Pages

திங்கள், மே 30, 2011

சமச்சீர்க்கல்வி: மறைந்திருக்கும் சாதிவெறி!

சமச்சீர் கல்வியின் மூலமாக தமிழ்நாட்டில் 'பொதுப்பள்ளி முறை'யை நடைமுறைப்படுத்த முயன்றது முந்தைய அரசு. ஆனால், புதிதாக பதவியேற்ற அரசு எடுத்த எடுப்பிலேயே சமச்சீர் கல்வி முயற்சியை குப்பைக்கு அனுப்பிவிட்டது. மனுநீதி இன்னும் மறையவில்லை என்பதற்கும் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் குறையவில்லை என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டு.

இதன்மூலம் 1954 ஆம் ஆண்டின் வரலாறு தலைகீழாக திரும்பியுள்ளது. அப்போது சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இராஜாஜி  கொண்டுவந்த குலக்கல்வி திட்டம் காமராசரால் தூக்கி எறியப்பட்டு, எல்லோருக்கும் கல்வியளிக்க வழிசெய்யப்பட்டது. 


இப்போது 2011 இல் எல்லோருக்கும் ஒரேவிதமான தரமான கல்வி என்கிற இலக்கு தூக்கி எறியப்பட்டு, ஆதிக்க மேல்சாதியினர் வீட்டு பிள்ளைகளும், பணம் படைத்தோரின் குழந்தைகளும் தரமாக படித்தால் போதும் என்கிற நிலை வந்துள்ளது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தற்போதைய அரசு கைவிட்டதன் பின்னணி சாதிவெறிதான்! அன்று இராஜாஜி தோற்று காமராஜர் வென்றார், இன்று காமராஜரின் கனவு தோற்று இராஜாஜியின் கனவு நனவாகியுள்ளது.

பொதுப்பள்ளி முறை என்றால் என்ன?

ஏழையான, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த, கிராமப்புறத்தில் வாழும் படிக்காத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் கல்வி ஒருவிதமாகவும், அதேசமயம், வசதிபடைத்த, மேல்சாதியைச் சார்ந்த, நகர்ப்புறத்தில் வாழும், படித்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் கல்வி வேறொரு விதமாகவும் இருக்கும் நிலை என்பது நாகரீக சமூகம் என்பதற்கே இழுக்கானதாகும். பள்ளிகளுக்கு இடையேயும் கல்வி முறைகளுக்கு இடையேயும் ஏற்றத்தாழவு இருப்பது சமூக அநீதி. இந்த அவலத்தை மாற்றும் முறைதான் பொதுப்பள்ளி முறை (Common School System) ஆகும்.
பொதுப்பள்ளி முறையில் பலவிதமான கல்வி முறைகள் என்பது ஒழித்துக்கட்டப்படும், எல்லாம் ஒரே முறையாக மாற்றப்படும். சாதி, மொழி, பாலினம், இனம், வாழிடம், பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடும் இன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் சம அளவு தரமுடைய கல்வி வழங்கப்படும். பள்ளிகளுக்கிடையே தரவேறுபாடுகள் களையப்பட்டு எல்லா பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும்.

பொதுப்பள்ளி முறையில் மூன்று அடிப்படைகள் முதன்மையானவை:

1. ஒரே விதமான பாடத்திட்டம்/கலைத்திட்டம். 
2. மொழிப்பாடங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மாநிலத்தின் முதல் மொழியில் (அதாவது பெரும்பான்மை மக்களின் தாய் மொழியில்) இருக்கும்.
3. பள்ளிச்சேர்க்கை என்பது அண்மைப்பள்ளி முறையில் நடக்கும் (Neighbourhood School System - அதாவது ஒரு குறிப்பிட்ட சுற்றளவு தொலைவில் வசிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப்படுவர்).

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை முழுவதுமாக பின்பற்றி தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி அமையவில்லை என்பது உண்மை. ஆனால், அதைநோக்கிய திசையில் அது இருந்தது. குறிப்பாக, பொதுபாடத்திட்டம் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

பொதுப்பள்ளி முறை - வரலாறு.

1966 கோத்தாரி குழு

சுதந்திர இந்தியாவின் கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட கோத்தாரி குழு 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையை அளித்தது. அதில் "ஏழை, பணக்காரர் என்கிற அடிப்படையில் பள்ளிகள் அமைந்துள்ளதை மாற்றி பள்ளிக்கல்வி என்பது சாதி, சமய, சமுதாய, பொருளதார அடிப்படையில் குழந்தைகளுக்கான கல்வியில் வேறுபாடு காட்டாமல் பொதுப்பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று பரிந்துரைத்தது. கூடவே, அவரவர் வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில்தான் குழந்தைகளைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

1967 நாடாளுமன்றக் குழு

1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 'கல்விக்கொள்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு'வின் அறிக்கை "ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் தனித்தனியாக பள்ளிகள் இருக்கும் முறை ஒழிக்கப்பட்டு, எல்லோரும் ஒன்றாகப் படிக்கும் பொதுப்பள்ளி முறை/அண்மைப்பள்ளி முறை தேவை என்று பரிந்துரைத்தது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையும் பொதுப்பள்ளி முறையை வலியுறுத்தியது.

1986 தேசியக்கல்விக் கொள்கை

1986 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசியக்கல்விக் கொள்கையில் "பொதுப்பள்ளி முறையை அடைவதற்கான திசையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்" என்று கூறப்பட்டது.

1988 மத்திய அரசின் கல்வி வழிகாட்டுக்குழு

1988 ஆம் ஆண்டின் மத்திய அரசின் கல்வி வழிகாட்டுக்குழு "பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் பொதுப்பள்ளி முறையை செயல்படுத்துவதற்காக செயல் திட்டத்தை" அளித்தது.

