குறிப்பாக, லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் - "அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஐ.நா.சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே" என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று தினமணி தனது தலையங்கத்தில் "தீர்மானமல்லாத தீர்மானம்" என்று அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற குழப்பமான கருத்துகளை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
அமெரிக்க தீர்மானத்தை வரவேற்போம்
உலகின் அமைதி மற்றும் மனித உரிமையை காக்கும் கடமை எல்லா நாடுகளுக்கும் உண்டு. குறிப்பாக ஐநாவுக்கு உண்டு. ஆனால், இலங்கையில் படுதோல்வி அடைந்ததை ஐக்கிய நாடுகள் அவையே ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக அந்த பொறுப்பை நிறைவேற்றும் இடத்தில் உள்ள இந்திய அரசு ராஜபக்சேவின் சட்டைப் பைக்குள் தஞ்சமடைந்து விட்டது.
உண்மை இவ்வாறிருக்கும் போது - அமெரிக்கா கடந்த ஆண்டு ஜெனீவாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இப்போது அதன் அடுத்த தீர்மானத்தை முன்வைத்துள்ளது (ஐநா மனித உரிமைக் குழுவின் 22 ஆவது கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு தீர்மானம் இது மட்டும்தான்). இந்த தீர்மானம் தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு வலுவானதாக இல்லை. ஆனால், மிக மோசமானதாகவும் இல்லை! இந்த வேறுபாட்டை தமிழர்களுக்காக பேசுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐநா மனித உரிமைகள் குழு என்பது ஒரு புதிய ஐநா அமைப்பு. அது 2006 முதல்தான் இயங்கி வருகிறது. ஐநா மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா ஒரு புதிய உறுப்பினர். அந்த நாடு 2009 முதல்தான் அங்கு இணைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இந்தியாவும் கியூபாவும் இணைந்து இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்த போது அமெரிக்கா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினராக இல்லை.
மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா 'ஒரு நல்ல பிள்ளையாகவும்' இல்லை. உலகின் மனித உரிமைக்காக கொண்டுவரப்படும் பல நல்ல தீர்மானங்களை அமெரிக்கா எதிர்த்துதான் வாக்களித்து வந்துள்ளது - இப்படிப்பட்ட பின்னணிகளை வைத்து பார்க்கும் போது இப்போதைய அமெரிக்க தீர்மானம் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வரவேற்கக் கூடிய தீர்மானம் தான்.
அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
1. ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை தொடர்பில் பிப்ரவரி 11 அன்று அளித்த அறிக்கையினை புதிய தீர்மானம் வரவேற்றுள்ளது. கூடவே சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற அவரது கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக இந்த தீர்மானம் கூறுகிறது.
2. மேற்கண்ட ஐநா மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை அரசுக்கு 12 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.
3. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களுக்கு (Special Rapporteurs) இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க வேண்டும்.
4. ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், இந்த தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பர் மாதம் கூடும் ஐநா மனித உரிமைகள் குழுவின் 24 ஆவது கூட்டத்தில் இடைக்கால அறிக்கையும் 2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.
"இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என்று சொல்வது போல - நாதியற்றுப் போன தமிழ் இனத்திற்கு இந்த தீர்மானம் ஆதரவான ஒன்றுதான்.
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
உலகின் அனைத்து தமிழர்களும் ஒரே இனம் என்கிற அடிப்படையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது உலகின் எல்லா மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கத்தக்க நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். அந்தவகையில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் இரண்டு கோரிக்கைகள் முதன்மை இடத்தைப் பிடித்தாக வேண்டும்.
1. இலங்கையில் நடைபெற்ற போரின்போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்கும் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் குழுவில் நிறைவேற்றப்பட வேண்டும் (UN International Commission of Inquiry on Sri Lanka).
அதாவது, 2011 ஆம் ஆண்டில் சிரியா நாட்டிற்காகவும் லிபியா நாட்டிற்காகவும் இதே ஐநா மனித உரிமைகள் குழுவில் சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது போன்று இலங்கையில் விசாரண நடத்தவும் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது (violations of international law, including international humanitarian and human rights law) குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்கும்போது அதில் எல்லா குற்றங்களும் அடங்கிவிடும். ஐநா நிபுணர் குழு அறிக்கையில் போர்க்குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நடந்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. ஆனால், அவற்றுடன் இனப்படுகொலை நடந்ததையும் சேர்க்க போதுமான விசாரணையும் சாட்சியங்களும் அவசியம்.
(போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் இவை இரண்டுமே கொடூரமான குற்றங்கள்தான். அவற்றுடன் இனப்படுகொலை என்பதையும் இணைத்து மெய்ப்பிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 'இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல' என்று நாமே பேசக்கூடாது)
2. அடுத்ததாக, ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்கிற அடிப்படையில் எத்தகைய ஒரு அரசை விரும்புகிறார்கள் என்பது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாட்டு தமிழ் அமைப்புகள் முன்வைக்க வேண்டும்.
- மேற்கண்ட கோரிக்கைகளில் 'பொது வாக்கெடுப்பு' என்பது ஐநா மனித உரிமைகள் குழுவின் வரம்புக்குள் இருக்கும் விடயம் அல்ல. எனவே, நாம் உடனடியாக இதற்காக போர்க்கொடி தூக்க வேண்டாம்.
ஆனால், 'சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான விசாரணை ஆணையம்' என்பது ஐநா மனித உரிமைகள் குழுவின் வரம்புக்குள் உள்ள விடயம். ஏற்கனவே, அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் - இதற்கான ஒரு வரியை கூடுதலாக இந்திய அரசு முன்மொழிந்தால் போதும். அடுத்த வாரமே - அதாவது மார்ச் 21 அல்லது 22 அன்று சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுவிடும்.
இது சாத்தியமா? - நிச்சயம் சாத்தியம்தான்.
"2011 ஆம் ஆண்டில் சிரியா நாட்டிற்காகவும் லிபியா நாட்டிற்காகவும் ஐநா மனித உரிமைகள் குழுவில் சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது போன்று இலங்கையில் விசாரண நடத்தவும் ஒரு சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்கிற கோரிக்கையை - மத்தியில் ஆட்சி நடத்தும் - கலைஞர் நினைத்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். இதற்கு தமிழக முதல்வரும் மற்ற கட்சிகளும் ஆதரவு அளிப்பார்கள்.
கூடவே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கூறியது போல இதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.
உலகத் தமிழர்கள் ஆதரவு
சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கும் தீமானம் ஐநா மனித உரிமைகள் குழுவில் கொண்டுவரப்பட வேண்டும் (UN International Commission of Inquiry on Sri Lanka) என்கிற கோரிக்கையை உலகின் ஒட்டுமொத்த தமிழ் அமைப்புகளும் ஆதரிக்கின்றன.
இதனை வலியுறுத்தி உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization, Inc), அமெரிக்க தமிழ் அரசியல் செயற்பேரவை (US Tamil Political Action Council), வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கைத் தமிழ் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பு (PEARL) வட கரோலினா அமைதி அமைப்பு (North Carolinians for Peace), இளந்தமிழரணி (Tamil Youth Front) ஆகிய அமைப்புகள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். (அந்தக் கடிதம் கீழே).
இதே கோரிக்கையை பிரித்தானிய தமிழ் பேரவை (BTF), உலகத் தமிழ் பேரவை (GTF), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஆகிய அமைப்புகளும் ஆதரிக்கின்றன.
எனவே, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே குரலில்:
1. ஐநா மனித உரிமைகள் குழுவில் சர்வதேச விசாரணை ஆணையத் தீர்மானம்,
2. ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு என்கிற கோரிக்கைகளை முதன்மைப்படுத்த வேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
1. ஐநாவில் தீர்மானம்: இந்தியாவின் மூக்கை உடைத்த அமெரிக்காவும் தமிழ்நாட்டு அமைப்புகளின் குழப்பமும்!
2. அவசரம்: ஐநாவில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம்- இதோ நகல் -இனியும் இந்தியா மவுனம் காக்குமா?
3. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!
4. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!
5. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?
6. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக