Pages

திங்கள், மே 30, 2011

மே - 31, உலக புகையிலை எதிர்ப்பு நாள்

மே 31 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை எதிர்ப்பு நாளாக பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டில் "உலகளாவிய புகையிலைக் கட்டுப்பாடு உடனபடிக்கையை (WHO FCTC) செயல்படுத்துவதை" வலியுறுத்தி இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி. புகைபிடிப்பதாலும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும், அடுத்தவர் விடும் புகையை சுவாசிக்க நேருவதாலும் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம்பேர் அகால மரணமடைகின்றனர்இந்தியாவில் மட்டும் இதனால் 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறந்து போகிறார்கள்.


தற்போது புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வருபவர்களில் - இரண்டுபேரில் ஒருவர் அதனாலேயே பாதிக்கப்பட்டு கடும் துன்பத்திற்கு பிறகு கொடிய மரணத்தை சந்திப்பார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதாவது, இப்போது நமது கண்ணெதிரில் இரண்டுபேர் புகையிலையப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதில் ஒருவரை அந்த புகையிலையே கொடூரமாகக் கொலை செய்துவிடும்.


புகையிலைப் பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய்கள் எனப் பல கேடுகள் நேருகின்றன. புகையிலையில் உள்ள 4000 நச்சு வேதிப்பொருட்களில் 250 ரசாயனங்களால் உடல்நலம் கடுமையாகப் பாதிப்படைகிறது. அவற்றில் 50 ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன்.
புகையிலைத் தீமையை தடுப்பது எப்படி?

உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய புகையிலைக் கட்டுப்பாடு விதிகளை (WHO FCTC) தமிழ்நாட்டில் செயல்படுத்துவதுதான் புகையிலையால் ஏற்படும் கொடும் தீமைகளை ஒழிக்கும் ஒரே வழியாகும். இந்த உடன்படிக்கையில் இந்திய அரசு கையொப்பமிட்டுள்ளதால், இதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு கடமைப் பட்டுள்ளது. குறிப்பாக மூன்று நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். அவை:

1. பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்தவர் அருகே புகைபிடிப்பதால், புகையிலையின் தீமைகள் புகைபிடிக்காத அப்பாவிகளையும் பாதிக்கின்றன. பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். புகைபிடிப்பவர் வெளிவிடும் புகையில் 85% புகை கண்ணுக்கும் தெரியாது, நாற்றமும் அடிக்காது. புகைத்தவர் போனபிறகும் புகைபிடித்த அறைக்குள் புகை இருக்கும். எனவே, பொது இடங்களிலும், பணி இடங்களிலும் புகைபிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

2. புகையிலைப்பொருள் விளம்பரங்களை அகற்ற வேண்டும்.

உலகிலேயே தனது வாடிக்கையாளரை திட்டமிட்டு படுகொலை செய்யும் ஒரே நுகர்பொருள் புகையிலைதான். தனது வாடிக்கையாளர்களை தானே கொன்றுவிடுவதால், புதிய வாடிக்கையாளரை பிடிக்க வேண்டியக் கட்டாயத்தில் புகையிலை நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் புகையிலைப் பொருள் விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே, கடைகளில் விளம்பரம், சினிமா மூலம் விளம்பரம், தண்ணீர், ஹெல்மெட் போன்ற வேறு பொருட்கள் மூலம் விளம்பரம் - என மறைமுக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இவற்றை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.

3. எல்லாவிதமான புகையிலைப் பொருட்கள் மீதும் அதிக வரிவிதிக்க வேண்டும்.

புகையிலைப் பொருட்கள் மீது அதிக வரிவிதிப்பது ஒரு மிகச்சிறந்த நடவடிக்கை. இதனால், புகையிலைப் பொருள் பயன்பாடு குறையும், குறிப்பாக சிறுவர்கள் புகைபிடிக்க தொடங்குவது தடுக்கப்படும். ஏற்கனவே புகைப்பவர்கள் அதைலிருந்து விடுபட விலை உயர்வு வழிசெய்யும். அரசாங்கத்தின் வருவாயும் அதிகமாகும். எனவே, எல்லா புகையிலைப் பொருட்கள் மீதும் ஒரே அளவாக மிக அதிக மதிப்புக்கூட்டல் வரி விதிக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரிழப்பைத் தடுக்கும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

புகையிலைத் தீமையை ஒழிக்க உறுதி கொள்ளுங்கள். தமிழ்நாடளவில் புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசினைக் கோருங்கள். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதுங்கள். - மாதிரி கடிதங்களை பெற தொடர்புகொள்க: tobaccofreemail@gmail.com 


பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை குறித்த கையேடு
Smokefree Public Place Booklet - Tamil

3 கருத்துகள்:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக சகோ.அருள்.

மிகவும் அவசியமான பதிவு. பல அத்தியாவசிய கருத்துக்களையும் புள்ளிவிபரங்களையும், எச்சரிக்கைகளையும் உள்ளடக்கிய மிகவும் சிறப்பான இடுகை.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

வருடம் முழுதுமே புகையிலை எதிர்ப்பு நாட்கள்தான் நமக்கு..!

சிவக்குமார் சொன்னது…

சிறப்பான கருத்து. பொறுப்புணர்வுடன் நல்ல பதிவு

ராஜ நடராஜன் சொன்னது…

நேற்று உண்மை தமிழன் தலையில் குட்டினீர்களே என்று கருத்து மட்டும் சொல்லி விட்டுப் போய் விட்டேன்.

நட்சத்திர வாழ்த்துக்கள்.