Pages

செவ்வாய், ஜூன் 18, 2013

விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கு ஒரு பதிலடி: தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானதா திராவிடர் இயக்கம்?

"திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது" எனக்குறிப்பிட்டு எனது ஒரு வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ் பதில் அளித்துள்ளது. 

"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" என்று ஒரு வலைப்பதிவினை நான் எழுதியிருந்தேன் (இங்கே காண்க). அதற்கு மறுப்பாக நான்கு பாகம் கொண்ட ஒரு தொடரை வெளியிட்டுள்ளது திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ்.
"1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக்கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது" என்ற அறிமுகத்துடன் 13, 14, 15, 16 ஜூன் 2013 நாளிட்ட விடுதலை இதழ்களில் பதிலடிக் கட்டுரை தொடராக வெளிவந்துள்ளது. (இங்கே காண்க: இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு - 1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!). 

விடுதலை நாளிதழின் பதிலடி சொல்வது என்ன?

1. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான எம்.சி.ராஜா அவர்களே கலவரத்துக்கு காரணம் 

"1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தத்தின் போது - பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாசமின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவுபடுத்தியது எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார்." சென்னை மாகான சட்டமன்றத்தில் "பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்?"

"வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள்தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க்குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர்களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை FACT".
 எம்.சி.ராஜா 
"நீதிக்கட்சியின் மேல் சொந்தபகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை அருள் ஒன்றும் செய்ய முடியாது."

- இவ்வாறாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான எம்.சி.ராஜா அவர்களே பின்னி மில்/புளியந்தோப்புக் கலவரத்துக்கு காரணம் என்று விடுதலை நாளிதழில் விவரித்துள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.

2. பிட்டி.தியாகராயர் "தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும்" என்று சொன்னதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களை சென்னைக்கு வெளியே விரட்ட வேண்டும் என்று அப்போதையை திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவரான பிட்டி தியாகராய செட்டி கூறினார் என்பதுதான் எனது பதிவின் சாராம்சம் ஆகும். இதனை விடுதலை நாளிதழில் மறுத்துள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.
சென்னை மாநகராட்சி கட்டடம் முன்பு பிட்டி தியாகராய செட்டி சிலை.
"கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை" என்று கூறியுள்ளது விடுதலைக் கட்டுரை.

கூடவே, பிட்டி தியாகராய செட்டி அறிக்கை "அய்யத்திற்கு இடமின்றி ஆம் (off course) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது" என்றும் விடுதலை நாளிதழில் கூறியுள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.

3. மகாத்மா காந்தி இந்த பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த பிரச்சனை குறித்து மகாத்மா காந்தி பேசினார் என்று எனது பதிவில் குறிப்பிட்டதற்கு, "தொழிலாளர்கள் பிரச்சனை குறித்தோ, புளியந்தோப்புக் கலவரம் குறித்தோ மகாத்மா காந்தி எதுவும் பேசவில்லை" என்று விடுதலை நாளிதழில் மறுத்துள்ளார் திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு.

- இந்த மூன்று தகவல்கள்தான் முதன்மையான மறுப்புகளாக உள்ளன. மற்றபடி, மேலும் சில மறுப்புகளும் எனது கட்டுரையில் சில புள்ளிவிவரங்கள் தவறாக இருப்பதாக சுட்டப்பட்டுள்ளது.

விடுதலை நாளிதழ் வெளியிட்டுள்ள திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரைக்கு எனது விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். குறிப்பாக மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்று முதன்மையான மறுப்புகளுக்கும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கூடவே, மற்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறுவேன்.

அந்தவகையில் "மகாத்மா காந்தி இந்த பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை" எனும் விடுதலை கட்டுரை மறுப்புக்கு எனது விளக்கம் இதோ:

விடுதலை பத்திரிகையின் பதிலடிக்கு ஒரு பதிலடி 1: 
பின்னி ஆலை வேலை நிறுத்தம் குறித்து மகாத்மா காந்தி பேசினாரா? இல்லையா?

"தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!" எனும் எனது பதிவில் "போராட்டத்தை காந்தி ஆதரித்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வேலைக்கு திரும்புவதை தடுக்கக் கூடாது என்று கருதினார்" என்று குறிப்பிட்டிருந்தேன்:
எனது இந்தக் கருத்தினை விடுதலை நாளிதழில் மறுத்துள்ள திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள், பினருமாறு குறிப்பிட்டுள்ளார்: "காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம்சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை." என்று மானமிகு க.திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்

காந்தி இந்த பிரச்சினை குறித்து பேசினாரா? இல்லையா?

