"ஈழத்தமிழர்களின் நலன் காப்பதற்காக என்று கூறி வரும் 12-ஆம் தேதி டெசோ அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருக்கிறார்.
இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது கொத்து குண்டுகளை வீசியும், பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது போர் நிறுத்தம் கோரி உண்ணா விரதம் இருந்த கலைஞர், இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக அவர் அங்கம் வகிக்கும் மத்திய அரசு சொன்ன பொய்யான தகவலைக்கூட சரிபார்க்காமல் 3 மணி நேரத்தில் போராட்டத்தி கைவிட்டார்.
அதன்பிறகும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்த போது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று கிண்டலடித்து தமிழர்களின் மரணங்களை கொச்சைப்படுத்தியவர் தான் கலைஞர். இப்போது ஈழத்தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்தவரை போல இப்போது முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.
இலங்கையில் போர் நடந்த போது பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்த போது, அத்தகைய போராட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிறீபதி மூலம் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பி மிரட்டல் விடுத்தவர் தான் தி.மு.க. தலைவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் நடத்தப்பட்ட டெசோ அமைப்பின் மாநாட்டில், மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு பயந்து தனித்தமிழீழம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தவிர்த்தவர் கலைஞர். இப்போது வேறு சில அரசியல் காரணங்களுக்காக, ஈழத்தமிழர்களை முன்னிறுத்தி, இப்படி ஒரு முழு அடைப்பு போராட்ட நாடகம் நடத்துவதை தமிழ் உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதேநேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு நிற்கிறது என்பதை உலகிற்கும், மத்திய அரசுக்கும் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய உணர்வை வெளிப்படுத்த தமிழக மக்களும் தயாராகவே உள்ளனர்.
எனவே, ஈழப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு- கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தமிழீழம் அமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." - இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக