into manholes barred - Madras High Court
http://www.indiawaterportal.org/post/2639

HC bans manual cleaning of sewage lines
http://www.sify.com/news/hc-bans-manual-cleaning-of-sewage-lines-news-chennai-jegwlGbgjbh.html

உங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி. இதே பாடம் நாராயணன் அவர்கள் மதுபானத்திற்கு எதிராகவும் புகைபிடிப்பதற்கு எதிராகவும் கூட போராடி வருகிறார்.

எதற்கெடுத்தாலும் 'அமெரிக்கா, அமெரிக்கா' என்று பேசுகிறீர்கள். புகைபிடிப்பது குறித்து அமெரிக்கா என்ன சொல்கிறது என்பதை இங்கே காண்க:

Changing Adolescent Smoking Prevalence
http://cancercontrol.cancer.gov/tcrb/monographs/14/index.html

Health Effects of Exposure to Environmental Tobacco Smoke
http://cancercontrol.cancer.gov/tcrb/monographs/10/index.html

The Role of the Media in Promoting and Reducing Tobacco Use
http://cancercontrol.cancer.gov/tcrb/monographs/19/index.html

Greater Than the Sum: Systems Thinking in Tobacco Control
http://cancercontrol.cancer.gov/tcrb/monographs/18/index.html

நீங்கள் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். நீங்கள் ஒரு மருத்துவர் என்பதால் உங்களுக்கு பொதுச்சுகாதாரத்தின் முக்கியத்துவம் தெரிந்திருக்கக் கூடும். கழிப்பறைகள் வேண்டும் என்பதும், புகையிலைத் தீமையை தடுக்க வேண்டும் என்பதும் பொதுச்சுகாதாரத்தின் வெவ்வேறு அங்கங்கள். ஒன்றை தவிர்த்துவிட்டு இன்னொன்றை செய்ய வேண்டும் என்பது மடமை.

காலையில் எழுந்ததும் பல் துலக்க வேண்டும் என்பதும், குளிக்க வேண்டும் என்பதும் ஒரே மாதிரியான இரண்டு வேலைகள். ஒன்றை தவிர்த்துவிட்டுதான் இன்னொன்றை செய்ய வேண்டும் என்று சொல்வது மடமை.