Pages

வியாழன், ஜூன் 20, 2013

தருமபுரி செல்வி. திவ்யாவுடன் ஒரு சந்திப்பு: தயவுசெய்து படிக்க விடுங்கள்!

'தருமபுரி கலவரத்துக்கு காரணமான நிகழ்வு' எனப்படும் ஒரு செய்தியில் தொடர்புபடுத்தப்படும் செல்வி. நா. திவ்யாவை சந்தித்தது குறித்து - தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை: 

"தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காதல் நாடகக் கடத்தல் வழக்கில் விசாரணை முடிவடைந்த பின்னர், உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் திவ்யாவைக் கடத்திச் சென்று டாக்டர். இராமதாசிடம் ஒப்படைத்து, அவரை மிரட்டி, மனமாற்றம் செய்ததாக அவதூறுக் குற்றச்சாற்றைக் கூறியிருந்தார். அதற்குப்பிறகு தான் ஒரு முறையாவது திவ்யாவை நேரில் சந்தித்து விட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது.

தருமபுரி என்ற பெயரை உலகம் முழுவதுக்கும் எடுத்துச் சென்ற விஷயத்தின் மையப்புள்ளியாக இருந்த திவ்யாவையும் இளவரசனையும் நான் எப்பொழுதும் பார்த்ததுக் கிடையாது. எனவே சென்னையில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியப் பிறகு தருமபுரி புறப்படுவதாகத், தெரிந்ததுமே நான் வழக்கறிஞர் திரு. க. பாலுவைத் தொடர்புக் கொண்டு அவர்களைப் பார்க்க்க வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். மறுநாள் எனக்குப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தருமபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஓட்டு வீட்டில் உயரம் குறைந்த வாசலில், தலை இடிக்காமல் இருக்கக் குனிந்து உள்ளே நுழைந்தேன்.தரையில் இரண்டு ஆண்களும், எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த திவ்யாவின் தாயாரும் அமர்ந்து இருந்தார்கள்.அவர்களுக்கு பக்கத்தில் வெளிச்சம் குறைவாக இருந்த அந்த அறையில் அவர்களோடு அமர்ந்திருந்த இளம்பெண்ணை திவ்யா என்று எனக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்கத் தேவை ஏற்படவில்லை. பளீரென்ற வெள்ளை முகத்தோடு, அச்சமும்,குழப்பமும் மிகுந்த கண்களோடு அந்தப் பெண் என்னைப் பார்த்தப் போது திருவிழாவில் காணாமல் போன சின்னக் குழந்தையின் மிரட்சியையே கண்டேன்.

பக்கத்து வீட்டில் இருந்துக் கொண்டு வரப் பட்ட நாற்காலியில் உட்கார்ந்து, ஒரு நட்புப் புன்னகையோடு 'நல்லா இருக்கிறாயா?'என்று கேட்ட போது , திவ்யாவிடமிருந்து தலையசைப்பின் மூலம் “ஆம்“ என்ற பதில் கிடைத்தது.அந்தப் பெண்ணின் குழப்பத்தையும், அந்தத் தாயின் துயரத்தையும் அதிகரிக்க விரும்பாமல் 'நான் இப்போது வந்திருப்பது உனக்கு அறிவுறை சொல்லவோ அல்லது கண்டிக்கவோ அல்ல. குடும்பத் தலைவரை இழந்து இருக்கிற உங்களுக்கு தைரியம் சொல்வதற்கு மட்டுமே.இப்போது நான் என்ன உதவி செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். திவ்யா எனக்குப் பதிலைச் சொல்லாமல் அவள் அம்மாவைப் பார்த்தாள். அவள் அம்மா எனக்குச் சொன்ன பதில் உள்ளபடியே என்னை உலுக்கியது. 'அவளுக்கு திரும்பப் படிக்கணும் சார். பாதியில் விட்ட நர்சிங் படிப்பை எப்படியாவது முடிக்கிறேன் என்று சொல்கிறாள். ஆனால் தருமபுரியில் இருக்கிற நர்சிங் காலேஜுக்குப் பயமா இருக்காம். வேற எங்கியாவது சேர்ந்து விட முடியுமா? என்று கேட்கிறாள்' என்றார் திவ்யாவின் தாயார். 'கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நீங்கள் கவலைப் படாமல் இருங்கள்' என்று சொல்லிவிட்டு வந்த என்னை அந்த குழந்தைப் பெண்ணின் கண்கள் விரட்டின.குழப்பம், அச்சம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளைத் தாண்டி தோல்விகளைத் தாண்டி வழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற , இளம் வயதினரிடம் மட்டுமே காணக் கூடிய வேட்கையை என்னால் உணர முடிந்தது.

தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாகவும், பல்வேறு இணையத்தளங்களின் ஆயிரக் கணக்கானப் பக்கங்களின் நாயகியாகவும், அரசியல் தலைவர்களும், 'புரட்சியாளர்களும்' பல முறை உச்சரித்த பெயருக்குச் சொந்தக்காரியுமான அந்தப் பெண் தரையில் உட்கார்ந்து என்னைப் பார்த்த பார்வையில் இருந்த கெஞ்சல், கோடிக்கணக்காண மக்கள் கூட்டத்திலும் தனியாகவே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற ஒரு சராசரி இந்தியனின் வேதனை மிகுந்த நிதர்சனம்.அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வு அந்தப் பெண்ணின் கையில் மட்டுமே. திவ்யாவைப் பற்றி எழுதித் தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொண்ட பத்திரிக்கைகளோ, மணிக்கணக்கில் விவாதங்கள் நடத்தி காசு பார்த்த தொலைக்காட்சி நிறுவனங்களோ, திவ்யாவை வைத்து சமூக நீதிக்கும், சாதி ஒழிப்புக்கும் புதிய உத்திகளைத் தேடிய அரசியல் அமைப்புகளோ,சமூகப் பாதுகாப்பு என்பதின் அடிப்படைகளை கொஞ்சமும் அறிந்திராத இந்திய அரசு நிர்வாகமோ இனி அவளுக்குத் துணை இல்லை. இந்த மனிதக் காட்டில் அவளுக்குத் துணை அவளின் அம்மாவும், தம்பியும் மட்டுமே.

கூட்டுறவுத்துறையில் பணிப்புரிந்த அவள் அப்பாவுக்கு பென்சன் கிடையாது. தம்பி இப்பொழுது தன் +2 முடித்து இருக்கிறான். அம்மாவுக்கு வீட்டிக்கு வெளியே ஒன்றும் தெரியாது. சொத்தாக இருக்கும் ஒன்றை ஏக்கர் நிலம் வானம் பார்த்த பூமி. ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அது பத்தாது. வாழ்க்கையின் கடுமையை அந்தக் குழந்தைப் பெண் உணர்ந்து பார்க்கும் பொழுது அவளுக்குத் தென்படுகிற ஒரே நம்பிக்கை அவளின் கல்வி மட்டும் தான்.

இன்றைய மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவை கல்வியே. வேலைப் பெற தகுதி தரும் கல்வியைப் பெறுவதே இளம் வயதின் தலையாயக் கடமை.

ப்ளஸ் டூ படிப்பு ஒரு இன்றியமையாத காலம். இந்த இரண்டாண்டுக் காலத்தில் சரியாக உழைத்து மதிப்பெண் பெறுகின்ற குழந்தைகளுக்கு சரியான மேற்படிப்பிற்கான இடம் கிடைத்து வாழ்கை எளிதாகிவிடும்.இந்தக் காலத்தில் படிப்பை விட்டு விட்டு காதல் என்று ஏமாந்து போகிற பெண்கள் வாழ்க்கை சீரழிவை மட்டுமே சந்திக்கின்றன.

ப்ளஸ் டூவிற்க்குப் பிறகுத் தொழில் கல்வியில் சேரும் பெண்களுக்கு பொதுவாக பெரிய பிரச்சனைக் கிடையாது. நான் மருத்துவம் படித்தப் போது என்னுடன் படித்தப் பல பெண்கள் காதல் வயப்பட்டார்கள். அத்துனைப் பேரும் மருதுவப் படிப்பை முடித்தப் பின்னர் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.யாரும் படிப்பை நிறுத்திவிட்டுத் திருமணம் செய்து கொண்டு ஓடவில்லை. இதே நிலைத் தான் பொறியியல், சட்டப் படிப்பு படிக்கும் பெண்களுக்கும். மற்றப் படிப்புப் படிக்கிற பெண்கள் தான் இப்படிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடுவது என்கிற மிகமிகத் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் இந்தப் படிப்பை படிக்கும் பெண்களின் குடும்பச் சூழலும் தான். கீழ்நடுத்தட்டு குடும்பப் பெண்களின் அறியாமையும், உலக அனுபவம் இல்லாத பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.

இப்படிப் படிப்பை பாதியில் விட்ட பெண்கள் தங்கள் படிப்பை முடிப்பதே இல்லை. சில மாதங்களில் காதல் கசந்து,வாழ்க்கையின் கடுமையும், வறுமையின் தாக்கமும் ஏற்படும் பொழுது உணர்கிற குழப்பங்கள் காரணமாக பலர் தற்கொலை முடிவுக்கு போகிறார்கள். இந்த ஆபத்தான கலாச்சாரம் பரவுவதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாக்கள் தான். தொடர்ந்து ப்ளஸ் டூ படிக்கும் பெண்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுவதாகவும் காட்டுவதன் மூலம் அந்த இளம் வயது பெண்களுக்கு தவறான மனோபாவத்தை ஏற்படுத்துகிறார்கள். அதை விட முக்கியமாக வெளிநாடுகளில் ஆண், பெண் உறவுகள் இப்படித்தான் இருக்கிறது என்று இங்கே பரவலாக இருக்கும் கருத்துக்களுக்கும், அங்கே இருக்கிற உண்மைக்கும் தொடர்பே கிடையாது.

