Pages

ஞாயிறு, மார்ச் 10, 2013

ராஜபக்சேவை கூண்டிலேற்ற வலியுறுத்தி அரசு சார்பில் முழு அடைப்பு: மருத்துவர் இராமதாசு அறிக்கை


"ஈழத்தமிழர்களின் நலன் காப்பதற்காக என்று கூறி வரும் 12-ஆம் தேதி டெசோ அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது கொத்து குண்டுகளை வீசியும், பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது போர் நிறுத்தம் கோரி உண்ணா விரதம் இருந்த கலைஞர், இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக அவர் அங்கம் வகிக்கும் மத்திய அரசு சொன்ன பொய்யான தகவலைக்கூட சரிபார்க்காமல் 3 மணி நேரத்தில் போராட்டத்தி கைவிட்டார். 

அதன்பிறகும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்த போது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று கிண்டலடித்து தமிழர்களின் மரணங்களை கொச்சைப்படுத்தியவர் தான் கலைஞர். இப்போது ஈழத்தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்தவரை போல இப்போது முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் போர் நடந்த போது பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்த போது, அத்தகைய போராட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிறீபதி மூலம் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பி மிரட்டல் விடுத்தவர் தான் தி.மு.க. தலைவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் நடத்தப்பட்ட டெசோ அமைப்பின் மாநாட்டில், மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு பயந்து தனித்தமிழீழம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தவிர்த்தவர் கலைஞர். இப்போது வேறு சில அரசியல் காரணங்களுக்காக, ஈழத்தமிழர்களை முன்னிறுத்தி, இப்படி ஒரு முழு அடைப்பு போராட்ட நாடகம் நடத்துவதை தமிழ் உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதேநேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு நிற்கிறது  என்பதை உலகிற்கும், மத்திய அரசுக்கும் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய உணர்வை வெளிப்படுத்த தமிழக மக்களும் தயாராகவே உள்ளனர். 

எனவே, ஈழப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு- கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தமிழீழம் அமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." - இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

ஐநாவில் தீர்மானம்: இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்காவும் தமிழ்நாட்டு அமைப்புகளின் குழப்பமும்!

"இலங்கை மீது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் ஒன்றுமேயில்லை. ஈழத்தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவும், ஈழ இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வேண்டும்" என்கிற கோரிக்கை தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

"இனப்படுகொலை விசாரணை, தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு" என்கிற கோரிக்கைகளில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்வது தேவையற்றது.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல் - என்றார் திருவள்ளுவர்.

(செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்) - இதனை இந்த நேரத்தில் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை மிகப் பலமான நிலையில் இருக்கிறது. இந்தியா என்கிற தெற்காசியாவின் வல்லரசு அதற்கு உற்ற தோழனாக நிற்கிறது. உலகின் முன்னணி கம்யூனிச நாடுகளும் இசுலாமிய நாடுகளும் இலங்கைக்கு பலமாக நிற்கின்றன. 

கம்யூனிச சித்தாந்தத்தை முழுவதாகவோ அல்லது ஓரளவுக்கோ ஏற்கும் கியூபாவும் சீனாவும் இலங்கையைக் காப்பதற்காக மல்லுகட்டுகின்றன. (நல்லவேளையாக அவை இப்போது மனித உரிமைகள் அவையில் உறுப்பினராக இல்லை). இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈரான் ஆகியவை அமெரிக்க தீர்மானத்துக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மலேசியாவும் அதே நிலைபாட்டை எடுக்கக் கூடும்.

எப்பாடுபட்டாவது, இந்த தீர்மானத்தை தோற்கடிக்கவோ அல்லது நீர்த்துப் போக செய்யவோ இந்தியா தீவிரமாக சதி வேலையில் இறங்கியுள்ளது.

தமிழரின் நிலை என்ன?

இலங்கையின் வலுவான நிலைக்கு மாறாக தமிழர்கள் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். தனக்கென பேசுவதற்கு ஒரு நாடும் இல்லாத கையறு நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

வாட்டிகன் நகர் எனப்படுகிற 'ஹோலி சீ' நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 832 பேர் மட்டும்தான். அவ்வாறே, லீக்டன்ஸ்டைன் எனும் நாட்டின் மக்கள் தொகை 35 ஆயிரம் பேர் மட்டும்தான். இந்த நாடுகளுக்கு இருக்கும் வாய்ப்பும் முக்கியத்துவமும் கூட ஒன்பது கோடி தமிழர்களுக்கு இல்லை. 

தமிழர்களுக்கென்று ஒரு நாடும் இல்லை (இந்தியா எதிரியின் ஆதரவு நாடு). அதனால்தான் தமிழர்களின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ள சிங்களர்களால் தமிழர்களைக் கொன்று குவிக்கவும் அடக்கி ஒடுக்கவும் முடிகிறது.

அமெரிக்க தீர்மானத்தை வரவேற்போம்

"இனப்படுகொலை விசாரணை, தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு" என்பனவெல்லாம் ஒரே நாளில் அடையக்கூடிய இலக்குகள் இல்லை. படிப்படியாகத்தான் அதை நோக்கி முன்னேற வேண்டும். அதற்கான ஒரு படிக் கல்லாகத்தான் அமெரிக்க தீர்மானத்தை பார்க்க வேண்டும். (அதிலும் பொது  வாக்கெடுப்பு போன்ற கோரிக்கைகள் - ஐநா மனித உரிமைக் குழுவால் மட்டுமே முடியக் கூடியனவும் அல்ல. அதற்கு ஐநா பாதுகாப்பு சபையின் ஆதரவு வேண்டும். அங்கு தமிழர்களின் எதிரிகளான சீனாவும் ரசியாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளனர்)

கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்தியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் "விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கையைப் பாராட்டி" ஐநா மனித உரிமைகள் அவையில் தீர்மானம் கொண்டுவந்தன. அந்த நிலைமை இன்று தலைகீழாக மாறி - இலங்கையைக் கண்டித்து தீர்மானம் வருகிறது. இது முன்னேற்றம் இல்லையா?

அமெரிக்காவின் மீது தமிழர்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழர் விடயத்தில் அது நமது நட்பு நாடுதான்.

தமிழர்கள் எப்போதும் கியூபாவுக்கு ஆதரவான நிலையில்தான் இருந்தனர். இன்றைக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் செ குவேராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் தமது சட்டையில் பொறித்துக் கொள்கிறார்கள். ஆனால், கியூபா நமது மனித உரிமையை மதித்ததா? தமிழர்கள் எப்போதுமே இஸ்லாமியர்களுக்கு நண்பர்கள்தான். ஆனால், இஸ்லாமிய நாடுகள் நமது உரிமைகள் அங்கீகரித்தனவா? (இப்போதும் - இலங்கை மீதான தீர்மானத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டு அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒன்று மட்டும்தான்)

இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்கா

கடந்த 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் கடைசி நேரத்தில் திருத்தம் செய்து இலங்கையைக் காப்பாற்றியது இந்தியா. இந்த முறை சற்று பலவீனமான ஒரு தீர்மானத்தை முதலில் கசியவிட்டது அமெரிக்கா.

உடனடியாக - பலவீனமான இந்த தீர்மானத்தை இலங்கை தானாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஐநா வாக்கெடுப்பையும், சர்வதேச அவமானத்தையும் இலங்கை சமாளித்து விடலாம என்று ஆலோசனை சொன்னது இந்தியா.
இதற்காக இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டெசில்வா புதுதில்லிக்கு வந்தார். அமெரிக்காவிடம் பேசி அந்த தீர்மானத்தை மேலும் பலவீனமாக்கி, ஏற்றுக் கொள்வதாக நாடகமாடி, பின்னர் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று ஏமாற்றலாம் என சதி செய்தனர். ராஜபக்சேவே ஜெனீவாவுக்கு போகவேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. இலங்கையின் தூதுவர்கள் அமெரிக்காவுக்கும் சென்றதாகக் கூறப்பட்டது, இந்திய வெளியுறவுத்துறையின் ஆசியுடன் சுப்பிரமணிய சாமியும் அமெரிக்காவுக்கு சென்றார்.

சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா, தீர்மானத்தை சற்று கடினமானதாக மாற்றியது. "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற ஐநா மனித உரிமைகள் ஆணையரின் கோரிக்கையை நேரடியாக தீர்மானத்தின் செயல்பாட்டு பகுதியில் (operational part) சேர்த்தது. கூடவே, அவரது பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற வாசகத்தையும் இணைத்தது. "ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் (UN Special Rapporteurs) இலங்கைக்கு செல்ல வேண்டும். அவர்களை தங்குதடையின்றி அனுமதிக்க வேண்டும்" என்கிற கட்டாயத்தை வலியுறுத்தியது.

முதலில் ஒருவருடத்திற்கு பின்னர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வார்த்தையை மாற்றி - அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அதாவது, தீர்மானத்தை "இலங்கை தானாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை" என்கிற நிலையை உருவாக்கிவிட்டது அமெரிக்கா. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு வல்லுநர்கள் தாங்கள் இந்திய வெளியுறவுத் துறையினரை விட புத்திசாலிகள் என மெய்ப்பித்து விட்டனர்.

இதனால்தான் - முதலில் அமெரிக்க தீர்மானத்தை ஏற்று இந்தியா வாக்களிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார் (Manmohan Singh had promised to support the US resolution against Sri Lanka). பின்னர், தீர்மானத்தை பார்த்த பின்னர்தான் முடிவு செய்வோம் என்று பல்டியடித்தார் (India will take steps based on what kind of resolutions comes in the UN HRC).

இனி என்ன?

"ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது. இதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைபாடாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த தீர்மானம் கூட பல தமிழ் செயல்பாட்டாளர்களின் அயராத முயற்சியின் விளைவாகவே வந்துள்ளது. இந்த சிறிய வெற்றியைக் கொண்டாடுவதன் மூலமே அடுத்த வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

அமெரிக்கா எந்த சுயநலத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை முன்வைத்தாலும் அதைப்பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை எதிர்க்கிறது. ராஜபக்சே எதிர்க்கிறான். இது ஒன்றே நாம் அமெரிக்காவை ஆதரிக்கப் போதுமானதாகும். இந்த தீர்மானத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவது என்பதே தமிழ் மக்களின் முன் உள்ள உடனடிக் கடைமை.

தமிழர்களின் நண்பன் - அமெரிக்கா வாழ்க!

தொடர்புடைய சுட்டிகள்:

1. அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

2. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

3. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

4. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?

5. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

சனி, மார்ச் 09, 2013

அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

இதோ இன்று மார்ச் 9 சனிக்கிழமை ஐநா மனித உரிமைக் குழுவில்  (UNHRC) அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் உண்மை நகல்:  - இனியும் இந்தியா மவுனம் காக்குமா?

மார்ச் 13 அன்று ஐநாவில் சமர்ப்பிக்கப்படும் என்று பத்திரிகைகளில் கூறப்பட்ட நிலையில் - இலங்கை மீதான தீர்மானம் இன்றே (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக ஐநா மனித உரிமைகள் குழுவில் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 அல்லது 22 அன்று நடக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

2. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

3. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?

4. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெள்ளி, மார்ச் 08, 2013

இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?


(அமெரிக்க தீர்மானத்தின் நகலைக் கீழே காண்க)
இலங்கை குறித்த ஐநா மனித உரிமை தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் 'அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் நாம் முடிவெடுக்க முடியாது' என்று மழுப்பலாக பேசி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை கவனிக்கும் எல்லோருக்குமே அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்!

உலகிற்கே தெரிந்த விடயம் இந்திய பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் தெரியாது என்று சொன்னால் அதற்காக இந்திய மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனாலும், உண்மை அதுவல்ல. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள 'இலங்கைக்கு இலேசாக வலிக்கும்' வாசகங்களைக் கூட இந்தியா ஏற்க மறுக்கிறது என்பதே இதன் பின்னுள்ள கொடூரமான உண்மை. 
இலங்கைக்கு கொஞ்சமும் வலிக்காத வகையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று உலகநாடுகளுக்கு சமிக்ஞை அனுப்பும் வகையிலேயே இந்திய அரசு இப்போது நடந்துகொள்கிறது. ராஜதந்திர மட்டங்களில் இன்னும் தீவிரமாக இலங்கையை ஆதரித்து இந்தியா பஞ்சாயத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது உறுதி. 

இதுதான் தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் லட்சணமா? டெசோ கலைஞருக்கே வெளிச்சம்!

அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?

அமெரிக்க தீர்மானத்தின் முதல் வரைவு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வெளியானது. அடுத்த வரைவு ஏழாம் தேதி வெளியாகியுள்ளது. இந்த தீர்மான நகல் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தமிழர்கள் எதிர்பார்க்கும் அளவிலோ, உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் எதிர்பார்க்கும் அளவிலோ இல்லை.

இலங்கை இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையையும் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பையும் தமிழர்கள் கோருகிறார்கள். இலங்கைப் போரின்போது பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கோருகின்றன. இவை எதுவும் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் இல்லை.

ஆனாலும், 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் நிரைவேற்றப்பட்ட இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போல இந்த புதிய தீர்மானம் இல்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீமானத்தை விட ஒரு படி மேலாகவும் புதிய தீர்மானம் இருக்கிறது.

அமெரிக்க தீர்மான விவரம்

உலக நாடுகளுக்கு 7.3.2013 அன்று அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

1. இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் ஆகிய இரண்டுமே பன்னாட்டு சட்டங்களின் கீழான பொறுப்புகளை நிரைவேற்ற போதுமானவை அல்ல என்று இந்த தீர்மானம் கவலை தெரிவித்துள்ளது.

2. ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை தொடர்பில் பிப்ரவரி 11 அன்று அளித்த அறிக்கையினை புதிய தீர்மானம் வரவேற்றுள்ளது. கூடவே சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற அவரது கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக இந்த தீர்மானம் கூறுகிறது.

3. மேற்கண்ட ஐநா மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை அரசுக்கு 12 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.

4. இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நியாயமான சுதந்திரமான விசாரணை வேண்டும் என்கிற கடந்த ஆண்டின் தீர்மானத்தில், "பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்பது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

5. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களுக்கு (Special Rapporteurs) இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும்.

6.  ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், இந்த தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பர் மாதம் கூடும் ஐநா மனித உரிமைகள் குழுவின் 24 ஆவது கூட்டத்தில் இடைக்கால அறிக்கையும்  2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்க தீர்மானத்தின் நகல்:
அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப் போக செய்ய இந்தியா துடிப்பது ஏன்?

1. முதன் முறையாக "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற கருத்து ஐநா தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தகைய ஒரு விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றாலும், அப்படி ஒரு கோரிக்கை உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

இதற்கு முன்பு டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இதனைக் குறிப்பிட்டாலும், அந்த தீர்ப்பாயமே அரசு சாராத ஒரு குடிமக்கள் அமைப்புதான் என்பதால் அதற்கு சட்ட வலிமை இல்லை. அடுத்ததாக, ஐநா பொதுச்செயலர் அமைத்த இரண்டு குழுக்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் - அந்த அறிக்கைகள் ஐநா பாதுகாப்பு அவையிலோ, மனித உரிமைகள் அவையிலோ சமர்ப்பிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. அவற்றின் மீது ஐநா நடவடிக்கை எதுவும் இல்லை.

"இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்பது நவநீதம் பிள்ளை அவர்கள் மார்ச் 20 அன்று சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில்தான் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. இது தீர்மானத்திலும் இடம்பெறுவது முக்கியமானதாகும்.

2. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதும் முக்கியமானது. சுமார் ஆறு குழுக்கள் சென்று அவர்களது அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியாகும் நிலையில் அது உலக அரங்கில் இலங்கையை மேலும் அம்பலப்படுத்துவது உறுதி.

3. "பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" எனும் புதிய வாசகத்துக்குள் எதை வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்.

4. அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் - ஐ.நா மனித உரிமைகள் விவாதத்தில் இலங்கை நிரந்தரமாக இடம் பிடிக்கும்.

- இலங்கையிடம் அளவுகடந்த காதல் கொண்டுள்ள இந்தியா இதையெல்லாம் ஏற்பது கடினம்தான்.

திரிசங்கு நிலையில் இந்தியா

47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட  ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை. இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான்.
அமெரிக்க தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். கடந்த ஆண்டு 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து வெறிபெறச்செய்தன. இந்த ஆண்டு அதைவிட அதிகமான நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும். இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை இன்னும் தனிமைப்பட்டு போகும்.

மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால், "இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக" கூறும் தீர்மானத்தை இலங்கை எப்படி தானாக ஏற்கும்?

ஏற்றுக்கொண்டால் உள்நாட்டில் அவமானம், ஏற்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் - என்கிற இக்கட்டான நிலை இலங்கைக்கு.

தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கைக்கு வலிக்கும். ஆதரிக்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் - என்கிற இக்கட்டான நிலை இந்தியாவுக்கு.

அதனால்தான் 'இலங்கைக்கு வலிக்காத மாதிரி தீர்மானத்தை மாற்றுங்கள்' என்று கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா?

தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது. டெசோ கலைஞர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காண தமிழ்நாட்டு தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:

1. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

2. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

3. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

வியாழன், மார்ச் 07, 2013

இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

இலங்கையில் ஒன்றைரை லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்ததன் தொடர்ச்சியான நடைமுறை தீர்மானத்தையே தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஐ.நா. அமைப்பால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பான பசுமைத் தாயகம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்தே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக்கு எதிரான காலமுறை விசாரணையின் போது பசுமைத் தாயகத்தின் சார்பில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி, பசுமைத் தாயகத்தின் செயலாளர் இர. அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

ஐ.நாவின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள (NGO in special consultative status with UN ECOSOC) பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றவும் அறிக்கைத் தாக்கல் செய்யவும் முடியும். அதன் படி பசுமைத் தாயகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மனித உரிமை ஆணையத்த்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலரின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பசுமைத் தாயகத்தின் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டிருப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதிலும், போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான திருத்தத்தை கொண்டுவருவதிலும் மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளிடையே இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இலங்கை தொடர்பாக, இந்தியாவிலிருந்து ஐநா மனித உரிமை ஆணையத்தின் 22 ஆவது கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்துள்ள ஒரே அமைப்பு பசுமைத் தாயகம் மட்டும்தான்.

பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ:


தொடர்புடைய சுட்டி:

டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

புதன், மார்ச் 06, 2013

டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை போராட்டமோ நிகழ்ச்சியோ நடத்துகிறார். வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் டெசோ கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு என்று போகிறது அவரது அரசியல். ஆனாலும், அவர் "வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக" இதைச் செய்வதாக சராசரி தமிழன் நினைக்கிறான்.

கலைஞரின் புதிய நடவடிக்கைகளால் அவர் மீது வீழ்ந்துள்ள வரலாற்று பழி நீங்காது. அவர் கொஞ்சமாவது பாவத்தைக் கழுவ வேண்டும் என்றால் - அவர் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் வேறுசில இருக்கின்றன. அவற்றை கடைசியில் பார்ப்போம்.

கலைஞரின் கருப்பு வரலாறு

கலைஞர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சினார் என்பது முக்கியமில்லை. அவரது பெயர் வரலாற்றில் எப்படி இடம்பிடிக்கப் போகிறது என்பதுதான் முக்கியமானதாகும். அவர் தமிழ் இனத்துக்கு செய்த நன்மைகளைப் பட்டியலிட முடிகிறதோ இல்லையோ, அவரால் நேர்ந்த கேடுகளைப் பட்டியலிட முடியும். அதில் முதல் இடம் பிடிக்கக் கூடியது ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம்தான்.
ஈழத்தமிழினத்தின் சோகத்துக்கு காரணமானவர்களில் ஒவ்வொரு தமிழனும் குற்றவாளியாக இருக்கிறான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் இருக்கிறது. இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்தியவராக கலைஞர் இருக்கிறார். ஈழப்போர் உச்சக் கட்டத்தை எட்டிய காலத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்தார். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு - புதுவையின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு பக்க பலமாக நின்றனர்.

அப்படிப்பட்ட வலுவான நிலையில் கலைஞரைத் தவிர வேறு யார் முதலமைச்சாராக இருந்திருந்தாலும் - ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை வெறுமனே வேடிக்கைப் பார்த்திருப்பார்களா? என்கிற கேள்வி வரலாறு நெடுகிலும் கேட்கப்படும்.

