Pages

புதன், அக்டோபர் 12, 2011

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். 

'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா?

அந்த மாபெரும் தியாகம் குறித்த முதல் கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

கட்டுரை 1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!


மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான்.சிறீ நாராயண குரு, தந்தை பெரியார் பங்கெடுத்த வைக்கம் சத்தியாகிரகத்தின் முன்னோடியும் அதுதான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி".
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.

அறப்போர் அல்லது சத்தியாக்கிரகம் என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும்.


மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் தொடங்கி ஈழத்தில் தியாகி திலீபன், இப்போது இந்தியாவில் அன்னா அசாரே, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு என எல்லாமும் "அறப்போர்" என்கிற முறையில் நடத்தப்படுகிறது. ஆனால், சத்தியாகிரக போரின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியை எவரும் நினைவில் கொள்ளவில்லை. அவர் உயிர்த்தியாகம் செய்து 102 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி

குசராத் மாநிலத்தில் பிறந்து லண்டனில் சட்டம் பயின்ற காந்தி, இந்தியாவில் உரிய வேலை அமையாத காரணத்தினால் 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார்.அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது. 
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
அங்குள்ள டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நேட்டால் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.

1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. (மூன்று பவுண்ட் என்பது தற்போதைய மதிப்பில் சுமார் 230 ரூபாய்). எனினும்,  தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை
ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார்.

1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி, அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி). 
ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டம்
தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.


காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.
இந்தியன் ஒப்பீனியன்
தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
சாமி நாகப்பன் படையாட்சி
அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

(சாமி நாகப்பன் படையாட்சியை புகழ்ந்து காந்தி பேசியுள்ள குறிப்புகளை விரிவாக இங்கே காண்க: தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி)

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி?

மறக்கப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சியும் போற்றப்பட்ட வள்ளியம்மா முனுசாமி முதலியாரும்.

சாமி நாகப்பன் படையாட்சியைப் போன்று தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் மற்றொரு போராளி, மற்றொரு தமிழர் வள்ளியம்மா முனுசாமி முதலியார். தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 1913 டிசம்பர் 22 அன்று தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைத்தணடனைப் பெற்று காந்தியின் துணைவியார் கசுதூரிபா காந்தியுடன் சிறையில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட போதும் வெளிவர மறுத்தார். எனினும் சத்தியாகிரக போராட்டம் வெற்றி பெற்றதால் 1914 சனவரி 11 அன்று விடுதலை ஆனார். சிறையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் 1914 பிப்ரவர் 22 அன்று மரணமடைந்தார். அப்போது வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் வயது 16. தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
(நாடுகடத்தப்பட்டதால் கப்பலில் அலைகழிக்கப்பட்டு அதனால் இறந்த நாராயணசாமி, முதுமையின் காரணமாக 75 வயதில் சிறையில் இறந்த அர்பத் சிங் ஆகியோரின் மரணம் தென் ஆப்பிரிக்க அரசின் ஆவணங்களில் இடம்பெறவில்லை. காந்தியின் போராட்ட அழைப்பை ஏற்று தியாகம் செய்தவர்கள் பெருபாலும் தமிழர்கள்தான். இதுகுறித்து விரிவாகக் காண்க: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்).

இருவருக்கும் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. சாமி நாகப்பன் படையாட்சி போராட்ட காலத்தில் 1909 ஆம் ஆண்டு, சிறையில் அனுபவித்த கொடுமைகளின் காரணமாக இறந்தார். இவருக்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவர் இறக்கும்போது காந்தி லண்டனில் இருந்தார்.

வள்ளியம்மா முனுசாமி முதலியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவர மறுத்தார். போராட்டம் முடிந்ததால் விடுதலை ஆனார். அவர் இறக்கும் முன்பு காந்தி அவரை நேரில் வந்து பார்த்து பேசினார். 1914 ஆம் ஆண்டு வீரமரணம் அடையும் போது தென் ஆப்பிரிக்க சத்தியாகிரக போராட்டம் முடிந்துவிட்டது.

இரண்டு பேருமே பதின் வயதினர். இரண்டுபேருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் இறுதி சடங்குகளும் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில் நடந்தது. இரண்டு பேரின் நினைவு பலகைகளையும் அதே பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத் தோட்டத்தில் 1915 ஆம் ஆண்டு காந்தி திறந்து வைத்தார். இரண்டு பேரின் நினைவிடங்களும் 1997 இல் மறுசீரமைக்கப்பட்டு வால்டர் சிசுலு அவர்களால் மீண்டும் திறக்கப்பட்டன.

தென் ஆப்பிரிக்க கான்சிடியூசன் மலை அருங்காட்சியகத்தின் தியாகிகள் பட்டியலில் சாமி நாகப்பன் படையாட்சியின் பெயருக்கு அடுத்த பெயராக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் படத்திற்கு அடுத்த படமாக வள்ளியம்மா முனுசாமி முதலியாரின் படம் இடம் பெற்றுள்ளது.
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் சாமி நாகப்பன் படையாட்சி மறக்கப்பட்டுவிட்டார். வள்ளியம்மா முனுசாமி முதலியார் போற்றப்பட்டுகிறார். தியாகிகளைப் போற்றுவதில் ஏன் இந்த பாகுபாடு?

புதுச்சேரி மாநிலம் டூப்ளே தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி முதலியார். அவரது மனைவி ஜானகி மயிலாடுதுறை அருகில் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இவர்களுக்கு பிறந்தவர்தான் வள்ளியம்மா. அவர் தமிழ்நாட்டை பார்த்தது இல்லை. தென் ஆப்பிரிக்காவில் அவர் வள்ளியம்மா முனுசாமி முதலியார் என்றுதான் அழைக்கப்பட்டார்.

தந்தையின் ஊர் புதுச்சேரி மாநிலத்தில் இருப்பதால் அம்மாவின் ஊரான தில்லையாடியை எடுத்துக்கொண்டது தமிழ்நாடு அரசு. வள்ளியம்மா முனுசாமி முதலியார் என்கிற பெயரையும் தில்லையாடி வள்ளியம்மை என்று மாற்றிவிட்டனர்.
தில்லையாடி வள்ளியம்மை சிலை, தில்லையாடி 
தில்லையாடி கிராமத்தில் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவை ஒட்டி அமைக்கப்பட்ட வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி ஆகிய நினைவு கட்டிடங்களை 13.8.1971 அன்று அப்போதைய கல்வி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். தில்லையாடி வள்ளியம்மை சிலை அமைக்கப்பட்டது.

1982 இல் சென்னையில் கோ-ஆப் டெக்சின் கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயரிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 2008 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
 தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை, வரவேற்கப்பட வேண்டியவை. அதே நேரத்தில் - சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் மறக்கப்பட்டது ஏன்? என்கிற கேள்வி தவிற்க இயலாத கேள்வியாகும்.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் - மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா?

1970 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற விளம்பரத்துடன் ஒரு தேர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. (தென் ஆப்பிரிக்க தமிழர்களின் ஆவணத்தில் இது காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில் அரசாங்கம் மக்கள் மத்தியில் உலவவிட்ட தேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.)
1970 ஆம் ஆண்டு தேர்ஊர்வலம், தமிழ்நாடு
"தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற இந்த தேரில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என எழுதப்பட்டுள்ளது. கூடவே, மகாத்மா காந்திக்கு அருகில் நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் நிற்பது போலவும், சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வள்ளியம்மா நிற்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி 1970 ஆம் ஆண்டு "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என மூன்று பேரையும் புகழ்ந்தது தமிழ்நாடு அரசு. ஆனால், 1971 ஆம் ஆண்டில் வள்ளியம்மா முனுசாமி முதலியாரை - தில்லையாடி வள்ளியம்மை என பெயர் மாற்றி அவருக்கு  நினைவு மண்டபம், சிலை,  நினைவு நூலகம் அமைத்துள்ளது. சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் எதற்காக மறக்கப்பட்டது?

1971 ஆம் ஆண்டில் தில்லையாடி வள்ளியம்மை நினைவிடங்கள் அனைத்தையும் அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்துள்ளார். ஆனால், வள்ளியம்மா முனுசாமி முதலியாருக்கு இணையாக சாமி நாகப்பன் படையாட்சிக்கு நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை?  அப்படியானால், முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான நாவலர் நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மைக்கு மட்டுமே நினைவிடங்கள் அமைத்தார் - வன்னியரான மற்றொரு தியாகியின் தியாகத்தை மறைத்தார் என்று கருதலாமா?

(தியாகத்தில் கூடவா சாதி பார்க்கிறீர்கள் என்று யாராவது கேட்பதாக இருந்தால் - 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிந்திருந்த சாமி நாகப்பன் படையாட்சியை, 1971 ஆம் ஆண்டில் மறந்தது எதற்காக என்று கண்டுபிடிக்கவும்.)

1970 ஆம் ஆண்டில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என ஊர்வலம் நடத்திய போதும், 1971 ஆம் ஆண்டில் "வள்ளியம்மைக்கு மட்டும்" நினைவிடங்கள் அமைக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்.

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் ஜொகனஸ்பர்கில் சிதைக்கப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடங்கள் 20.4.1997 அன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன. அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு திறந்து வைத்தார். அப்போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்தான்.
சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம்: 1999இல் வால்டர் சிசுல திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற வகையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கலைஞர். அந்த வாழ்த்துச் செய்தியில் வள்ளியம்மையின் வீரத்தை புகழ்ந்தும் தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் முன்னேற்றங்களை புகழ்ந்தும் எழுதியுள்ளார். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் எழுத்தறிவு இயக்கத்திற்காக "மிதிவண்டி புரட்சி" செய்து வருவதாக அந்த வாழ்த்துச் செய்தியில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், சாமி நாகப்பன் படையாட்சி குறித்து அவர் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் 1997 இல் அந்த நிகழ்ச்சி "சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார்" என இரண்டு பேருக்காகவும்தான் ஜொகனஸ்பர்கில் நடத்தப்பட்டது.

நினைவிடங்களில் மறைக்கப்பட்டு, வரலாற்று பாடநூல்களில் மறைக்கப்பட்டு, இப்போது எல்லா இடங்களிலும் சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் ஒரேயடியாக மறக்கப்பட்டுள்ளது. இப்போதும் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வரலாற்றில சாமி நாகப்பன் படையாட்சியும் வள்ளியம்மா முனுசாமி முதலியாரும் இடம் பெற்றுள்ளார்கள். இந்திய விடுதலைக்கும் உலகின் அகிம்சை போராட்டத்திற்கும் வழிகாட்டியான இவர்களில் 'தில்லையாடி வள்ளியம்மை' தமிழ்நாட்டில் அறியப்படுகிறார். சாமி நாகப்பன் படையாட்சியை யாருக்கும் தெரியவில்லை!

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:
1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.

2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami,  Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.) நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.


ஆதாரம்:

1. Satyagraha in South-Africa, Mohandas K. Gandhi, Published by Yann FORGET on 26th April 2003
2. GANDHIJI'S VISION OF A FREE SOUTH AFRICA, by E. S. REDDY
7. Valliamma Munusamy Mudliar – Child Martyr, by Yana Pillai, Natal Tamil Vedic Society, South Africa

18 கருத்துகள்:

Unknown சொன்னது…

இது பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுதுங்க தலைவரே

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான தகவல்கள் .

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கனமான பகிர்வு..

செங்கதிரோன் சொன்னது…

Wonderful Article..valuable informations..forward this to tamilnadu goverment..May be they will consider to celebrate from nowonwards...

Jawahar சொன்னது…

பலர் அறியாத அரிய தகவல்கள். சிறப்பான கட்டுரை.

http://kgjawarlal.wordpress.com

இளைய பல்லவன் சொன்னது…

இந்திய சுதந்திர வரலாற்றில் திட்டமிட்டே மறைக்கப்பட்ட வன்னியர்கள் பலர். 1. நாகப்பன் படையாட்சி 2. சர்தார் ஆதிகேசவ நாயக்கர், அஞ்சலையம்மாள், நேதாஜியின் படைப்பிரிவில் இயந்திர துப்பாக்கியை கொண்டு எதிரிகளை சிதறடித்த வீர மங்கை ஜானகி, தேசியகவி அர்த்த நாரீச வர்மா போன்ற பல வன்னியரை அவர்களின் வரலாற்றை தேசத்துக்காக அவர்கள் செய்த தியாகத்தை திட்டமிட்டே மறைத்து தேச துரோகம் செய்தனர் இதுவரை ஆட்சி செய்தவர்கள், செய்பவர்கள்...

இளைய பல்லவன் சொன்னது…

தில்லையாடி வள்ளியம்மைக்கு முன்பே உயிர் தியாகம் செய்தவர் நாகப்ப படையாட்சியார்....ஆனால், தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் பற்றி பாடப்புத்தகங்கள் முதல் வரலாற்று ஆவனங்களில் குறிப்புகள் வருகிறது ஆனால் நாகப்பா படையாட்சியார் பற்றி அப்படி எதுவும் இல்லை. ஏன் இந்த பாகுபாடு? இருவருமே தியாகிகள் தானே...இருவருமே காந்தியாருக்கு துணை நின்றவர்கள் தானே.... பிறகு ஏன் இந்த ஓரவஞ்சனை? தில்லையாடி வள்ளியம்மைக்கு சிலை திறந்த நாவலர் நெடுன்செழியனுக்கு நாகப்ப படையாட்சியாருக்கு சிலை திறக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை.... சாதி மறுப்பாளர் என்ற போர்வையில் திராவிட கட்சிகளில் இருந்து கொண்டே சாதி வேற்றுமை பார்ப்பவர்களுக்கு எப்படி தோன்றும்?

இளைய பல்லவன் சொன்னது…

2. இந்திய சுதந்திர போராட்டத்தில் வரி கொடா இயக்கத்தில் சேர்ந்ததால் இன்றைய மதிப்பில் 200 கோடிக்கும் மேலான சென்னையில் இருந்த தனது சொத்துக்களை ஆங்கில அரசு பறிமுதல் செய்த போதும் தொடர்ந்து போராடியவர் "சர்தார்" ஆதிகேசவலு நாயக்கர் அவர்கள். மெரீனா கடற்கரையில் "திலகர் திடல்" என்ற இடத்தில் மகாத்மா, பாரதியார், திலகர் உட்பட பலரை அழைத்து மாநாடு போட்டவர் "சர்தார்" ஆதிகேசவலு நாயக்கர். சிறையில் பெருந்தலைவர் காமராஜர் இருந்த காலத்தை விட அதிக காலம் இருந்தவர் இவர். காந்திஜி அவர்களால் "சர்தார்" பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் இரண்டே பேர் தான்..அதில் ஒருவர் இவர். இப்படி தேசத்துக்காக தனது சொத்துக்களை இழந்து சிறையில் அதிகாலம் வாழ்ந்த இவரை பற்றி எந்த பாட புத்தகங்களிலோ இந்திய சுதந்திர வரலாறு ஆவனங்களிலோ குறிப்புகள் இல்லையே ஏன்?

இளைய பல்லவன் சொன்னது…

சாதியின் பெயரால் ஒரு சமுதாயத்தின் வரலாற்றை திட்டமிட்டே மறைத்து விட்டு.... ஏமாற்றப்பட்டதால் அந்த மக்கள் வெகுண்டு எழும் போது... கூச்சமே இல்லாமல் அவர்களை சாதி பேசுகிறார்கள் என்று சொல்கிறது சில "போலி" நடுநிலையாளர்கள் கூட்டம்.

இளைய பல்லவன் சொன்னது…

தேச விடுதலைக்கு போராடிய இவர்களுக்கு எங்கும் சிலைகள் இல்லை...ஆனால் தனது சாதிக்கு போராடியவர்களுக்கும் சினிமா காரர்களுக்கும் தமிழகத்தில் சிலை அதுவும் குறிப்பாக சென்னையில்........ ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கிறவர்களுக்கும் உள்ள தேச பக்தியின் அழகு இது தானா?

Unknown சொன்னது…

nalla thakavalkal

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நல்ல கட்டுரை அருள்.
வாழ்த்துகள்

விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்(தன்வரலாறு) நான் பதிப்பித்துள்ளேன். துரையனார் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். தாங்கள் குறிப்பிடும் போராட்டத்தில் 16 வயது இளைஞராகக் கலந்துகொண்டு காந்தியுடன் சிறையில் இருந்தவர். அந்த நூலில் நாகப்பன் பற்றிய குறிப்பு உள்ளதா என்று பார்க்கின்றேன்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

எம்.ஞானசேகரன் சொன்னது…

மிகவும் அருமையான அரிய தகவல்கள் நண்பரே!

எம்.ஞானசேகரன் சொன்னது…

கேள்விப்பட்டிராத தகவல்கள் நண்பரே. பகிர்விற்கு நன்றி!

R.Puratchimani சொன்னது…

நல்ல பதிவு.....தமிழர்களின் இந்தியர்களின் பெருமைகளை ஆங்கிலயேன் தான் மறைத்தான் என்று நினைத்து கொண்டிருந்தேன்
கறுப்பாடு நம்முள்ளும் இருந்துள்ளது என இப்பொழுதுதான் தெரிகின்றது.
என்ன செய்ய கட்ட பொம்மன் வாழ்ந்த ஊரில் தானே எட்டப்பனும் வாழ்ந்தான்.
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

SARAN சொன்னது…

d.m.k enbathu the mudaliyar kazhagam enru iruntha kalathil thilayadi valliyamai ku perumai serthanthu,anal nama samuthayathavargalin thiyagangalai anru matum illai inrum irutipu seithukonduthan than irukirargal

ஆ. மணவழகன் (A.Manavazhahan) சொன்னது…

மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்க வேண்டிய நல்ல கட்டுரை. இன்னும் கிடைக்கும் தகவல்களையும் ஒன்றுதிரட்டி நூலாக்கம் செய்து பல தளங்களுக்கும் அறிமுகப்படுத்தலாம். அருளுக்கு வாழ்த்துகள். இப்படி ஒரு கட்டுரை அருள் எழுதியிருக்கிறார் என்று அறிமுகப்படுத்திய நண்பர் ஆறு. அண்ணலுக்கு நன்றி.

மணிச்சுடர் சொன்னது…

பதின்ம வயதில் தன் இன்னுயிரை இந்திய மக்களின் விடியலுக்காக ஈந்த சாமி நாகப்பன் போன்ற தியாகச் செம்மல்களின் வரலாறு அடுத்தடுத்து ஆட்சிகட்டிலேறிய ஆதிக்க சாதியினரால் மறைக்கப்பட்டது மன்னிக்க முடியாத தவறு. இன்றைய இளைஞர்களுக்கு வெளிச்சமும் ஈக உணர்வும் பெருகத்தக்க வகையில் இத்தகையோர் தியாக வரலாற்றை ஊடகங்களின் வழி பரப்பிடுக.