பீகாரில் பிற்படுத்தப்பட்டோர் + தாழ்த்தப்பட்டோர் என்கிற சாதிக் கூட்டணியை மற்றொரு சாதிக் கூட்டணியான பிற்படுத்தப்பட்டோர் + உயர்சாதிக் கூட்டணி தோற்கடித்துள்ளது. அதாவது இரண்டு சாதி அணிகளுக்கு இடையேயான போட்டியில் உயர்சாதி அணி வென்றுள்ளது. இதைத்தான் "சாதி தோற்றது" என்று பேசுகின்றன உயர்சாதி பத்திரிகைகள்.
பீகாரின் ஆதிக்கசாதியினர் மூன்று பிரிவினர் ஆகும். 1. பூமிகார்கள், இவர்கள் நிலச்சுவாந்தார்கள். 2. இராசபுத்திரர்கள், இவர்கள் பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்தவர்கள். 3. பார்ப்பனர்கள், இவர்கள் அதிகாரப் பதவிகளில் கோலோச்சுபவர்கள். இந்த மூன்று பிரிவினரின் ஆதிகாரம்தான் 1990 வரை நீடித்தது. இந்த உயர்சாதி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டியவர் லாலு பிரசாத் யாதவ். லாலுவின் வெற்றி சமூக நீதியின் வெற்றி என்று போற்றப்பட்டது.
இவ்வாறு லாலுவின் வெற்றியால் ஓரங்கட்டப்பட்ட கூட்டத்தினர் - இப்போது, நிதீஷ்குமாரை முன்னிறுத்தி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவரை - இன்னொரு பிற்படுத்தப்பட்ட தலைவருடன் சேர்ந்து ஆதிக்க வகுப்பினர் வீழ்த்தியுள்ளனர். இது எப்படி சாதியின் தோல்வி ஆகும்?
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து 'இந்தியா டுடே' இதழ் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது:
1. தொகுதி எல்லை மறுவரையறை செய்த பிறகு உயர்சாதியினர் மிகுந்திருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 52 இலிருந்து 72 ஆக அதிகரித்தது.
2. நிதீஷ்குமார் கடந்தமுறை முதல்வரான பின்பு அதிதீவிர பிற்படுத்தப்பட்டோர், மகாதலித்துகள் ஆகியோரை தனது சமூக அடித்தளமாக உருவாக்கினார். உயர்சாதியினரின் வாக்கு வங்கியை பா.ஜ.க தக்கவைத்துக்கொண்டது.
3. உயர் சாதியினரில் பெரும்பாலானோருக்கு நிதீஷ் மீது அபிமானம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் நிதீஷ் + பா.ஜ.க இரு கட்சிகளின் ஓட்டுகளும் பரஸ்பரம் கூட்டணி வேட்பாளருக்கு பரிமாரிக்கொள்ளப்பட்டது. ஆனால் லாலு + பாஸ்வான் அணியில் அவ்வாறு கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு பரிமாரிக்கொள்ளப்படவில்லை.
ஆக நடந்தது இதுதான்:
பிற்படுத்தப்பட்டோர் லாலு தலைமையில் ஒரு பிரிவினரும் நிதீஷ் தலைமையில் ஒரு பிரிவினரும் எதிர் எதிராக அணிவகுத்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் + தாழ்த்தப்பட்டோர் கூட்டணி ஆகிய லாலு + பாஸ்வான் அணி தோற்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் பரஸ்பரம் இணையவில்லை. இவர்களின் சாதிப்பற்று தீவிரமானதாக இல்லை.
பிற்படுத்தப்பட்டோர் + உயர்சாதிக் கூட்டணி ஆகிய நிதீஷ் + பா.ஜ.க அணி வென்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோரும் உயர்சாதியினரும் பரஸ்பரம் வாக்களித்துள்ளார்கள். உயர்சாதியினருக்கு வேறு வழியும் இல்லை.
ஆக, இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றுள்ளது. அதுவும் உயர்சாதி!
உண்மை இவ்வாறிருக்க சாதி தோற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?
ஒடுக்கப்பட்ட சாதியினர் வென்றால் - அது சாதியின் வெற்றி என்பதும், அதுவே, உயர்சாதியினர் வென்றால் அது சாதிகடந்த வெற்றி என்றும் அடையாளப்படுத்துவது ஏன்?
"உயர் சாதியினரின் ஆதிக்கமே இயல்பு - ஒடுக்கப்பட்டோரின் வெற்றி இயல்புக்கு மாறானது" என்கிற மனுதர்ம சிந்தனையே பத்திரிகைகளின் "பீகாரில் சாதி தோற்றது" என்கிற பிரச்சாரத்தின் பின்னணி ஆகும்.
2 கருத்துகள்:
லாலு லஞ்ச ஊழல்கள், நிதீஷின் நேர்மையான அரசாட்சி ஆகியவை காரணமில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவ்ன்
தேர்தல் முடிவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில், லாலு லஞ்ச ஊழல்கள், நிதீஷின் நேர்மையான அரசாட்சி ஆகியவை காரணமாக இருக்கக் கூடும்.
ஆனால், இந்த தேர்தல் முடிவை "சாதி அரசியலின் தோல்வி" என்று பிரச்சாரம் செய்வதுதான் தவறு. தோற்றது ஒரு சாதி என்று கூறினால், வென்றது மற்றொரு சாதி என்றாகிறது!
கருத்துரையிடுக