நான் மூன்றரை ஆண்டு காலம் இங்கிலாந்து நாட்டில் பணிப்புரிந்த போது பல மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். இங்கே காட்டப்படும் ஆங்கிலப் படங்களில் வருவது போல யாரும் முட்டிக்கு நாலரை இஞ்ச் மேலே இருக்கும் குட்டைப் பாவாடையுடனோ, 'லோ கட்'பிளவ்சுடனோ கல்லூரிக்கு வர மாட்டார்கள்! அவர்கள் கைவிரல்கள், கழுத்து தவிர மற்ற அத்துனை பகுதிகளையும் மறைக்கிற உடைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் பார்த்த பிரிட்டிஷ் மருத்துவ மாணவிகள் அனைவரும் படிப்பில் மிகுந்த அக்கறை உள்ளவர்களாகவே இருந்தார்கள். நம் மருத்துவ மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அதிகக் கவனம் தேவை. நாம் ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் அடுத்த நாள் படித்துவிட்டு நிச்சயம் கேள்வி கேட்பார்கள். அவர்கள் காதல்,செக்ஸ் போன்றவற்றையும் படிப்பையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வது கிடையாது. அதற்கு மிக முக்கியக் காரணம் ஆணும்,பெண்ணும் தோழர்களாக, தோழிகளாக பழகிக் கொள்வது தான்.

மருத்துவம்,பொறியியல், சட்டக் கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்கள் துறைச் சேர்ந்த படிப்புகளைச் சிறப்பாகப் படித்தாலே போதும். ஆனால் கலைக்கல்லூரியில் படிப்பவர்கள் இந்தக் கல்லூரிக் காலத்தில் பொது அறிவுப் புத்தகங்களை ஏராளமாக படிக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் வேலைக்காக நடத்தும் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்ப்பதற்கு தனியாக முயற்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இல்லாமல் இன்னொரு மொழி,ப்ரெஞ்சு, ஹிந்தி அல்லது ஜப்பானிய மொழி ஏதாவது ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும்.இப்படியெல்லாம் தன்னை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றிப் பெறுவதற்கான வலுவான அடித்தளத்தை இட வேண்டிய வாழ்வின் மிக மிக்கியமான காலம் 17வயதிலிருந்து 22 வயது வரை. அந்தக் காலம் தான் பருவ மாற்றம் ஏற்பட்டு ஆண், பெண் இடையே அபரிதமான ஈர்ப்பு உண்டாகும் காலமும், இந்த கவர்ச்சியால் வாழ்க்கையின் முக்கியக் கடமைகளை மறந்து பாதை மாறிச் செல்லாமல் இருக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இளம் பருவதினரைப் பாதுகாக்க வேண்டும்.

பருவ வயது ஆணுக்கும், பெண்ணுக்கும் விளையாட்டு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி போன்ற மாறுப்பட்ட தளங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் கல்லூரி விழா போன்ற நிகழ்வுகளை இணைந்து நடத்தவும், இப்படிப்பட்ட பழக்கங்களால் நண்பர்களாக இருக்க பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொன்னான வயதில் திருமணம், குடும்ப வாழ்க்கை போன்ற பெரிய பொறுப்புகளைப் பற்றி நினைப்பதோ, ஈடுபடுவதோ வாழ்க்கையையே அழித்துவிடும்.

திவ்யா போன்ற பெண்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், காதலின் மூலம் சமத்துவத்தைத் நிறுவத் துடிக்கும் அரசியல்வாதிகளையும், காதல் திருமணம் மூல்ம் சாதியை ஒழிக்கத் திட்டம் போடும் புரட்சியாளர்களையும், கலப்பு மணத்தால் சமூக நீதியை நிலைநாட்ட மேடைப்போட்டு கூச்சல் போடும் கிழவர்களையும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்:

'தயவு செய்து அவர்களைப் படிக்க விடுங்கள்!’

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

keep the work

Unknown சொன்னது…

நாங்க படி படி என சொன்ன "வன்முறையை தூண்டும் கட்சி" .. ஆனா, "அடங்க மறு அத்து மீறு", "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என சொன்ன நீங்க "அமைதியான சமத்துவ கட்சி" ... போங்கடா உங்க நடுநிலையும் பகுத்தறிவும்..

பெயரில்லா சொன்னது…

Mukkanal Tamilan சொன்னது…
நாங்க படி படி என சொன்ன "வன்முறையை தூண்டும் கட்சி" .. ஆனா, "அடங்க மறு அத்து மீறு", "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என சொன்ன நீங்க "அமைதியான சமத்துவ கட்சி" ... போங்கடா உங்க நடுநிலையும் பகுத்தறிவும்........