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மாலை 6.45 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிர்புறம் சென்னைக் கடற்கரையில் பின்னி மில் போராட்ட தொழிலாளர்களிடையே மகாத்மா காந்தி பேசினார். 

மகாத்மா காந்தியின் பேச்சுக்களும் எழுத்துகளும் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளான. COLLECTED WORKS OF MAHATMA GANDHI எனப்படும் இந்த நூல் தொகுப்பின் 24 ஆவது தொகுதியில் பக்கம் 251 முதல் 255 வரை ஐந்து பக்கங்களில் மகாத்மா காந்தி என்ன பேசினார் என வெளியிடப்பட்டுள்ளது. (Collected Works of Mahatma Gandhi - Volume 24 நூலினை முழுவதுமாக பதிவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்).


மகாத்மா காந்தியின் பேச்சின் தமிழ் மொழிபெயற்பு (இங்கே சொடுக்கவும்): பின்னி ஆலை வேலைநிறுத்தம்- காந்தியின் உரை

ஆக, மகாத்மா காந்தியின் இந்த பேச்சின் போது மிக அதிகமாக "ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவும், தெளிவாகவும்" தான் மகாத்மா காந்தி பேசினார்.

இதுகுறித்த - தமிழ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்திலும் தெளிவாக "ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவும், தெளிவாகவும்" பேசினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது:

"பின்னி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இந்திய போராட்ட வரலாறில் மிக முக்கியமான நிகழ்வாகும். பல கோரிக்கைகளை வேண்டி தொழிலாளர்கள் சுமார் ஆறு மாத காலம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் தொழிலாளர்கள் இரு பிரிவுகளாக உடைந்தனர். தலித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று ஆங்கிலேய ஆதரவு நிலைபாடை எடுத்தனர். அவர்கள் பணிக்கு திரும்பினர். தொழிலாளர் பிரச்சனை மெல்ல சாதிய அடையாளத்திற்குள் ஒடுக்கப்பட்டது. தலித்துக்கள் ஒருபுறமும் சாதி இந்துக்களும் முஸ்லீம்களும் மறுபுறமும் அணிதிரண்டனர். தொழிலாளர் ஒற்றுமையை தலித் தொழிலாளர்கள் உடைத்துவிட்டனர் என்று இதர தரப்பினர் அவர்கள் மீது காழ்ப்பு கொண்டிருந்தனர். விளைவாக புளியந்தோப்பு கலவரம் ஏற்பட்டு, சூழல் மிகுந்த பதட்டமாக இருந்தது. இந்த பின்னணியில் காந்தி ஆலைத் தொழிலாளர்களுக்கு முன் உரையாற்றினார். சுமார் 45 நிமிடம் நீடித்த அந்த உரையில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை கண்டிக்கிறார். துணிவோடு தொழிலாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டுகிறார்." என்று குறிப்பிட்டுள்ளது காந்தியின் பேச்சுக்களை தமிழில் தொகுத்துள்ள "காந்தி இன்று" இணைய தளம்.

இதைத் தான் நான் எனது பதிவில் குறிப்பிட்டேன்.

மேலே உள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும், Collected Works of Mahatma Gandhi - Volume 24  நூலின் 251 - 255 பக்கங்களைப் படித்தும், விடுதலைக் கட்டுரையின் உண்மைத் தண்மையை உணருங்கள்.

மகாத்மா காந்தி "ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரிடையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை" என்று விடுதலை நாளிதழில் மறுத்துள்ள திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்களின் கருத்து சரிதானா என்று நீங்களே சொல்லுங்கள்.

உண்மையை உணருவீர்!

விடுதலை நாளிதழ் எனது பதிவுக்கு அளித்த மறுப்பில் "நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்!" என்று கூறியுள்ளது.

எனவே, பொய்யான தகவல்களை அள்ளி வீசுவது யார்? ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்!

(2. பிட்டி.தியாகராயர் "தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும்"  என்று சொன்னாரா? இல்லையா? - எனது அடுத்த பதிவில் காண்போம்)

தொடர்புடைய சுட்டிகள்:

1. தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும்: திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு!


2. எனது வலைப்பதிவுக்கு திராவிடர் கழகத்தின் "விடுதலை பத்திரிகை" பதிலடி! (முழுவதுமாக)

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

சாட்டையடி...

வாசகன் சொன்னது…

அவங்க சொல்றது தான் உண்மை. கண்ணை மூடிட்டு நம்புங்க. இல்லேன்னா அவதூறும்பாங்க. இதே போன்று அறியப்படாத தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்.


ஜீவானந்தம்