கலைஞர் செய்த பெரும் குற்றம் 1: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வந்தது. "ஈழத்தமிழர்கள் அழிப்பை இந்தியா இரண்டு வாரங்களில் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது" என்று அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா கட்சிகளும் கலைஞர் தலைமையில் ஒருமனதாக முடிவெடுத்தனர். (End Lanka war in two weeks, else TN MPs will quit: Karunanidhi)
அந்த ஒரு முடிவுமட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் - இலங்கையில் மாபெரும் மனிதப் பேரழிவு நிகழ்ந்திருக்காது. ஏனெனில், இலங்கையில் போரை முன்னின்று நடத்திய நாடு இந்தியா தான். குறிப்பாக காங்கிரசு கட்சிதான் இந்தப் போரை நடத்தியது. தமிழ் நாட்டின் 40 உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தால் அதன் பிறகு காங்கிரசு அரசு பிழைத்திருக்காது, இலங்கையில் போரும் தொடர்ந்திருக்காது.

ஆனால். கெடு முடிவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது அக்டோபர் 26 அன்று காலை பிரணாப் முகர்ஜி இலங்கையின் பசில் ராஜபட்சேவுடன் பேச்சு நடத்தினார். பின்னர் சென்னை வந்து கலைஞரிடம் மூன்று மணி நேரம் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.  (Karunanidhi will not insist on MPs' resignation: Mukherjee) 

இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா முடிவை கைவிட்டார் கலைஞர் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு பின்னர்தான் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

(DMK resignation threat blows over: Karunanidhi has assured he would not precipitate a crisis for UPA government over Sri Lankan Tamils issue after the Centre apprised him of steps being taken by the island nation's governments to ensure safety of Tamil civilians.)

ஈழத்தமிழினம் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும் கடைசி வாய்ப்பு 'எதற்காகவோ' கைவிடப்பட்டது. இந்த வரலாற்று பெரும்பழி ஒருநாளும் மறையாது.
கலைஞர் அவரது 'நெஞ்சுக்கு நீதியின்' அடுத்த பாகத்தை எழுதும் வாய்ப்பிருந்தால் - 2008 அக்டோபர் 26 அன்று பிரணாப் முகர்ஜியிடம் மூன்று மணி நேரம் என்னவெல்லாம் பேசினார் - என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். ஒரு லட்சம் மக்களின் படுகொலைக்கு காரணமான அந்த மூன்று மணி நேர பேச்சின் விவரம் வெளி உலகிற்கு சொல்லப்பட்டாக வேண்டும். 

(பிற்காலத்தில், அதே பிரணாப் முகர்ஜி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என முந்நின்று பாடுபட்டவரும் கலைஞர்தான்)

கலைஞர் செய்த பெரும் குற்றம் 2: சாகும்வரை உண்ணாவிரதம்

"உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், இலங்கை அரசு அதனை ஏற்காததைக் கண்டித்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி" 2009 ஏப்ரல் 27 அன்று சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் கலைஞர். "ராஜபக்சேவின் கடைசி பலியாக தான் இருக்கட்டும்" என்றும், "ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும்" தெரிவித்தார்.
ஆனால், உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று மணி நேரத்தில் அதனைக் கைவிட்டார் கலைஞர். கூடவே, இந்திய அரசின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். (Karunanidhi calls off indefinite hunger strike)

"இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது" என்று கூறினார் கலைஞர்.

கலைஞரின் போர்நிறுத்த அறிவிப்புக்கு பின்னர்தான் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேலும் அதிகரித்தது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றார் கலைஞர். 

"மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். அதுபோல நடந்திருக்கும் என்று கருதுகிறேன்" என்று மனசாட்சியை அடகுவைத்து பேசினார் கலைஞர்.

இன்று அவர் கண்ணீர் வடிக்கும் "பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டது அந்த தூவானத்தில்தான்". (This is proof, beyond reasonable doubt, of the execution of a child – not a battlefield death) "நிராயுதபாணிகளாக நடேசனும் புலித்தேவனும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பின்பு சித்தரவதை செய்து கொல்லப்பட்டதும் அந்த தூவானத்தில்தான்". (The final atrocity: Uncovering Sri Lanka’s ‘white flag incident’)
- இப்படியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழமண்ணில் பேரவலம் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னால் 2008 அக்டோபர் 26 அன்று ஒருமுறையும், 2009 ஏப்ரல் 27 அன்று மறுமுறையும் கலைஞர் நடத்திய நாடகங்கள் வரலாற்றின் கருப்பு பக்கங்களில் என்றென்றும் இடம் பிடித்திருக்கும்.

உண்மையில், தமிழகத்தில் எழுந்த மக்கள் பேரெழுச்சியை தணிப்பதற்காக - அதாவது ராஜபக்சேவின் கொடூரங்களுக்கு ஆதரவாக - கலைஞரின் நாடகம் நடத்தப்பட்டதா என்கிற கேள்வியை எதிர்காலத் தலைமுறை கேட்கும்.

பாவத்தைக் கழுவ என்ன வழி?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்த பிழையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர் (தெரியாமல் செய்த பிழை 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது டெல்லிக்கு அனுப்பியது. தெரிந்து செய்த பிழை - கலைஞரின் தலைமையில் 2009 ஆண்டு படுகொலைகளை வேடிக்கைப் பார்த்தது). இந்தப் பாவச்செயலுக்கு ஒரு போதும் மன்னிப்பு இல்லை. குறிப்பாக, கலைஞரை வரலாறு மன்னிக்காது.

ஆனாலும், பாவங்களை ஓரளவுக்கு கழுவ அவருக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு, இலங்கை குறித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தால் போதும். இப்போதும் இந்திய அரசு கலைஞரின் ஆதரவில்தான் நடக்கிறது என்பதால் - அந்த மாற்றம் சாத்தியமாகக் கூடியதுதான்.

