Pages

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

பங்குனி உத்திரம்: வீர வன்னியர் கதையும் விடுதலைக்கான வழியும்

ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன.

தோற்றத் தொன்மம் (origin myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தொன்மங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். "தொன்மம் போன்ற வெளிப்பாடுகள் ஓர் இனத்தின் கூட்டுமனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு; தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு ஆகும். ஆதலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டுமனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்" - என்கிறது "வரலாற்று மானிடவியல்" எனும் நூல்.

வலிமையான இனக்குழுக்கள் அனைத்தும் தமது தோற்றம் குறித்த பூர்வீக வரலாற்று கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலமும், அதனை அடையாளப் படுத்துவதன் மூலமுமே நீடித்திருக்கின்றன. உலகின் பல நாடுகளும் இப்படித்தான் தம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன.

யூதர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்

இஸ்ரேல் என்கிற நாடு உருவானதற்கும், இன்றும் தொடரும் பாலஸ்தீன சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம் புராணக் கதைதான். எகிப்தில் வாழ்ந்த ஆபிரகாமையும் அவரது சந்ததிகளையும் – “நான் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தை (promised land) காட்டுகிறேன். அதனை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று இறைவன் சொன்னதாக புனித பைபிளும், யூத வேதமும் சொல்கிறது. அவ்வாறு பைபிளில் காட்டப்பட்ட நிலத்தையே யூதர்கள் தங்களுக்கான நாடாக 'இஸ்ரேல்' நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் (promised land)
கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்ரேலை உருவாக்குவது கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றுவது என்று இப்போதும் நம்புகிறார்கள். அதனால்தான் - பாலஸ்தீன சிக்கல் எப்போதும் முடியாத போராக தொடர்கிறது.

ஜப்பானியர்களின் ஜிம்மு

ஜப்பானிய நாடு ஜிம்மு எனும் மன்னன் குறித்த கற்பனை கதையிலிருந்து உருவானதாகும். சூரிய வம்சத்தை சேர்ந்த ஜிம்மு எனும் மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி கொண்டு ஜப்பானிய தேசத்தை நிர்மானித்தான் என்று அவர்கள் நம்புகிறர்கள்.
ஜிம்மு
ஜிம்மு மன்னன் வெற்றியடைந்த நாள் பிப்ரவரி 11 என்று அறிவித்து, அதனை ஜப்பான் உருவான நாள் என்று இப்போதும் அந்த நாடு கொண்டாடுகிறது.

ரோம சாம்ராஜயத்தின் கதை

உலகப் புகழ்பெற்ற ரோம சாம்ராஜ்யம் கற்பனை கதையின் மீது உருவானது. செவ்வாய் கடவுளுக்கு பிறந்த குழந்தைகளான ரோமுலசும் ரெமூசும் ஆற்றங்கரையில் வீசப்பட்டார்கள். அவர்களை ஒரு ஓநாய் காப்பாற்றி வளர்த்தது.
ஓநாய் வளர்க்கும் குழந்தைகள்
வளர்ந்தவுடன் அவர்களுக்கு இடையிலான மோதலில் ரெமூசை அவனது சகோதரன் ரோமுலஸ் கொன்றான். பின்னர் ரோமுலஸ் ரோம் நகரை நிர்மானித்தான் என்பது ரோம சாம்ராஜ்யத்தின் வரலாறாகும். இந்த வரலாற்றை ரோம் நகரம் இப்போது அடையாளப்படுத்துகிறது.

