Pages

புதன், ஜனவரி 11, 2017

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்!

தமிழர் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டை, பீட்டா அமைப்பு மட்டும்தான் எதிர்க்கிறது என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடவே முற்போக்கு வேடதாரிக் கூட்டமும், நாடகக் காதல் ஆதரவாளர்களும் கூட, ஜல்லிக்கட்டினை கடுமையாக எதிர்க்கின்றனர். 

எடுத்துக்காட்டாக, கீற்று, வினவு உள்ளிட்ட முற்போக்கு வேடம் போடும் இணைய இதழ்கள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. "ஜல்லிக்கட்டு - தேசிய அவமானம்" (அதிஅசுரன்), "ஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்" (கீற்று நந்தன்) என்கிற எதிர்ப்பு கட்டுரைகளை கீற்று இணையதளம் வெளியிட்டுள்ளது.

இப்போது மட்டுமல்ல - ஏற்கனவே இந்த 'முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்' ஜல்லிக்கட்டை எதிர்த்துதான் வந்துள்ளது. இதுகுறித்து ஓராண்டுக்கு முன்பு நான் எழுதிய பதிவு கீழே:

ஜல்லிக்கட்டு விவாதம்: ஒரு தரப்பாக நடப்பது ஏன்?

ஜல்லிக்கட்டு தடையை எதிர்ப்பவர்களை மட்டுமே வைத்து தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதங்ளை வைக்கிறார்கள். அதற்கு எதிரான தரப்பினரின் கருத்துகளை திட்டமிட்டு மறைக்கின்றனர். இது நியாயம் இல்லை?

ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று 'பீட்டா' (PeTA) மட்டும்தான் கூறுகிறதா? விலங்குகளை வதையை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் இதனை எதிர்க்கின்றனரா? சாதி ஒழிப்புப் போராளிகள், இடதுசாரிகள், திராவிட அமைப்பினரும் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றனர்.

பழங்கால சிலையில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?" என்று கேட்கிறது கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம்.

"ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான்." என்கிறது, ம.க.இ.க அமைப்பின் வினவு.
சிந்து சமவேளி படிமத்தில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும், தலித் எழுத்தாளர்களான ஜல்லிக்கட்டு ஒழிப்புக் குழுவினரை உள்ளடக்கியவர்களும் இணைந்து 1998 -லிருந்து இதனை தடை செய்யப்போராடி வருகிறோம்" என்கிறது "ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?" எனும் ஒரு கட்டுரை.

"ஜல்லிக்கட்டு – ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?" என்கிறது "வே.மதிமாறன்" என்பவரின் ஒரு கட்டுரை.
பழங்குடி ஓவியத்தில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டும் ஊரின் ஆதிக்க வகுப்பினருக்கே உரியதாக இருந்து வருகிறது. மக்களின் உணர்வு, பண்பாடு என்ற சொல்லப்படுவதெல்லாம் பெரும்பான்மைச் சாதிசார்ந்ததே ஆகும். இதனாலேயே அரசும் அரசியல் கட்சிகளும் இதற்காகக் காவடி எடுக்கின்றன." என்கிறது "ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை" எனும் 'ஸ்டாலின் ராஜாங்கம்' என்பவரின் ஒரு கட்டுரை.

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம்

சாதி கடந்தோ, மதத்தைக் கடந்தோ - எதற்காக ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்? சாதியையோ, மதத்தையோ அடிப்படையாக வைத்து ஜல்லிக்கட்டை நடத்தினால் என்ன தவறு? முத்தரையர், மறவர், கள்ளர் போன்ற சாதியினர் இதனை தங்களது விழா என்று கொண்டாடினால், அதில் என்ன குற்றம் இருக்கிறது?

ஒரு ஊரில் ஒரு சில சாதிகள் இதனை முன்னின்று நடத்தினால், வேறு சில ஊர்களில், வேறு சில சாதியினர் முன்னின்று நடத்துகின்றனர். சில சாதியினர் இதில் பங்கெடுப்பதே இல்லை - அதற்காக இது தமிழனின் விழா இல்லை என்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டின் 300 விதமான சாதிகளுக்கும் சம வாய்ப்பு அளித்து எந்த விழாவையும் நடத்த முடியாது. எனவே, சாதி கடந்து, அனைத்து தமிழர்களுக்குமான விழா என்று எதுவும் இருக்க முடியாது! (எல்லோருக்கும் பொதுவான பொங்கல் பண்டிகையைக் கூட, ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வகையறாவிலும் ஒவ்வொரு விதமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.)

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். அதன் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கிறோம். ஒரு மதம் சார்ந்ததாகவோ, ஒரு இனம் சார்ந்ததாகவோ, ஒரு சாதி சார்ந்ததாகவோ - எந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட வேண்டியதே.

திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில் என எல்லாவற்றிலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. அதற்காக 'திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில்' என எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட முடியாது. (தீண்டாமை, சாதி அடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் எந்த இடத்தில் இருந்தாலும் - அவை களையப்பட வேண்டும்)

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒரு இனத்துக்காக, ஒரு சாதிக்காக, ஒரு வம்சத்துகாக, ஒரு குடும்பத்துக்காக என எந்த அளவில் நடந்தாலும் - அதனை அந்த இனத்தின், சாதியின், வம்சத்தின், குடும்பத்தின் உரிமையாக கருதி அதனை பாதுகாக்கவே வேண்டும்.

சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் என பன்முக அடையாளங்களை அங்கீகரித்துதான் மனித சமூகம் நீடித்திருக்க முடியும். இந்த அடையாளங்களை தொலைத்துவிட்டு, மானுட சமூகம் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.

இணைப்புகள்:

1. ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?,  பெரியார் முழக்கம் 2016

2. ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?, வினவு

3. ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?

4. மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம், வே.மதிமாறன்

5. ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை, ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்

கருத்துகள் இல்லை: