Pages

ஞாயிறு, மார்ச் 17, 2013

ஜெனீவா: இந்தியாவின் பேசாத பேச்சுக்கே திட்டுகிறார் வைகோ - ஏன் இந்த அவரசம்?!


"இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது. இந்த அறிக்கை சிங்கள இராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது." என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.03.2013 அன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

ஐநாவில் தற்போது அரங்கேறிவரும் விவாதங்கள் தொடர்பில் தமிழ்நாட்டில் உள்ள குழுப்பத்தை இது வெளிப்படுத்துகிறது. 

கடந்த மார்ச் 15 ஆம் நாளன்று ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான காலமுறை மீளாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. (இது ஏற்கனவே கடந்த 2012 அக்டோபரில் நடந்த கூட்டத்தின் அறிக்கை ஆகும்). மார்ச் 15 கூட்டத்தில் - இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதன் மீது கருத்து சொல்ல நாடுகளுக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது சமயத்தில் அம்னஸ்டி சார்பாக டாக்டர் மனோகரன் தனது காணாமல் போன மகன் குறித்து பேசினார்.

பேசும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்தியாவிற்கு கீழே அரசு சார்பற்ற அமைப்புகளின் சார்பில் பசுமைத் தாயகம் இடம் பெற்றிருந்தது. ஆனால், நேரமின்மையின் காரணமாக இந்தியாவும் பேசவில்லை, பசுமைத் தாயகமும் பேசவில்லை.
ஐநா கூட்டத்தில் பேசுவதற்கு முன்பே பேச்சின் எழுத்து வடிவத்தை அளிக்க வேண்டும் என்பதால் - இந்தியாவும் பசுமைத் தாயகமும் தமது பேச்சினை அளித்திருந்தன. அது ஐநா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலிலும் இடம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியா இலங்கைக்கு மழுப்பலான ஆதரவை தெரிவித்துள்ளது. பசுமைத் தாயகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் - பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியது.

இந்தியா பேச இருந்த பேச்சின் எழுத்து வடிவம் இதோ (இங்கே சொடுக்கவும்): Statement by INDIA

பசுமைத் தாயகம் பேச இருந்த பேச்சின் எழுத்து வடிவம் இதோ (இங்கே சொடுக்கவும்): Statement by PASUMAI THAAYAGAM

ஆக, இந்தியா பேசுவதற்காக வைத்திருந்து, பின்னர் பேசாமல் விட்டுவிட்ட கருத்தினை தான் வைகோ அவர்கள் இந்தியாவின் அறிக்கை என்று குறிப்பிட்டு கண்டித்துள்ளார். (இந்தியாவின் அந்த வரைவிலேயே - இதைத்தான் பேசுகிறாரா என்று கவனித்து அதன் பின்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் - Check against delivery - என்று குறிப்பிட்டுள்ளார்கள்!)  ஒருவேளை பேச வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்தியா இதே கருத்தைதான் பேசியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எது எப்படியோ - பேசாத பேச்சுக்காகக் கூட திட்டு வாங்கும் நிலையில் இந்தியா இருப்பதை தமிழர்கள் வரவேற்கத்தான் வேண்டும்.

குறிப்பு: மார்ச் 15 காலை கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் மதியம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பசுமைத் தாயகம் இலங்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் - பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியது (அந்த பேச்சின் காட்சி வடிவம் இங்கு வெளியிடப்படும்).

தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத்தில் பசுமைத் தாயகம் இதுவரை நான்கு முறை இலங்கை மீது குற்றம் சாட்டி பேசியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட இந்தியா இலங்கை தொடர்பாக எதுவும் பேசவில்லை.

தொடர்புடைய சுட்டி:

ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

1 கருத்து:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

உண்மைத் தகவல்களை உடனுக்குடன் தரும் தங்களுக்குப் பாராட்டுகள்