ஜெர்மனியை உருவாக்கிய ஹெர்மன்

ஹெர்மன் எனும் போர் வீரன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களை எதிர்த்து போரிட்டு, வெற்றிக்கொண்டு ஜெர்மனியை உருவாக்கினான் என்று ஜெர்மானியர்கள் நம்புகிறார்கள். இந்தக் கதைதான் ஜெர்மானிய தேசியவாதத்தின் அடையாளம் ஆகும். பலநூறு ஆண்டுகள் கழித்து 1800 களில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனானிய தேசியவாததை கட்டமைக்க ஹெர்மன் கதையை பயன்படுத்தினார்கள். பிரான்சுக்கு எதிரான போரில் வெற்றியும் அடைந்தார்கள்.
மாபெரும் ஹெர்மன் சிலை
ஹெர்மன் ஜெர்மனியின் தேசத்தந்தை என்று குறிப்பிட்டு 1885 ஆம் ஆண்டில் 175 அடி உயரத்துக்கு ஒரு மாபெரும் செப்புச்சிலையை நிர்மானித்தார்கள். இந்த சிலையின் கையில் உள்ள வாளில் "ஜெர்மனியின் ஒற்றுமையே எனது வலிமை. எனது வலிமையே ஜெர்மனியின் ஒற்றுமை" என்று தங்கத்தால் எழுதி வைத்துள்ளனர். ஜெர்மனியர்கள் குடிபெயர்ந்த அமெரிக்காவில் மின்னசோட்டா, நியூயார்க், மிசௌரி என பல இடங்களிலும் ஹெர்மனுக்கு சிலை வைத்துள்ளனர்.

சிங்கப்பூரின் சிங்கம்

சிங்கப்பூர் தீவுக்கு வந்த ஸ்ரீதிரிபுவன மன்னன் கடலை கடக்கும் போது புயலில் சிக்கினான். அதிலிருந்து தப்ப தனது கிரீடத்தை கடலில் வீசினான். உடனே புயல் நின்றுவிட்டது. தீவில் இறங்கிய போது விநோதமான விலங்கை கண்டான். அது சிங்கத்தைப் போன்று இருந்ததால் அந்த இடத்துக்கு சிங்கபுறம் என்று பெயரிட்டான் என்கிறது சிங்கப்பூரின் வரலாறு.
சிங்கப்பூர் சிங்கம்
அவ்வாறே, சிங்கப்பூர் மக்களை பாதி சிங்கமும், பாதி மீனும் கலந்த ஒரு விலங்கு புயலில் இருந்து காப்பாற்றியது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கதைகளே அந்த நாட்டின் அடையாள சின்னமும் ஆகும்.

இது போன்று - ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறுகளை முற்றிலும் உண்மை என்று ஏற்கவும் முடியாது. முழுக்க முழுக்க பொய் என்று மறுக்கவும் முடியாது.

கட்டமைக்கப்பட்ட இந்திய நம்பிக்கைகள்

ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்து திராவிடர்களை தோற்கடித்தார்கள் என்கிற கதையின் மீதுதான் திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டது. ராமராஜ்யம் என்கிற ஒன்று இருந்தது என்கிற கதையின் மீதுதான் பாஜகவின் இந்து தேசிய அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிங்கமும் அதனை எதிர்க்கும் புலியும்

சிங்கள இனத்தின் முன்னோடி விஜயன் சிங்க வம்சத்தில் வந்தவன் என்கிறது மகாவம்சக் கதை. அதனால் இலங்கை நாடு சிங்கத்தை சின்னமாகக் கொண்டுள்ளது. இலங்கையை வெற்றிகொண்ட சோழர்கள் புலியை சின்னமாகக் கொண்டனர். சோழர்களின் ஆன்மீக தலைமையிடமான சிதம்பரம் புலிவனம் எனப்பட்டது. அங்கு முதலில் வழிப்பட்டவர் புலிக்கால் முனிவர் ஆகும். சிங்களர்கள் தமிழர்களை கொட்டியா (புலி) என்று அழைத்தனர். என்றாவது ஒருநாள் தமிழ் நாட்டு தமிழர்கள் தங்களை மீண்டும் வெற்றி கொள்வார்கள் என்கிற பயம் எப்போதுமே சிங்களர்களுக்கு இருந்தது.
புலியும் சிங்கமும் 
சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தேசியத்தலைவர் பிரபாகரன் தொடங்கிய இயக்கம் விடுதலைப் புலிகள். அதன் சின்னம் புலிக்கொடி. இப்படியாக, சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாகவும், அதனை எதிர்த்து போரிடும் விடுதலைப் போரின் அடையாளமாகவும் தொன்மக் கதைகளே உள்ளன.

தமிழகத்தின் இனக்குழு தொன்மங்கள்

உணவை படைப்பதற்காக கங்காதேவி மரபாளனை உருவாக்கினாள். பசியை தீர்க்கவல்ல உழவுத் தொழிலை அவனுக்கு இந்திரன் பணித்தான். இந்திரனும் குபேரனும் அவனுக்கு பெண் கொடுத்தனர் என்பது கொங்கு வெள்ளாளர்களின் ஒரு கதை ஆகும்.

தகாத உறவில் பிறந்த கூத்தன் எனும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, ஸ்ரீவைகுண்டத்துக்கு ஓடி அங்கு கோட்டைக் கட்டி வாழ்ந்தவர்கள் கோட்டைப்பிள்ளைமார் என்பது அவர்களது கதை. இதே போன்று, பூம்புகாரில் இருந்த நகரத்தார்கள் சோழ மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து, தங்களது எல்லா பெண்களையும் கொலை செய்துவிட்டு - ஆண்கள் மட்டுமே காரைக்குடி பகுதிக்கு தப்பிச்சென்று, அங்கு வேளாளர் பெண்களை திருமணம் செய்துகொண்டனர் என்பது நகரத்தாரின் கதை.

தேவலோகக் கன்னிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத்து வளர்த்தார். அவர்கள் வழி வந்தவர்களே நாடார்கள் என்பது ஒரு கதை ஆகும். மீன் பிடிக்க வலைவீசிய பருவதராஜா, மீனோடு சேர்த்து முனிவரையும் பிடித்துவிட்டார். அதனால் பெற்ற சாபத்தால் - பருவதராஜ குலத்தினர் மீன்பிடி தொழிலை செய்கின்றனர் என்பது அவர்களது நம்பிக்கை.

இது போன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொன்மக் கதைகள் உள்ளன.

வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்

இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
வன்னியர் சின்னம்
‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)  
வல்லாள மகராஜன், திருவண்ணாமலை
அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது.

‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. அதே போன்று இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.
திரௌபதி, பெங்களூர்
இதே போன்று, வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும்.

வன்னிய ராஜன் கதை

வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு. பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். (நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது).

மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில்  விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா.
'ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்.

சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன.
 வன்னிய நாடகம்
வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளை வன்னியர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வன்னியர் குறித்த வன்னிய புராண தொன்மக் கதையை பரப்பவும், குழந்தைகளுக்கு படிப்பிக்கவும் வேண்டும்.

வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும்.

மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செய்ல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை.

லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான்.

அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளத்தின் ஆணிவேறாக இருப்பது நெருப்பில் தோன்றிய வீர வன்னிய மகாராஜனின் கதை. 

வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளைக் வன்னியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
குறிப்பு: வன்னியர்கள் மட்டுமல்ல. இதே போன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகமும் தது தொன்ம வரலாற்றுக் கதையை போற்ற வேண்டும்.  ஏனெனில், தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆபத்துகளான, ஏக இந்தியக் கொள்கை, மதவெறி தீவிரவாதம், தமிழர் அடையாள அழிப்பு, திராவிடத் திணிப்பு, கம்யூனிச சர்வதேசியம் ஆகிய கேடுகளில் இருந்து - பன்முக அடையாளங்களே தமிழகத்தை காப்பாற்றும். இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கும். தமிழகத்தின் புதிய தேசிய வாதம் என்கிற எழுச்சியின் ஆதாரமாக பன்முக அடையாளங்களே இருக்கும்.

கருத்துகள் இல்லை: