மக்களாட்சி என்பது என்ன? தங்களை தாங்களே ஆளும் உரிமையை தமது சார்பாக வேறொருவருக்கு விட்டுக்கொடுப்பதுதான் மக்களாட்சி. மக்களின் பிரதிநிதிகள் மூலமாக ஆளப்படும் நாடுதான் சனநாயக நாடு. ஆனால், இந்தியாவின் தேர்தல் முறை சனநாயகத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது பீகார் தேர்தல்.
மக்களாட்சி முறை என்றால், அது மக்கள் அனைவரது விருப்பங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அல்லது, பெரும்பான்மை மக்களது விருப்பத்தையாவது எதிரொலிக்க வேண்டும். இவை இரண்டுமே நமது தேர்தல் முறையில் இல்லை.
பீகார் தேர்தலில் 23 % வாக்குகளை வாங்கிய ஐக்கிய சனத தளம் 115 இடங்களை பிடித்துள்ளது. அதாவது 47 % இடங்கள். 16 % வாக்குகளைப் பெற்ற பாரதீய சனதா கட்சி 91 இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது 37 % இடங்கள்.
ஆக மொத்தம் 39 % வாக்குகளைப் பெற்ற ஆளும் கூட்டணி 85 % இடங்களை பிடித்துள்ளது.
அதேசமயம் 26 % வாக்குகளைப் பெற்ற ராஷ்ட்ரீய சனதா தளம் + லோக் சன சக்தி கூட்டணி 25 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதாவது வெறும் 10 % இடங்கள்.
39 % வாக்குகளுக்கு 85 % இடங்கள், ஆனால், 26 % வாக்குகளுக்கு 10 % இடங்கள் என்பது என்ன விதமான சனநாயகம்? இதில் ஏதாவது நீதி இருக்கிறதா?
"ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு" என்பது வேட்டிப்பேச்சுதானா?
பீகாரில் மொத்தம் பதிவான வாக்குகள் 53 % மட்டுமே. இதையும் கணக்கில் கொண்டால், ஆளும் கூட்டணி உண்மையில் பெற்றுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே. (வாக்களிக்காதவர்கள் வாக்களித்தால் அது இரு அணிக்கும் போகலாம்).
ஆக, மொத்த வாக்காளர்களில் 20 % மட்டுமே தமது அதிகாரத்தை ஐக்கிய சனதா தளம் + பாரதீய சனதா கட்சி கூட்டணிக்கு அளித்துள்ள நிலையில், இதனை மக்களாட்சி அரசாக எப்படி ஏற்க முடியும்? (மொத்த மக்கள் தொகையில் அல்ல - அதில் வாக்காளர் பட்டியலில் இல்லாதோரும், 18 வயதுக்கு கீழானோரும் உள்ளனர்)
சனநாயகத்திற்கு எதிரான தேர்தல் முறை
"முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு காரணமாகும். இது ஒரு பழமையான முறை. காலமாற்றத்திற்கு ஏற்ப பல புதிய தேர்தல் முறைகள் இப்போது வந்துவிட்டன.
நமது தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன.
சிறுபான்மையினரும் மாற்று கருத்துள்ளோரும் ஒருநாளும் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது.
இந்த தேர்தல் முறை சாதி முறையை வளர்க்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதியினர் அதிகமோ, அந்த சாதியினர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட இது வழி செய்கிறது.
இந்த முறையில் பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு குறைகிறது.
இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது. இதனால், தீவிரவாதம் வளரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.
6 கருத்துகள்:
you are very correct sir
//"விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.//
நல்ல கருத்து.
நல்ல கருத்து..
தேர்தல் சீர்திருத்தம் அவசியம் வேண்டும், எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தாமல் கட்சி சின்னத்திற்கு மட்டுமே வாக்கு பெறவேண்டும். பின்னர் சதவீத விகிதாச்சர அடிப்படையுஇல் பிரதினிதித்துவம் அளிக்கலாம்.ஆனால் எந்த தொகுதியை எந்த கட்சி பிரதினுவப்படுத்துகிறது என்பதை எப்படி மதிப்பிடுவது.
ஆனால் இதை வல்லுநர்கள் ஆராய்ந்தால் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும்.
வருகைக்கு நன்றி - eeasy baby, தமிழ்மலர், ஹரிஹரன்.
ஹரிஹரன்
// //எந்த தொகுதியை எந்த கட்சி பிரதினுவப்படுத்துகிறது என்பதை எப்படி மதிப்பிடுவது. ஆனால் இதை வல்லுநர்கள் ஆராய்ந்தால் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும்.// //
இதெற்கெல்லாம் தீர்வு இருக்கிறது. பலநாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே மாவட்ட அளவில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாவட்டத்திற்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், அந்த இடங்கள் கட்சிகள் வாங்கும் வாக்கு விழுக்காட்டிற்கு ஏற்ப பங்கிடப்படுகின்றன. இதன்மூலம் ஒரே பகுதிக்கு பலர் MLA ஆக வருவார்கள்.
இன்னும் சில நாடுகளில் பெரும்பான்மை முறையில் 50 % இடங்கள், பிரதிநிதித்துவ முறையில் 50 % இடங்கள் என்பதும் உள்ளது.
இன்றைய உலகில் சுமார் 12 வகையான தேர்தல் முறைகள் உள்ளன. பல்வேறு தேர்தல் முறைகள் குறித்து அடுத்ததாக எழுதுவேன்.
புள்ளிவிவரப் புளுகு.. பார்த்தீர்களா?
http://hmsjr.wordpress.com
கருத்துரையிடுக