முதலாவதாக, பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை இந்திய அரசு காப்பாற்றக் கூடாது. அடுத்ததாக, நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதற்கு கலைஞர்தான் பொறுப்பு.

1. பன்னாட்டு விசாரணையை இந்தியா தடுக்கக் கூடாது.

'இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு, அது ஒரு ஜனநாயக நாடு' என்கிற வாதங்கள் பன்னாட்டு அரங்கில் காலாவதியாகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கையை ஆதரித்த பல நாடுகள் அந்த நிலைபாட்டை இப்போது மாற்றிக் கொண்டுவிட்டன.

ஐநா மனித உரிமைகள் ஆணையரே, ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அளித்த தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் "இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்" என்று தெளிவாகக் கோரியுள்ளார் (UN Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka). இந்த கோரிக்கையை இப்போது வரை தடுத்துவரும் ஒரே நாடு இந்தியா தான்.
அமெரிக்க தீர்மானத்தில் தலையிட்டு - இலங்கையின் உள் விவகாரங்களில் பன்னாட்டு தலையீடு கூடாது என்று இந்திய அரசு லாபி செய்து வருகிறது. திமுக ஆதரவுடன் நடக்கும் காங்கிரசு அரசின் இந்த அநீதியான போக்கினை கலைஞர் தடுக்க வேண்டும்.

"தமிழர்களுக்கு எதிரான போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு இந்தியா தடை போடக்கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமை கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

2. கொழும்பு காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை (நவம்பர் 2013) இந்தியா புறக்கணிக்க வேண்டும்

காமன்வெல்த் என்பது இங்கிலாந்திடம் காலனியாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இக்கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.

"கொழும்பு காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்க கூடாது" என்கிற மிக நியாயமான கோரிக்கையை காங்கிரசு அரசு ஏற்க செய்ய வேண்டிய கடமையும் கலைஞருக்கு மட்டுமே இருக்கிறது.

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா?

கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் இருந்தால் இப்படிப்பட்ட உருப்படியான கடமைகளை அவர் செய்ய வேண்டும். "வள்ளுவர் கோட்டம் முற்றுகை, தில்லியில் கூட்டம், தமிழ்நாட்டில் முழு அடைப்பு" என்கிற போராட்டங்கள் எல்லாம் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியவை. இந்தியாவை ஆளுங்கட்சிகளில் ஒன்றான திமுக இதைச் செய்ய தேவையே இல்லை.
கலைஞர் அவர்களே, தில்லியில் நடக்கும் ஆட்சி உங்களுடையதும்தான்.

உங்களடைய இந்திய அரசு பன்னாட்டு விசாரணையிலிருந்து இலங்கையை காப்பாற்றுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

உங்களடைய இந்திய அரசு நவம்பர் மாதம் கொழும்பில் நடபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்துங்கள்.

மக்கள் உங்களிடம் உறுதியான செயலைத்தான் வேண்டுகிறார்கள். நாடகங்களை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

செவ்வாய், மார்ச் 05, 2013

ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!

ஐநாவில் இலங்கை மீது ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்க உள்ளது அமெரிக்கா. 'புதிய பானையில் பழைய கள்' என்பது போன்றுதான் இந்த தீர்மானம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பலவீனமான தீர்மானத்தைக் கூட ஒரேயடியாக உப்பு சப்பில்லாமல் செய்யும் சதியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசுக்கு தமிழர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு என்று புரியவில்லை!

தமிழர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் முக்கிய கோரிக்கையான "சுயேச்சையான பன்னாட்டு விசாரணை" என்கிற கோரிக்கையை உள்ளடக்கியதாக அமெரிக்க தீர்மானம் இருக்காது. அதே நேரத்தில், நம்பிக்கை இழக்கும் அளவுக்கு பலவீனமாகவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா செய்யும் சதி என்ன?

இந்திய நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அமெரிக்க தீர்மானத்தை பார்த்துவிட்டுதான் முடிவு செய்வோம் என்பது போல மேலோட்டமாக பேசினாலும், இந்தியாவுக்கு எல்லாம் தெரியும். உண்மையில் அமெரிக்க தீர்மான விவரங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, திரைமறைவாக தமிழர்களுக்கு எதிரான ராஜதந்திர போரில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ய மிகக் கடினமான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?

அமெரிக்கா 2012 ஆம் ஆண்டில் கொண்டுவந்த தீர்மானத்தைக் காட்டிலும் ஒருபடியாவது மேலானதாகவே புதிய தீர்மானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு தீர்மானத்தில் கூரப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளும் புதிய தீர்மானத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும். கூடவே, ஐநா மனித உரிமைகள் சிறப்பு விசாரணை வல்லுநர்களை (special rapporteurs) இலங்கைக்கு அனுப்ப அமெரிக்க தீர்மானம் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

குறிப்பாக, நீதித்துறையின் சுதந்திரம், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், கூட்டமாகக் கூடும் உரிமை, சட்டவிரோதமான விசாரணை இல்லாத அரச படுகொலைகள், சிறுபான்மையினர் உரிமை, காணாமல் போவோர் நிலை, பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறை என ஒவ்வொரு மனித உரிமை களநிலைமை குறித்தும் ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க  வேண்டும், விரும்பிய இடங்களுக்கு அவர்கள் செல்லவும் எல்லோரையும் விசாரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பதும் அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.

இவ்வாறு மனித உரிமை துறைகள் சார்ந்த சிறப்பு விசாரணை வல்லுநர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மீண்டும் ஐநா மனித உரிமைக் குழுவிற்கு அறிக்கை தரவேண்டும் என்று புதிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கை அரசு வெளியிலிருந்து சுயேச்சையான விசாரணை வல்லுநர்களை அனுமதிக்காமல் நீண்டகாலமாக ஏமாற்றி வந்துள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட முயல்கிறது அமெரிக்க தீர்மானம். ஏற்கனவே, ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் - ஐநா சிறப்பு விசாரணை வல்லுநர்களை இலங்கை அரசு நீண்டகாலமாக அனுமதிக்காததன் காரணமாகவே தானும் அங்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சதி

இலங்கைக்கு இந்தியா ஒரு அண்டை நாடு என்கிற அடிப்படையிலும், தெற்காசியாவில் இந்தியா ஒரு முக்கியமான சக்தி என்பதாலும் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைபாட்டை முக்கியமாகக் கருதுகின்றன. கூடவே, அமெரிக்க அரசு இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதால் அவர்களும் இந்திய கருத்துக்கு மதிப்பளிக்க விரும்புகின்றனர்.

இந்த ஒரு நல்வாய்ப்பை நீதிக்கும் நியாயத்துக்கும் மனித உரிமைக்கும் ஆதரவாக பயன்படுத்துவதற்கு பதிலாக, தமிழ் மக்களை பழிவாங்க நினைக்கிறது இந்திய அரசு.
உலகில் எல்லா நாடுகளுக்கும் அந்தந்த நாடுகளின் மனித உரிமை நிலையை ஆய்வு செய்ய வெளியிலிருந்து சுயேச்சையான ஐநா விசாரணை வல்லுநர்களை அனுப்புவது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றாலும் - இலங்கைக்கு வலுக்கட்டாயமாக ஐநா விசாரணை வல்லுநர்கள் அனுப்பப்படுவதை எதிர்க்கிறது இந்தியா.

இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு. அங்கு அந்நிய தலையீடு கூடாது என்கிற வழக்கமான பல்லவியைப் பாடி ஐநா விசாரணை வல்லுநர்கள் அனுப்பப்படாமல் தடுக்க சதி செய்கிறது இந்திய அரசு. (புலிகளுக்கு எதிரான போருக்கு மட்டும் அந்நிய உதவி இருக்கலாம். ஆனால் மனித உரிமையில் இருக்கக் கூடாதாம்)

தமிழகமே திரண்டு இலங்கைக்கு எதிராகப் போராடும் போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் இருந்து உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்திய அரசில் தமிழர்களுக்கு இல்லை என்பதை இது உறுதி செய்கிறது.

அமெரிக்க தீர்மானம்: தமிழர்களுக்கு வெற்றியா? தோல்வியா?

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியா? தோல்வியா? என்பது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதி, நியாயம் என்கிற அறம் சார்ந்த தத்துவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம் அல்ல. மனிதகுலம் இதுவரை சந்தித்திராத ஒரு பேரவலத்தை சந்தித்த மக்களுக்கு அது நீதி வழங்காது.

ஆனால், தனக்கென பேச ஒரு நாடு இல்லாத தமிழர்களின் பரிதாப நிலையில் இருந்து பார்த்தால் அந்த தீர்மானம் ஒரு முன்னேற்றம் தான். 

இந்தியாவும் ஐநா தீர்மானமும் - துரோகத்தின் வரலாறு

அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானம் இலங்கை மீது ஐநா மனித உரிமைக் குழு கூட்டத்தில் வைக்கப்படும் நான்காவது தீர்மானம் ஆகும். 

முதல் தீர்மானம்

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது ஐரோப்பிய நாடுகளின் முன்முயற்சியில் இலங்கை குறித்த ஒரு சிறப்புக் கூட்டம் ஐநா மனித உரிமைக் குழுவில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக 30 நாடுகள் சேர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் தலைமையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன (இங்கே காண்க: Resolution by Switzerland and 30 Countries)
இவ்வாறு ஒரு முயற்சி நடப்பது தெரிந்த உடனேயே இந்தியா, கியூபா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளை தொடங்கின. இதுகுறித்து 15 மே 2009 அன்று, அதாவது போர் உச்சத்தில் இருந்த பொது, இந்த நாடுகள் தம்மை இலங்கையின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டன (இங்கே காண்க: India, Cuba NAM Letter to UNHRC)

இரண்டாவது தீர்மானம்

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டப்பட்ட அதே கூட்டத்தில், இலங்கையைப் பாராட்டி, இலங்கையே ஒரு தீர்மானம் கொண்டுவர வைத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் வழிசெய்தது இந்தியா (இங்கே காண்க: Resolution by Sri Lanka, India and 11 Countries). "விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விடுதலை செய்ததற்காக இலங்கையை பாராட்டுகிறோம்" என்று இந்த தீர்மானம் மிகக் கேவலமாக கூறியது.

அமெரிக்காவல் வந்த மாற்றம்

இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா - என ஒரு ரவுடிகள் கூட்டம்  ஐநா மனித உரிமைக் குழுவில் ஆதிக்கம் செலுத்தி இலங்கையைக் காப்பாற்றிய அக்காலத்தில் அமெரிக்கா அக்குழுவில் ஒரு உறுப்பு நாடாக இல்லை. 2006 ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா சேரவில்லை. 2009 ஆம் ஆண்டு இக்குழுவில் சேர ஒபாமா விருப்பம் தெரிவித்தார். அதன்படி செப்டம்பர் 2009 இல் அமெரிக்கா ஐநா மனித உரிமைக் குழுவில் இணைந்தது.

மூன்றாவது தீர்மானம்

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடிய ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 19 ஆவது கூட்டத்தில் இலங்கை மீது ஓரளவு நெருக்கடியை சுமத்தும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. (இங்கே காண்க: Promoting Reconciliation and Accountability in Sri Lanka)

1. இலங்கை அரசு தானே அமைத்த "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission)" பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். பன்னாட்டு மனித உரிமை, மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது குறித்து நியாயமான விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து இலங்கை மக்களுக்குமான நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்

2. "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" பரிந்துரைகளை நிறைவேற்றுதற்கான மற்றும்  பன்னாட்டு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையை கூற வேண்டும்.
3. மேற்கண்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் உதவ வேண்டும். கூடவே, இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று அமெரிக்க தீர்மானம் கோரியது.

அதே நேரத்தில் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது பன்னாட்டு சட்டங்களின்படி சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை போதுமான அளவுக்கு எதிகொள்ளவில்லை' என்பதையும் அமெரிக்க தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டியது.

"அமெரிக்கா முதலில் முன்மொழிந்த தீர்மானத்தில் 'ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும் (the Government of Sri Lanka to accept)" என்கிற, ஒப்பீட்டளவில் உறுதியான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை இந்தியா தலையிட்டு "ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அந்நாட்டின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் (in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka)" என்று மாற்றியது. இந்தியாவின் இந்த உதவிக்கு இலங்கை பாராட்டும் தெரிவித்தது. (இந்திய திருத்தம் - இங்கே காண்க: Oral Revision-Promoting Reconciliation and Accountability in Sri Lanka)
இந்திய துரோகத்துடன், ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் வெற்றி பெற்றுது.  Promoting Reconciliation and Accountability in Sri Lanka எனும் அத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் வாக்களித்தன. எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

2012 தீர்மானத்திற்கு பிறகு நடந்தது என்ன?

2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான ஒரு Task Force அமைத்தது இலங்கை அரசு. அதன் பிறகு ஒரு தேசிய செயல் திட்டத்தையும் (National Action Plan) அறிவித்தது. இவற்றின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மிகச்சில பரிந்துரைகளை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது.

இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்காக ஒரு மூன்று நபர் குழுவை செப்டம்பர் மாதத்தில் அனுப்பினார்  ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையையும் 2013 பிப்ரவரி 11 அன்று வெளியிட்டார். (இங்கே காண்க: United Nations Human Rights Commissioner Report on promoting reconciliation and accountability in Sri Lanka)

இலங்கை அரசு இம்மியளவும் திருந்தவில்லை என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டும் இந்த அறிக்கை மார்ச் 20 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

நான்காவது தீர்மானம்

இந்த முறை கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானம் நான்காவது தீர்மானம் ஆகும். இது கட்டாயம் வெற்றியடையும்.

ஏனெனில், 47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட  ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை.

இந்த தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச அரங்கில் கொஞ்சமாவது நல்லபெயர் வாங்குவதற்காக இந்தியாவின் ஆலோசனைப்படி, இலங்கையும் அத்தகைய நிலையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான். 

மீண்டும் மாட்டப்போகும் இலங்கை

அமெரிக்காவின் புதிய தீர்மானத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மீண்டும் சர்வதேச அரங்கில் எதிரொலிக்கும்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க தீர்மானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும், ஆதரவு ஏதுமற்ற தமிழர்களுக்கு அது ஒரு முன்னேற்றமான தீமானமாக அமையும் என எதிர் பார்க்கலாம். இந்தியாவின் ஆதரவு மட்டும் இருக்குமானால் இலங்கை மிக எளிதாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுவிடும். தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வும் எளிதில் கிடைத்துவிடும். 
ஆனால், அதற்கு நேர்மாறாக தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்காவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கட்டைப் பஞ்சாயத்து செய்து தீர்மானத்தை நீர்த்துப் போக இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது (அதாவது இந்தியா தமிழர்களின் சார்பில் அமெரிக்காவிடம் பேசவில்லை. இலங்கை அரசின் சார்பில் பேசுகிறது. வெட்கக்கேடு!). இனியும் இந்த தீர்மானத்தை மேலும் பலவீனப்படுத்த இந்தியா முயலும்.

இனி என்ன?

பன்னாட்டு மனித உரிமைகள் அரங்கில் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும். அது ஒன்றுதான் எஞ்சியுள்ள ஒரே வழி. அந்த வகையில் அமெரிக்கா எந்த நோக்கத்தில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தாலும் இதனை வரவேற்கத்தான் வேண்டும்.

அமெரிக்க நாட்டின் ஏகாதிபத்திய சுயநலமும் தமிழர்களின் நீதிக்கான வேட்கையும் ஏதேனும் ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆகவேண்டும். இது முரண்பாடாகத் தோன்றினாலும் வேறு வழி எதுவும் இல்லை.