1990 ஆச்சார்ய இராமமூர்த்திக் குழு

1990 ஆம் ஆண்டில் தேசிய கல்விக்கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட 'ஆச்சார்ய இராமமூர்த்திக் குழு' தனது பரிந்துரைகளில் "பொதுப்பள்ளி முறை"யை வலுயுறுத்தியது.

1993 யஷ்பால் குழு

பாடத்திட்ட சுமையை குறைப்பதற்காக 1993 இல் அமைக்கப்பட்ட யஷ்பால் குழு தனது அறிக்கையில் மத்திய அரசு நேரடியாக நடத்தும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் மட்டுமே CBSE பாடம் இருக்க வேண்டும் என்றும், மற்ற எல்லா பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.

2005 NCERT தேசிய பாடத்திட்ட வரையரை

2005 ஆம் ஆண்டின் NCERT தேசிய பாடத்திட்ட வரையரையில் "பொதுப்பள்ளி முறையே அதன் இலக்கு" எனக்கூறி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்தது.

2010 புதிய அரசியல் சாசனக் கடமை

1950 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசிய சாசனத்தில் 45 ஆம் பிரிவு ''இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டுப் பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவரும் பதினான்கு வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெற்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்'' என்றது. ஆனால், இந்த பிரிவு அரசுக்கான ஒரு வழிகாட்டி நெறியாக மட்டுமே இருந்ததால், இதனை எவரும் கட்டாயப்படுத்த முடியவில்லை.

ஆனால் புதிய அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் 2009 இல் பள்ளிக்கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் 21அ பிரிவில் "அரசு கட்டாயம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும்" என்கிற் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2010 முதல் "பொதுப்பள்ளி முறை என்பது தானாகவே நாடெங்கும் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்".

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி இன்னும் "ஆளுக்கொரு கல்வி" என்கிற அநீதி நீடிப்பது ஏன்? பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என பலவற்றுக்கு பின்னர் வந்த சச்சீக்கல்வி தூக்கி எறியப்பட்டது எதற்காக? 


மேல்சாதிக்காரனும் பணம் படைத்தோரும் மட்டுமே படித்தால் போதும், மற்றவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் என்கிற கொடுமைக்கு பின்னால் இருப்பது சாதிவெறிதான். இன்னும் பதினைந்து, இருபது ஆண்டுகள் கழித்துக்கூட - சூத்திரன் வீட்டு பிள்ளைகள் தங்க்ளது வீட்டு பிள்ளைகளுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்கிற கொடூரமான ஆதிக்க சாதி மனத்தின் வெளிப்பாடுதான் - சமச்சீர்கல்விக்கு தடைவரக் காரணமாகும்.

கடந்தகால வரலாறு - ராஜாஜியின் குலக்கல்வி

1953 இல் சென்னை மாநில முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார் ராஜாஜி.

திட்டம்: பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது. மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.

இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் ஈடுபடுத்தப்படுவர்

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது-தானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்? 1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார் ராஜாஜி எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்தார்.

இத்திட்டத்திற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாவின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள். நாள் குறிப்பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்! பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது.

ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் திட்டத்தின் எதிர்ப்பாளர். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.

என்ன செய்வது? இப்போது பெரியார் இல்லையே?!

5 கருத்துகள்:

Ramachandranwrites சொன்னது…

Good,

Just for knowledge sake, in which school your children are studying sir ?

ramachandran BK
ramachandran.bk@gmail.com
abu dhabhi

H@RRY சொன்னது…

Even though i accept certain views in this blog, it reads more like a dmk mouthpiece. In idealogy the common school system is good. But there have been questions raised by different sections of the society regarding
1) Quality of books and education under the new system
2) Including pro-dmk lessons in certain subjects
3) Books not getting ready on time for the school openings.

Your article has not commented on any of these implementation issues, but instead decided to see the whole issue from a 'anti-upper-class' point of view. This is a oversimplification of the problem.

I agree with you completely that this common school system should not be dropped. At the same time efforts should be made to bring it from the next school year with all the above negatives removed.

And you have missed one point regarding common school system - in developed countries the majority of schools are government owned. But in india this is not the case. So even if you bring a common course for all 6th standard students for example, still the quality of education of a person @ a government school in a rural area will be lesser and different from that a person receives in chennai. Yes the differences will be reduced, but by how much we can never say!!!

seeprabagaran சொன்னது…

ஆதிக்க சக்திகள் எந்த காலத்திலும் திருந்தப்போவதில்லை. பெரியார் இல்லை என்பதற்காக நாம் அமைதியாக இருக்கமுடியாது. நமக்கான சிக்கல்களை நாம்தான் தீர்க்கவேண்டும். முயற்சி செய்வோம் வெற்றியடைவோம்...

Ramachandranwrites சொன்னது…

I have been seeing many bloggers comment on this development. I fear that none of them go to the root of the problem.

Government and aided schools lack the basic necessary infrasture, many postings have not been filled for years, the amount government spends goes mainly for the salary, so no developmental activities happening.

In one single shot all this problems can be solved - just ensure the wards ( children, grand children and great grand children - as we have leaders who are past 70s) of all elected representatives - from panchayat to parliment should be admitted in government schools only.

People in power put their children in suposse to be the high class schools and can not preach the common people to go to government schools.

And in case of health problems they should be admitted in government hospitals only - not to go to Apollo, Ramachandra etc.

Otherwise, bloggers will have one more topic to make a post - that's all the only result

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள அருள்
தாங்கள் தமிழ்மணத்தின் விண்மீனாக மிளிர்வது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
தொடர்ந்து தங்கள் தரமான ஆக்கங்கள் தமிழுக்கு ஆதரவாக அமையட்டும்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி